கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே அவர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி எஸ். கே. கண்ணதாஸ ஆகியோருடனும், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை மாணவர்களுடனும் கனேடியத் தூதுவர் கலந்துரையாடி, நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பிணை

தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு 15 வருடங்களின் பின்னர் இன்று(திங்கட்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ, சரோஜா, பந்துல மற்றும் அஜித் ஆகிய 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 23 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 04 பிரதிவாதிகளுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான கந்தையா இளங்கோ, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முதலாவது பிரதிவாதியால் வழக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற உண்மை விளம்பல் விசாரணையின் போது நீதமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு விமானப்படையால் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் முதலாவது பிரதிவாதி தனது வலது காலை இழந்துள்ளதுடன், 15 வருடங்களாக வழக்கு விசாரணை நிறைவு செய்யப்படாமை குறித்தும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு எடுத்துரைத்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த காலி மேல் நீதிமன்ற நீதிபதி, 04 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி  அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று (13)  அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இந்த  துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு  இடம்பெற்றபோது அம்பிட்டிய சுமண  தேரர்  தனது அறையில்  இருந்தார் என்றும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் – அலி சப்றி

இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இலங்கையின் வலுவான உறவு அதன் நாகரீகத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிற்கும் இலங்கை தனது மண்ணில் அனுமதியளிக்காது என தெரிவித்தார் என டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

இந்தியா கவலைப்படவேண்டிய அவசியமில்லை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானது அது எங்கள் நாகரீகத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ள அலிசப்ரி எங்கள் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலுடனும் நாங்கள் ஈடுபடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும் எங்கள் நண்பன்  நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எனினும் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பு ஏற்படாது இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் இதனை தெளிவாக  தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் குடும்ப பிணைப்பை போன்றவை பிரச்சினைகள் எழும்போது அவற்றிற்கு குடும்பத்திற்குள் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்களில் ஒருவர் 83 கலவரங்களின் போது தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து சூறையாடியர் – ருகுணு பல்கலைக்கழக துணைவேந்தர் குற்றச்சாட்டு

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.

ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தரை ஏழு நாட்களுக்குள் பதவி நீக்க வேண்டும் எனக் கோரி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பில் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேனவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் ருகுண பல்கலைக்கழக வெலமடம வளாகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், ஏழு நாட்களுக்குள் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி கடந்த 5 ஆம் திகதி தனது அலுவலகத்துக்குச் சென்ற சமயம், அவரது அறையிலிருந்து வழக்கத்துக்கு மாறான மணம் வந்ததாகவும், அது அவரைக் கொலை செய்யும் வகையில் பரவ விடப்பட்ட நச்சு வாயுக் கசிவு என்றும் துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவையனைத்தும் தன்னைப் பதவி நீக்கம் செய்வதற்காக வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ள துணைவேந்தர், தனக்கெதிரான சதியில் முன்னிற்போருக்கு எதிராகப் பல குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இதேநேரம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தான் மறுப்பதாகத் தெரிவித்துள்ள துணைவேந்தர், மேலும் குறிப்பிடுகையில் றொகான் லக்சிறி, பேராசிரியர் நிரமல் ரஞ்சித் தேவசிறி மற்றும் பேராசிரியர் உப்புல் அபேரத்ன ஆகியோர் அரசியல் காரணங்களுக்காகவே என்னைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாடுபடுகிறார்கள்.

நான் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது தடவையாகத் திறமை அடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்றுத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டவன். அரசியல் செல்வாக்கினால் பதவியைப் பெற்றவன் நானல்ல. இங்கு கலாநிதிப் பட்டத்துக்காக நிதியைப் பெற்று விட்டு 13 வருடங்களுக்கு மேல் பணத்தை மீளளிக்காமல் இருப்பவர்களும், ஆராய்சி ஒதுக்கீடுகள் மற்றும் பரீட்சைகளில் மோசடி செய்வோருமே எனக்கு எதிராக என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடிக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று பகிரங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

13 ஐ நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது – பேராசிரியர் அ. சர்வேஸ்வரன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு பிளவுப்படும் என்ற சந்தேகம் நாட்டு மக்கள் இடத்தில் உள்ளது.

உண்மையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு நிச்சயம் பிளவுபடாது .  ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் சமஷ்டிக்கு சாத்தியமில்லை என்றுகொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

13 ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு பிளவு படுவதற்கான ஏற்பாடுகளும் அதில் இல்லை.

