மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை விஜயம் செய்ய கோரிக்கை முன்வைப்பு

சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024 முற்பகுதியில் மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன கப்பல்களின் இலங்கை விஜயம் குறித்த இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் முன்னர் போல இலங்கையை சேர்ந்த சகா இல்லாமல் சீனா தனித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளது.

எங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என்பதையும் சீனாவே தீர்மானிக்கவுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க அழுத்தம் கொடுக்குமாறு சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்த சிவில் சமூக பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்காக சீனத்தூதுவர் இன்று(06)  மாலை தனியார் விடுதியில் யாழ்மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்ட சீன தூதுவர் இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அதையடுத்து  சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சீனத் தூதருக்கு எடுத்து கூறினர். இலங்கைக்கு அழுத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதற்குப்  பதிலளித்த சீனத் தூதுவர், வெளிநாட்டின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத்தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என 2 மணித்தியாலங்கள் தூதுவருக்கு புத்திஜீவிகள் எடுத்துரைத்துள்ளனர்

சீன‌கடலுணவுகள் வடக்கிற்கு இறக்குமதி செய்யப்படாது – சீன‌ தூதுவர்‌உறுதி

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்,வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன்.சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும்.உணவு பொதி 7000 ரூபாய் பெறுமதியானது.

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது.சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது. 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கைகடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் – என்றார்.

Posted in Uncategorized

பல்கலை மாணவர்களின் போராடும் உரிமை பொலிஸாரால் பறிப்பு – மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு

நீண்டகாலமாக பேசுபொருளாக காணப்படும் மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பிரச்சினைக்கு வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாக அமைதியான முறையிலேயே போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் தங்களால் போக்குவரத்திற்கோ பொதுச்சேவைகளுக்கோ எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாத நிலையில் எங்களை கைதுசெய்ததானது இலங்கை பொலிஸாரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சென்றுகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நேற்று பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்த பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள,யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சிந்துஜன் கருத்து தெரிவிக்கையில்,

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு குரல்கொடுக்கும் வகையில் வடகிழக்கு பல்கலைக்கழக சமூகமாக இணைந்து நாங்கள் பண்ணையாளர்களின் நிலங்களை அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.இதன்போது பொது போக்குவரத்துக்கு ஏதும் தடைகள் ஏற்படாமலும் எங்களது உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் எனவும் தெரிவித்தார்.

எதிர்ப்புக்கு மத்தியில் திருகோணமலை இலுப்பைக்குளத்தில் புதிய புத்தர்சிலைகள்

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் இன்று (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்- சபா குகதாஸ் தெரிவிப்பு

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆனால் ஐனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்து வருகின்றது.

ரணிலின் எதேத்சதிகார போக்கை இராஐதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை  தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடையம்.

அத்துடன் தமிழ் புத்திஜீவிகள் தரப்பில் பலனமான குரல் இல்லை. புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது. இதனால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார்.

அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார். அண்மையில் ஐேர்மன் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணல் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக அதைவிட மேலும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார் ஐனாதிபதி.

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் வடக்கு மீனவர்களுக்கு தீர்வு காணப்படாமல் தென்னிந்திய மீனவர்கள் வடக்கு கடலில் மீன் பிடியில் ஈடுபட ரணில் அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக கூறும் அறிவிப்பு மேலும் வடக்கு மீனவர்களை நெருக்கடிக்கு தள்ளும் ஏற்கனவே இருந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இரட்டி மடங்காக்கும்.

தமிழர் தரப்பு மக்கள் ஆணையில் இருந்து ஒரு படி கீழிறங்கி சமஷ்டி தீர்வுக்கு முன்பாக அரசியல் அமைப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கோரினர்.

இதனை எதிர்பாக்காத ரணில் அதற்கும் ஒரு ஆப்பு வைத்தார். பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என கூறினார். உண்மையில் அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரத்தை பாராளுமன்ற முடிவு இல்லாமல் நினைத்தவுடன் ஐனாதிபதி தரமாட்டேன் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரி போல செயற்பட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, விகாரைகள் அமைத்தல் , சிங்கள குடியேற்றங்கள் அமைத்தல் , மேச்சல் தரைகள் அபகரித்தல் போன்றன கடந்த காலத்தை விட தற்போது வேகமாக நடைபெறுகின்றன.

