அக்கரையில் கடற்படைக்கு காணி வழங்க முடியாது: வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் இராணுவமயப்படுத்தலை ஏற்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும் வலி – கிழக்கு தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கறை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகம் கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளார். அக் கடிதத்தில், இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கறை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர். அதற்கமைய கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தியுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாகவும் பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்துள்ளது.

இவ் அறிவிப்பினைத் தொடர்ந்து பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தவிசாளார், உள்ளுராட்சி மன்றிற்கு உரிய முடிவுகள் தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே அதிகாரம் உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், எது எப்படியிருந்த போதும் படைத்தரப்பிற்கு காணியை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளடன் பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். இக் கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கு என மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கிய கடற்கரையாக மக்கள் பாவனையில் உள்ளது. அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எதுவித அறிவிப்புக்களும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளர், கடற்படையினர் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர்;. இது அரச நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மையினையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவ மயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையும் மீறி அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் ஆயின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையே மீறி அவர்களுக்குச் செந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்கு அபகரிப்பதாகவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தல்

டெல்லி சென்றுள்ள தமிழக பாஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் இன்று (பிப்.,02) சந்திப்பு நடத்தினார்.

அப்போது, அவர் இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என வெளியுறவு த்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தற்போது இலங்கையின் சூழல் மாறி கொண்டு இருக்கிறது. வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ், வருவாய் ஆகிய அதிகாரங்களை தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர் எனவே இலங்கையில் 13ஆம் திருத்தச்சட்டத்தை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன்போது, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குதல், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேசப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின் போது, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலையுடன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாளை பேரணியில் சகலரையும் அணி திரளுமாறு யாழ்- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

தமிழ் மக்களின் கரிநாளான நாளைய தினம் வடக்கிலிருந்து கிழக்குக்கு எழுச்சிப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் யாழ். பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பை விடுத்தனர். அத்துடன், தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாய கம், தமிழ்த் தேசியம் என்ப வற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இந்த எழுச்சிப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதேநேரம் பேரணி ஆரம்பமாகி பயணிக்கும் இடங்களையும் வெளியிட்ட மாணவர்கள் அந்தப் பகுதிகளில் பெருந்திரளாக மக்கள் திரண்டு ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத் தனர்.

பேரணி ஆரம்பமும் பயணமும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும். நாச்சிமார் கோயிலடி ஊடாக பிரதான தபால் அலுலகம் தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும்.

பின்னர் செம்மணியிலிருந்து வாகனங்கள் மூலம் நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து இரணைடுவில் பேரணியின் முதல் நாள் நிறைவடையும். இரண்டாம் நாளான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகும்.

வவுனியா மன்னார் அணிகளை இணைத்துக் கொண்டு 10.30 மணிக்கு புறப்படும் பேரணி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க் கால் சென்று உறுதியெடுத்துக் கொண்டு முல்லைத்தீவில் நிறைவடையும்.

மூன்றாம் நாளான திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகும் பேரணி தென்னமரவாடியூடாக திருகோணமலையை மதியம் 1.30 மணியளவில் சென்றடையும். பின்னர், திருகோணமலையின் எழுச்சி நிகழ்வுகளில் பேரணியினர் பங்கேற்பர். தொடர்ந்து பயணித்து வெருகலில் மூன்றாம் நாள் நிறைவடையும்.

நான்காம் நாளான செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு பேரணி வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டு. நகரை சென்றடையும். இதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொது கூட்டத்துடன் எழுச்சிப் பேரணி நிறைவு பெறும்.

இப்பேரணிகளில் மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலைஅலையாக இணைத்து தமிழ்த் தேசத்தின் நிலைப்பாட்டை முழு உலகத்துக்கும் வெளிப் படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் – என்று தெரிவித்தனர்.

வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு யாழ்- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு முழுவதும் பூரண கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கரிநாளாக பிரகடனப்படுத்தியும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பேரணி இடம்பெறும் என்று மாணவர்கள் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

பேரணிக்கு வலுவூட்டியும் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்.

