இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் விளக்கும் அளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால், அவ்வாறானவர்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடையே உள்ள முரண்பாடான நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கொடுத்தால் நாடே பிளவுபடும் எனும் பிழையான இனவாத கருத்துகள் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண அதிகாரங்களைப் பரவலாக்க நிபுணர் குழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் தந்திரம்: ஜனா எம்.பி

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம். இந்தப் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987ல் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்திலே தான் இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்கப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6 இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டிய தேவை இருக்காது.

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மேதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்;கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோணுகின்றது.

அதுமாத்திரமல்லாமல் தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்திலே கொண்டுவரட்டும் அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

இந்தப் 13வது திருத்தச்சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாணசபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முயற்சிக்கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

மாகாணசபைகளுக்கு நிபுனர் குழுவை அமைப்பதென்பது மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்தரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.

1988ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா அவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாசா அவர்கள் நியமித்திருந்தார்கள். அவரின் கீழே 3000 மாகாண பொலிசார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

அந்த வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இன்றும் குருந்தூர் மலையிலே பெரிய களேபரம் நடக்க இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் அங்கிருக்கின்ற இந்துக் கோவிலில் பூசை செய்ய விடாமல் தடுக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற இந்துக்கள் இன்று அந்தக் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்ய இருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காக பௌத்தர்கள் செல்கிறார்கள். உதய கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளும் செல்கின்றார்கள். இவர்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல், புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு இந்த நாடுஇஸ்திரமான நாடாக இருப்பதற்குமான வழியினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சனசமூக நிலையம் இனத்தினை ஒருங்கிணைக்கும் தளம்; அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய அடிக்கல்லிடும் நிகழ்வில் நிரோஷ் 

கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அச்சுவேலி மத்திய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்

எமது மண்ணில் நல்ல பல மாற்றங்களுக்கு அடிப்படையாக கிராம அமைப்பினை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

எமது கிராம கட்டுமானங்களின் வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக நிலத்திலும் புலத்திலும் வாழும் உறவுகள் கைகோர்த்து கிராமம் என்ற வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.

ஒரு கிராமத்தின் ஒருங்கிணைவு சனசமூக நிலையங்களிலேயே தங்கியுள்ளது. சனசமூக நிலையத்தின் ஒருங்கிணைவு இனத்தின் ஒருங்கிணைவாக அமைகின்றது.

 

போரின் தாக்கம் காரணமாக எம்மில் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துவிட்டனர். இது உள்நாட்டில் எமது ஜனநாயக பலத்தினைப் பாதித்துள்ளது.

இந்நிலையில் மேலுமொரு கோணத்தில் புலர்பெயர்ந்தோரின் வளத்தினை எவ்வாறாக எமது அரசியல் பொருளாதார, கலாச்சார, சமூக இருப்பிற்காக தகவமைக்க முடியும் என்பதை இனம் சார்ந்த அக்கறையுடன் சிந்தித்து செயற்படுத்த வேண்டும்.

அவ்வாறான அறிவார்த்தமான முயற்சிகளில் ஒன்றே இன்று இந்த அச்சுவேலி மண்ணில் நிறைவேறியுள்ளது.

ஒரு சனசமூக நிலையம் கிராமத்தின் கட்டமைப்பினை தகவமைக்கும் நிலையம் என்ற அடிப்படையில் கல்வி, பொருளாதாரம் என சகல அம்சங்களிலும் முன்னிலையில் உள்ள இக் கிராமத்தில் தொடந்து மேம்பாட்டை தக்கவைப்பதற்கு இந் நிலையம் அடிப்படையாக அமையும்.

பொதுவாக புத்திஜீவிகள் பொதுப்பணிக்கு வருவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. இச் சூழ்நிலையில் இங்கு எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருண் செல்லப்பா போசகராக சனசமூக நிலையத்தினை நிலத்திலும் புலத்திலுமாக ஒருங்கிணைக்கின்றார்.

அதுபோன்று இந்த ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் தலைமைதாங்குகின்றார்.

செயலாளராக நடேசு இரவீந்திரன், பொருளாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவகுமார் பிரதீபா என ஓர் கல்விப்புலம் பொதுப்பணி களத்தில் நிற்கின்றமை மகிழ்ச்சிக்குரியது.

