தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? – நிலாந்தன்

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது.தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதன் கடந்த 73 ஆண்டுகால வரலாற்றையும் தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது இலட்சியத்தில் சறுக்காத கட்சி என்று கருதத் தேவையில்லை. 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி,தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியே முதன்மையானது.அவ்வாறு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி 1981இல் அதாவது ஐந்து ஆண்டுகளில் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது.1977இல் நடந்த தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமோக வெற்றிபெற்ற ஒரு கட்சி, ஐந்தே ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் எதுவும் இல்லை என்பதனை 1980ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்திரபாலா,பாலகிருஷ்ணன்,சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், மு.திருநாவுக்கரசு ஆகியோர் அக்கருத்தரங்கில் பேசினார்கள்.அவர்களுடைய கருத்தை,அப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால்,எது சரி என்பதை வரலாறு பின்னர் நிரூபித்தது.

தமிழ் மிதவாதிகளின் மேற்கண்ட உறுதியின்மை, சமரசப்போக்கு போன்றவற்றின் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் போனார்கள்.எனவே தமிழரசுக் கட்சியானது தன் இலட்சியத்தில் இருந்து சறுக்காத ஒரு கட்சி என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஏன் அதிகம் போவான்?2015இல் மன்னாரில் நடந்த “தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?”என்ற தலைப்பிலான கருத்தரங்கில்,நான் ஆற்றிய உரையில்,சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் வெளியாரின் நிர்பந்தங்களின்றித் தானாக ஒரு தீர்வுக்கு இறங்கி வராது என்று கூறினேன்.அதற்குப் பதிலளித்த சம்பந்தர் “அது ஒரு வறண்ட வாதம் வறட்டு வாதம்” என்று கூறினார்.2015இல் இருந்து 2018வரையிலும் சம்பந்தர்,ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து “எக்கிய ராஜ்ய” என்ற ஒரு தீர்வு முயற்சிக்காக உழைத்தார்.அதை அவர் சமஷ்டிப் பண்புடையது என்று சொன்னார்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதனை ஒற்றைட்சியாட்சிதான் என்று சொன்னார்கள்.சிங்களத் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு ஒன்றைச் சொன்னார்கள், தமிழ்த் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு வேறு ஒன்றைச் சொன்னார்கள்.

எனவே தமிழரசுக் கட்சி தூய இலட்சியவாதக் கட்சியல்ல.அது கொழும்புடன் சமரசத்துக்குப் போகாத கட்சியுமல்ல.இதில் ஆகப்பிந்திய உதாரணம் சம்பந்தர்.அவர் தனது செயல் வழியைப் பலப்படுத்துவதற்காக உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன்.சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியனும் அப்படிப்பட்டவர்தான்.அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடந்த ஒர் இளையோர் ஒன்றுகூடலில் சாணக்கியனும் உரையாற்றினார்.அதில் அவர் எனது உரையை மேற்கோள்காட்டி பிரச்சனைகளைத் தீர்ப்பதே தன்னுடைய அரசியல் செயல்வழி என்று சொன்னார்.பின்னர் அவரோடு உரையாடும்போது நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன் “அது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் உள்ள ஒரு வார்த்தை…நீங்கள் தமிழ் மக்களின் தாயகத்தை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.உங்களுடைய அரசியல் ஒழுக்கம் என்பது தேசத்தை நிர்மாணிப்பது”என்று. அதற்கு அவர் திரும்பிக் கேட்டார் “அதுவும் ஒரு பிரச்சனைதானே? அந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்தானே?” என்று. அப்பொழுது நான் சொன்னேன்….”தேச நிர்மாணம் என்பது ஓர் அரசியல் பதம் .பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் அதிகம் உள்ள ஒரு வார்த்தை. நீங்கள் தமிழ்த் தேசியக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தையைத்தானே பயன்படுத்தலாம் ?”என்று.

சுமந்திரன் சாணக்கியனைப் போன்றவர்களின் சிந்தனாமுறை அது.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியது. அக் கட்சிக்குள் அது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.எனவே சுமந்திரன் அணி என்பது கட்சிக்குள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.

எனவே,சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தத் தேவையில்லை.அப்படித்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தலாமா? இல்லை. அவர்கள் தமிழ் மக்கள். அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களை தேசத்துக்கு வெளியே தள்ளிவிட முடியாது. இது சுமந்திரன் அணிக்கும் பொருந்தும்.இந்த தமிழ் யதார்த்தத்தை சிறீதரன் உள்வாங்க வேண்டும்.தேசத் திரட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்று அவர் சிந்திக்க வேண்டும்.

கிளிநொச்சியில் அவருடைய நடவடிக்கைகளை விமர்சிக்கும் அவருடைய அரசியல் எதிரிகள் அவரை “கிளிநொச்சியின் ஜமீன்” என்று அழைப்பார்கள்.தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியானது அதன் அரசியல் எதிரிகளை துரோகிகள் அல்லது இனப்படுகொலையின் பங்காளிகள் என்று வகைப்படுத்துவது உண்டு.போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்பதனால் கிளிநொச்சியில் அப்படிக் கூறமுடிந்தது.ஆனால் இப்பொழுது சிறீதரன் ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி அல்ல.தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவர்.ஏனைய கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கப் போவதாக வேறு கூறிவருகிறார். எனவே அவர் அதற்கு வேண்டிய தகுதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி; கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் – நிலாந்தன்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள்,தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு;மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்;மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை,ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஆனால் ஜனாதிபதி கூறுகிறார்,13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை.ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி,பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார்.கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில்,திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம்.அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்.அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது.அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா?அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு,சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்.பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து,தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை,வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு.அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி.ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது.அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில்,மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன.ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்;அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார்.எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர்,வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார்.13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்.அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன.13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார்.அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு.இதில் இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு.வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும்.ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார்.13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்,கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார்.மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

-நிலாந்தன்

தமிழ்க்கட்சிகள் எழுதும் கடிதங்கள்? – நிலாந்தன்

அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அக்கடிதங்கள் அக்காலகட்ட அரசியலில் ஏதும் விளைவுகளை ஏற்படுத்தினவோ இல்லையோ, அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார்.அவை சிலசமயங்களில் துணிச்சலான,பல சமயங்களில் சுவாரசியமான அல்லது பம்பலான அரசியல் ஆவணங்களாகப் பார்க்கப்பட்டன.

இப்பொழுது ஆனந்தசங்கரியிடம் இருந்து ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் அதைக் கற்றுக்கொண்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. அண்மை நாட்களாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட  கட்சிகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு கடிதங்களை எழுதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மனோ கணேசன் தனது கட்சி அவ்வாறு கடிதம் எழுதப்போவதில்லை என்று கூறுகிறார். இந்தியாவுக்கு இங்குள்ள பிரச்சினை விளங்கும். ஆகவே கடிதம் எழுதி அதன் மூலம் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக இடம்பெறுவதை விரும்பவில்லை என்று மனோ கணேசன் கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் 21 ஆம் தேதி இந்தியாவுக்கு செல்கிறார்.அங்கே அவர் இந்திய பிரதமரை சந்திப்பதற்கிடையில் தமிழ்க் கட்சிகளின் மூன்று கடிதங்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பப்படுகின்றன. முதலாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது.அக்கடிதம் எற்கனவே ஊடங்களுக்குத் தரப்பட்டுவிட்டது. இரண்டாவது சம்பந்தருடையது. மூன்றாவது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரனின் கட்சிகளுடையது.

இக்கடிதங்களின் உள்ளடக்கம் என்னவென்பது ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்துவிட்டது.அந்த உள்ளடக்கங்களை தொகுத்து பார்த்தால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக தெரிகிறது.

இரண்டாவது கடிதம் தமிழரசுக் கட்சியுடையது. இந்தியாவுக்கு ஆறு கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கடிதம் எழுதியபொழுது அதில் தமிழரசு கட்சியும் கையொப்பமிட்டது.கடிதத்தின் உள்ளடக்கத்தை மாற்றுவதில் தமிழரசுக் கட்சி முக்கிய பங்காற்றியது.அக்கடிதம் 13க்குள் முடங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி அதற்குப்பால் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழரசு கட்சி ஏற்படுத்தியது.ஆனால் இப்பொழுது தமிழரசு கட்சி தனியாக ஒரு கடிதம் எழுதுகிறது.அக்கடிதமானது 13 வது திருத்தத்தை கடந்து சென்று ஒரு சமஸ்டி கோரிக்கையை-கூட்டாட்சிக்  கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறப்படுகிறது.இதுவிடயத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வரைந்த கடிதத்தை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.அக்கடிதத்தில் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே,தமிழரசுக்கட்சி தனியாக ஒரு கடிதத்தை எழுதப்போவதாக அறிவித்துள்ளது.

மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது. அப்படி ஒரு கடிதத்தை எழுதப்போவதாக முதலில் சொன்னது அக்கட்சிதான்.தமது கடிதத்தை முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதும் அக்கட்சிதான்.அக்கட்சி இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் மிகத்தெளிவாக 13வது திருத்தத்தை நிராகரிக்கின்றது.அதேபோல மிகத்தெளிவாக கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைக்கின்றது,மேலும் கடிதத்தின் இறுதி வரியில் “இந்தியாவின் சட்டபூர்வமான  பிராந்திய பாதுகாப்பு நலன்களை”அக்கட்சி ஏற்றுக் கொள்வதை கடிதம் மீள வலியுறுத்துகின்றது.

இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு  நலன்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அந்த அடிப்படையில் இந்திய இலங்கை உடன்படிக்கையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அக்கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.அதேசமயம் அந்த உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அக்கட்சி தெளிவாகக் கூறிவிட்டது.

இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சி இந்தியாவைப் பகை  நாடாகப் பார்க்கமுடியாது.ஆனால் நடைமுறையில் முன்னணியானது, தனது அரசியல் எதிரிகளை விமர்சிக்கும்போது அல்லது தன்னை விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்களைத் தூற்றும்போது அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள்,கைக்கூலிகள்,துரோகிகள் என்றெல்லாம்  குற்றஞ்சாட்டுவதுண்டு.

