பட்டினியால் வாடிய சிறுவன் மூதூரில் பரிதாபமாக மரணம்

பட்டினியால் வாடிய சிறுவன் மூதூரில் பரிதாபமாக மரணம் – மூதூரில் பரிதாபமாக மரணம் மனதை நெகிழவைக்கும் துயரம்

மிகக் கொடிய வறுமையால் பட்டினியால் வாடிய சிறுவன் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தார். இந்தத் தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.

மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல்களை மூதூர் பாரதிபுரம் – கிளிவெட்டியில் உள்ள மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில், மூதூர் – 64 ஆம் கட்டை, சகாயபுரம் கிராமத்தில் மிகவும் வறுமை நிலையில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவர்களில் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வந்த சிறுவன் ராமராஜன் குடும்பமும் ஒன்றாகும். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆலயத்துக்கு சென்று தன்னால் முடிந்த பணிகளை செய்வான். அறநெறி பாடசாலைக்கு ஆர்வத்துடன் வருவான். எனினும், வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லை. இந்த நிலையில் நாங்கள் முடிந்தவரை அடிக்கடி சிறு உதவிகளை சிறுவன் குடும்பத்துக்கு செய்து வருகின்றோம். கடந்த வாரம் உண்ண உணவின்றி பலவீனமாக இருப்பதாகவும் அவர்களின் தற்காலிக வீட்டில் உள்ளேயும் வெளியேயும் மழை வெள்ள நீர் தேங்கி நிற்பதாகவும் எமது பணியாளர்களால் படத்துடன் உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சமூக நலன் விரும்பி ஒருவரிடம் என்பவரிடம் இருந்து நிதியை பெற்று ஒரு மாதகாலத்துக்குப் போதுமான 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருள்களை பெற்று கொடுத்தோம். நாங்கள் சிறுவனின் நிலை அறிந்து அவரின் வீட்டுக்கு சென்றபோது அவர் எழுத்திருக்க முடியாத நிலையில் சோர்ந்து காணபட்டார். அவர்களின் வீட்டுக்குள் மழை நீர் வழிந்தோடியது. வீட்டுக்குள்ளே போக முடியாதபடி சுற்றிவர நீர் தேங்கி நிற்பதை யும் காணமுடிந்தது.

இந்த நிலைகண்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினேன். இனிமேலாவது இருக்கின்ற சிறுவர்களை பாதுகாக்க அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். சகாயபுரம் கிராமம் போன்று பல கிராமங்களில் வறுமையின் கோரப் பிடி யில் சிக்கி பெருமளவு மக்கள் கவனிப்பாரற்று உள்ளனர். இவ்வாறனவர்களுக்கு நாம் உதவி வருகிறோம். அதிகாரிகளும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

சில துறைகளுக்கான பொருட்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

நாட்டில் காணப்பட்ட கடும் டொலர் நெருக்கடி காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை 670 பொருட்களுக்கான இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை எமது நாட்டில் தயாரிக்கப்படக்கூடியவை ஆகும்.

வெசாக் கூடுகள், பட்டங்கள் மற்றும் யோகட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

எனவே, அடுத்த வருடத்திலிருந்து இவ்வாறான பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்வதா அல்லது நாமே தயாரிப்பதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களில் 1465 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. நாட்டில் நிலவிய கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அண்மையில் 795 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டது. 470 பொருட்களுக்கான இறக்குமதி தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசுக்கு வருமானம் போதாது – நிதி அமைச்சு செயலாளர்

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் இன்று (23) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் வருமானத்தை அதிகரித்தது போன்று செலவைக் குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்சியாளர்களால் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டுள்ளது – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறி குருச வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (டிச 21) இரவு இடம்பெற்ற ‘நம்பிக்கையின் பிறப்பு’ எனும் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை நாட்டில் இவ்வளவு அழிவுகளுடன் கொண்டாட முடியாதுள்ளது.

ஆட்சியாளர்களின் மோசமான செயல்களால் நாட்டுக்கு இப்படி நேர்ந்துள்ளது. பிச்சைக்காரர்கள்போல் உணவும் பானமும் கேட்டு உலகம் முழுவதும் செல்கிறார்கள்.

இவ்வளவு அழகான, பசுமையான எமது நாடு உணவு மற்றும் பானங்களுக்காக பிச்சை எடுப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். மோசமான ஆட்சியாளர்களின் செயலால்தான் நாட்டுக்கு இந்த நிலையை நேர்ந்துள்ளது என்றார்.

கூட்டத்திற்கு தாமதமாக வந்த இலங்கை அமைச்சரை கடுமையாக சாடிய தென்கொரிய அதிகாரி

பொய்களை சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கையில் சாதாரணவிடயமாகிவிட்டது அது இலங்கையின் கலாச்சாரமாகிவிட்டது என தென்கொரிய நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் கொழும்பில் இன்று ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றிற்கு 30 நிமிடம் தாமதமாக வந்த இராஜாங்க அமைச்சரை தென்கொரியாவை சேர்ந்த அமைப்பொன்றின்South Korea Disaster Relief Foundation தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.

