வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாய் செலவிட்டமையை அலி சப்ரி மறுப்பு

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் இந்த பணத்தை 7 வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாக தெரிவித்துள்ள அலி சப்ரி, தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாகவும் ட்விட் செய்துள்ளார்.

Posted in Uncategorized

ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன் அழித்தோம்! – அலி சப்ரி பெருமிதம்

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும்  சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு அழித்தது, இலங்கையில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தியது என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கம்

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது படி என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இன நல்லிணக்க செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பண்டோவுடன் சந்திப்பொன்றில் பங்கேற்றபோதே மேற்படி விடயம் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் பக்க நிகழ்வாக நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்காவில் கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டு அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறிமுறையை ஒத்தவாறாக இலங்கையிலும் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் நாம் கரிசனைகளை கொண்டுள்ளோம்.

அந்த வகையில், குறித்த சந்திப்பின்போது உள்நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது பற்றிய தென்னாபிரிக்காவின் கடந்த கால அனுபவங்கள் தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அவர் வெளியிட்டுள்ள விடயங்களையும் உள்ளடக்கியதாக எமது செயற்பாடுகளை அடுத்துவரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அவ்வாறு முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் அர்த்தமுள்ளவையாக அமைவதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவம் எமக்கு கைகொடுக்கும் என்றார்.

இதேவேளை, மேலும் சில பக்க நிகழ்வுகளின் போது சிலோவேனியன் மற்றும் பிரேசில் வெளிவிவகார அமைச்சர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போரில் 9 கப்பல்களை அழிக்க அமெரிக்காவே உதவியது – அலி சப்றி

தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களின், மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன மற்றும் மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் பல்தன்மை ஒருமைப்பாட்டுடன் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பயணமே வெற்றி பெற முடியும் அதன் மூலமான பொருளாதார முன்னேற்றமே நிலையானதாக அமையும்.

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான நல்லுறவுக்கு முன்னாள் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் செயல்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது என்றும் மறந்துவிடக்கூடாது – என்றார்.

ஐ.எம்.எப். வழங்கும் வழங்கும் கடனுதவி இலங்கையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்காது – அலி சப்றி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம்.

எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது.

ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி.

மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவின் செயற்பாடு பொறுப்பற்ற செயலாகும் – அலி சப்ரி அதிருப்தி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கு இடையில் இன்று (ஜன 11) புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கையின் அதிருப்தியை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கனேடிய அரசாங்கத்தினால் பல்வேறு முக்கிய தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் கனேடிய உயர்ஸ்தானிகரை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வரவழைத்து அமைச்சர் இலங்கையின் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை இந்த முக்கியமான தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நல்லிணக்கத்தை அடைவதற்காக ஆழமான  பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் நாடு ஈடுபட்டுள்ள வேளையிலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனவரி முதல் பலகட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் – அலி சப்ரி

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப்பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாராகியுள்ளது என்று வெளிவிவகர அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தை விடயத்தில் அர்ப்பணிப்புடனேயே செயற்பட்ட வருகின்றது என்று தெரிவித்த அவர், அனைத்து இனக்குழுமங்களின் அரசியல் தரப்புக்களிலும் ‘பிச்சைக்காரன் புண்போன்று’ இந்த விடயம் நீடிக்க வேண்டும் எனக் கருதும் வன்போக்கு நிலைப்பாடுகளை உடையவர்கள் உள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

சர்வகட்சி மாநாட்டின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனங்களுக்கிடையிலான தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் நீண்டகாலமான கரிசனை கொண்டவராக இருக்கின்றார்.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு பல தசாப்தங்களாகவே இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில், தற்போது சர்வகட்சிகளின் பங்கேற்புடன், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை எதிர்மறையாகப் பார்ப்பவர்களும் உள்ளார்கள்.

குறிப்பாக, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தேடுவதற்கான முன்னெடுக்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். சர்வதேச நாயணநிதியத்தின் உதவிகளைப்பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் செயற்படாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது.

உண்மையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களுக்கும் இனப்பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.