இந்தச் சந்திப்பில் மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்தார்.

பெப்ரவரி 4ஆம் திகதி கடைகள், வர்த்தக நிலையங்களைப் பூட்டியும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் பேரணியில் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்க தயார் – பாரிஸ் கிளப்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை இலங்கை வழங்க பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது.

பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, கடன் மறுசீரமைப்பில் “விரைவில்” தமது ஆதரவை பாரிஸ் கிளப் அறிவிக்க உள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் இலங்கை, கடந்த செப்டம்பரில் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

எனினும், இந்த நிதி திட்டத்தை பெருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

அந்த ஒப்புதலை பெற, முக்கிய இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் கிளப்பின் உறுப்பினர் அல்லாத சீனாவும் இந்தியாவும், இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்களில் முன்னணியில் உள்ளனர்.

எவ்வாறாயினும், அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதற்கு முன்வந்த இந்தியா, அதற்கான நிதியியல் உத்தரவாதங்களை அளித்தது.

மேலும் சீனாவின் எக்ஸிம் வங்கி கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில், இரண்டு வருட கடன் ரத்து கால அவகாசத்தை வழங்கியது.

சீனாவின் இந்த உறுதிமொழிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், பெய்ஜிங் போதுமானதைச் செய்யவில்லை என்று கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

“சீனா இதுவரை வழங்கியது உத்தரவாதம் போதாது. அவர்கள் IMF கடன் நிவாரணத்தை பெற நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதங்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியத்தின் மிகப்பெரிய அங்கத்தவர்களின் ஒருவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கை போராளிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்- ஸ்ரீ காந்தா

தென்னிலங்கை ஐனநாயக போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தெரிவித்தார்.

இன்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,”பாரிய பொருளாதார நெருக்கடி நிலையின் மத்தியிலும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்து நிற்கின்ற சூழ்நிலையிலே சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் மனித உரிமை மீறல்கள் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாளை மாலையில் இருந்து போராட்டம் நடாத்தப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மத்தியில் இவ்வாறான ஒரு கொண்டாட்டம் தேவைதானா அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலே இதில் கலந்து கொள்ள முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பி கத்தோலிக்க திருச்சபை இதனை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கின்றது.

பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்பன எதிர்வரும் 75வது சுதந்திர தினத்தை துக்க நாளாக கரி நாளாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பிலே முடிவடையும் விதத்திலே ஒரு பாரிய பேரணிக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். இந்த அழைப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வெளியிட்டு இருக்கின்ற சூழ்நிலையில் சில கருத்துக்களை பொது வெளியில் முன் வைப்பது பொருத்தமானது அவசியமானது என்று கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது இது முதல்தடவையல்ல,தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் நீதி தொடர்பில் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டிற்கு தென் இலங்கையிலே ஐனநாயகத்தின் பெயரில் குரல் எழுப்புகின்ற போராடுகின்ற அனைத்து முற்போக்கு சக்திகளும் வர வேண்டும் எனமக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வாரங்கள் போதும் ஆனால் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையிலே அது தொடர்பிலே அரசாங்க தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் இப்போது எழுந்து கொண்டிருக்கின்றன.

பதவியை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களாக கடைசிவரையில் இருந்தவர்கள் இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பவர்கள் அரசாங்க தரப்பிலே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறை முற்படுத்தப்படுத்துவதற்கு எதிராக போர் கொடி தூக்குகின்றார்கள்.

தென்னிலங்கையில் ஜனநாயக எழுச்சியை மீள கொண்டுவர தயாராக இருக்கின்ற இளைஞர் சந்ததியினருக்கு இளைஞர் யுவதிகளுக்கும் அரசியல் நடவடிக்கையாளர்களுக்கும் தொழிற்சங்க வாதிகளுக்கும் ஒரு செய்தியினை தாழ்மையாகவும் உறுதியாகவும் சொல்ல விரும்புகின்றோம்
தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையிலே இந்த நாட்டிலே ஆட்சி அமைப்பு முறையை மாற்றி அமைப்பதற்கு சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

ஐனநாயக போராளிகளாக தென் பகுதியிலே மக்கள் மத்தியில் நிலவி வருகின்றவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை எமது கோரிக்கையாகும்
எனவே தமிழ் மக்களின் கோரிக்கையை அவர்கள் ஏற்காதவரையில் அவர்களின் ஜனநாயக ரீதியான எந்த ஒரு போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது.

