அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் தோன்றுகின்ற பொழுது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவதும் இதனை சிங்கள இனவாத சக்திகள் எதிர்ப்பதும் பின்னர் அதனை திசைதிருப்பும் நோக்கில் செயற்படுவதும் இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்பவர்களின் வழக்கமாகிவிட்டது.
தென்னிலங்கை அரசியல் சமூகமும் பௌத்த மதகுருமார்களும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்தால் மாத்திரமே இந்த நாடு முன்னேற்றமடையும் என்பதை ஏற்க மறுத்து, தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் தமிழர் விரோதப்போக்கைக் கடைப்பிடிப்பது இந்த நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வாகாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,
ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியபொழுது, பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறை படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைக் கோரினார். 13ஐப்பற்றிப் பேசிவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் 13ஆவது திருத்தத்திற்கு மேலே சென்று அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தான் தயார் எனக் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் 13ஆவதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த தனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தார். ஜேவிபியினரும்கூட அதற்கு ஆதரவான கருத்தையே வெளியிட்டிருந்தனர்.
சிங்கள இனவாதிகளின் தூண்டுதலின் பேரில் பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய இனவாதக்குழுக்கள் சில 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில இனவாத சக்திகளான விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர போன்றோரும் குரல்கொடுத்தனர்.
இது இவ்வாறிருக்க, முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் இப்பொழுது 13ஐ நிறைவேற்றத் தேவையில்லை என்று சிங்கள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாக்கு வங்கியை நம்பியிருக்கக்கூடிய தரப்புகளும் தங்களது வாக்குவங்கிகளுக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இதே நிலைப்பாட்டை எடுக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 13ஐ நடைமுறைப்படுத்துவேன் என்று உத்தரவாதம் அளித்த ஜனாதிபதி அவர்கள் இன்றுவரை அதுதொடர்பில் ஒரு சிறுதுரும்பைத்தன்னும் நகர்த்தவில்லை.
இதுதொடர்பாக சர்வகட்சி மகாநாடுகளை ஜனாதிபதி நடத்தியபொழுதிலும் இவற்றை நிறைவேற்றுவதற்காக ஒரு கால அவகாசத்தை தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்டபொழுதும் அவை எதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இவை இவ்வாறிருக்க, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் அவை ஒற்றையாட்சிக்கு உட்பட்டது எனவும் அதனை நடைமுறைப்படுத்தக் கோருபவர்கள் இந்தியாவின் முகவர்கள் எனவும் அடிவருடிகள் எனவும் பிரச்சாரம் செய்யும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கும் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு, அந்த அரசியல் சாசனத்தைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வேடிக்கையும் இங்கேதான் நிகழ்கிறது.
பதின்மூன்றாவது திருத்தம் என்பது ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் அங்கீகரித்து நிறைவேற்றப்பட்டது அதுமாத்திரமல்லாமல், இலங்கையின் உயர்நீதிமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி யாரிடமும் அங்கீகாரமோ அனுமதியோ பெற வேண்டிய தேவையில்லை. 1988ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, இலங்கையில் மாகாணசபைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதற்கு உர்pத்தான அதிகாரங்களில் சில கொடுக்கப்பட்டிருப்பதும் சில கொடுக்கப்படாமலிருப்பதும் நிதர்சனமான உண்மையாகும்.
ஆகவே, நாங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோருகின்றோம். ஆனால் இலங்கையின் அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை சிங்கள தரப்பில் இருக்கக்கூடிய குறுகிய அரசியல் இலாபம் கொண்ட கட்சிகள் இதனை மறுதலிப்பதும் அதற்கு எதிராகப் போராடுவதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
ஆனால் தமிழ்த் தரப்பில் இயங்குகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்றவர்கள் அதே சிங்கள இனவாதக் குழுக்கள்போல் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகச் செயற்படுவதும் எந்த வகையில் தமிழ் மக்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், இவர்கள் கூறுகின்ற சமஷ்டி அரசியல் சாசனத்திற்கான வழிமுறைகளையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். சட்டத்தின்பால் கிடைத்தவற்றை ஏற்கமறுத்து, அதனை வேண்டாம் என்று தூக்கியெறியக்கூடிய தமிழ் தரப்பு அரசியல் விற்பன்னர்களை இப்பொழுதுதான் காணக்கூடியதாக இருக்கின்றது.
சமஷ்டி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு புதிய கோரிக்கை அல்ல. தந்தை செல்வா அவர்கள் சமஷ்டி கட்சியைத்தான் ஆரம்பித்து அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று பெயரையும் வைத்தார்.
ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள இனவாத சக்திகளுக்கும் சமஷ்டி என்ற சொல் வேப்பங்காயாகக் கசக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடியது ஒற்றையாட்சி முறையைக் கொண்ட அரசியல் சாசனமே.
இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவரவேண்டுமாக இருந்தால், சமஷ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
அவ்வாறான சமஷ்டி அரசியல் சாசனத்திற்கு தமிழர் தரப்பில் யாரும் எதிரானவர்கள் அல்ல. ஆகவே, ஒரு சமஷ்டி அரசியல் சாசனத்திற்காகப் போராடக்கூடியவர்கள் அதற்கான வழிமுறைகளை வகுத்து தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அதற்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவும் இருக்கின்றது. அது ஒரு நீண்ட போராட்டமாக அமையப்போகிறது என்பதுதான் யதார்த்தமானது.
இந்த நிலையில், ஒரு மாற்று ஏற்பாடு இல்லாமல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை நிராகரிப்பதும் அதனை அரசியல் சாசனத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று சொல்வதும் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவற்றையும் இல்லாமல் செய்யக்கூடிய அறிவீலித்தனமான செயலாகும்.
பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அதுமாத்திரமல்லாமல், சர்வதேச ரீதியிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினூடாகவும் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்து வருகின்றது. இதுதான் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு என்று இந்தியாவும் கூறியது கிடையாது.
இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் வேண்டுமா? வேண்டாமா? அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து, தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டின் அனைத்து அரசியல் சமூகத்திற்கும் நல்லது