இந் நிலையத்தின் ஏனைய செயற்பாட்டாளர்களும் பல் துறைசார்ந்தவர்களாக இருக்கின்றனர். கல்வியாளர்கள் சமூக செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கும் துர்ப்பாக்கிய நிலையில் இவ்விடயம் ஏனைய படித்தவர்களுக்கு முன்னுதாரணமாக அமையவேண்டும் என இங்கு கோடிட்டுக்காட்டுகின்றேன் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும் – சபா குகதாஸ்

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும் இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும் முடிய அறைக்குள் முடிவுகளை எடுக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை விடையத்தில் நீதிமன்ற கட்டளைகளை திசை திருப்பும் நோக்கில் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் சிவன் ஆலயம் அமைத்தல் என்ற பித்தலாட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். காரணம் குருந்தூர் மலையில் மிகப் பழைமை வாய்ந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அழிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் சட்டவிரோதமானது எனவும் அதனை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

அவ்வாறான நிலையில் சட்டவிரோத கட்டடங்களை அமைத்த விகாராதிபதிகளுடன் இணைந்து பிறிதொரு இடத்தில் சிவன் ஆலயம் அமைத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாகவும் நீதிமன்ற கட்டளைகளை சிங்கள ஆட்சியாளர்களும் அரச இயந்திரமும் அவமதிப்பதற்கு அப்பால் கோயில் நிர்வாகமும் அவமதிப்பதாக அமையும் அவ்வாறான ஒரு சூழ்ச்சிதான் போலி இந்து அமைப்பின் பினாமிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களமும் சிங்கள பௌத்த பிக்குகளும் மேற் கொள்ளும் திட்டமிட்ட அடாவடிகளையும் நீதிமன்ற கட்டளைகளை மீறுகின்ற செயற்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இந்த முன்னகர்வு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் வழிபாடுகள்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

 

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

குருந்தூர் மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன. நாளைய தினம் (18)குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வில் ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறைகள் எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – அலி சப்றி

மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை எந்தவொரு வெளிபொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிஇராஜதந்திர சமூகத்தினருக்கு மீண்டும் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்;த அலுவலகம் மூலமும் ஏனைய அமைப்புகள் மூலமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும்தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தராதங்களிற்கு ஏற்ற பயங்கரவாத தடைச்சட்டம் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் முக்கிய வேண்டுகோளாக காணப்படுகின்றது.

பொருளாதாரமீட்சி மற்றும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும்அவர் எடுத்துரைத்துள்ளார்.

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் கைது

இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று புதன்கிழமை (16) எல்லை தாண்டியபோது கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜோர்தானிய – இஸ்ரேல் எல்லையில் பணிபுரிய ஆபிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்படாமல் நுழைந்ததாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சீனா தயார்

இலங்கையின் நிதி நெருக்கடி சவால்களுக்கு தீர்வினை காண்பதற்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் யி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா எப்போதும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க மூலோபாய சகா என தெரிவித்துள்ள அவர் இலங்கை எப்போதும் சீனாவிற்கு நட்பாகயிருந்துள்ளது முக்கிய நலன்கள் குறித்த விடயங்களில் சீனாவிற்கு ஆதரவாக விளங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா எப்போதும் ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஒக்டோபரில் சீன ஆராய்ச்சிக் கப்பல் விஜயம்

இலங்கைக்கு ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை மீண்டும் பெரும்புவிசார் அரசியல் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை கொழும்புதுறைமுகங்களில் தரித்துநிற்கும் என எதிர்பார்க்கப்படும் சீனாவின் சியான் 6 ஆராய்ச்சி கப்பல் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது.

ஒக்டோபர் 25ம் திகதி சீன கப்பல் இலங்கையை வந்தடையும் என்பதை இலங்கை கடற்படை நேற்று உறுதி செய்துள்ளது.

குறிப்பிட்ட கப்பல் 17 நாட்களுக்கு இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்.

இலங்கையின் நாரா அமைப்புடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே இந்த கப்பல் இலங்கை வருகின்றது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை ருகுணுபல்கலைகழகத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்கு வருகின்றது என நாரா தெரிவித்துள்ளது.

தனது ஆராய்ச்சிகளுக்கு அவசியமான மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தவுள்ளதாக நாரா தெரிவித்துள்ளது.