தமது கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்திடம் கையளித்தபின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஊடகங்களுக்குத்  தெரிவித்த கருத்துக்களிலும் அது வெளிப்படுகின்றது. நடைமுறையில் இந்தியாவை ஒரு பகை நாடாகக் காட்டிக்கொண்டு, உத்தியோகபூர்வமாக இந்தியாவின் பாதுகாப்புசார் நலன்களைத்  தாம் ஏற்றுக் கொள்வதாக அக்கட்சி கூறுவதை, அகமுரண்பாடு என்று விளங்கிக் கொள்வதா? அல்லது உள்ளூரில் கட்சி மோதல்களில் வெளியுறவு நிலைப்பாடுகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்ற முதிர்ச்சி அந்தக்  கட்சியிடம் இல்லை என்று எடுத்துக் கொள்வதா?

இந்தியா ஒரு எதிரி நாடா அல்லது கையாளப்பட வேண்டிய ஒரு பிராந்தியப்  பேரரசா என்ற தெளிவு ஈழத்தமிழர்களுக்கு இருக்கவேண்டும்.பகைநாடு என்றால்,அதன் புவிசார் பாதுகாப்பு  நலன்களோடு சமரசம் செய்யத் தேவையில்லை.மாறாக,கையாளப்பட வேண்டிய ஒரு நாடு என்றால்,அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் பொருத்தமான ஒரு  வெளியுறவுத்  தரிசனம் இருக்கவேண்டும்.அந்த வெளியுறவுத் தரிசனம் உள்நாட்டில் எமது பேரபலம் எது?பிராந்தியத்தில் எமது பேரபலம் எது?உலக அளவில் எமது பேரபலம் எது? என்பது தொடர்பான தொகுக்கப்பட்ட ஆய்வுமுடிவுகளின்  அடிப்படையில் அமையவேண்டும்.உள்நாட்டுக் கொள்கைக்கு வெளியே வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று இருக்க முடியாது.

தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதுகின்றனவென்றால்,அதுவும் ரணில் அங்கு போகவிருக்கும் ஒரு பின்னணியில் மூன்றுகடிதங்கள் அனுப்பப்படுகின்றனவென்றால், இந்தியாவை ஏதோ ஒருவிதத்தில் கையாள வேண்டிய தேவை உண்டு என்று மேற்படி கட்சிகள் நம்புகின்றன என்று பொருள்.இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தவிர்க்கப்படவியலாத ; கையாளப்பட வேண்டிய ஒரு சக்தி என்பதை மேற்படி  கடிதங்கள் உணர்த்துகின்றன. ஆயின் இந்தியாவை கையாள்வதற்கு மேற்படி கட்சிகளிடம் எவ்வாறான வெளியுறவுக் கொள்கை உண்டு? அதற்கு வேண்டிய ஏதாவது நிபுணத்துவக் கட்டமைப்பு அவர்களிடம் உண்டா?

இல்லை.அப்படிப்பட்ட வெளியுறவுத் தரிசனங்கள் இருந்திருந்தால் ரணில் பிரதமர் மோடியை சந்திக்கப்போகும் ஒரு காலகட்டத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை விடவும் அதற்கு முன்னரே அதாவது ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் இருந்து தனக்கு அழைப்பு வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ; அதற்காக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அந்த இடையூட்டுக்குள் புகுந்து வேலை செய்திருக்க வேண்டும்.

ஆனால் எந்த ஒரு தமிழ்க்கட்சியும் அதைச் செய்யவில்லை. இப்பொழுது எதிர்த்தரப்பு முன்னெடுக்கும் ஒரு நகர்வுக்கு பதில்வினையாற்றும் நடவடிக்கையாகவே கடிதம் எழுதப்படுகின்றது.அதாவது ரியாக்டிவ் டிப்ளோமசி.

கடந்த ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபொழுது அதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது.டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு இந்தியா கூட்டமைப்பைக் கேட்டதாக அப்பொழுது தகவல்கள் வெளிவந்தன. ஜனாதிபதியாக வந்ததும் ரணில் இந்தியாவுக்குச் செல்வதற்கு இந்தியாவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதற்காக அவர் ஏறக்குறைய ஓராண்டு காலம் உழைக்க வேண்டியிருந்தது.இப்பொழுதுதான் அந்த அழைப்பு வந்திருக்கிறது.இவ்வாறு ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதிக்குள் தமிழ்க் கட்சிகள் தமது நோக்கு நிலையிலிருந்து எவ்வறான வெளியுறவுச் செயற்பாடுகளை “புரோ அக்டிவ் ஆக” முன்னெடுத்தன?

கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா கூட்டமைப்பை-அப்பொழுது கூட்டமைப்பாகத்தான் இருந்தது-டெல்லிக்கு வருமாறு அழைத்தது.ஆனால் சம்பந்தர் பொருத்தமற்ற  காரணங்களைக் கூறி அந்த அழைப்பை நிராகரித்தார். எந்தப் பேரபலத்தை வைத்து அப்படி ஒரு முடிவை எடுத்தார்? இன்றுவரையிலும் அவர் அதை யாருக்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.இந்தியாவின் அழைப்பை சம்பந்தர் நிராகரித்துவிட்டார்.அதன்பின் இந்தியா தமிழ்த் தலைவர்களை டெல்லிக்கு அழைக்கவில்லை.ரணில் ஜனாதிபதியாக வந்ததும் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு அவருக்கும் டெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லை.தமிழ்த் தலைவர்களுக்கும் அழைப்பு வரவில்லை.ஆனால் அரசுடைய தரப்பாகிய சிங்களத் தலைவர்கள் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவை வெற்றிகரமாகக்  கையாண்டு புதுடில்லியை நெருங்கி சென்று விட்டார்கள்.ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ்த் தரப்போ கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது?

ரணில் ஒரு புத்திசாலி தந்திரசாலி என்று தமிழர்கள் கூறிக் கொள்ளுகிறார்கள். அப்படியென்றால் ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்கள் எப்படிப்பட்ட தந்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்? ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிசபைத் தேர்தலை அறிவித்தபொழுது அதை நம்பி சுவரொட்டிகளை அடித்த தமிழ்க் கட்சிகள்தானே? அதுவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு சுவரொட்டிக்கு பெருமளவு காசைச்  செலவழிக்க வேண்டியிருந்த  ஒரு பின்னணியில், ரணிலின்   அறிவிப்பை நம்பி தமிழ்க் கட்சிகள் சுவரொட்டிகளை அடித்தன.அல்லது நட்டப்பட்டன என்றும் சொல்லலாம். இப்பொழுது அவர் டெல்லிக்கு போகிறார் என்றதும் ஆனந்தசங்கரியை போல கடிதம் எழுதத் தொடங்கி விட்டார்களா?

வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் – நிலாந்தன்.

கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்.

போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.

அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போதிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னெழுச்சிப் போராட்டங்களின் குழந்தைதான் என்பது. போராட்டங்கள் இல்லையென்றால் ரணிலுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது.

தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர்தான் தன்னெழுச்சி போராட்டங்களை நசுக்கினார். அதாவது அரசியல் அர்த்தத்தில் அவர் ஒரு தாயைத் தின்னி.

அவர் அவ்வாறு தன்னெழுச்சிப் போராட்டங்கள் நசுக்கப்பட்டபோது வசந்த முதலிகே-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதானி- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பல மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தன்னெழுச்சிப் போராட்டங்களின் பிரதானிகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். தன்னெழுச்சிப் போராட்டங்களுக்காக ஒப்பீட்ளவில் அதிகம் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.

அண்மையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தமது போராட்டத்திற்கு ஆதரவைக் கேட்பதே அவருடைய வருகையின் நோக்கம்.

சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருக்கிறார்கள். ஆனால் வசந்த முதலிகே குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தை எப்படி தங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை முழுவதிலும் உள்ள 100 நகரங்களில் தாங்கள் போராட இருப்பதாகவும், அப் போராட்டங்களில் தமிழ் மாணவர்களும் இணைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் மாணவர்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை அவர்களே தென்னிலங்கைக்கு வந்து மக்களுக்கு கூற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தாங்கள் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் சில நாட்களுக்கு முன் வசந்த முதலிகே பிபிசிக்கு வழங்கிய போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் அவ்வாறு பத்து அம்சக் கோரிக்கையைக் கையளிக்கவில்லை என்று கூறயிருக்கிறார்.

பிபிசி இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டிருக்கின்றது. வசந்த முதலிகே அணியிடம் தாங்கள் முன்வைத்த 10அம்ச கோரிக்கைகளை மாணவ அமைப்பின் கடிதத் தலைப்பில் எழுதிக் கொடுக்கவில்லை என்ற போதிலும் அவற்றை முன்வைத்தே தாங்கள் உரையாடியதாக யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

சந்திப்பின்போது தாங்கள் எதைக் கதைத்தார்களோ அதையே கதைக்கவில்லை என்று கூறுபவர்களோடு எப்படிச் சேர்ந்து போராடுவது ? என்ற சந்தேகம் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உண்டு.

தென்னிலங்கையில் நடந்த தென்னெழுச்சி போராட்டங்கள் அதாவது இலங்கைத்தீவில் நடந்த நான்காவது பெரிய போராட்டம் ஒன்று நசுக்கப்பட்ட பின் தென்னிலங்கையில் இருந்து வடக்கை நோக்கி வந்த ஆகப் பிந்திய அழைப்பு அது.

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வருமாறு தெற்கு வடக்கை அழைக்கின்றது. அந்த அழைப்புக்கு தமிழ் மாணவர்கள் கொடுத்த பதிலை மேலே கண்டோம்.