தென்கொரியாவை சேர்ந்த அமைப்பொன்றின் தலைவரை இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் இன்று சந்திக்க ஏற்பாடாகியிருந்தது எனினும்இராஜாங்க அமைச்சரும் அவரது குழுவினரும் குறிப்பிட்ட சந்திப்பிற்கு அரைமணிநேரம் தாமதமாக சென்றுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு தென்கொரியா எவ்வாறு உதவலாம் என ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கே இலங்கை அதிகாரிகள் தாமதமாக சென்றுள்ளனர்.

இதன் காரணமாக சீற்றமடைந்த தென்கொரிய அமைப்பின் தலைவர் சோ சங் லீ இலங்கை குழுவினரை கடுமையாக சாடியுள்ளார்.

கூட்டமொன்றிற்கு அரை மணித்தியாலம் தாமதமாக செல்வது நல்ல அறிகுறியில்லை அமைச்சர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமு; நிகழ்வுகளிற்கு உரிய நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் இது இடம்பெற்றிருந்தால் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அமைச்சர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அந்த சந்திப்பு உரிய நேரத்தில் ஆரம்பமாகவேண்டும்,அமைச்சர்களால் அதனை செய்ய முடியாவிட்டால் அவர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை எனவும அவர் தெரிவித்துள்ளார்

பொய்களை சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கையில் சாதாரணவிடயமாகிவிட்டது அது இலங்கையின் கலாச்சாரமாகிவிட்டது என தெரிவித்துள்ள தென்கொரிய அமைப்பின் தலைவர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இதனை தெரிவிப்பதை கேள்விப்பட்டு இலங்கை மக்கள் வெட்கப்படவேண்டும், இலங்கை மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்களால் வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்,அவற்றை நிறைவேற்றுவதை ஒருபோதும் மறக்க கூடாது அமைச்சர்களும் அவ்வாறே செயற்படவேண்டும்,அவ்வாறு செயற்படாத அமைச்சர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை,மக்கள் பொய்சொல்லக்கூடாது,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி

நாட்டில் உள்ள 12 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு மேல் விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20,000 ரூபாவும் அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலடப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ‍ தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புத்தூரில் பொருளாதார நலிவுற்ற 32 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்.புத்தூர் ஊறணியில் ஜே/278 கிராம சேவையாளர் பிரிவில் வாழும் 32 பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு புத்தூர் ஊறணி கண்ணகை அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(17.12.2022) நண்பகல்-12 மணியளவில் சனசமூக நிலையத் தலைவர் ந.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) சேர்ந்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை நேரடியாக வழங்கி வைத்தனர்.

இதேவேளை, குடும்பம் ஒன்றிற்குத் தலாஇரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 64 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி – ஐக்கிய நாடுகள் உணவு விவசாய அமைப்பு

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கையில், நான்கு பேரில் ஒருவர் ஏற்கெனவே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்

இதேவேளை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாய உற்பத்தி கீழ்நோக்கிய போக்கில் உள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் விலங்குணவு கிடைக்காமலும் மீனவர்கள் எரிபொருளை பெற முடியாமலும் உள்ளனர்.

இதன் காரணமாக, உள்ளூர் சந்தைகளில் உணவு விநியோகம் சுருங்கி வருவதாகவும் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவிகள் 244,300 பேரை சென்றடைந்துள்ளது.

அதேவேளை 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்காக நேற்று (திங்கட்கிழமை) வரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவினால் பாடசாலை சீருடைகள் நன்கொடை

பாடசாலை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1வது தொகுதி முடித்த பொருட்கள் ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

ஏப்ரல் முதல் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு எவரையும் அனுப்பமாட்டோம் – மனுஷ நாணயக்கார

அடுத்த வருடம் மார்ச் மாத்தத்துக்கு பின்னர் வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு இலங்கையில் இருந்து யாரையும் அனுப்பவித்தில்லை.

சிறந்த பயிற்சி பெற்றவர்களையே வெளிநாட்டு தொழிலுக்கு  அனுப்புவோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் முறையான பயிற்சி இல்லாமல் இவ்வாறு தொழில்வாய்ப்புகளுக்கு செல்வதே இதற்கு காரணமாகும்.

அதேபோன்று போலி முகவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி செல்பவர்களும் இவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேருடுகின்றனர்.

அதனால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து செல்லுமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம். அவ்வாறு பதிவு செய்து செல்பவர்கள், அங்கு ஏதாவது பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதுதொடர்பில் எமக்கு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன்  5வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலுக்கு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் இருந்தது.  என்றாலும் வாழ்க்கைச்செலவு காரணமாக இவ்வாறான தாய்மார்கள் சட்ட விரோதமான முறையில் செல்கின்றனர்.

அதனால் இந்த சட்டத்தை தற்போது இலகுவாக்கி, 2வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலவதற்கு  தடைவித்திருக்கின்றோம்.

அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அவ்வாறு அனுப்புவதாக இருந்தால், அவர்கள் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச்செல்பவர்கள் அங்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமான தொழில் பயிற்சி வழங்கியே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மாத்திரமே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பப்படுவார்கள்.

அத்துடன் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டும் கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

என்றாலும் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்கின்றனர். நாட்டில் தற்போது நூற்றுக்கு 24வீதமான பெண்களே வெளிநாட்டு தொழிலுக்கு சென்றிருக்கின்றனர்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கட்டமைப்பை முழுமையாக டிஜிடல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் மூலம் இந்த துறையில் ஏற்படுகின்ற மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.