நிகழ்நிலைக் காப்பு சட்டம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் நாட்டு மக்களுக்கான அடக்குமுறை என பலரும் கூறினாலும் தமிழர்களுக்கு மிக ஆபத்தானது.

இதற்கு காரணம் சட்டம் நிறைவேறினால் நில அபகரிப்பு ,சட்டவிரோத விகாரை அமைப்பு போன்ற வற்றுக்கான மக்கள் போராட்டங்கள் மற்றும்  நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நிரந்தர ஆப்பாகும். மீறினால் சிறைதான்.

அத்துடன் அரச செயற்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் பொய்யான செய்தியை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையுடன் கூடிய தண்டனை.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார். இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள்  மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் என்றார்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு சீன தூதுவர் குழு விஜயம்

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் பழைய கச்சேரியை பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

 

வடக்கிற்கான விஜயத்தை ஆரம்பித்தனர் சீனதூதுவர் தலைமையிலான குழு

இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவள்ளனர்.

அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் அக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனிடத்தில் கையளிப்பதோடு வெலிஓயா பிரதேச செயலகத்திற்கான 250 வாழ்வாதாரப் பொதிகளை அக்குழுவினரே நேரடியான விஜயமொன்றை மேற்கொண்டு வழங்கவுள்ளனர்.

அதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அக்கழுவினர் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடத்தில் வாழ்வாதார பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

யாழில் தங்கியிருக்கும் குறித்த குழுவினருடன் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து நாளை 6ஆம் காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினைச்  சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நெடுந்தீவு மக்களின் வாழ்வாதார உதவியாக  500 வாழ்வாதரப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு, குறித்த தினம் முன்னிரவில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தத்துறை சார்ந்தவர்கள் சிலரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை மறுதினம் 7ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் குறித்த குழுவினா நாகவிகாரையில் வழிபாடுகளைச் செய்யவுள்ளதோடு அங்குள்ள பொது மக்களுக்காக 250 வாழ்வாதார பொதிகளை கையளிக்கவுள்ளனர்

பின்னர் அங்கிருந்து யாழ்.திரும்பும் அவர்கள் சிறிது நேரத்தில் மன்னாரிக்குப் பயணித்து 8ஆம் திகதி மன்னார் மாவட்டச்செயலாளர் அ.ஸ்ரான்லி டிமலைச் சந்திக்கவுள்ளதோடு அங்கும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதோடு அன்றையதினம் மாலையில் வடக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமனம் பெற்ற தூதுக்குழு யாழ் விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம்(04)  யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.

இத்தாலிக்கான தூதர் சத்யஜித் ரோட்ரிகோ , எகிப்துக்கான தூதர் மதுரிகா வெனிங்கர், பங்காளதேசத்திற்கான உயர் ஸ்தானிகர் தரமபால வீரக்கொடி , சிங்கப்பூருக்கான உயர் ஸ்தானிகர் செனரத் திசாநாயக்க , பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் சந்தன வீரசேன, இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் க்ஷேனுகா செனவிரத்ன, பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகர்  அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேபாளத்திற்கான தூதுவர் எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன,கியூபாவுக்கான தூதுவர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன,பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் அடங்கிய குழுவினரே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம், யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆகிய இடங்களுக்கு சென்றதுடன் மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியால் தூதர்களுக்கான இரண்டு வார வழிகாட்டல் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் தெற்கு விஜயம் செய்து கள நிலைமைகளை அறிந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ரணில் தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வை வழங்கியே தீர்வார் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல உறுதி

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீருவார் எனவும் இதை இலங்கை வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டும் என்று சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்கின்றோம். அதேபோல் அவர்களும் ஜனாதிபதியின் தேசிய ரீதியான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் ஆளும், எதிரணி என இரு தரப்பினரும் இணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.