ஒரு மருத்துவ மாணவனுக்கு மருத்துவ கற்கைக்காக 60 லட்சம் செலவு செய்யும் அரசாங்கம்

நாட்டின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மருத்துவ கற்கை மற்றும் பயிற்சிகளுக்காக ஒரு மாணவனுக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாவுக்கு அதிகமான நிதியை செலவிடுவதாக சபையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கும் சேவையானது அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை விட அதிகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மருத்துவ துறையை முன்னேற்றுவதற்கு நாட்டில் மேலும் மூன்று மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஊவா வெல்லஸ்ஸ, குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதனை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன்,கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் அதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் பூனாவில் உள்ள இத்தகைய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சமனானதாக இலங்கையில் அதனை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டும்.

அதேவேளை மருத்துவத் துறையில் வைத்திய பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது.

நாட்டுக்காக அவர்களது சேவையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்தளவு தொகை செலவிடப்படுகிறது.

ஆனாலும் அனைத்து பயிற்சிகளையும் தாய்நாட்டில் பெற்றுக் கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களது சேவைகளை வழங்குகின்றனர். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டு வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டின் பெரும் நிதி செலவில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சேவைகளை மேற்கொள்ளும் நிலையில் அந்த சேவைகள் அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நன்கொடையை விட அதிகமாகும் என்றார்.

காவி உடை அணிந்தமைக்காக தர்மத்துக்கு எதிராக செயற்பட இடமளிக்க முடியாது – ரணில்

காவி உடை அணிந்தமைக்காக தர்மத்துக்கு எதிராக செயற்பட இடமளிக்க முடியாது. அதனால் பல்கலைக்கழகங்களில் பயிலும் பிக்கு மாணவர்கள் தொடர்பாக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புத்தசாசனத்தில் பிரச்சினைகள் பல உள்ளன. துறவரத்தை பேணும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும். தேரர்கள் அதனை பின்பற்றாவிட்டால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.

புத்த பெருமானின் காலத்தில் இருந்து இது நடக்கின்றது. அங்குலிமால என்பவர் காவி உடையை அணிந்தகொண்டே புத்த பெருமானுக்கு எதிராக நடந்துகொண்டார்.

இவ்வாறான நிலைமையில் தேரர்களுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வகையில் அறநிலையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் பிக்குமார் பதிவு செய்தல் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைபு செய்யப்பட்டுள்ளது.

முன்னைய காலங்களில் அரசர்களே அதனை கட்டுப்படுத்தினர். பராக்கிரமபாகு காலத்தில் சில தேரர்களுக்கு மரண தண்டனையும் விதித்துள்ளார்.

அவ்வாறு எங்களுக்கு செய்ய முடியாது. அதற்கான அதிகாரமும் கிடையாது. ஆனால் இப்போது மகாநாயக்க தேரர்கள் இப்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொறுப்பேற்று செயற்படுத்துகின்றனர். பௌத்த நிகாயக்கள் இது தொடர்பில் செயற்படுகின்றன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாங்களும் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் கற்கும் பிக்குகள் தொடர்பிலேயே நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அவ்வாறான பிக்கு ஒருவர் மகாநாயக்க தேரரை தூற்றுகின்றார். இவர்கள் யார்? காவி உடையை அணிவதால் தர்மத்திற்கு எதிராக செயற்பட விசேட பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாது. இதனால் இந்த சட்டமூலம் அவசியமாகும்.

பல்கலைக்கழகங்களுக்கு பிக்கு மாணவர்களாக பெருமளவானவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இறுதியாக அவர்கள் சாதாரண வாழ்க்கையுடனேயே அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

முதலில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். அதாவது துறவரத்துடன் வந்தால் அவ்வாறே இருக்க வேண்டும். பட்டத்தையும் துறவரத்துடனேயே வழங்க வேண்டும். பின்னர் அதனை மாற்ற முடியாது. மாறும் நடவடிக்கைகளை தங்களின் மகாநாயக்க தேரர்களிடம் சென்றே பேசிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பல்கலைக்கழங்களில் பிக்குமார் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டும்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தர்மத்தையும் சங்கசபையையும் குழப்பிக்கொண்டுள்ளார். பராபவ சூத்திரத்தில் தேரர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. அந்த சூத்திரம் தொடர்பில் தெளிவில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அதை அவர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் – மைத்திரி வலியுறுத்தல்

நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் அரசியலமைப்பினால் அதிகாரம் வழங்கப்பட்ட வகையில் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.

மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.

வடக்கு பிரச்சினைகளை தீவிரப்படுத்தாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வடக்கு அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக குறிப்பிட்டுக் கொண்டு காணி விடுவிப்பு,அதிகார பகிர்பு மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது.

எனது ஆட்சிகாலத்தில் வடக்கு மாகாணத்தில் அந்த மக்களுக்கு சொந்தமான காணிகளில் 95 சதவீதமான காணிகளை விடுவித்தேன்.தற்போது இரண்டு அல்லது மூன்று சதவீதமான காணிகள் மாத்திரமே கட்டுப்பாட்டில் உள்ளன.

வடக்கு மாகாணத்தில் கோயில் தொடர்பான பிரச்சினை தற்போது தோற்றம் பெற்றதல்ல,மிலேட்சதமான நிலைக்கு செல்லாமல் பேச்சுவார்த்தை ஊடாக நல்லிணக்க அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

புத்தசாசன அமைச்சருடன் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இணக்கமாக தீர்மானத்தை காண்பது அவசியமாகும்.

நாடு வரலாற்று ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்ததை ஊடாக தீர்வு காண்பது காலத்தின் தேவையாகும்.

இலங்கை வரலாற்றில் சிங்களவர்களுக்கும். தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்க தொடர்பு காணப்பட்டது என்பதை வரலாற்று சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினையாக காணப்படுகிறது.

மாகாணங்களுக்கு கீழான நிருவன கட்டமைப்பில் அதிகார பகிர்வு வழங்க முடியும்.மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை ஊடாக அதிகாரத்தை பகிர முடியும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை கொண்டு வந்தார்,அதற்கு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.அக்காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்தில் சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன இவ்வாறான நிலையில் பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பண்டா- செல்வா ஒப்பந்தத்திற்கு மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது எஸ்.டப்ள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்க கைச்சாத்திட்ட பண்டா- செல்வா ஒப்பந்த பிரதிகளை போராட்டத்தில் ஈடுப்பட்ட மதகுருமார்கள் முன் தீயிட்டு இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வதில்லை என குறிப்பிட்டார்.

இதன்பின்னர் டட்லி –செல்வா ஒப்பந்தம் ஊடாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.

ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகப்படுத்திய மாவட்ட அபிவிருத்தி சபை ஊடாக மாவட்டங்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்ப்பட வேண்டும்.இந்த முறைமையினால் அரசாங்கத்திற்கு மேலதிக நிதி செலவாகாது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க தயார் என்றார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக்க நன்;றி,மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.நாடு இன்று எதிர்க்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாபிக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்,ஆகவே பிரச்சினைகளை தீவிரப்படுத்த வேண்டாம் என வடக்கு மாகாண அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்திய நிதியுதவியில் சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2005-2010, 2010-2015 மற்றும் 2015-2020 வரையான காலப்பகுதிகளுக்கான இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இக்கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உப கருத்திட்டமொன்றின் செலவு 300 மில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்படுவதுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதி 5 பில்லியன் ரூபாவாக அமையும்.

ஆனாலும், நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக 300 மில்லியன் ரூபாய் உயர்ந்தபட்ச பெறுமதி எல்லையில் ஒருசில கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சிரமமாக அமைவதால், குறித்த எல்லையை 600 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதியை 10 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும் இரு தரப்பினர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

விடுதலை புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடை காயாக வைத்து போர் செய்தார்கள் – சரத் வீரசேகர

நாட்டில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். புத்தசாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தேரவாத பௌத்த நாடான இலங்கை பாதுகாக்கப்படும்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவு கூர்ந்துக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன. இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கிறார்கள்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்படவேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை பாதுகாக்கும் வகையில் பௌத்த சாசனம் அமுல்படுத்தப்பட்டது, ஆகவே பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட் டால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் பௌத்த விகாரைகள், தேரர்கள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் தான் பௌத்த சாசனம்.