தமிழ் மக்கள் அப்படித்தான் பதில் கூற முடியும் என்பதைத்தான் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன சில நாட்களின் பின் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது என்று அநுரகுமார கூறியிருக்கிறார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுரகுமார கூறுவதின்படி 13ஆவது திருத்தம் ஒரு தீர்வு இல்லை என்றால் அதைவிடப் பெரிய தீர்வை அவர் மனதில் வைத்திருக்கிறாரா? என்று கேள்வி எழும்.

நிச்சயமாக இல்லை.அவர்கள் 13ஐ எதிர்ப்பது ஏனென்றால் மாகாண சபைகளை தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

ஏற்கனவே வடக்கு-கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இல்லாமல் செய்த கட்சி ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜேவிபி 13 எதிர்ப்பதற்கு மேற்கண்ட காரணத்தை விட மற்றொரு காரணமும் உண்டு அது என்னவெனில், 13ஆவது திருத்தம் இந்தியா பெற்றெடுத்த குழந்தை என்பதால்தான். அதாவது இந்திய எதிர்ப்பு.

ஜேவிபி தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்ரியை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவும் தயாரில்லை.ஜேவிபி மட்டுமல்ல தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் முன்னிலை சோசியலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரட்னமும் அப்படித்தான் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்க அவர்கள் தயாரில்லை. அவ்வாறு சமஸ்டியை ஒரு தீர்வாக முன் வைப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இதுதான் பிரச்சினை.

இலங்கைத் தீவில் நிகழ்ந்த, உலகின் கவனத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் ஈர்த்த, படைப்புத்திறன் பொருந்திய ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரும், தென்னிலங்கையின் நிலைப்பாடு அப்படித்தான் காணப்படுகிறது.

தமிழ்ப் பகுதிகளில் ஒருபுறம் நிலப்பறிப்பு தொடர்கிறது.இன்னொரு புறம் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது.மட்டக்களப்பில் மைலத்தனை மேய்ச்சல் தரைகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கே ஆக்கிரமிப்பு நடக்கின்றது.தமிழ்மக்களின் கால்நடைகள் இரவில் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகின்றன.இன்னொருபுறம் திருகோணமலையில் கன்னியா வெந்நீர் ஊற்று, குருந்தூர் மலை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை போன்றவற்றில் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது. குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே நாட்டின் தளபதி சவீந்திர டி சில்வா 100பிக்குகளோடு நாவற்குளிக்கு வந்திருக்கிறார். அங்கே கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு கலசத்தை வைப்பது அவர்களுடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனையிறவில், கண்டி வீதியில், தட்டுவன் கொட்டிச் சந்தியில், கரைச்சி பிரதேச சபை இலங்கைத்தீவின் மிக உயரமான நடராஜர் சிலையை கட்டியெழுப்பிய பின் தளபதி சவேந்திர டி சில்வா நாவற்குழிக்கு வருகை தந்திருக்கிறார்.

அதாவது அரசின் அனுசரணையோடு ராணுவ மயப்பட்ட ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் தமிழ்மக்கள் அதற்கு எதிராகப் போராடும்போது அவர்களோடு வசந்த முதலிகே வந்து நிற்பாரா? ஜேவிபி வந்து நிக்குமா? சஜித் வந்து நிற்பாரா? அல்லது குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சுலோக அட்டைகளைத் தாங்கியபடி சந்திகளில் நிற்கின்ற இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறிய கட்சிகள் வந்து நிற்குமா?

இல்லை. அவர்கள் வர மாட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களைத் தீண்டியதால் அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வருகிறார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனப்பிரச்சினைதான் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இனப் பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்மக்கள் அவர்களோடு எந்த அடிப்படையில் இணைந்து போராடுவது?

அதே சமயம் வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் வெற்றி பெறவில்லை என்பது ரணிலுக்கு ஆறுதலானது. தனக்கு எதிராகத் தமிழ் மக்களை எதிர்க்கட்சிகளால் அணி திரட்ட முடியாது என்பது அவருக்கு ஒரு விதத்தில் ஆறுதலான விடயம். தங்களுக்கிடையே ஒற்றுமைப்பட முடியாதிருக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களையும் இணைக்கமுடியாமல் இருப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆறுதலான ஒரு விடயம்தான்.

மேலும் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன காலத்தையொட்டி கிண்ணியா வெந்நீரூற்று விவகாரம் மீண்டும் சூடாகி இருக்கிறது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரமும் ஊடகங்களில் சூடான செய்தியாக இருக்கிறது.

இவை தற்செயலானவைகளா? அல்லது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்படுகின்றவையா?என்று ஒரு நண்பர் கேட்டார். ஏனெனில் இது போன்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை இப்பொழுது ஏன் தீவிரப் படுத்தவேண்டும்? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில், அதைவிடக் குறிப்பாக வசந்த முதலிகே யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன ஒரு பின்னணியில், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்வதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்று மேற்சொன்ன நண்பர் கேட்டார்.அவருடைய கேள்வி நியாயமானது.

தமிழ் மக்களை எதிர்நிலைக்கு தள்ளிவிட்டால்,அவர்கள் வசந்த முதலிகேயோடு இணைய மாட்டார்கள். தங்களோடு சேர்ந்து போராட வா என்று கேட்பார்கள். அதை வசந்த முதலிகே செய்ய மாட்டர். ஜேவிபி செய்யாது.

எனவே ஒருபுறம் தமிழ் மக்களின் கவனத்தைப் புதிய பிரச்சினைகளின் மீது திசை திருப்பி விடலாம். இன்னொருபுறம் தென்னிலங்கையின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வடக்குடன் இணைவதைத் தடுக்கலாம்.

அதாவது தொகுத்துக்கூறின் தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள்வதை ரணில் கெட்டித்தனமாகத் தடுத்துவருகிறார்.

அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பலமான கூட்டு ஜனவசியம் மிக்க தலைமையின் கீழ் உருவாகவில்லையென்றால் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாது.

பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் சரி செய்யும்வரை அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டேயிருக்கும்.

ஆனையிறவில் ஆடும் சிவன் – நிலாந்தன்.

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம்.

2009க்கு பின் ஆனையிறவுப் பிரதேசம் யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரமாகிய கவர்ச்சிமிகு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் எவரும் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு யுத்த வெற்றி வளாகங்களைக் கடந்துதான் உள்ளேவர வேண்டும்.அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.இது எங்களால் வெற்றி கொள்ளப்பட்ட நிலம் என்று பொருள்.

யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் பொழுது குடாநாட்டின் கழுத்துப் பகுதியில் முதலில் தென்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோல்வியுற்ற படை நடவடிக்கை ஒன்றின்போது பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கவச வாகனம். அதற்கருகில் அந்தக் கவச வாகனத்தை தடுத்து நிறுத்திய படை வீரர் ஒருவரின் நினைவுச் சின்னம்.அதோடு சேர்த்து ஒரு விருந்தகம்.அதைச் சற்றுத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் கடலேரியின் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு யுத்த வெற்றிச்சின்னம் உண்டு.இலங்கைத்தீவை இரண்டு கைகள் ஏந்தியிருப்பது போன்ற அந்த யுத்த வெற்றிச் சின்னந்தான் யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் வெளியாட்களை வரவேற்கின்றது. அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.

இவ்வாறு கடலேரியின் உப்புக் காற்றில் எப்பொழுதும் யுத்த வெற்றி வாடை வீசும் ஒரு பிரதேசத்தில்,தமிழ் மக்களின் வழிபாட்டுருக்களில் ஒன்றாகிய நடராஜர் சிலையை நிறுவியமை என்பது அரசியல் அர்த்தத்தில் கவனிக்கப்பட வேண்டியது.

அச்சிலையின் அழகியல் அம்சங்களைக் குறித்தும் அது பார்த்த உடனேயே கையெடுத்துக் கும்பிடக்கூடிய ஒரு சிலையாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்தும் பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.இன்று இக்கட்டுரையில் நான் கூறவருவது அச் சிலைக்குப் பின்னால் இருக்கும் பிரதேச,பிராந்திய மற்றும் கட்சி அரசியலைப் பற்றி.

நாவற்குழிச் சந்தியை போலவே ஆனையிறவிலும் அதாவது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் தமிழ் மக்களை அடையாளப்படுத்தும் கட்டுமானங்கள் அவசியம்.அரசாங்கம் அதைத் திட்டமிட்டு யுத்தவெற்றி வாசலாகக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறது.தமிழ்மக்கள் அதனை ஒரு மரபுரிமை வாசலாக மாற்ற வேண்டும்.அந்த அடிப்படையில் சிந்தித்து கரைச்சி பிரதேச சபை முடிவெடுத்திருந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே.

நாவற்குழியில் ஒரு புத்த விகாரை கட்டியெழுப்பப்பட்டுவரும் ஒரு நிலக்காட்சியில்,சிவபூமி அறக்கட்டளையின் அருங்காட்சியகமும் திருவாசக அரண்மனையும் கட்டப்பட்டிருப்பதுபோல,ஆனையிறவிலும் யுத்தவெற்றி வாசலை எதிர்நோக்கி ஒரு மரபுரிமை வாசலை சிருஷ்டிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.

ஆனால் அந்த மரபுரிமைக் கட்டமைப்பானது எப்படி அமைய வேண்டும்?அது சிங்கள பௌத்த சின்னங்களுக்கு எதிராக சைவச் சின்னங்களை முன் நிறுத்தும் ஒன்றாக அமைய வேண்டுமா? அல்லது தமிழ்த் தேசியத்தின் மதப்பல்வகைமையை பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டுமா?

சிவபூமி அறக்கட்டளை ஒரு சமய நிறுவனம்.அது தான் போற்றும் ஒரு சமயத்தை முன்னிறுத்தும்.ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கத் தேவையில்லை.மேலும் பொதுவெளிச் சிற்பம் வேறு,மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விக்கிரகம் வேறு.இரண்டையும் ஒன்றாகக் கண்டு மயங்கும் பொதுப்புத்தியை அரசியல்வாதிகள் இலகுவாகக் கையாள்வார்கள்.

