காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக யாழில் பதிவு

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனொரு கட்டமாக யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒருசிலர் அதிகாரிகளிடம் காணாமல் போன தமது உறவுகள் குறித்து பதிவுகளை மேற்கொண்டனர்.

அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை மற்றும் பாண்டிச்சேரி இடையே முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த படகு சேவைக்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்புக்கு சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரிக்கு பயணம் செய்ய சுமார் மூன்றரை மணி நேரம் ஆகும் என கூறப்படுகின்றது.

ஒரு பயணத்தின் போது 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயணி ஒருவரிடமிருந்து 60 அமெரிக்க டொலருக்கு இணையான கட்டணம் வசூலிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பயணி 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி

நாட்டில் உள்ள 12 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு மேல் விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20,000 ரூபாவும் அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலடப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ‍ தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று புதன்கிழமை (21) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தை தணிக்கும் முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம்

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள் காபன் மத்திய நிலையை (Carbon Neutrality) எட்டுதல், காபன் வெளியேற்ற அனுமதி பத்திரத்துக்கு பதிலாக  சர்வதேச சந்தையைக் கண்டறிவது ஆகிய மூன்று இலக்குகளையும் அடைவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதே அரசின் திட்டம் ஆகும்.

இது தொடர்பான கலந்துரையாடல் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்கால எரிசக்தி ஆதாரங்கள், கார்பன் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றின் மீதான தனது சர்வதேச அறிவை சொல்ஹெய்ம் இந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் கருத்து தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம்,  இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதன்மூலம் அதிக நன்மைகளை பெற்றிருப்பதாகவும் அதே நன்மைகளை இலங்கையாலும் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தீர்த்து வைப்பார் என தாம் நம்புவதாகவும் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, புதுப்பிக்கத்தக்க சக்தி மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே இலங்கை மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வாறான முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ருவன் விஜயவர்தன, கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான மாநாடு ஒன்றை எதிர்காலத்தில் நடத்தவிருப்பதாகவும் அதன் ஊடாக முதலீட்டாளர்களை எமது நாட்டுக்கு ஈர்க்க முடியும் என நம்புவதாகவும் ருவன் விஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலக பணிப்பாளர் குமுதுனி வித்யாலங்கார, உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.ஆர்.டி.வீரசூரிய, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் பன்டு டி சில்வா, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எல். வீரசிங்க, பிரதம பொறியியலாளர் வஜிர விஜேகோன், பிரதம பொறியியலாளர் கே. ராம்ஜி, சஜனா சூரியராச்சி, ஹஷான் ஜெயகொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புத்தூரில் பொருளாதார நலிவுற்ற 32 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்.புத்தூர் ஊறணியில் ஜே/278 கிராம சேவையாளர் பிரிவில் வாழும் 32 பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு புத்தூர் ஊறணி கண்ணகை அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(17.12.2022) நண்பகல்-12 மணியளவில் சனசமூக நிலையத் தலைவர் ந.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) சேர்ந்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை நேரடியாக வழங்கி வைத்தனர்.

இதேவேளை, குடும்பம் ஒன்றிற்குத் தலாஇரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 64 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது – எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

தகவல் தொழிநுட்பம்,தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக,பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும்,போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில்,பாடசாலை பைகளை பரிசோதிப்பதை விடுத்து,அவர்களுக்கு சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தை தயாரிப்பதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளையொன்று வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ​​ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது,அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும்,நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியதாகவும்,பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயல்படுத்தி வருவதாகவும்,கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலங்காலமாக,நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளதாகவும்,நம் நாட்டிற்கு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையொன்றே தேவைப்படுவதாகவும், தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்த பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளதாகவும்,அவர்களுடைய சாப்பாட்டு பெட்டிகளை பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு,இலவச சீறுடை திட்டங்களை வழங்கிய ஒரு ஜனாதிபதி எனவும், இந்நாட்டில் இருக்கக்கூடிய நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களுக்கும் அவ்வாறான திட்டங்களை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாமனைவரும் செயற்பட வேண்டும் எனவும், இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருப்பதாகவும், இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாட்டை உலகில் முதலிடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே தங்களுடைய கருத்திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய தேசிய புலனாய்வு முகவரகத்தால் இலங்கையர் 09 பேர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து கைது செய்துள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.

இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக என்ஐஏ(தேசிய புலனாய்வு முகமை) ஜூலை 8ஆம் திகதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களான குணசேகரன், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா மற்றும் ஆயுதங்கள், போதைப் பொருள் விற்பனையாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால், தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20-ம் திகதி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி சிறப்பு முகாமில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கமாண்டோ படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

அப்போது, சிறப்பு முகாமிலிருந்து தொலைபேசிகள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அவற்றை கேரளா கொண்டு சென்ற என்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் 8 பேர் நேற்று(திங்கட்கிழமை) காலை மீண்டும் திருச்சி சிறப்பு முகாமுக்கு சென்றனர்.

இதன்போது அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் (எ) பிரேம்குமார், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா (எ) கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ (எ) பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் (எ) வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஏற்கெனவே தொடரப்பட்ட ஆயுதக் கடத்தல் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதால், 9 பேரையும் கைது செய்ய வந்திருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் என்ஐஏ எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியர் மா.பிரதீப்குமாருடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, 9 பேர் மீதுள்ள வழக்கு விவரங்கள், கைது செய்வதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில், என்ஐஏ அதிகாரிகள் அளித்த ஆவணங்களை ஏற்று, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து சிறப்பு முகாமிலிருந்து அழைத்துச் செல்ல ஆட்சியர் அனுமதியளித்தார்.

இதையடுத்து, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரோஹிங்கியா அகதிகளை காப்பாற்றிய இலங்கையர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு

ரோஹிங்கியா அகதிகளின் படகு காப்பாற்றப்பட்டதை அகதிகளிற்கான ஐநா அமைப்பான யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

வார இறுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியாஅகதிகள் படகை காப்பாற்றி அதிலிருந்தவர்களை கரைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையின் உள்ளூர் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பெருமளவானவர்களுடன் படகு தத்தளித்துக்கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர், காப்பாற்றப்பட்ட அவர்களை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை துரிதமாக கரைக்கு கொண்டு சென்றது.

இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசியா பசுபிக்கிற்கான யுஎன்எச்சீர்ஆரின் இயக்குநர் இந்திக ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு யுஎன்எச்சீ ஆர் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது.

படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பு சர்வதேச கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரைஇறங்குவதற்கும் அனுமதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளிற்கு அருகில் வங்களா விரிகுடாவில் இன்னுமொரு படகு தத்தளிக்கின்றது என்ற தகவல் குறித்து ஐநா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

திருத்தப்பணிகளுக்காக ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும்.

இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை பயணிக்கும் புகையிரதம் இதே ஐந்து மாத காலப்பகுதிக்குள் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.