சர்ச்சைக்குரிய சட்டத்தரணியின் கருத்தரங்கு யாழ்.பல்கலையில் நிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.

அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து  இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.

இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவையும் சீனாவையும் இராஜதந்திரரீதியில் ஏமாற்றும் இலங்கை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இப்பொழுது இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு ஒரு முகத்தையும் இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி சில காரியங்களை சாதித்து வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற யாழில் இடம்பெற்ற ஓடாக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனா  தொடர்பாக இலங்கையில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல்வேறு பட்ட சிக்கல்கள் கருத்துக்கள் கூறப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இந்தியா தன்னுடைய பாதுகாப்பு நலன்களிலிருந்து சீனா இலங்கையில் நிலை கொள்வது என்பது தங்களுக்கு ஒரு பாதுகாப்பு குந்தகம் என்பதாக  கூறி  வருகின்றது.  இலங்கையை  தனது கைவசம் வைத்திருப்பதற்காகவும்  இலங்கையின் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பொழுது பல பில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு உதவிக்கரமாக வழங்கி வந்திருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் இலங்கையில் எப்பொழுது ஒரு அனர்த்தம் பாரிய இழப்புக்கள், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட பொழுதும் உடனடியாக இந்தியா முன்வந்து பல விஷயங்களை செய்திருக்கின்றது.

இப்பொழுது இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு ஒரு முகத்தையும் இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி சில காரியங்களை சாதிக்கின்றது. முக்கியமாக சீனாவினுடைய யுத்தக்கப்பல்கள் அல்லது ஆய்வுக்கப்பல்கள் என்ரா அடிப்படையில் கப்பல்கள்  இங்கு வருவதும் இல்ங்கை கடல் பரப்புக்குள் அவர்களை ஆய்வுகளை மேற்கொள்வது என்பதுவும் அந்த ஆய்வுகள் என்பது வெறுமனே என்ன காரணத்துக்காக இலங்கையினுடைய கடல் பரப்புக்குள் சீனா ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கேள்வி ஆகவே இவை எல்லாவற்றையம் பார்க்கின்ற பொழுது சீனா ஒரு பொருளாதார நலன்களின் அடிப்படையில் செய்வதாக எங்களுக்கு தெரியவில்லை.

மாறாக சீனாவை பொறுத்தவரையில் அமெரிக்காவுக்கு மாற்றீடாக  உலகத்தினுடைய ஒரு பொலிஸ்காரனாக  வரவேண்டும் என்பதில் அது குறியாக இருக்கின்றது. அந்த வகையில் தான்  அம்பாந்தோட்டை துறைமுகத்தியும் 99 வருட குத்தகைக்கு  அது எடுத்திருக்கிறது.

இப்பொழுது ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கின்ற ஒரு பல்கலைக்கழகம் அடுத்ததாக இலங்கையில் தான் சீனா தனது கடல் படையை உருவாக்க இருக்கின்றது என்ற ஒரு கருத்தையும் கூறி இருக்கின்றது. இப்பொழுது பெண்டகன் கூட சொல்கிறது அடுத்த இராணுவ தளமாகவோ, கடல் படை தளமாகவோ அம்பாதோட்டை மாற்றப்படுவதற்கான முழு வாய்ப்புக்கள்  இருக்கிறது என்பதுவும் கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி சீனாவுக்கு போய் வந்ததை தொடர்ந்து சீனாவினுடைய ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வந்திருக்கின்றது. இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு  அனுமதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவை எல்லாம் இலங்கையில் ஒரு அரசியல் சூறாவளியை உருவாக்கக்கூடிய காரணிகளாக இவை அமைந்து வருகின்றது.

தொடர்ச்சியாக பல்வேறு பட்ட தரப்பட்ட தரப்புகளிலிருந்தும் இவை கூறப்பட்டு முன்வக்கப்பட்டு வந்த பொழுதும் கூட இலங்கை அரசாங்கம் தனது வளங்களை பெருக்கிக்கொள்வதற்கு பதிலாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு மூலோபாய புள்ளியில் இலங்கை தேவை என்பதி அமைந்திருப்பதை காரணமாக கொண்டு அது இந்தியாவிடமும் சீனாவிடமும்  தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முயல்கிறதே தவிர ஆனால் இரு தரப்பையும் அது ஏமாற்றி தான் வருகின்றது.

அந்த ஏமாற்றமென்பது இலங்கை தனது இராஜத ந்தந்திரமாக கருதுவது எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒருதரப்பில் இந்திய அரசாங்கம் ஏமாற்றப்படுகிறது மறுதரப்பில் சீனா அரசாங்கம் என்பது ஏமாறப்படுகிறது.

இவை மாத்திரமல்லாமல் சீனாவுக்கு மிகப்பெருமளவில் இலங்கையில் தனது நடவடிக்கைக்கு இடம் கொடுத்து வருவதென்பதுவும் ஒரு ஏற்புடைய விஷயமாக இல்லை. இலங்கை  என்பது ஒரு கடலால் சூழப்பட்ட ஒரு நாடு. இலங்கை  மீனை ஏற்றுமதி செய்ய வேண்டிய ஒரு நாடு. அவ்வாறான  ஒரு சூழ்நிலை இருக்கையில் அண்மையில் சீனாவிலிருந்து இலங்கைக்கு மீன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. 140 கோடி மக்களைக்கொண்ட சீனா தனக்கு தேவையான மீன்வளத்தை பிடிப்பது மாத்திரமல்லாமல் மீனை ஏற்றுமதி செய்கிற ஒரு நிலையில் இருக்கிறது.