பிரயோக தேசியவாதமும் நடைமுறையில் பொதுப்புத்தியின் மீதே கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால்,தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள்.அதாவது ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக் கட்டவேண்டும்.இதை இன்னும் ஆழமாக சொன்னால், ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரட்டவேண்டும்.இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், ஒரு மதம் இன்னொரு மதத்திற்கு சமம்; ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்துக்கு சமம் யாரும் பிரதேச ரீதியாகவோ சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் மற்றவருக்கு மேலானவரும் அல்ல கீழானவரும் அல்ல என்ற அடித்தளத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும்.எனவே தேசியவாதம் எனப்படுவது மதப்பல்வகைமையின் மீதே கட்டியெழுப்பப்பட வேண்டும்.மத மேலாண்மையின் மீது அல்ல.இந்த அடிப்படையில் சிந்தித்து தமிழ்மக்கள் தமது மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கவும் முன்நிறுத்தவும் வேண்டும்.

ஒவ்வொரு மதப்பிரிவும் அதனதன் மதச்சின்னங்களை முன்னிறுத்துவதில் தவறில்லை.அது அந்த மதத்தின் கூட்டுரிமை. ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை அவமதிக்கும்போது அல்லது அந்த மதச் சின்னங்களை அழிக்கும்போது அல்லது ஒரு மதத்தின் மேலாண்மையை நிறுவ முற்படும் போதுதான் பிரச்சினை வருகிறது.அதாவது மதப்பல்வகைமை வேறு ;மத மேலாண்மை வேறு.

அண்மை ஆண்டுகளாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்திய மத்திய அரசை அணுகுவதற்கு மதத்தை ஒரு வாகனமாக பயன்படுத்த முயற்சிப்பது தெரிகிறது.இதில் சில தமிழ் அரசியல்வாதிகளும் அடங்குவர்.இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மதசார்பு நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தை அணுக முடியுமா என்று மேற்படி தரப்புக்கள் சிந்திக்கின்றன.பாரதிய ஜனதா அரசாங்கமானது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று.எனவே ஈழத் தமிழர்கள் அந்த அரசாங்கத்தைத்தான் அணுக வேண்டும்.ஆனால் அதன் பொருள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பாரதிய ஜனதா பின்பற்றும் அதே நிகழ்ச்சி நிரலை ஈழத் தமிழர்களும் பின்பற்ற வேண்டும் என்றில்லை.
இப்பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது.இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமுடியாது.இப்பிராந்திய யதார்த்தத்துக்கூடாக சிந்திக்கும்போது ஈழத்தமிழர்கள் பாரதிய ஜனதா அரசாங்கத்தைத்தான் அணுகவேண்டும்.ஆனால் அதன் பொருள் தமிழ் தேசியத்தின் மதப்பல்வமையை பலியிட வேண்டும் என்பதல்ல.

ஈழத்தமிழர்களின் நவீன அரசியல் எனப்படுவது மதப்பல்வகமையின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.பெருமளவு இந்துக்களைக் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில் முதலில் தோன்றிய இளையோர் அமைப்பாகிய யாழ்ப்பாண வாலிபர் முன்னணியை உருவாக்கியது(1924) ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராகிய கன்டி பேரின்பநாயகந்தான்.

தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதன் கால்கோல் விழா 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முன்றலில் சீலஸ்ரீ துரைசாமிக் குருக்களின் ஆசியுடன் இடம் பெற்றது.இதுதொடர்பான தகவல்களை தமிழரசுக் கட்சியின் வெள்ளி விழா மலரில் காணலாம்.அக்கட்சியின் தலைவராகிய செல்வநாயகம் ஒரு புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர்.செல்வநாயகத்தை ஈழத்தமிழர்கள் தந்தை என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அழைத்தார்கள். தந்தை செல்வா இறந்தபோது அவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. இந்து முறைப்படி வேட்டி அணிவிக்கப்பட்டு,தகனம் செய்யப்பட்டது.தன்னைத் தலைவராக தெரிந்தெடுத்து,தந்தை என்று அழைத்த பெரும்பான்மை இந்து வாக்காளர்களை கௌரவிப்பதற்காக செல்வநாயகம் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக கருதப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர்களின் நவீன அரசியலானது மதப் பல்வகமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டது.அதை இப்பொழுது ஒரு மதத்துக்கு மட்டும் உரியதாக குறுக்கக் கூடாது.குறிப்பாக நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது திருச்சபைகளுக்கும் ஆறுமுகநாவலர் போன்ற மதப் பெரியார்கள் மற்றும் இந்துபோர்ட் போன்ற இந்து அறக்கட்டளைகளுக்கும் இடையிலான போட்டியின் திரண்ட விளைவுதான்.ஆனால் அந்தப் போட்டியானது மத விரோதமாக,மோதலாக மாறவில்லை.

ஆனால்,2009க்குப் பின் எந்த ஒரு மதத் தலைவரும் துணிந்து கதையாத ஒரு வெற்றிடத்தில், ஒற்றைக் குரலாக ஒலித்த, முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடைய அதே மறை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான முரண்பாடு தூக்கலாகத் தெரிவது தமிழ்த் தேசியத் திரட்சிக்குப் பாதகமானது. தமிழ்த் தேசியத்தை மதப்பல்வகைமையின் மீது கட்டியெழுப்ப விரும்பும் எல்லாச் சக்திகளும் அந்த முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறு அகமுரண்பாடுகளைத் தீர்க்கும் சக்திமிக்க சிவில் அமைப்புகளோ கட்சிகளோ இல்லாத அரசியல் மற்றும் ஆன்மீக வெற்றிடத்தில்,இன்னொருபுறம்,சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் “எல்லைக் கற்களாக” புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருமோர் ராணுவஅரசியற் சூழலில்,தமிழ் மக்கள் மத்தியிலும் இரவோடிரவாகச் சிலைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.இவ்வாறான சிலை அரசியலின் பின்னணியில்,ஆனையிறவில் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிவ நடனத்துக்கு ஆன்மீக வியாக்கியானம் மட்டுமல்ல,பௌதீகவியல் வியாக்கியானமும் உண்டு.அது ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது(cosmic dance).ஆனையிறவுச் சிவனுக்கு மேலதிகமாக ஓர் அரசியல் பரிமாணமும் உண்டு.உப்புக் காற்றில் யுத்த வெற்றிச் சின்னங்களின் மத்தியில்,சிவனார் யாருடைய பஜனைக்கு ஆடப்போகிறார்?

பேரரசுகள் தேடிவரும் ஒரு நாட்டைவிட்டு, மூளைசாலிகளின் வெளியேறம் தொடர்கிறது! நிலாந்தன்!

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும்,நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க பின்வருமாறு கூறியுள்ளார்…..“இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்களும் எண்ணிக்கையும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை.எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன”…

“அதேவேளை, கிராம மட்ட அரச வைத்தியசாலைகள் மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வெளியேற்றத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும்,கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றன இதுவரை மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை….மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.அதேவேளை,அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க கூறுகிறார்.

மேற்கண்ட இரண்டு செய்திகளும் நமக்கு எதை உணர்த்துகின்றன? படித்தவர்கள்,மூளைசாலிகள்,உள்நாட்டில் நன்றாக உழைக்கக் கூடியவர்கள் நாட்டை விட்டு வெளியேறத்தொடங்கி விட்டார்கள்.ஏனென்றால் முன்னரைப் போல அவர்களுக்கு உழைப்பு இல்லை. இது ஒரு காரணம்.பொருளாதார நெருக்கடியின் விளைவு இது.அதைவிட மேலதிகமான ஒரு காரணம், அதிகரித்த வரி.அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் உழைப்பவர்களிடம் அதிகரித்த வரியை அளவிடத் தொடங்கியுள்ளது.

அதனால் நாட்டை விட்டு மூளைசாலிகள் வெளியேறத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே தமிழர்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.முதலில் போர் ஒரு காரணம். இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஒரு காரணம். அதோடு சேர்த்து ஏற்கனவே புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று விட்டார்கள் என்ற ஒரு முன்னுதாரணம் அவர்கள் முன் நிற்கிறது.அதுவும் 2009க்கு பின்னரான புலப்பெயர்ச்சிக்கு ஒரு காரணம்.

அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுபவர்களை வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.ஆனால் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான அவருடைய நடவடிக்கைகள், வெளியேறும் சிங்கள மக்களைத் தடுக்குமளவுக்கு இல்லை. மாறாக வெளியேற்றத்தை அது ஊக்குவிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒற்றை யானையாக ராஜபக்சக்களின் நாடாளுமன்றத்துக்குள் வந்தபோது, தனது முதலாவது உரையிலேயே அவர் சொன்னார், பன்னாட்டு நாணய நிதியத்திடம் போங்கள் என்று.அன்றிலிருந்து இன்று வரையிலும் அதைத்தான் சொல்கிறார்.ஐ.எம்.எப்பின் உதவி கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற ஒரு மாயையை அவர் கட்டியெழுப்புகின்றார்.அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த ஒரு தலைவர். எனவே பன்நாட்டு நாணய நிதியத்திடம் போனால் அது ஒரு சர்வரோக நிவாரணமாக அமையும் என்று அவர் நம்புகிறாரோ இல்லையோ மக்களை நம்ப வைக்க முற்படுகிறார். அண்மையில் கண்டியில் அவர் ஆற்றிய உரையில் அதைக் காணலாம். பன்னாட்டு நாணய நிதியத்தின் 15 நிபந்தனைகளை நிறைவேற்றியது பற்றி அந்த உரையில் அவர் கூறுகிறார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அரசாங்கம் வரிகளை அதிகரித்தல் ,மானியங்களை வெட்டுதல்,அல்லது இல்லாமல் செய்தல்,,தனியார் மயப்படுத்தல் ,அதாவது,.நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்றல்,அரசுத்துறையில் ஆட்குறைப்புச் செய்தல்….போன்ற நிபந்தனைகளுக்கு உடன்படவேண்டும். கடந்த சில மாதங்களாக ரணில் விக்கிரமசிங்க அதைத்தான் செய்து வருகிறார்

அதன் விளைவாக படித்த நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டுக் கிளம்பத் தொடங்கிவிட்டது.ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்னிடம் கேட்டார்… “இந்த மருத்துவர்களும் பொறியியலாளர்களும் சற் ஸ்கோரில் முன்னிலையில் நின்றபடியால் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார்கள். அதாவது இலவசக் கல்வியின் வரப்பிரசாதங்களை அனுபவித்து அதில் வெற்றி பெற்ற பின் இப்பொழுது நாட்டை விட்டு செல்கிறார்கள்.ஆனால் இவர்களோடு போட்டியிட்டு நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டிலேயே நிற்கிறார்கள்” என்று. நான் அவரிடம் சொன்னேன் அதற்கு அவர்கள் முழுப் பொறுப்பு அல்ல. நமது கல்வி முறைதான் பொறுப்பு. இலவசக் கல்வி என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நடைமுறையில் தேசியமட்டப் பரீட்சைகளை பொறுத்தவரை, அது முதலாவதாக போட்டிக்கல்வியாகவே காணப்படுகிறது.போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதற்காக பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கிறார்கள்.போட்டிக்கல்வியானது இலவசக் கல்வியின் மகத்துவங்களை பெருமளவுக்கு தோற்கடித்து விட்டது.

