ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

இருதரப்பு உறவுகளை வலுவாக்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்களன்று கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை தளபதி நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது , பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியினை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தினை வழிநடத்திச்செல்வதில் இலங்கையின் வகிபாகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்ததோடு , அவருடனான சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு படையினரிடையில் தற்போதுள்ள உறவினை மேலும் வலுவாக்குவதற்கான மார்க்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து வெளியேறியது சீன உளவுக் கப்பல்

சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன உளவுக் கப்பல் வெளியேறினாலும் நீண்ட தூர ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் யாங் வாங்-5 கப்பலை, கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் சீனா நிறுத்தியிருந்தது.

திருக்கேதீஸ்வர ஆலயத்தை திறந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தினோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

“தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டதன் மூலம் இலங்கையில் இந்தியா மறு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாக இந்திய மத்திய அரசு பிரகடனப்படுத்தியதை முன்னிட்டு, காசியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் மன்னாரில் உள்ள திருகேதீஸ்வரம் கோவிலை மீட்டுள்ளோம். பிரதமர் சில வருடங்களுக்கு முன்னர் சென்று அந்த ஆலயத்துக்கு சென்றிருந்தார். அந்த ஆலயம் 12 வருடங்கள் மூடப்பட்டிருந்தது. நாம் அந்த ஆலயத்தை புதுப்பித்து திறந்தோம். நாம் காட்டிய ஆர்வத்தால் அது சாத்திய மானது. பிரதமர் மோடி பதவியேற்றதன் பின்னர் எமது கலாசாரத்தையும் மரபுரிமையையும் பாதுகாப்பதோடு, இவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் வெளியுறவுதுறை அமைச்சில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது- என்றும் கூறினார்.

கே. கே. எஸ். – பாண்டிசேரி கப்பல் சேவை ஜனவரியில் – அமைச்சர் நிமால் தெரிவிப்பு

இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக பாண்டிச்சேரி – காங்கேசன்துறை ஜனவரி மத்தியில் ஆரம்பிக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவரின் அமைச்சில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

தம்பதிவ யாத்திரைக்கு (இந்தியாவின் பௌத்த தலங்களுக்கான யாத்திரை) செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையும். ஒரு பயணிக்கான கட்டணம் 60 அமெரிக்க டொலர் என்பதுடன் 100 கிலோ எடையுள்ள பொருட்களை ஒருவர் எடுத் துச் செல்லமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய கடற்படை பிரதானி இலங்கைக்கு விஜயம் ; இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னாவின் அழைப்பின் பேரில், இந்திய கடற்படையின் பிரதானி அட்மிரல் ஆர் ஹரி குமார், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக திங்கட்கிழமை (12) கொழும்பை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், பாதுகாப்புச் செயலர், பாதுகாப்புப் படைத் தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

அத்தோடு வியாழக்கிழமை (15) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் பிரதம அதிதியாக கலந்து கொள்வுள்ளார்.

இதே வேளை புதன்கிழமை (14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சஹ்யாத்ரி கப்பல் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

இந்திய கடற்படை பிரதானியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் அடையாளப்படுத்துகிறது.

அத்தோடு இவ்விஜத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதோடு , பொதுவான பாதுகாப்பு அமைதியை உறுதி செய்வதற்கான திறனை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்தியஸ்தம் அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.

3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது.

அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது. ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்டன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும்.

இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் பாரதி விழா

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது.இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம் நெஞ்சில் ஆழப் பதிவது – சமூகப் பாடல்களாலா ? அல்லது பக்திப் பாடல்களாலா ? என்ற பொருளில் பட்டிமன்றம் இடம்பெற்றது.

 இதில் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் கம்பநேசன் இ. வாசுதேவா ,  ந. விஜயசுந்தரம், செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.நிகழ்வின் தொடக்கமாக நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா இயக்குநர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் அவர்களின் நெறியாள்கையில் பாரதி பாடல் நடனமும் இடம்பெற்றது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியாவின் மேற்பார்வை அவசியம் – செல்வம் எம்.பி.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா, மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வை பெற முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாத்தத்தின்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

மேலும் சர்வதேசமும் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்த 13 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் சந்திப்பு, மனசாட்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு ஈ-விசா வசதி

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்  இது தொடர்பில் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

உல்லாசப் பயணம், வணிகம், மாநாடுகள் மற்றும் பலவற்றுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.