ஆனால் 2அரைகோடி  சனம் இல்லாத இலங்கையில் சுற்றி வர கடலை வைத்துக்கொண்டு 100 கிலோமீற்றர் கடல் அளவுக்கான எல்லைகளை வைத்துக்கொண்டு இலங்கை வந்து சீனாவிலிருந்து மீனை இறக்குமதி செய்வது ஒரு கேலிக்குரிய நகைப்புக்குரிய ஒரு விடயமாக இருக்கிறது. ஆகவே இந்த இறக்குமதி என்பது இலங்கையில் இருக்கிற மீனவர்களை எவ்வளவு தூரம் பாதிக்கப் போகிறது என்பதுவும் மிக மிக முக்கியமான விடயம். அது வடக்கு கிழக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத இலங்கையிலும் மீன்பிடி என்பது பாதிக்கப்படும். அமைச்சர் சொல்லலாம் இலங்கையில்  பிடிபடாத மீன்களை அங்கிருந்து இறக்குமதி செய்கிறோம் என்று.

எங்களுக்கு இந்த நாட்டில் பல்வேறுபட்ட வகையான நூற்றுக்கணக்கான மீன்கள் இங்கே சுற்றி வருகின்ற கடலில்  இருக்கின்றது. ஆகவே அந்த மீன்கள் இலங்கை மக்களுக்கு தாராளமாக போதுமானது. அவை ஏற்றுமதி செய்வதற்கு மேலதிகமாகவே இருக்கின்றது. ஆகவே இவற்றை எவ்வாறு செய்வது என்பதை விடுத்து   மீனை இறக்குமதி செய்வதில் அமைச்சர் அதற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதும் என்னும் சொல்ல போனால் எந்த விதமான வரையறைகள், எந்த விதமான வரிகள் இவை எல்லாம் கூட வெளிப்படையாக யாருக்கும் தெரியாது. எவ்வளவு தூரம் இதற்கான வரி விதிக்கப்படுகிறது? சந்தையில் மீன் என்ன விலை விற்கப்படப்போக்கிறது?  போன்ற எந்த விஷயங்களும் தெரியாது. ஆகவே வெளிப்படைத்தன்மை அற்று மிக இரகசியமான முறையில் இந்த மீனை இறக்குமதி செய்வது போகின்ற நிலைமைகள் தான் தோற்று விக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இதனால்  இலாபமடையப்போகிறது வெறுமனே அமைச்சராகத்தான் இருக்கப்போவது தவிர இங்கிருக்கூடிய  மீனவர்கள் அல்ல. குறிப்பாக சொல்வதென்றால் வட கிழக்கு மீனவர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கட்லட்டை பண்ணை என்ற வகையிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது என்பது  மீனவர்களுக்கு இன்னும் பாரிய அழிவுகளை உருவாக்கும்.ஆகவே அரசாங்கமும் சரி அமைச்சரும் சரி இவற்றை ஒரு மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தடைகளால் அவமானமாக உள்ளது – சரத் வீரசேகர

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என   சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல் இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றது.

இலங்கையில்  தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனீவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவை தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.

சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் நவம்பர் 20 மீள ஆரம்பம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு 30 ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

திங்கட்கிழமை (30) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத்தொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த மனித புதைகுழி பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதிமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.

30 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

2024 பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனாதிபதி ரணில்

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அத்துடன், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரவு – செலவுத் திட்டத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் நேற்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சஜித்தால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது – ஹரின்

“சஜித் பிரேமதாஸவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. இதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.”

– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வாக்குகளால் வெற்றியடைவார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின்  உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள்.” – என்றார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை – பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

அவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், தற்போது சுயேச்சையாகச் செயற்படும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இருபுறமும் கால்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பஸில் ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்,நாடாளுமன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க முடியாது – டியூ குணசேகர

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தகவல்கள் வெளியாகும் நிலையில், இவ்விரு தேர்தல்களையும் ஒத்திவைக்க முடியாது என்று இலங்கை கம்யூனிஸ் கட்சி தலைவரான டியூ குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசமைப்பில் இடமுள்ளது. ஆனால், அதனை ஒத்திவைப்பதற்கு இடமில்லை. அதேபோல் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கும் அரசமைப்பில் இடமில்லை. ஆளுந்தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடினால்கூட அதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றே நம்புகின்றேன்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அரசமைப்புக்கு அப்பால் சென்று, சிற்சில சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிகாரம் இல்லை.” – என்றார்.

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கத் தயார் – தயாசிறி ஜயசேகர

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கத் தான் தயார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், நாட்டுக்குப் புதிய அரசியல் இயக்கமொன்றின் தேவை எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியலில் எந்த ஏமாற்றமும் தனக்கு இல்லை என்றும், தான் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் போது சில பிரச்சினைகளை மாத்திரம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், தனது போராட்டம் கைவிடப்படவில்லை என்றும், தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலே இருக்கின்றார் என்றும் தயாசிறி எம்.பி. தெரிவித்தார்.

சில கட்சிகள் தன்னுடன் பேச்சில் ஈடுப்பட்ட போதும் தான் அந்தக் கட்சிகளில் எதிலும் இணைவதற்குத் தயார் இல்லை என்றும், புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Posted in Uncategorized

யாழ்.பல்கலைக்கழக சிற்றூழியர் வெற்றிடத்திற்கு தெற்கை சேர்ந்த 7 பேர் நியமனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் இவர்களுக்கான நேர்காணல் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நடாத்தி முடிக்குமாறு பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்தும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பலர் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பத்திருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.