குறிப்பாக இன்று பலருக்கு 13 ஆவது திருத்தம் தொடர்பில் போதிய அறிவு இன்மையே இதற்கான காரணமாகும். அதாவது இந்த திருத்தத்தில் சகல அதிகாரங்களையும் மத்திய அரசு மீள பெற்றுக்கொள்ள கூடியதாகவும், மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த கூடியதாகவும் காணப்படுகிறது.

மாகண சபை முறைமையில் முதலமைச்சரை விட அதிகளவு அதிகாரம் கொண்டவராக ஆளுநர் காணப்படுகிறார்.  அவரை நியமிக்கின்றவர் ஜனாதிபதி. எனவே ஜனாதிபதி  தனக்கு விருப்பமான நபர் ஒருவரை ஆளுநராக நியமிக்க முடியும்.

நாடுப் பிளவுபட்டு விடும், இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும்,  இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை சென்று விடும் அல்லது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இந்தியாவுடன் இணைந்து விடும்

என்று பலரும் கூறுகிறார்கள். இந்நிலையில் இந்த 13 இல் என்ன இருக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாது.

குறிப்பாக காணி அதிகாரத்தை எடுத்துகொள்வோமாயின், காணி அதிகாரங்கள் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ளதா? என்பதே ஒரு கேள்வியாகும்.

இருப்பினும் இது தொடர்பில் முன்னர் சிக்கல் தோன்றி பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதன் தீர்ப்பு காணி அதிகாரங்கள் 13 க்கு சொந்தமானவையல்ல என்று நீதிமன்றம் தீரப்பு வழங்கியது. மத்திய அரசு காணிகளை மாகாண சபைக்கு வாங்கியிருந்தால் அதை பயன்படுத்த மாத்திரமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லாத ஒன்றை எவ்வாறு ஜனாதிபதி வழங்க போகிறார்? என்பதே எனது கேள்வியாகும்.

மேலும் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டிக்கு சாத்தியம் கிடையாது. இலங்கை என்பது ஒற்றையாட்சி  நாடாகும். சமஷ்டி என்பது அதிகாரங்கள் மத்திய அரசிற்கும்,

மாகாண அரசிற்கும் மாநிலங்களுக்கும் பகிரப்படவேண்டும். ஆனால் 13 ஆவது திருத்தத்தில் பகிரப்படவில்லை. மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றொரு திருத்தத்தை கொண்டு வந்து மீள பெற்றுக்கொள்ள முடியும். இங்கு அதிகாரங்கள்  பிரிபடவில்லை. ஆனால் சட்டவாக்க அதிகாரம் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் அடுத்த மட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அது அதிகார பரவலாக்கம் என்று கூறலாமே தவிர  அதிகார பகிர்வு என்று கூறமுடியாது.

சமஷ்டி எனும் போது அதிகாரப்பகிர்வும். அதாவது 13 ஆவது திருத்தத்தில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை. இலங்கை ஒற்றையாட்சி நாடாகும்.

இங்கு சமஷ்டிக்கு இடமே இல்லை.  ஆனால் தமிழ் மக்கள் சமஷ்டி என்பதே ஒரே தீர்வு என்கிறார்கள்.  இதற்காகவே பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள்.

தற்போது நாட்டில் அதிகாரமற்ற மாகாண சபை முறை ஒன்றே காணப்படுகிறது. தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாகும்.

இருப்பினும் தற்போது உள்ள நிலையில் அதற்கு சாத்தியமில்லை. இன்று நாட்டில் 13 ஆவது திருத்தத்திற்கு நாட்டில் பாரியதொரு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சமஷ்டி என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும் என்றார்.

மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் நான் உறவுப்பாலமாக செயற்படுவேன் – பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை

மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர் கு.அண்ணாமலைக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையில் இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி., பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர்கள், இ.தொ.காவின் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட கட்சி பிரமுகர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உறுப்பினர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே ராமேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலும் சிறந்த தொடர்பு இருக்கிறது.

அந்த வகையில் இலங்கைக்கு வந்திருந்த பா.ஜ.கவின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினோம்.

இலங்கை கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், முதல் நாடாக உதவிய இந்தியாவுக்கு காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்தோம்.

அத்துடன், இந்திய அரசின் உதவியின் கீழ் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.

இதன்போது மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தான் உறவுப்பாலமாக செயற்படப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார் என கூறினார்.

யாழ் கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில்? நிலாந்தன்.

கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு கிழமைகள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க 13ஐ முழுமையாக அமல்படுத்த போவதில்லை. கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அது தெரிகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரம் தொடர்பில் அவர் தெளிவற்ற வார்த்தைகளில் கதைக்கிறார். இப்பொழுதுள்ள போலீஸ் நிர்வாக கட்டமைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு டிஐஜி உண்டு. அதை மாற்றி ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு டிஐஜி என்று நியமிக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பில் ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டபடி, கொழும்பு மாநகரத்துக்கு ஒரு டிஐஜியும் 9 மாகாணங்களுக்கு ஒன்பது டிஐஜிக்களுமாக மொத்தம் பத்து டிஐஜிக்கள் நியமிக்கப்படுவார்கள்.ஆனால் இதைச்சொன்ன ரணில் அதன்பின் சொன்ன வார்த்தைகள்தான் இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. போலீஸ் அதிகாரத்தில் மாற்றம் இராது என்று அவர் கூறுகிறார். அதாவது இப்போது இருப்பதைப் போலவே போலீஸ் நிர்வாகம் மத்திய அரசுக்குக் கீட்பட்டதாகவே இருக்கும் என்று பொருளா?அப்படியெஎன்றால் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது. அதாவது ரணில் விக்ரமசிங்க கதைப்பது 13 மைனஸ் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அண்மையில் கொழும்புக்கு வந்து போன இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியபடி 13 ஆவது திருத்தம் தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அதை முழுமையாக அமல்படுத்தும் நோக்கம் ரணிலிடம் இல்லை என்று தெரிகிறது. பிக்குக்களின் ஆர்ப்பாட்டம் அவருக்கு ஒரு சாட்டு. அதைக் காட்டியே அவர் 13ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று கையை விரிக்கலாம். அவர் அப்படிக் கையை விரித்தால் இந்தியா என்ன செய்யும்? 13 ஆவது திருத்தத்துக்கூடாகத்தான் இலங்கை தீவின் இனப் பிரச்சினையில் தான் தலையிட முடியும் என்று இந்தியா கூறிவருகிறது. அங்குதான் தனக்கு சட்டப்படியான உரித்து உண்டு என்றும் இந்தியா வலியுறுத்துகின்றது. ஏனெனில் இந்திய உடன்படிக்கையின் பிரகாரம்தான் இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடலாம் என்றும் இந்தியா கூறி வருகிறது. அப்படியென்றால், 13ஐ ரணில் முழுமையாக அமுல்படுத்த மாட்டார் என்றால் அவருக்கு எதிராக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்குமா?

இல்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவ்வாறு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு ராஜதந்திரச் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. 13ஆவது திருத்தம் என்பது இந்தியாவும் இலங்கையும் பெற்றெடுத்த குழந்தை.அது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் விளைவு.இந்திய-இலங்கை உடன்படிக்கையில் தமிழ் மக்கள் கையெழுத்திடவில்லை. எனவே 13ஐ முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்க வேண்டியது அதன் பெற்றோரில் ஒருவராகிய இந்தியாதான்.ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்தியா அதைச் செய்யவில்லை. 2009 க்கு முன்புவரை அவ்வாறு செய்வதற்கு யுத்தம் ஒரு தடை என்று கூறலாம். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அதை அமுல்படுத்தாமைக்கு இலங்கை மட்டுமல்ல,இந்தியாவும் பொறுப்புத்தான்.இதில் இந்தியா தனது கூட்டுப்பொறுப்பை நிறைவேற்றதே தவறியிருக்கிறது.அதன் விளைவாக 13ஆவது திருத்தம் எனப்படுவது இலங்கையில் இரண்டு இனங்களினாலும் கைவிடப்பட்ட ஓர் அனாதையாகும் நிலைதான் காணப்படுகிறது.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், 13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கை மீது நிர்ப்பந்தங்களை பிரயோகித்தால் தவிர கொழும்பு அதைச் செய்யாது. இலங்கை இப்பொழுது இந்தியாவிடம் கடன் பெற்றிருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடனான உறவைச் சுமூகமாக்க வேண்டியிருக்கிறது.எனவே இந்தியா,இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும்.

ஆனால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த யாழ். கலாச்சார மையத்தைக் கையளிக்கும் நிகழ்வைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா அவ்வாறு கொழும்பின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை உண்டா.என்ற கேள்வி வலிமையாக மேலெழுகிறது.

கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைச்சர் ஒருவரும் கட்சியின் தமிழகத்திற்கான அமைப்பாளரும் யாழ்ப்பாணம் வருகை தந்திருக்கிறார்கள். கலாச்சார மையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் வந்திருந்தபோது அந்த மையம் சம்பிரதாயபூர்வமாக மெய்நிகர் வெளியில் திறந்து வைக்கப்பட்டது. அதை ஒரு “மென் திறப்பு” என்று இந்திய தூதரகம் அழைத்தது.

இப்பொழுது கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதாவின் இரண்டு தமிழ் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் வந்தார்கள். அந்த கலாச்சார மையத்தை இலங்கை மத்திய அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது. அதை யாழ் மாநகர சபையிடம் கையளிப்பதற்கு அவர்கள் தயாரில்லை. அது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் பரிசு என்ற அடிப்படையில் அதைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாநகர சபைதான் நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகின்றது. அவ்வாறு நிர்வகிக்கத் தேவையான நிதி உதவியை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கும் இந்தியா தயாராக காணப்படுகிறது. ஆனால் கொழும்பு அதற்கு வெவ்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக அவதானிக்கப்படுகிறது. அதனால்தான் கலாச்சார மையத்தை கையளிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இப்பொழுதும் அதற்கு வேண்டிய நிர்வாகக் கட்டமைப்புகள் உருவாக்கப்படாமலேயே கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கிறது.

கலாச்சார மையத்தை திறப்பதற்கு முதலில் பிரதமர் மோடி வருவார் என்று கூறப்பட்டது. பின்னர் ஜனாதிபதி வருவார் என்று கூறப்பட்டது. அதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியிலும் இறுதியாக வந்தது யார் என்றால் ஒரு துணை அமைச்சரும் பாஜகவின் தமிழக அமைப்பாளரும்தான். அதில் இந்தியா ராஜதந்திர பரிபாஷையில் ஒரு செய்தியை உணர்த்துகின்றது. யாழ்ப்பாணம் வந்த இருவரும் தமிழர்கள் என்பதும் விசேஷம். அதன் மூலமும் இந்தியா இலங்கைக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகிறது. ஆனால் அந்த இருவரும் வந்திருந்த அதே காலப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் கடற் தொழில் அமைச்சு ஒரு காரியத்தை செய்தது. அது என்னவெனில், எல்லை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் வந்த காரணத்தால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளில் ஒரு பகுதி தமிழ் மீனவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதையாவது உணர்த்த விரும்பியதா?

கலாச்சார மையத்தைக் கையளிப்பதற்காக வந்திருக்கும் துணை அமைச்சர் மீன்வளத் துறைக்குரிய துணை அமைச்சரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் வடக்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து மீனவ சமூகங்களோடு உரையாடிக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில்தான் இலங்கையின் கடல் தொழில் அமைச்சு மேற்கண்டவாறு இந்திய மீனவர்களின் படகுகளை தானமாக கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு ஒரு செய்தியை கூற விரும்புகிறது.வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இணைப்பு திட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவுக்குள்ள வரையறைகளை உணர்த்துவதே அச்செய்தி ஆகும்.

வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்புகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட திட்டங்களை இலங்கை இழுத்தடித்தே அமுல்படுத்தி வருகிறது. பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பல மாதங்கள் எடுத்தன.எனினும் ஓடுபாதை போதாது என்ற காரணத்தால் சிறிய ரக விமானங்களைத்தான் இறக்கக் கூடியதாக உள்ளது. அதனால் 27 கிலோகிராமுக்கு அதிகமான ஏடையுள்ள பொதிகளை பயணிகள் காவ முடியாது.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து இதோ தொடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.ஆனால் அது திறக்கப்பட்ட பின்னர்தான் நம்பலாம். இது போன்ற “கனெக்டிவிட்டி” திட்டங்களில் கொழும்பு வேண்டுமென்றே இழுத்தடிப்புகளைச் செய்து வருகிறது. இந்தப் பின்னணிக்குள் வைத்து பார்க்கும்போது பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்திலும் இலங்கை இந்தியாவின் சொற் கேட்டு நடக்குமா? இந்தியாவும் அதற்காக இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் நிலையில் உள்ளதா?

எனவே கூட்டிக் கழித்து பார்த்தால் தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னரும் அங்கே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் சிந்தனைகளில் அதிகம் மாற்றம் நிகழவில்லை. 13ஐ அவர்கள் எதிர்ப்பது என்பது கஜேந்திரகுமார் கூறுவது போல இந்திய எதிர்ப்பின் ஒரு பகுதிதான்.அவர்கள் இந்தியாவை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.ஆனால் இந்தியா சிங்களவர்களையும் தமிழர்களையும் சம தூரத்தில் வைத்து கையாளலாம் என்று நம்பிக் கொண்டே இருக்கப் போகிறதா ?

தேர்தல் ஏற்பாடுகளுக்கு 100 மில்லியனை வழங்கியது திறைசேரி

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் மூலமான வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எனவே அறிவிக்கப்பட்டபடி திகதியில் தேர்தலை நடத்த ஆணைக்குழுவும் மற்ற தேர்தல் செயலக அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.