எனவே தென்பகுதியில் ஜனநாயக ரீதியில் போராடும் இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகள் முற்போக்கு சக்திகள் எமது தமிழ் மக்களின் அரசியல் நீதியினை ஏற்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

13ஆவது திருத்தத்தில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் வழங்கப்பட்டுள்ளமை நாட்டில் பிளவுகளுக்கு மேலும் வழி வகுக்கும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்து அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து முன்னைய ஜனாதிபதிகள் அனைவரும் தவிர்த்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்றாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வரவேற்றுள்ளார்.

நிலாவரையில் தவிசாளர் நிரோஷுக்கு எதிரான தொல்லியல் திணைக்கள வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை

நிலாவரை, கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தினார் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கான ஆவணத்தினை இம்மாத இறுதிக்குள் தயார்ப்படுத்தி மன்றில் சமர்ப்பிக்குமாறு அச்சுவேலி பொலிஸாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்லாகம் நீதிமன்றில் இன்றைய தினம் (பெப். 1) புதன்கிழமை காலை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கினை முன்கொண்டு செல்வதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற, அதற்குரிய ஆவணம் ஏன் அனுப்பப்படவில்லை என பொலிஸாரை நோக்கி நீதிபதி வினவினார்.

அத்துடன் இம்மாதத்துக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கான ஆவணத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் அத்திவாரம் போன்று வெட்டுவதற்கு இரண்டு முறை முயற்சித்த நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து அங்கு தொல்லியல் திணைக்களத்தின் முயற்சிகள் கைவிடப்பட்டன.

பின்னர், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.

அதன்போது தவிசாளருக்கு தொல்லியல் திணைக்களத்தின் கருமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தவிசாளரிடம் கூறினர்.

எனினும், பிரதேச சபையானது நிலாவரையை தொடர்ச்சியாக பராமரித்து வருகிறது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு உரிமையுள்ளது என கூறி தவிசாளர் வெளியேறினார்.

இந்நிலையில் பெருந்தொகை இளைஞர்களை அழைத்து வந்து, தமது அரச கருமத்துக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடை ஏற்படுத்தியதாக கூறி, மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற சமகால பகுதியிலேயே குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தமயமாக்கத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும் அமுல்படுத்தப்பட்டது – ஐ. நா.க்கு இலங்கை பதில்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய மதிப்பீடு தொடர்பான குழுவினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் – 19 வைரஸ் பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கின்றபோதிலும், அம்மீளாய்வின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகளையும், சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய கால மதிப்பீடு தொடர்பான குழு புதன்கிழமை (01) மீளாய்வை மேற்கொண்டது.

இம்மீளாய்வுக்கென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்ததுடன், மனித உரிமைகள் விவகாரத்தில் அதன் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடமிருந்தும் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின்போது முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகள் மற்றும் சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களின் அமுலாக்கம் பற்றிய தகவல்களை உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையானது கடந்த 2017 ஆம் ஆண்டின் பின்னரான மீளாய்வு காலப்பகுதியில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அவ்வாறிருப்பினும்கூட ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்கள் அடங்கிய ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்ட நிறைவேற்றம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் உருவாக்கம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரகடனங்கள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுவதற்கான இணக்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள், அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் வலுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகள் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று கொவிட் – 19 பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியிலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை வலுவான முன்னேற்றத்தைப் பதிவுசெய்தது. அதன்படி 163 நாடுகளில் 70.0 என்ற புள்ளியுடன் இலங்கை 76 ஆவது இடத்தைப்பிடித்தது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் உபகட்டமைப்புக்கள் மற்றும் முகவரமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதை முன்னிறுத்தியும் காலநிலைமாற்ற சவால்களை திறம்பட எதிர்கொள்வதை  இலக்காகக்கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அந்த 19 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.