அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்றைய தினம் (நவ 23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ் அழைப்பினை விடுத்துள்ளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமது இலக்கின்படி இனப்பிரச்சனைக்கான தீர்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின வருடத்தில் காணப்பட வேண்டும்.
இல்லையேல் தீர்வைக்காண 2048 ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டியிருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வரும் வரையில் பொதுத் தேர்தல் எதையும் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற சபையிலிருந்து நீக்கியுள்ளார்.
இதனால், நாடாளுமன்றம் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இன்று சபை அமர்வில் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்
ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்திற்கான விஜயம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வு அவரின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு திறந்து வைக்கப்படவில்லை.
சில பிரச்சினைகளினால் ஒரு கட்டிடத்தையே திறந்து வைக்க முடியாத ஜனாதிபதியினால் இந்த நாட்டின் இனப்பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை ஒரு நல்ல நோக்கத்திற்காக வவுனியா வந்திருந்தார். அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அவர் முதல் முதல் தனது விஜயத்தை வன்னி மாவட்டத்திற்கு மேற்கொண்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஜனாதிபதி அங்கு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோது யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா செயலக வாசலில் குழுமியிருந்தனர்.
இந்த நாட்டின் தலைவரை நாம் சந்திக்க வேண்டும், அவரிடம் எமது பிரச்சினைகளை கூற வேண்டும் என்பதற்காகவே அங்கு குழுமியிருந்தனர்.
ஆனால் அங்கிருந்த பொலிஸார் நீங்கள் ஊடகங்களுக்காகவும், சர்வதேசத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றீர்கள் என் கூறி ஜனாதிபதியை சந்திக்க விடாது தடுத்தனர்.
அந்த உறவுகளின் தூய்மையான போராட்டத்தை கேவலப்படுத்தினர். இதன்மூலம் அந்த தாய்மார்களுக்கு இந்த அரசோ ஜனாதிபதியோ ஒரு போதும் தீர்வை வழங்கப்பபோவதில்லையென்பதனை உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியும் அந்த போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கான தீர்வை அதிலே வழங்காமல் நழுவிச் சென்றுள்ளார்.
இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களும் ஊடகங்களுக்காவே பேச முடியும். மக்களி திருப்திப்படுத்த, பொய் வாக்குறுதியாகலிக்கொடுக்கவே இங்கு பேச முடியும். ஏனெனில் இங்கு நாம் முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சபாநாயகரினாலோ அல்லது சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினராலோ பதிலோ, தீர்வோ வழங்க முடியாது. சபைக்கு அமைச்சர்களும் வருவதில்லை. எனவே தீர்வுகள் கிடைக்காது என்ற நம்பிக்கை நூறு வீதம் உள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்த போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் மன்னார் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆகவே இதில் ஒரு உள்நோக்கம் உள்ளது. இந்த திருட்டுத்தனமான பயணம் எதற்கு என்ற சந்தேகம் எமக்கும் மக்களுக்கும் உள்ளது. இதற்கான விடையை எங்கிருந்து எதிர்பார்ப்பது?
அதுபோன்றே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் இதுவரையில் அது திறக்கப்படவில்லை ஜனாதிபதியின் விஜயத்தின்போது அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.
ஆனால் அது தவிர்க்கப்பட்டு மத்திய நிலையம் திறக்கப்படவில்லை. ஏன் திறக்கப்படவில்லை? வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் இருக்கலாம். அவை என்ன? திறக்கப்படாததற்கான காரணம் என்ன? ஒரு கட்டிடத்தை தீர்ப்பதற்கான பிரச்சினையைக்கூட ஜனாதிபதியினால் தீர்க்க முடியவில்லை. அப்படிப்பட்டவரால் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினையென ஒட்டு மொத்த பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்?
மன்னாருக்கு சென்ற ஜனாதிபதி ஒரு சிறு கிராம மீனவர்களை மட்டும் சந்தித்து விட்டு மீன்பிடி சங்கங்கள், சமாசம் போன்றவற்றை சந்திப்பதனை தவிர்த்தது ஏன்? வடக்கில் ஒரு விமான நிலையம் இருந்தும் அதனை இயக்க முடியவில்லை. அதில் உள்ள தடைகளை இந்தியாவுடன் பேசி தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கையில் வவுனியாவில் ஒரு விமான நிலையம் அமைக்கபபோகின்றார்களாம், ஒன்றையே இயக்க முடியாதவர்கள் எப்படி இன்னொன்றை இயக்குவார்கள்?எனவே ஜனாதிபதியின் வன்னிக்கான விஜயத்தில் இது போன்ற பல சந்தேகங்கள் எமக்குண்டு என்றார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சி இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது, சபையின் நடுவில் அமர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இலங்கையில் மீன்பிடித் தொழில் அழிந்துவிட்டது என்றும் உடனடி நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் முடியும் வரை இவ்வாறு அமர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் சிறிது நேரத்தின் பின்னர் அவர் சபையைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு அரசியலின் பலப் பரீட்சைக்காக உள்ளூராட்சி சபை தேர்தல் கோரப்படுகிறது. அதனை விடுத்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிப்படை புள்ளியான மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இனப் பிரச்சினை தீர்வு
இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறந்த சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர் நீங்கள்.