சிங்கள இனத்தவர்கள் தான் பௌத்த சாசனத்தை தோற்றுவித்தார்கள், ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் சிங்களே என அழைக்கப்பட்ட இலங்கை காலப்போக்கில் ஸ்ரீ லங்கா என எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை அறியவில்லை. இலங்கையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களில் இருந்து பாதுகாக்க சிங்களவர்கள் தான் முன்னின்று போராடினார்கள்.

புத்தசாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாட்டின் ஒருமைப்பாடு உறுதியாக பேணப்பட வேண்டும். சமஷ்டியாட்சி முறைமையின் கீழ் நாட்டை பிளவுப்படுத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் புத்தசாசனம் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை. தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களும்,முஸ்லிம்களையும் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை.

பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்திற்கு சென்று குறிப்பிடுகிறார்.

வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை என்று, இது வெறுக்கத்தக்கதாகும். வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்,இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது.

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் உள்ள கோயில்களில் தேர் வீதி வலம் வந்தது. சிங்களவர்களும் அதில் கலந்துக் கொண்டார்கள்.

அதுவே சிங்கள இனத்தின் பொறுமையாகும். ஆனால் வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்திற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்தவதையிட்டு ஒட்டு மொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அவர்களின் உறவுகள் வீடுகளுக்குள் வைத்து நினைவு கூர்ந்துக் கொள்ளலாம். விடுதலை புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடை காயாக வைத்து போர் செய்தார்கள்.

இராணுவத்தை நோக்கி தமிழர்கள் வரும் போது அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள். இராணுவத்தை நோக்கி 12 வயது சிறுவன் வரும் போது அந்த சிறுவனை பிடித்து கால்களை வெட்டினார்கள்.

விடுதலை புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இவ்வாறானவர்களையா தாம் நினைவு கூறுகிறோம் என்பதை தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

விடுதலை புலிகள் அமைப்பினர் நெருக்கடி செய்தார்களா அல்லது இராணுவத்தினர் நெருக்கடி செய்தார்களா என்பதை தமிழ் இளைஞர்கள் தமது பெற்றோரிடம் உண்மைகளை கேட்டறிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

புதிய நாணய சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் கோட்டா அரசாங்கத்தின் வரிச்சலுகைகளை தவிர்த்திருக்கலாம் – முன்னாள் ஆளுநர் இந்திரஜித்

2019 இல் திட்டமிடப்பட்ட புதியநாணய கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தால் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் பாரிய வரிச்சலுகைகள் மற்றும் பெருமளவு நாணயம் அச்சிடுதல் ஆகியவற்றை தடுத்திருக்கலாம் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிக்கான சட்டமூலம் 2019லேயே தயாராகயிருந்தது எனினும் அப்போதைய அரசாங்கத்திற்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நேரமிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பொருளாதார நிபுணர்கள் வரிகளை பெறுமளவிற்கு குறைத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி தொடர்பான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் திறைசேரியில் உள்ளவர்கள் வரிவிலக்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்தியிருப்பார்களா என நான் நினைப்பதுண்டு இதற்கு எங்களால் சரியான பதிலை தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் மீது தாக்குதல் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ் மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த வேளை இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து , அங்கு கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட வேளை வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த பொலிஸார் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முதற்கட்டமாக யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் இன்று செவ்வாய்க்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் , சட்ட வைத்திய அதிகாரியிடம் இருந்து சட்ட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் 16 மில்லியன் யூரோ நிதியுதவி

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நிதியிடலுக்காக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டம் மற்றும் பசுமை கொள்கைகளுக்கான உரையாடல்களுக்கு வசதியளித்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘பசுமைக் கொள்கைகளின் அடிப்படையிலான இலங்கை’ மற்றும் ‘உள்ளடக்கப்பட்ட ஒற்றுமையான சமூகத்தை’ உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் 2021 தொடக்கம் 2027 வரையான காலப்பகுதிக்காக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வருட அளவுகோல் கருத்திட்டத்தின் கீழ் நிதியனுசரணை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த துறைகள் மற்றும் ஒத்துழைப்புப் பணிகளுக்காக 2021-2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்காக 80 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் இலங்கையில் ‘சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக 16 மில்லியன் யூரோ நிதியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த நிதி வழங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிதியுதவி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பது பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவராது – சர்வதேச அமைப்பு

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பதும் அவர்களிற்கு தீங்கிழைப்பதும் அவர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்காக பல வழக்குகளை தாக்கல் செய்வதும் நெருக்கடிக்கான தீர்வில்லை என தெரிவித்துள்ள டப்ளிளை தளமாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு

அனைத்து பல்கலைகழக பிக்குமார் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில்வைக்கப்பட்டுள்ளதையும் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளதையும் கண்டிப்பதாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

மாணவ தலைவர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களிற்கு எதிராக சட்டரீதியான தடைகளையும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களையும் பயன்படுத்துவது மனித உரிமைகள் மற்றும் அமைதியாக அதிருப்தியை வெளியிடுவதற்கான உரிமை குறித்த இலங்கையின் வாக்குறுதிகளிற்கு முரணாண விடயம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஆகஸ்ட் 22ம் திகதி பகிரங்க அறிக்கையொன்றில் கரிசனை வெளியிட்டிருந்தது,இலங்கையின் அரசியல் பொருளாதார அமைதியின்மைக்கு ஆக்கபூர்வமான தீர்வை காண்பதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் முக்கியமானவர்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பதும் அவர்களிற்கு தீங்கிழைப்பதும் அவர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்காக பல வழக்குகளை தாக்கல் செய்வதும் நெருக்கடிக்கான தீர்வில்லை எனவும் புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனப் பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் நவம்பர் 25, கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை ஊடகங்களில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் எங்களின் நிலத்தை அபகரிக்கும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலை அறிந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துணிச்சலாக மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

சீனா, அனைத்தையும் நன்றாக அறிந்திருந்தும் தமிழர்களை தொடர்ந்து அவமானப்படுத்துவதையும், சர்வதேச அரங்கில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதையும் வழக்கமாக கொண்டதுடன், போர்க்குற்றவாளிகளை ஆதரித்தும் இலங்கையை கடன் பொறியில் சிக்க வைத்து அச்சுறுத்தியும் இலங்கையை கைப்பற்றும் அதன் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.

தமிழர் விரோத மனப்பான்மை கொண்ட சீனா வடக்கிலும் கிழக்கிலும் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செல்லும் தீய நோக்கத்துடன் எமது கடலையும் நிலத்தையும் அபகரித்து எமது பாரம்பரிய மண்ணில் எம்மை அகதிகளாக்கி இனப்படுகொலை செய்யும் முயற்சிகளை நாம் ஏற்கனவே கண்டித்திருந்தோம்.

தீங்கு விளைவிக்கும் கடலட்டை பண்ணைகள் என்ற போர்வையில் சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்கனவே எமது கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, எமது மீனவர்களிடையே பிளவை உருவாக்கியுள்ளது.

தற்போது சீனா வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வளமான விவசாய நிலங்களை, தமது நாட்டில் பத்து ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் மிக கடுமையான உணவு பஞ்சத்தை சமாளிக்கும் பொருட்டு தீய எண்ணத்துடன் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சீனா, இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் கூடிய மலக் கழிவுகளை உரமாக வழங்கியதாகவும், இலங்கைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை செலுத்துமாறு நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சீனாவில் வரவிருக்கும் உணவு நெருக்கடியை சமாளிக்க எமது வளமான விவசாய நிலங்களை சீனா எப்படி கைப்பற்றி எம்மை அடிமையாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

வெளிப்படைத்தன்மையற்ற மற்றும் சாத்தியமற்ற சீனக் கடன்கள் மூலம் இலங்கை தற்போதைய நிலைமைக்கு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு ஜப்பானும், இந்தியாவும் ஆதரவளித்துள்ள போதிலும், கடன்களை பரிசீலிக்கும் தற்போதைய பேச்சு வார்த்தைகளில் கூட சீனாவின் மறுநிதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து இருந்து வருவது, இலங்கையில் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரல் இலங்கையின் சமீபத்திய வரலாற்றிலிருந்து தெளிவாகக் அறிய முடிகிறது.

சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திட இருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்த   துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசியல் நிர்ப்பந்தத்திற்காக எமது நிலத்தையும் கடலையும் வேறு நாடுகளுக்கு விற்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதுடன், நமது கடலையும், நிலத்தையும் காப்பாற்ற குரல் கொடுக்குமாறு   சிவில் சமூகங்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த கடமையிலிருந்து தவறுகின்ற பட்சத்தில், எதிர்காலத்தில் நாம் அனைவரும் எம்முடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவோம் என்றுள்ளது.