பரிட்சையில்,போட்டியில் வெல்ல வேண்டும்,அதிகளவு சற் ஸ்கோரைப் பெற வேண்டுமென்றால், இலவசக் கல்வியில் மட்டும் தங்கியிருக்க முடியாது. எனவே போட்டிப் பரீட்சையானது மாணவர்களை பந்தயக்குதிரைகளாக மாற்றுகிறது. பந்தயத்தில் முந்தியோடும் குதிரை சித்தி பெறுகின்றது.எனவே பந்தயக் குதிரையின் மனோநிலையை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உருவாக்கி விட்டு,இலவசக் கல்வியின் மகத்துவங்களை பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது.பந்தயத்தில் முந்திய பிள்ளை மருத்துவராகவும் பொறியாளராகவும் வருகிறது.

போட்டி மனப்பான்மையானது உழைப்பையும் போட்டி ஆக்குகின்றது. போட்டி போட்டுக் கொண்டு உழைப்பவர்கள் அதிக வரி கட்ட வேண்டி வரும் போது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அல்லது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கும் பொழுது அதிக வருமானத்தை வேண்டி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அவர்கள் பெற்ற கல்வியும் அவர்களுடைய சமூக அந்தஸ்தும் அவர்கள் இலகுவாக புலம்பெயர்வதற்குரிய தகமைகளாகக் காணப்படுகின்றன.எனவே இங்கு பிரச்சனை போட்டிக்கல்வி உருவாக்கிய பந்திய குதிரை மனோநிலை தான்.

இவ்வாறு படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் ஒருபுறம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் வெளியேறிவிட்டார்கள்.இப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது.

ஆனால் இவ்வாறு படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் நாட்டை நோக்கி அமெரிக்க போர் விமானங்கள் வருகை தந்தன.அதில் வந்தது யார்? ஏன் வந்தார்கள் போன்ற விவரங்கள் பெருமளவுக்கு ரகசியங்களாக பேணப்படுகின்றன.அமெரிக்கர்கள் மட்டும் வரவில்லை, சில மாதங்களுக்கு முன்பு இந்திய உளவுத்துறை பொறுப்பாளரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகரும் ரகசியமாக வந்து போனதாக செய்திகள் வெளி வந்தன. படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை நோக்கி பேரரசுகள் வருகின்றன.ஏற்கனவே சீனா வந்துவிட்டது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்ற 90 ஆண்டுகளுக்கு குறையாமல் காத்திருக்க வேண்டும். கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனா கட்டிய பட்டணமும் நிரந்தரமானது.

அதாவது பேரரசுகள் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவம் கருதி இச்சிறிய நாட்டில் எங்கோ ஓரிடத்தில் தமது கால்களை ஊன்றிக்கொள்ள விளைகின்றன.ஆனால் பரிதாபத்துக்குரிய இந்த நாட்டிலிருந்து படித்தவர்களும் மூளை உழைப்பாளிகளுக்கு எப்படி வெளியேறுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்;கடவுச்சீட்டு அலுவலகத்தின் முன் வரிசைகளில் காத்து நிற்கிறார்கள்.

Posted in Uncategorized

சுடலைக்கழிவு அரசியல்? – நிலாந்தன்

1970களில் தமிழ் இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்தவரும் தமிழரசு கட்சியோடு நெருங்கிச் செயற்பட்டவரும்,பிந்நாளில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின், இணைந்த வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமாகிய, ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளரின் நேரடி அனுபவம் இது…….தமிழரசுக் கட்சியோடு நெருங்கிச் செயற்பட்ட காலப்பகுதியில் இளையவர்கள் அமிர்தலிங்கத்தின் வீட்டு முன் விறாந்தையில் தங்குவதுiண்டாம். ஒருநாள் இரவு அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்காக போகும்பொழுது அவர்களோடு சேர்ந்து அமிர்தலிங்கத்தின் மகன் ஒருவரும் சென்றிருக்கிறார். இரவு முழுதும் மகனைத் தேடிக் காணாத அமிர்தலிங்கம் அடுத்த நாள் காலை இந்த இளைஞர்களோடு அவரைக் கண்ட பொழுது பின்வரும் தொனிப்படப் பேசியிருக்கிறார்… “நீயும் படிக்காமல் இவங்களப்போல காவாலியாத் திரியப் போறியா?”

1970களில் அமிர்தலிங்கம் எந்த நோக்கு நிலையில் இருந்து அவ்வாறு கூறினாரோ,அதே நோக்கு நிலையில் இருந்துதான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின் சுமந்திரனும் கதைக்கிறாரா ? “20 வருடங்களாகக் கூட இருந்தவர்களை நல் வழிப்படுத்த எடுத்த முயற்சியிலும் நாம் தோல்வி அடைந்து விட்டோம்” இவ்வாறு சுமந்திரன் அண்மையில் சாவகச்சேரியில் வைத்துக் கூறியுள்ளார். முன்பு பங்காளிகளாக இருந்த கட்சிகளை நோக்கித்தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அவர்களை நல்வழிப்படுத்த முற்பட்டோம் என்று கூறுகிறார். ஆயின் அவர்கள் திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று பொருள்.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குற்றவாளிகள் அல்லது திருத்தப்பட வேண்டியவர்கள் என்று அவர் கருதுகிறாரா? இரண்டு தசாப்தங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது இனித் திருந்த மாட்டார்கள் என்று கூறுகிறாரா?

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஏறக்குறைய அரசாங்கம் கூறுவதுபோல புனர்வாழ்வழிப்பது என்ற பொருளில்தான்.ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்வாறு கூறத்தக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? நாங்கள் தூய மிதவாத கட்சி. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள்.எமது கைகளில் ரத்தம் இல்லை. கொலைப் பழி இல்லை.நாங்கள் படித்தவர்ள்;நாங்கள் எப்பொழுதும் நல்வழியில்தான் செல்கிறோம்…. என்று நம்பும் ஒரு மிதவாத பாரம்பரியத்தில் இருந்தா அவ்வாறு கூறப்படுகிறது?

ஆனால் தமிழரசுக் கட்சி அப்படி கூறமுடியாது. ஏனெனில் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அரசியல் செயற்பாட்டாளரும் உட்பட ஆயிரக்கணக்கான இளவயதினரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதே தமிழ் மிதவாதிகள்தான்.குறிப்பாக தமிழரசு கட்சியானது தேர்தல்களில் தோற்கும்பொழுது தீவிர தேசிய நிலைப்பாட்டை கையில் எடுக்கும்.(இப்பொழுது, பேச்சுவார்த்தை மேசையில் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பது போல).அப்பொழுது அவர்கள் பேசும் வீர வசனங்களில் மயங்கி இளையோர் அவர்கள் பின் செல்வார்கள்.அந்த இளையோரை தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் திருப்பி அவர்களைத் தண்டிக்குமாறு தூண்டியது தமிழ் மிதவாதிகள்தான். மேடைகளில் அவர்கள் செய்த முழக்கங்களை கலாநிதி சிதம்பரநாதன் “வார்த்தை வன்முறை-வேர்பல் வயலன்ஸ்” என்று வர்ணிப்பார். இவ்வாறு தமிழ் மிதவாதிகளால் தூண்டப்பட்டு போசிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் ஆயுதப் போராட்டம் ஆகும். எனவே தமிழரசுக் கட்சி இதில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறமுடியாது. தனது கையில் ரத்தம் இல்லை என்றும் கூறமுடியாது.

தமிழரசு கட்சியின் தேர்தல் மேடைகளில் இளையோர் உணர்ச்சிவசப்பட்டு விரலை வெட்டி தலைவர்களின் நெற்றியில் ரத்தத் திலகம் வைத்தார்கள். அவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த ஒருவர் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக வந்தார்.அவருக்கு இயக்க பெயரும் பொட்டு என்று வைக்கப்பட்டது. இப்படியாக இளைஞர்களை ரத்தம் சிந்துமாறு ஊக்குவித்த ஒரு கட்சி இப்பொழுது தன்னை ஒரு தூய மிதவாதக் கட்சியாக கூறிக்கொள்ள முடியாது.

ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் இந்தியாவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பொழுது அதை அமிர்தலிங்கம் தடுக்கவில்லை.

இவ்வாறு தமது இயலாமை,பொய்மை,போர்க்குணமின்மை என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசைதிருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன்மூலம் தமிழ்த் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின.ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேறத் தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள்.ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.கூட்டமைப்பு எனப்படுவதே 2009க்கு முந்திய ஒரு பண்புருமாற்றத்தின்-trasformation-விளைவுதான்.நவீன தமிழ் அரசியலில் தோன்றிய சாம்பல் பண்பு அதிகமுடைய (grey) ஒரு கட்டமைப்பு அது. அப்பண்புருமாற்றத்தை 2009 க்குப் பின் அடுத்த கட்டக் கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல சம்பந்தர் தவறிவிட்டார்.வரலாறு அவருக்கு நிர்ணயகரமான,உன்னதமான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது.ஆனால் வரலாறு அவருக்கு வழங்கிய பொறுப்பை அவர் பொருத்தமான விதத்தில் நிறைவேற்றவில்லை.ஒரு பண்புருமாற்ற காலகட்டத்தை அவர் வீணடித்து விட்டார்.ஒரு பண்புருமாற்றத்துக்குத் தலைமைதாங்க அவரால் முடியவில்லை.அதற்கு அவசியமான அரசியல் உள்ளடக்கமும் அவரிடமில்லை.

 

தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். ஆயுதப் போராட்டம் என்றாலே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். இதில் எல்லாருக்கும் ஏதோ ஒரு விகிதமளவுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு.தமிழ் மக்கள் தங்களுடைய இறந்த காலத்தைக் கிண்டத் தொடங்கினால் பிணமும் நிணமும் எலும்புக்கூடுகளுந்தான் வெளியேவரும்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை இறந்த காலத்தை கிண்டுவது என்பது அதன் பெரும்பாலான அர்த்தத்தில் புதைமேடுகளைக் கிண்டுவதுதான்.அப்படிக் கிண்டத் தொடங்கினால்,ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக்குவதிலேயே தேசம் பல துண்டுகளாக சிதறிப் போய்விடும்.

ஒர் ஆயுத மோதலுக்கு பின்னரான அரசியல் என்ற அடிப்படையில்,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்று நீதிக்கான போராட்டம்.இரண்டு,அந்தப் போராட்டத்துக்காக தேசத் திரட்சியை ஆகக்கூடியபட்சம் உடையவிடாமல் பாதுகாப்பது.அவ்வாறு தேசத்திரட்சியை பலமான நிலையில் பேணுவதென்றால்,அதற்கு தமிழ் அரசியலில் பண்புருமாற்றம் அவசியம்.அதாவது வெளி நோக்கிய நீதிக்கான போராட்டம்; உள்நோக்கிய பண்புருமாற்றம்.அதற்கு பரந்த மனம் கொண்ட பெருந்தலைவர்கள் வர வேண்டும்.

ஆனால் சம்பந்தர் அவ்வாறான ஒரு பெருந் தலைவரல்ல.தமிழ் அரசியலில் முன்னெப்பொழுதும் தோன்றியிராத ஒரு சாம்பல் பண்புமிக்க கூட்டுக்கு சுமார் 20 வருடங்கள் அவர் தலைமை தாங்கினார்.தமிழ் மிதவாத அரசியலிலேயே அதிகளவு ஆசனங்களை(22) வென்ற அக்கூட்டு படிப்படியாகச் சிதைந்து போய்விட்டது.அதற்கு அவரும் பொறுப்பு.அவர் தலைமை தாங்கிய ஒரு கூட்டுக் கலைந்தபொழுது,அதன் தலைவராக,அதைக்குறித்து அவர் உத்தியோகபூர்வமாக எதையும் சொல்லவில்லை.அல்லது சொல்ல முடியவில்லை.கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தருடைய தலைமைத்துவத்தின் தோல்வியுந்தான்.தமிழ் பண்புருமாற்ற அரசியலின் தோல்வியுந்தான்.அது தமிழரசுக் கட்சியின் தோல்வியுமா என்பதை இனிவருங்காலமே தீர்மானிக்கும்.

கடந்த சில கிழமைகளுக்குள் கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை தமிழரசு கட்சியும் இறுக்கமான ஒரு கட்சியாக உள்ளதா என்ற கேட்குமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன.கடந்த கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது மார்ட்டின் வீதியில்,கட்சித் தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.ஆனால் வேட்பு மனுக்கள் சுமந்திரனின் அணியைச் சேர்ந்த ஒருவருடைய அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு நேரடியாக கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றஞ் சாட்டப்படுகிறது.அதாவது கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை என்று பொருள்.அது மட்டுமல்ல, கிளிநொச்சியில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது, சுமந்திரனுக்கு விசுவாசமான அணியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகிறார்கள்.அவர்களில் சிலர் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் இணைந்து விட்டார்கள்.சிறீதரனின் அன்ரன் பாலசிங்கம் கட்சியை எங்கே கொண்டு போகிறார்?

பிரதேசசபைத் தவிசாளரின் வீட்டின் முன் போடப்பட்ட சுடலைக்கு கழிவு

கடந்த திங்கட்கிழமை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டுக்கு முன் சுடலைக் கழிவுகள் ஒரு மூட்டையாகக் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பதனை அவர் முகநூலில் பதிவேற்றியுள்ளார்.அதை யார் செய்தது என்பது நிரூபிக்கப்படவில்லை.எனினும் முகநூலில் பிரதேச சபை தவிசாளர் எழுதிய குறிப்பில்,சுயேட்சைக் குழுவின் மீதே குற்றஞ் சாட்டப்படுகிறது.ஒரே கட்சிக்குள் ஒரே தேர்தல் தொகுதிக்குள் ஏற்பட்ட மோதல்கள் சுடலைக் கழிவுகளை வீட்டின் முன் போடும் அருவருப்பான ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டனவா? இருபது வருடங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது முன்னாள் பங்காளிகளை ஒட்டுக் குழுக்கள்.தூள் கடத்திகள்,தலையாட்டிகள் என்று அழைக்கலாமென்றால்,நாளை,கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறுபவர்களுக்கு என்னென்ன பட்டங்களைச் சூட்டப் போகிறார்கள்?

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது?

ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிய பரா மிலிட்டரிக் குழுக்கள் அவ்வாறு ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கப்பட்டன. அதாவது அரசாங்கத்தோடு சேர்ந்து தமது சொந்த மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற பொருள்பட.

அப்படிப் பார்த்தால் இப்பொழுது தமது அரசியல் எதிரிகளை ஒட்டுக் குழுக்கள் என்று அழைப்பதனை எப்படி விளங்கிக் கொள்வது? அவர்கள் அரசாங்கத்தோடு நிற்கிறார்கள் என்ற பொருளிலா? கஜேந்திரகுமார் ஒரு படி மேலே சென்று அவர்களை இந்தியாவின் ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார். இவ்வாறு மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கும் தகுதிகளை இவர்கள் எப்பொழுது பெற்றார்கள்? எங்கிருந்து பெற்றார்கள்?குறிப்பாக சாணக்கியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வர முன்பு எங்கே நின்றார் ?யாரோடு நின்றார் ?எப்படி அவர் தமிழரசு கட்சிக்குள் வந்தார்? இப்பொழுது மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று கூறும் இவர்கள் எப்பொழுது தங்களை தியாகிகள் என்று நிரூபித்தார்கள்?

கடந்த 13 ஆண்டுகளாக நினைவு கூர்தலில் துணிச்சலான சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததைத் தவிர, நாடாளுமன்றத்தில் வீரமாகப் பேசியதைத் தவிர எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு தியாகமும் செய்திருக்கவில்லையே? குறைந்தது தங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சலுகைகளைக்கூடத் துறக்கவில்லை. மற்றவர்களைத் துரோகிகள் என்று அழைப்பதால் யாரும் தியாகிகள் ஆகிவிட முடியாது. அவரவர் தாங்கள் தங்களுடைய சொந்த தியாகங்களின் மூலந்தான் தங்களை தியாகிகளாகக் கட்டியெழுப்பலாம். ஆனால் கடந்த 13 ஆண்டு கால அரசியலானது ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இப்பொழுதும் தியாகி – துரோகி என்ற வகைப் பிரிப்புக்குள் சிக்கப் போகின்றதா?

ஆயுதப் போராட்டத்தில் ஒருவர் தன்னைத் தியாகி என்று நிரூபிப்பதற்கு ஆகக்கூடியபட்ஷ வாய்ப்புக்கள் இருக்கும்.ஆனால் ஒரு மிதவாத அரசியலில் அப்படியல்ல. இரண்டுமே இருவேறு ஒழுக்கங்கள். மிதவாத அரசியலில் ஒருவர் தன்னை தியாகி என்று நிரூபிப்பதற்கு காலம் எடுக்கும். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் யாருமே தங்களை தியாகிகள் என்று நிரூபித்திருக்கவில்லை. எனவே மற்றவர்களைத் துரோகிகள் என்று கூறுவதற்கு யாருக்குமே தகுதி கிடையாது.

தனது முன்னாள் பங்காளிகளை நோக்கி தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது ஒருபுறம் அவர்கள் தமது எதிரிகளைக் குறித்து பதட்டமடைவதையும் அது காட்டுகிறது. இன்னொரு புறம் இனி வரக்கூடிய தேர்தல் அரங்குகளில் பிரச்சார உத்திகள் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு இறங்கப் போகின்றன என்பதனையும் அவை கட்டியம் கூறுகின்றன.

தமிழ் மக்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். எனவே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். எல்லாருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு.ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டம் கடந்த காலத்தை கிண்ட வெளிக்கிட்டால், பெருமளவுக்குப் புதைமேடுகளைத்தான் கிண்ட வேண்டியிருக்கும். இறந்த காலத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்ட முற்பட்டால் புதை மேடுகளைத்தான் கிண்டவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் இறந்த காலத்தின் புதை மேடுகளைக் கிண்டினால் பிணமும் நிணமும் எலும்புக் கூடுகளும்தான் வெளியே வரும்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை. அது முன்னைய மிதவாத அரசியலின் தோல்வியில் இருந்தே பிறந்தது.இன்னும் கூராகச் சொன்னால் மிதவாத அரசியலின் மீது தமிழ் இளையோருக்கு ஏற்பட்ட விரக்தி சலிப்பு ஏமாற்றம் என்பவற்றின் விளைவே ஆயுதப்போராட்டம் எனலாம். அவ்வாறு இளையோரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதில் தமிழ் மிதவாதிகளுக்கு பெரிய பங்கு உண்டு.நமது தேர்தல் தோல்விகளின் போதெல்லாம் தீவிர அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதன்மூலம் தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க முற்றுபட்பட்டிருக்கிறது. இம்முறையும் அதைத்தான் தமிழரசு கட்சி பேச்சுவார்த்தை அரங்கில் செய்து கொண்டிருக்கிறது. தீவிர எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தான் இழந்த தமது வாக்கு வங்கியை மீளப் பெறலாம் என்று தமிழரசு கட்சி நம்புகின்றது.