அவ்வாறு செயல்பட்டால் அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க முடியும். தமிழர்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப சிந்திப்பவர்கள் அல்ல. எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஷ்டி தொடர்பில் எண்ணத்தை வெளியிட முன்பே அது தொடர்பில் தெரிவித்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க. 13ஆவது அரசியல் திருத்தத்தை நாம் கோரவில்லை. எனினும், 13 ப்ளஸ் வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, சமூக பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
சமூக பாதுகாப்பு என்பது என்ன?
இன்றும் கூட ஜனநாயகத்துக்கு எதிராக நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு என கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இப்போது 40 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தேவைதானா என்பதை உங்கள் சமூக பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் நான் கேட்க விரும்புகின்றேன். தேசிய பிரச்சினை தீர்வுக்காக எந்த அரசாவது முயற்சிகளை மேற்கொண்டால், உடனடியாக அப்போதுள்ள எதிர்க்கட்சி அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பும். இதுதான் வரலாறு. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்து, ஒரே நேர்கோட்டில் உள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால், எமது அடுத்த வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டுக்கான சுபிட்சம் மிகுந்த வரவு செலவுத் திட்டமாக அமையும்.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனப் பிரச்சினையே முக்கிய காரணம். ஆணிவேரை விடுத்து பக்கவேரில் செயல்பட முற்படாதீர்கள். எமது மக்கள் எத்தகைய தியாகங்களுக்கும் தயார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி ரீதியாக அன்றி சமமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இவை எப்போதோ நடந்திருந்தால் எமது நாடு உண்மையில் ஆசியாவின் ஆச்சரியமாக திகழ்ந்திருக்கும். உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெறுவோமா – தோல்வியடைவோமா என்று சந்தேகம் கொள்பவர்களால் ஜனநாயகம் நசுக்கப்படக்கூடாது.
நாட்டில் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை.அது விடயத்தில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கான முதல் அடிப்படை புள்ளியாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை கணக்கில் எடுக்கப்படாமல், தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்ந்தும் ஒத்திப்போடப்பட்டு வருகின்றது.
எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள். உள்ளூராட்சி சபை தேர்தல் தெற்கில் நடத்தப்படும் பலப் பரீட்சையாகவே அமையும். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தலின் நிலையை கண்டுகொள்வதற்காகவே இப்போது உள்ளூராட்சி சபை தேர்தலை கோருகின்றனர். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு நான்கு வருடமும், கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஐந்து வருடமும் கடந்துபோயுள்ளன. இந்நிலையில் மாகாண சபை தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும். தற்போதைய எமது ஜனாதிபதி ஒரு ஜனநாயக கனவானாக இருந்தால், அவர் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்பே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலப்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பன இணைந்து பாலின சமத்துவும் மற்றும் பெண்களின் உரிமைக்காகத் தயாரித்துவரும் இந்தச் சட்டமூலத்தின் ஆரம்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பில் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கு பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தனியான நிறுவனமொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழியளித்தார். அத்துடன் சட்ட மற்றும் கொள்கைகளைத் தயாரிக்கும்போது சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி அவசியமாகவிருந்தால், தூதரகங்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், பாலின சமத்துவம் குறித்த தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்துக்கு வருகை தந்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். அத்துடன், சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவும் தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.
பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்துக்கான தனியான
ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தற்போதுள்ள பெண்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை குறைக்க வேண்டாம் என உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன், அவ்வாறான எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றும் ஜனாதிபதி பதிலளித்தார்.
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குக் காணப்படும் வெற்றிடங்களைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், பொலிஸ் நிலையங்களில் பெண்களின் முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது அவர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்குச் செல்வதைத் தடுப்பது, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல, ரஜிகா விக்ரமசிங்ஹ, மஞ்சுளா திசாநாயக, முதிதா பிரசாந்தி, கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்திருந்தனர்
வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்
பாராளுமன்றில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினருக்கு செலவிடும் தொகையானது பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேவையற்ற செலவீனங்களை குறைத்து பொருளாதார மீட்சிக்கு அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டால் மாத்திரமே தலைவருக்கான கௌரவத்தை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாட்டில் மேலும் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கான செலவீனங்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையில் தற்போது 60 அமைச்சர்கள் வரை பதவியில் உள்ளார்கள்.
மேலும் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கினால் அமைச்சர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாகனங்கள், அதற்கான எரிபொருள் செலவீனம், அமைச்சர்களுக்கான நிர்வாக சேவையினருக்கு வேதனம், இவை அனைத்தையும் நோக்கும் போது இந்த பாதீடானது மக்களுக்கு அனுகூலமான பாதீடு அல்ல என்பது புலனாகின்றது.
அது மாத்திரமின்றி சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது.