நாணயநிதியத்துடனான பேச்சுக்கள் தொடர்பாக பிரத்தியோகமான சந்திப்புக்களும் பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தப் பேச்சுவார்த்தைக்கும் இனப்பிரச்சினைக்கான  தீர்வு குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. தமிழ், முஸ்லிம், சிங்க, மலையக தரப்புக்களில் இனப்பிரச்சினையாது தீர்க்கப்பட்டு விடாது ‘பிரச்சைக்காரன் புண்’ போல நீண்டுகொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்ற தரப்பினர் இருக்கின்றார்கள்.

இது துரதிஷ்டவசமானது. அத்துடன், அவர்களை வெற்றிகொள்வதும் சவால்கள் நிறைந்தது. ஆனால், அவ்விதமான விடயங்களை எல்லாம் கடந்து தான் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதற்கு தயாராகவே உள்ளது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பல்வேறு கட்டப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் எவ்விதமான தயகத்தினையும் அரசாங்கத்தரப்பு காண்பிக்கப்போவதில்லை.

மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல், கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கான அடிப்படைச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டன. காணமாலாக்கப்பட்டவர்களின் உறவிர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயராகவே உள்ளோம் என்றார்.

இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது வடக்குக்கும் தெற்குக்கும் நல்லது – அலி சப்ரி

இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கலந்துரையாடல்களும் இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கு நாம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம் பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறி முறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக் காட்டியுள்ளன.

இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்த போதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி கூறியதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார். இதற்கு முன்னைய இருந்த ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இப்பொறி முறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சில படைப் பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். எவ்வாறானாலும் அது போன்றதொரு ஒழுங்கு முறையை இதுவரை எங்களால் நடை முறைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம்.

இந்தக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம் – என்றார்.

சீனா, இந்தியா கடன் மறுசீரமைப்பு உத்தரவாத கடிதங்களை இது வரையில் வழங்கவில்லை – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்களை எதிபார்க்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டருக்கு வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசசொத்துக்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் 3 பில்லியன் டொலர் வரை திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்தங்களில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி எரிபொருள் உணவு தட்டு;ப்பாடுகளிற்கு வழிவகுத்ததன் காரணமாக பரந்துபட்ட அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

40.6 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு மேலதிக நிதி உதவி அவசரமாக தேவைப்படுகின்றது. இலங்கை தனது கடனில் 22 வீதத்தினை சீனாவிற்கு செலுத்தவேண்டியுள்ளது.
செப்டம்பரில் இலங்கை 2.9 மில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியது. அடுத்த வருடம் இந்த நிதி உதவி கிடைக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இருந்து கிடைக்கும் நிதி உதவிக்கு அப்பால் நாங்கள் ஏனையவர்களிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றோம்,பன்னாட்டு தரப்புகளிடமிருந்து நான்கு ஐந்து பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கின்றோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி நாட்டின் சில அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து ஆர்வமாக உள்ளார்,அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று பில்லியன் டொலரை திரட்டமுடியும்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இதன் மூலம் திறைசேரியையும்,அந்நிய செலாவணி கையிருப்பையும் வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திற்கான கடனிற்கு அதன் நிறைவேற்று சபை டிசம்பர் மாதத்திற்குள் அங்கீகாரமளிக்கும் என இலங்கை எதிர்பார்த்தது,எனினும் இது ஜனவரியிலேயே சாத்தியமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளிடமிருந்தும் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதிகளவு கடனை வழங்கிய சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து உத்தரவாத கடிதங்களிற்காக இலங்கை காத்திருக்கின்றது என அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளிற்கு ஆதரவளித்துள்ளன இலங்கை அவர்களுடன் தரவுகள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்துகொண்டுள்ளது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எரிபொருள் உணவு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகள் தொடர்ச்சியாக கிடைக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னர் 70வீதமாக காணப்பட்ட பணவீக்கம் நவம்பரில் 61 வீதமாக காணப்பட்டது ஆனால் பொருளாதாரம் இந்த வருடம் 8.7 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்திரதன்மை ஏற்படுகின்றது இதன் பின்னர் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டினை சர்வதேச நாணய நிதியத்தினதும் பன்னாட்டு அமைப்புகளினதும் கடன் உதவிகளுடனும் ஆரம்பிக்கவேண்டும் ஆனால் 2024லேயே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.