இவ்வாறு தமது தேர்தல் தோல்விகளின் பின் தமிழரசு கட்சியும் ஏனைய தமிழ் மிதவாத கட்சிகளும் தீவிர நிலைப்பாடுகளை எடுத்ததன.அதன் விளைவாக அவர்கள் இளையோரை வன்முறைகளை நோக்கித் தூண்டி விட்டார்கள். இளம் தலைமுறையின் கோபத்தையும் ஆவேசத்தையும் விரக்தியையும் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக முதலில் தூண்டி விட்டார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ஆயுதப் போராட்ட அரசியலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று எந்த ஒரு தமிழ் மிதவாதக் கட்சியும் கூற முடியாது.

தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும், இளையோரின் கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்பும் நோக்கத்தோடும் தமிழ் மிதவாதிகள் முழங்கிய கோஷங்கள் பல “வேர்பல் வயலன்ஸ்” என்று கலாநிதி சிதம்பரநாதன் கூறுகிறார். ஒரு காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மேடைகளில் தொண்டர்கள் தமது விரலை வெட்டி அந்த ரத்தத்தால் தலைவர்களின் நெற்றிகளில் திலகம் இடுவார்கள். இவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் இயக்கத்தில் சேர்ந்த பொழுது பொட்டு என்று அழைக்கப்பட்டதாக ஒரு கதை உண்டு.

இவ்வாறு தமது இயலாமை, பொய்மை, அயோக்கியத்தனம் என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசை திருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன் மூலம் தமிழ் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின. ஆனால் ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேற தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.தமிழ் அரசியலில் தோன்றிய அதிகம் சாம்பல் தன்மை மிக்க ஒரு கட்டமைப்பு அது. அதை அதன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் வரலாறு அவருக்குத் தந்த ஒரு முக்கியமான பொறுப்பை அதாவது ஒரு பண்புருமாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறினார். அதன் விளைவாக கூட்டமைப்பு கடந்த 13 ஆண்டுகளாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசு கட்சி தனியே வந்துவிட்டது. ஏனைய கட்சிகள் ஒரு கூட்டாக நிற்கின்றன.

ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்கு தலைமை தாங்க முடியாத சம்பந்தர் கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்ல,சுமார் இரு தசாப்த காலங்களுக்கு தான் தலைமை தாங்கிய ஒரு கூட்டு ஏன் சிதைந்தது? அதற்கு யார் பொறுப்பு? என்பதைக் குறித்து இன்றுவரையிலும் உத்தியோகபூர்வமாக எதையுமே கூறாத அல்லது கூற முடியாத ஒரு தலைவராகக் காணப்படுகிறார்.

அவர் தலைமை தாங்கிய கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை அவருடைய கண்களுக்கு முன்னால் அவருடைய தாய்க் கட்சியாகிய தமிழரசு கட்சியும் சிதையக் கூடிய ஆபத்துக்கள் தெரிகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாளன்று,மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமைகள் இருக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்குள்ளேயே சிறு உடைவு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக சுமந்திரனின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சுயேட்சைக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். சில ஆதரவாளர்கள் சந்தரகுமாரின் சமத்துவக் கட்சியோடு இணைந்து விட்டார்கள். இவை தமிழரசு கட்சியும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் பலமான, இறுக்கமான கட்சியாக இல்லை என்பதனை காட்டுகின்றன.கட்சியின் தலைமைத்துவத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி எதிர்காலத்தில் மேலும் விகார வடிவத்தை அடையக்கூடும். முன்னாள் பங்காளிகளை இப்பொழுது ஒட்டுக் குழு என்று கூறுபவர்கள் தலைமைத்துவப் போட்டி என்று வரும் பொழுது உட்கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவரை எப்படி முத்திரை குத்தப் போகிறார்கள்?

எனவே கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தர் ஒரு தலைவராக தோல்வி அடைந்ததை மட்டும் காட்டவில்லை, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி சிதைவடையக்கூடிய ஆபத்துகள் அதிகரிப்பதையும் கட்டியம் கூறுகின்றதா?

ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்கிறாரா? – நிலாந்தன்

ணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை. ஆனால் அனைத்துலக அரங்கில் அவர் ஒப்பீட்டளவில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்படும் ஒரு தலைவர்.ஏனென்றால் அவர் எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒருவர்.அப்படிப்பட்ட முதிர்ச்சியான ஒருவரை விடவும் முதிர்ச்சியும் அனுபவமும் அங்கீகாரமும் குறைந்த டளஸ் அழகப்பெரும வைக் கையாள்வது இலகுவானது என்று இந்தியா கருதியிருக்கக் கூடும்

தாமரை மொட்டுக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான ஒரு முன் தடுப்பாக ரணிலே காணப்படுகிறார். அதனால் அவர் ஜனாதிபதியாக வருவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் தாமரை மொட்டுக்கள் நாடாளுமன்றத்தில் இப்பொழுதும் பலமாக காணப்படுகின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் இந்தியா அவரை அதிகம் வரவேற்கவில்லை என்று கருதப்படுகிறது. பொதுவாக இலங்கைத்தீவின் ஆட்சித்தலைவர் பதவியேற்றதும் முதலில் செல்லும் நாடு இந்தியாதான். ஆனால் ரணில் இன்றுவரை இந்தியாவுக்குப் போகவில்லை அல்லது இந்தியா அவரை வரவேற்கவில்லை?

இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை என்றும் கருதப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அன்மையில் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொழும்புக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.இதை எந்த ஒரு தரப்பும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.ஆனால் அவருடைய வருகைக்குப்பின் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவை கவரும் விதத்தில் தொடர்ச்சியாக நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. அடுத்த சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமரை அல்லது ஜனாதிபதியை பிரதான விருந்தினராக அழைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு இந்திய தலைவர் ஒருவர் வருவதற்கு இந்தியாவை திருப்திப்படுத்தும் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டி இருப்பதாக தெரிகிறது.அதன்படி அண்மை வாரங்களாக பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை புனரமைக்கும் வேலைகள் இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இரண்டாவதாக, மூடப்பட்டிருந்த பலாலி விமான நிலையம் கடந்த வாரம் மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

மூன்றாவதாக, காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு யாத்திரிகர் பயணிகள் சேவை ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கப்படும் என்று ஊகங்கள் நிலவுகின்றன. அதற்குரிய கட்டுமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஆக குறைந்தது 8 மாத காலம் எடுக்கும் என்றும் அதனால் அந்த படகுச் சேவையை உடனடியாக தொடங்க முடியாது என்றும் தகவல் உண்டு. மேலும் இது கடல் கொந்தளிக்கும் காலம் என்பதனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்காலிகமாக அந்த சேவையை தொடங்கலாம் என்றும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு. இந்த சேவையைத் ஆரம்பிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே குரலெழுப்பி வருபவர் ஈழத்து சிவசேனை அமைப்பின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம். அவர் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய தகவல்களின்படி இக்கப்பல்சேவையை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாலாவதாக, இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ்.கலாச்சார மையத்தை திறக்கும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக் கலாச்சார மையத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் விரும்பின. சீனாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட தாமரை மொட்டு கோபுரத்தைப் போல கலாச்சார மைய த்துக்கும் ஒரு அதிகார சபையை உருவாக்கி அதை நிர்வகிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது. எனினும் இக்கலாச்சார மண்டபமானது தமிழ் மக்களுக்கான தனது பரிசு என்ற அடிப்படையில் அதனை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியதாக தெரிகிறது. அதன்படி யாழ் மாநகர சபை மேற்படி மண்டபத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி உதவிகளை இந்தியா வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கென்று பிரதான குழு ஒன்றும் உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளன . அடுத்த சுதந்திர தின விழாவையொட்டி இம்மண்டபம் திறக்கப்படக்கூடும். இந்திய அரசுத் தலைவர்களில் யாராவது ஒருவர் இந்த மண்டபத்தை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலில் பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது இந்திய ஜனாதிபதி வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கலாச்சார மண்டபத் திறப்பு விழாவோடு யாழ்ப்பாணத்திலும் கொண்டாடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இந்தியத் தலைவர் ஒருவரை அழைப்பதன் மூலம் அரசாங்கம் பல்வேறு இலக்குகளை ஒரே சமயத்தில் அடைய முயற்சிக்கின்றதா?

ரணில் விக்ரமசிங்கே தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், இந்தியாவை நோக்கி நெருங்கி செல்வது என்பது அவருக்கு சாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவுகளை சீர்செய்ய முடியும்.அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கையாள முடியும்.அதை நோக்கி அவர் புத்திசாலித்தனமாக நகரத் தொடங்கி விட்டார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு முயற்சித்து வருகிறார். எனினும் இந்தியா அவரை முழுமையாக நெருங்கி வரவில்லை என்று தெரிந்தது.ஆனால் அண்மை வாரங்களாக அவர் அந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாகத் தெரிகிறது.அரசுடைய இனமாக இருப்பதில் உள்ள அனுகூலம் அதுதான். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் அவர்கள் இடைவெளிகளைக் கவனமாகக் கையாள முடிகிறது. ஆனால் தமிழ்த் தரப்போ அரசற்றது. இந்தியா உட்பட எல்லா பேரரசுகளும் இலங்கைதீவில் கொழும்பைக் கையாள்வதைத்தான் தமது பிரதான ராஜிய வழிமுறையாக கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த வை.கோபால்சாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதைக் காண முடிகிறது.பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா கொழும்புக்கு வழங்கிய உதவிகள் முழு நாட்டுக்குமானவை, எல்லா இனங்களுக்குமானவை என்று அவர் கூறுகிறார் .அதாவது கொழும்பில் உள்ள அரசாங்கத்தை கையாள்வதுதான் தொடர்ந்தும் இந்தியாவின் அணுகுமுறையாக காணப்படுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக இலங்கைத்தீவில் இந்தியாவின் பிடி ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்படுகிறது. முன்னைய அரசாங்கங்கள் இந்தியாவோடு இணங்கி ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து பின் வந்த அரசாங்கங்கள் பின்வாங்கின. உதாரணமாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்,பலாலி விமான நிலையத் திறப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.மேலும், வடக்கில் கடலட்டைப் பண்ணைகளின் மூலம் சீனா உள் நுழைவதாக இந்தியா சந்தேகிக்கிறது.அதேசமயம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு முதலில் புதிய நாடாக இந்தியா காணப்படுகிறது. அந்த உதவிகளின்மூலம் இந்தியா ஆறு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது. அவற்றில் முக்கியமானது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் கடல்சார் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு உடன்படிக்கையாகும்.மேலும் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் ஏற்கனவே இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்ட உடன்படிக்கையை முன்நகர்த்தும் விடயத்தில் இந்தியாவுக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்பட்டன. எனினும் வடக்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இணைப்பு திட்டங்கள் பொறுத்து, கொழும்பு இழுத்தடிக்கும் ஒரு போக்கை கடைப்பிடித்து வந்தது. ஆனால் அன்மை வாரங்களில் ரணில் விக்கிரமசிங்க டெல்லியை நெருங்கி செல்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறி இருப்பதாக தெரிகிறது. அதாவது இந்தியாவுடனான உறவுகளை அவர் சீர்செய்யத் தொடங்கிவிட்டார்.இது எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

-நிலாந்தன்

தந்திரம் செய் – நிலாந்தன்

ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கும் ஐநாவை சமாளிப்பதற்கும் இது போன்ற அறிவிப்புகள் தேவை. அல்லது தமிழ் மக்களின் தலையில் ஏதாவது ஒரு அரைகுறைத் தீர்வை கட்டி விடுவதற்கு இது உகந்த தருணம் என்று ரணில் சிந்திக்கிறாரா?

ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் ரணில்+மைத்திரி அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்க முற்பட்டது.அந்த யாப்புருவாக்கச் செய்முறைகள் இடைக்கால வரைபுவரை முன்னேறின.ஆனால் இடையே மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.அதனால் யாப்புருவாக்க முயற்சிகள் இடையில் நின்று போயின. அதன்பின் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இப்பொழுது ரணில் மீண்டும் வந்து விட்டார் அவர் 2018 இல் விட்ட இடத்திலிருந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது அதே பழைய முயற்சிக்கு ஒரு புதிய லேபலை ஒட்டி அதைத் தொடரப் போகிறாரா?அல்லது முற்றிலும் புதிதாக ஒரு முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது பன்னாட்டு நாணய நிதியம் ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்குத் தமிழ் மக்களையும் பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமா ? என்ற கேள்விகளை தமக்குள் எழுப்பி தமிழ்த் தரப்பு ரணிலை எதிர் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தமிழ்த் தரப்பு ரணிலை எதிர்கொள்வதற்காக தங்களுக்கிடையே கலந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று கூறி கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எனைய கட்சித் தலைவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.அதில் அவர் சமஸ்ரிதான் தமிழ் மக்கள் கேட்கும் தீர்வு என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அது தொடர்பில் அவர் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடுகூட உரையாடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவருடைய அழைப்பை, கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் பொருட்படுத்தவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளும் அந்த அழைப்பை பொருட்படுத்தவில்லை.சம்பந்தர் அழைத்தால் மேசைக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டை ஏனைய கட்சிகள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் சுமந்திரனின் அழைப்பு வெற்றி பெறவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சம்மந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெறவிருந்த அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.அதாவது பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக தமிழ்த்தரப்பு தங்களிடையே பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முயற்சி சறுக்கிவிட்டது.

அப்படி ஒரு முயற்சி அவசியமானது. அதை கட்சிகள் தங்களுக்கிடையே தாங்களாக செய்ய வேண்டும். அல்லது குடிமக்கள் சமூகங்கள் அதை நோக்கி கட்சிகளை உந்தித்தள்ள வேண்டும்.ஏனென்றால் தமிழ்த்தரப்பு என்ன கேட்கின்றது என்பதனை ஒரே குரலில் சொன்னால் அதற்குப் பலம் அதிகம் என்று அபிப்பிராயம் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் மத்தியில் உண்டு. தமிழ் குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதை வலியுறுத்திப் பேசுவதுண்டு. தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் பிரதான பலவீனமாக அதைச் சுட்டிக்காட்டிப் பேசும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உண்டு.இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமிழ்த்தரப்பு தான் எதைக் கேட்கிறது என்பதனை ஒரே குரலில் முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாயத் தேவை உண்டு.

தமிழ் கட்சிகள் என்ன கேட்கின்றன ?இதுவரையிலும் தமிழ்த் தரப்பு முன்வைத்த தீர்வு முன்மொழிவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுமே,எல்லாக் குடிமக்கள் சமூகங்களுமே ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றன.அவை கூட்டாட்சிப் பண்புடைய -சமஸ்ரிப் பண்புடைய தீர்வைத்தான் – கேட்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் தமிழ்த்தரப்பு அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த ஒரு காலகட்டம் எதுவென்றால் கடந்த ஆறு ஆண்டுகாலப் பகுதிதான்.2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 ஐநா தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றினார். அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசன பேரவையாக மாற்றப்பட்டது.அதிலிருந்து தொடங்கி கோத்தாபயவின் யாப்புருவாக்கத்திற்கான நிபுணர்குழு வரையிலும் தமிழ்த்தரப்பு தனது முன்மொழிவுகளை முன்வைத்து வருகிறது.இதில் தமிழ்க்கட்சிகள்,தமிழ் குடிமக்கள் சமூகங்கள்,தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்புகளும் கடந்த 6 ஆண்டு கால பகுதிக்குள் அதிகளவு முன்மொழிவுகளை வைத்திருக்கின்றன.

இதில் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது ஒரு சமஸ்ரி முன்மொழிவு.அதுபோலவே வட மாகாண சபை முன் வைத்ததும் ஒரு சமஸ்ரி முன்மொழிவு.விக்னேஸ்வரனின் கட்சி கொன்பெடரேஷனை கேட்கின்றது.அதுவும் உயர்வான ஒரு சமஸ்ரிதான்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு சமஸ்ரிக் கட்டமைப்பைக் கேட்கிறது.அரசாங்கம் ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி கூட்டாட்சிக்குத் தயார் என்று அறிவித்தால் தாம் ரணிலுடன் பேசத்தயார் என்று அக்கட்சி கூறுகிறது.

இதில் கூட்டமைப்பு ரணிலோடு இணைந்து உருவாக்க முயன்ற யாப்பைக் குறித்து விமர்சனங்கள் உண்டு.தமிழ் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் முதலாவது யாப்புருவாக்க முயற்சி அதுவென்று சம்பந்தர் சொன்னார். கூட்டமைப்பு அதை சமஸ்ரிப் பண்புடையது என்று கூறியது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அமைச்சர்களும் அது ஒற்றை ஆட்சிதான் என்று சொன்னார்கள்.சம்பந்தர் “பிரிக்கப்படமுடியாத, பிளவுபடாத இலங்கைத் தீவு” என்று திரும்பத் திரும்ப ஒரு மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.சமஸ்ரி என்று வெளிப்படையாக லேபலை ஒட்டினால் அதைச் சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்றும் காரணம் கூறப்பட்டது. அதாவது நடைமுறையில் அந்தத் தீர்வு முயற்சியை அவர்கள் சிங்கள மக்களுக்கு ஒற்றை ஆட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். தமிழ் மக்களுக்கு அது கூட்டாட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது சுமந்திரன் கூறுகிறார் ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி எல்லாக் கட்சிகளும் ஒரு குரலில் பேச வேண்டும் என்று.

அவர் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டபடி சமஸ்ரிதான் தீர்வு என்பதனை தமிழரசுக்கட்சி உறுதியாகவும் வெளிப்படையாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் கூறுமாயிருந்தால் ஏனைய கட்சிகளும் அவர்களோடு இணைந்து ஒரே குரலில் அந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைய மறுத்தால் அதுவும் நல்லதே.அக்கட்சி வெளியில் நின்று கொண்டு ஏனைய கட்சிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும். எனைய கட்சிகள் தமது கோரிக்கைகளில் இருந்து இறங்கினால் அவற்றை முன்னணி அம்பலப்படுத்தும். எனவே ஒரு கட்சி எதிர் நிலையில் நிற்பதும் நல்லது.

ரணில் இனப்பிரச்சினையை சர்வதேசமயநீக்கம் செய்ய முற்படுகிறார்.வெளியாரின் தலையீடின்றி பிரச்சினையைத் தீர்க்க வருமாறு தமிழர்களை அழைத்திருக்கிறரார்.போரில் வெல்வதற்கு அவர்களுக்கு வெளி நாடுகளின் ஆயுதமும் உதவிகளும் தேவை.ஆனால் சமாதானத்துக்கு அது தேவையில்லையாம்.தமிழ்த் தரப்பு அதை ஏற்கக்கூடாது.இந்தியாவையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும்.அந்த மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தின்கீழ் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் கூட்டாட்சிக்கான ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதுவதற்காகப் பேச வேண்டும்.

மேலும் இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக அமைப்புக்களிடம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பதை பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக வைக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்

ரணில் இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி.தந்திரமும் நிறைவேற்று அதிகாரமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.ரணில் ஒரு நரி.அவர் தந்திரங்கள் செய்வார் என்று தமிழ்த்தரப்பு தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்மக்கள் தாங்களும் புத்திசாலிகள் என்பதனை நிரூபிக்க வேண்டிய ஆகப்பிந்திய தருணம் இது.

– நிலாந்தன்