மேலும் பணவீக்க அதிகரிப்பின் வேகம் குறைவடைந்துள்ள போதிலும், பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போது உணவு பணவீக்கமானது நூற்றுக்கு ஐந்து வீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது நூற்றுக்கு 95 வீதமாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. எனினும் உணவு பணவீக்கமானது தற்போது சீராக உள்ளதாகவும், ஆகையினால் வாழ்வதற்கு ஏற்றச்சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் பொருளாதார கணிப்பினை கேட்டுச் சிந்திக்கும் போது நகைச்சுவையாகவே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.
வரி அதிகரிப்பை மாத்திரம் இலக்காக கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 3500 பில்லியன் ரூபாவாக காணப்படும் நிலையில் அரச செலவினம் 8000 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமானத்திற்கும்,செலவிற்கும் இடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் யோசனைகள் வரவு உள்ளடக்கப்படவில்லை.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
கடந்த 08 மாத காலத்தில் அரசாங்கம் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள முறையான திட்டங்களை வகுக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மென்மேலும் பாதிக்கப்படுவார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அக்கறை கொள்ளவில்லை. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும்.
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரசாங்கத்தின் செலவீனத்திற்கு 7,885 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.
இளைஞர், யுவதிகளின் சிறந்த நாளைய தினத்திற்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பணிநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளைத் தாண்டி புதிய அணுகுமுறை மற்றும் புதிய வேலைத்திட்டம் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்.
8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது.
சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார கொள்கையினூடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியன் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது.
போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும்.
புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும்.
52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது.
பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன.
இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் புதிய வரிகள் அறிவிக்கப்படலாம்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மீண்டும் நெருக்கடியில் வீழ்த்தி விடாமல் இருக்க நாம் சிந்தித்து செயற்ப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரிட்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரவு – செலவுத்திட்டம் சம்பிரதாய வரவு – செலவுத்திட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்.
வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் போயுள்ளமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.
சர்வதேச வர்த்தகத்திலிருந்து இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
சர்வதேச மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர்ச்சியான வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்கவும் கலந்துரையாடவும் எதிர்பார்க்கிறோம்.
முதலீட்டுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவது அவசியமாகவுள்ளது. இதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயத்துறைக்கு தனியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்குள் தொழிற்சங்கங்கள், தனியார் உாிமையாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்படுவர்.
நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
எண்மாண தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
கறுவா உற்பத்தி மேம்பாட்டுக்கு தனியான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு, அதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்படும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
அரச மற்றும் தனியார் துறையில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்களின் பங்குபற்றலுடன் புதிய தேசிய அபிவிருத்தி குழு நியமிக்கப்படும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கு 130 மாகாண பாடசாலைகள் மற்றும் 20 தேசிய பாடசாலைகளுக்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
வரிச்சலுகையின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றுப் பொறிமுறையொன்றை கட்டியெழுப்ப 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
புகைத்தல் பொருட்கள் சார் வரிவிதிப்பின் படி பீடிக்கு 2 வீத வாி அறவிடப்படும்.
விசா மற்றும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் 20% அதிகரிக்கப்படும்.
அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வருட இடைநடுவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதுடன் 2023 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
இரத்தினக்கல் விற்பனையை மேம்படுத்துவதற்காக புதிய வலயம் உருவாக்கப்படும். இதற்காக புதிய தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7%-8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் ஊடாக மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தை 100%க்கு மேல் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் எண்மாண பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்படும்.
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம் உருவாக்கப்படும்.
தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்.
வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படும்.
உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும்.
தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சமுர்த்தி வேலைத்திட்டத்தினூடாக நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட நிவாரணம்.
சிறுவர்களின் போசாக்குக்காக தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மதுவரித் திணைக்களத்துக்கு பாிசோதனைகளுக்கென நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூாிய சக்தி கட்டமைப்புகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறைச்சாலைகளில் கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
தொழிலாளர் சந்தைக்கான புதிய கொள்கைகள் காலாவதியான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்படும்.
விவசாய ஏற்றுமதிக்கு காணி வழங்கப்படுவதுடன், குறைந்த பயன்பாடுள்ள பயிரிடப்படாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்காக தொழின்முனைவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய அபிவிருத்திக்காக கனிம வளங்களை திறம்பட பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களிடம் மக்கள் சவால்களை முன்வைத்திருக்கிறார்கள். முகங்களை மாற்றும் அரசியலைத் தவிர்த்து முறைமையை மாற்றும் பொறிமுறையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாட்டை உயர்த்தும் புதிய முயற்சிக்கு செயல்வடிவிலான பங்களிப்பை வழங்குமாறு அனைவாிடமும் கோருகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட உரை நிறைவுக்கு வந்தது.
நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.
இன்றைய வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
உலக வங்கி, ஐநா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை.
உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும்.
அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.
ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு, தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனதுவரவு – செலவுத் திட்ட உரையில் கூறி உள்ளார்.
நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார்.
அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி. ஆனால், நாம் மறக்கவில்லை. நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது.