பொதுஜன பெரமுன பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் வழங்காத அரசாங்கத்தில் நீடிக்கோம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க கடுமையாக உழைத்த உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதுவரை வழங்கப்படாத அமைச்சரவை அமைச்சர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் அண்மையில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் நடத்தையை கடுமையாக விமர்சித்ததுடன், தமது கட்சித் தலைவர் அரச தலைவர் என்பதாலேயே அவரது செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முயற்சித்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமையை அரசாங்கம் மதிக்கவில்லை ; பவ்ரல் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியும். என்றாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட ஐந்தாயிரம் இலட்சம் ரூபா மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ ஆளும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இருந்தபோதும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.

அத்துடன் அரசியலமைப்புக்கு அமைய நடத்தப்படவேண்டிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிப்பது தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்காகவா என அரசாங்கத்திடம் கேட்கிறோம். அதேபோன்று முழுமையாக தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகுவதாக இருந்தால் எல்லை நிர்ணய நடவடிக்கையை ஏன் செய்ய வேண்டும் என கேட்கிறோம்.

மேலும் அரசாங்கம் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கதைத்து வருகிறது. அப்படியானால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த இல்லாத பணம் ஜனாதிபதி தேர்தலை நடத்த எவ்வாறு கிடைக்கிறது?. நாட்டு மக்களின் பணத்தை தங்களுக்கு நன்மையாகும் வகையில் தேர்தலுக்காக நினைத்த பிரகாரம் செலவிட முடியுமா? அதனால் அரசியல் அதிகாரம் மற்றும் தங்களின் நன்மைக்காக மாத்திரம் அரசாங்கம் செயற்பட்டு வருவது இன்று தெளிவாக தெரிகிறது.

எனவே தேர்தல் நடத்துவது நாடொன்றின் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்து கொடுப்பதாகும். என்றாலும் அரசாங்கம் தற்போது அந்த உரிமை மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்யும் மக்கள் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது எனறார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அஜித் ரோஹன இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவும் அங்கம் வகிக்கின்றார்.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தெரியவந்த சந்தேகநபர் தொடர்பான அறிக்கையை, எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவில் வழங்குமாறு தெரிவித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அண்மித்த நாட்களிலும் தமது சொத்துகள், வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 70 பேரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனா எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க கதிர்காமப் பாதயாத்திரை காட்டுப்பாதை எதிர்வரும் 27ம் திகதி வரை திறந்து வைத்திருப்பதற்கு ஆளுநர் உத்தரவு

2ம் திகதி திறக்கப்பட்ட உகந்தை வழி கதிர்காமப் பாதயாத்திரை காட்டுப்பாதை எதிர்வரும் 25ம் திகதியுடன் மூடப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்களும் பாதயாத்திரையை மேற்கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காட்டுப்பாதையை எதிர்வரும் 27ம் திகதி வரை திறந்து வைத்திருப்பதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்யை தினம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவிக்கையில்,நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட செயலகத்திலே கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து சில விடயங்கள் சம்மந்தமாகப் பேசியிருந்தோம். அதிலே முக்கியமாக கதிர்காம பாதயாத்திரை உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து காட்டுவழிப்பாதை நேற்றைய தினம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.

எங்களுடன் இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அரச அதிபர், லாகுகல பிரதேச செயலாளர், கிழக்கு மாகண பிரதம செயலாளர், கிழக்கு மாகண உள்ளூராட்சி ஆணையாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோத்தர்கள், உகந்தை முருகன் ஆலய தலைவர் உள்ளிட்ட இவ்விடயத்துடன் தொடர்பு பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாத்திரிகர்களின் நன்மை கருதி, அவர்களுக்குச் சாதகமாக இங்கு ஆளுநரின் தலைமையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உகந்தையில் இருந்து கதிர்காமம் வரையான காட்டுப்பாதை சுமார் 56 மைல்கள் இருக்கும். இதனூடாக யாத்திரிகர்கள் செல்லும் போது பல அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றார்கள். அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக குடிநீர் வழங்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும், நான்கு மைல்களுக்கு இடையிடையே தற்காலிக மலசல கூடங்கள் அமைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு இரவுகளிலும் தங்குமிடங்களுக்கு அருகே பெண்கள் உடைமாற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட வேண்டும் போன்ற முடிவுகள் இங்கே எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் இந்தப் பாதையாத்திரையுடன் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மேலாக மட்டக்களப்பிலே மிகப் பிரபல்யமான களுதாவளை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட சில கோவில்களின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெற இருக்கின்றது. பாத யாத்திரிகர்களுக்காக 12ம் திகதி திறக்கப்பட்ட காட்டுப் பாதை எதிர்வரும் 25ம் திகதியுடன் மூடுவதாக ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பின் ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தின் பின்னர் யாத்திரை செல்ல விரும்பும் அடியவர்களுக்கு இவ்விடயம் சாத்தியமற்றதாகக் கருதி திறக்கப்பட்ட காட்டுப்பாதையை மேலும் இரண்டு நாட்கள் நீடித்து எதிர்வரும் 27ம் திகதி மூடுமாறு இதன்போது என்னால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது.

அந்த விடயத்தை முறையாகப் பரிசீலித்து அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எனவே மேற்குறிப்பிட்ட ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்கள் கூட கதிர்காமம் பாதயாத்திரையை முன்னெடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் பண்ணப்பட்டிருக்கின்றது.

இவ்வேளையில் இக்காட்டுவழிப்பாதை திறந்திருக்கும் ஒவ்வொரு நாட்களிலும் தங்களுக்கு சுமார் ஒன்றில் இருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவாகுவதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அதில் ஒரு பங்கை நாங்கள் பொறுப்பெடுத்து அப்பாதையை மூடும் நாட்களை இரண்டு நாட்கள் பிற்போட்டுள்ளோம்.

அரச அதிகாரிகள் தங்களின் வேலை பழுக்கள் காரணமாக இந்த விடயத்திற்கு பின்டித்த நேரத்திலே ஆளுநர் அவர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி கட்டாயம் 27ம் திகதி சவவரை காட்டுப் பாதை திறந்திருக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எனவே பாதயாத்திரை செல்லும் அடியவர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை காட்டுப்பாதையூடாக யாத்திரையைத் தொடரலாம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் என்று தெரிவித்தார்.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேம்பட்டு வருவதாக ஐ. நா. தெரிவிப்பு

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமும் இணைந்து மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கையின்படி, இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் அல்லது சனத்தொகையில் 17 வீதமானவர்கள் மிதமான நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை கடந்த ஆண்டு ஜூன்/ஜூலையில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.

இதேவேளை கிட்டத்தட்ட 10,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், இது கடந்த ஆண்டு 66,000 பேராக இருந்தது.

உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம் சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது என ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. இது உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.

தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்ட சமூகங்களுக்குள்ளும், சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களை நம்பியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை காணப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2, 474 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும் – பேராயர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் வெளிவரும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழாவின் விசேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் யாவர்? எவ்வாறு சம்பவித்தது என்று முறையான விசாரணைகளை நடத்தினார்களா? அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்தார்களா? சட்டம் எங்கே? நீதி எங்கே? இன்று வரையில் எதற்கும் பதில் இல்லை.
எங்களை ஏமாற்றலாம் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்.

நாங்கள் ஏமாறுவதில்லை. நீங்கள் தான் ஒருநாளில் ஏமாறுவீர்கள். தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் உயிர்களை காவுகொள்ள அனுமதி வழங்கியவர்கள், தைரியத்தை வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்று உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

ஆனால் அதற்கான பலன் உங்களை தேடி வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூடிய விரைவில் நீங்களே உங்களை காட்டிக்கொடுத்து உங்களுக்கூடாகவே அந்;த உண்மைகள் அனைத்தும் வெளிவரும்.
இந்த தேவாலயத்தில் மிகப்பெரிய உற்சவம் ஒன்றை நடத்துவதற்கு அந்த நாள் வரும் வரை காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குவதான கடிதம் மீளப்பெறப்பட்டது

பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் அதிகாரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சமர்ப்பணங்களை முன்வைத்து, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்பட்டதாக நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் புதிய கடிதம் ஒன்றை வெளியிடுவதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக அரசாங்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மான் காசிம், இந்த மனுவை தாக்கல் செய்த பின்னரே குறித்த கடிதம் நீக்கப்பட்டதாகவும், எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, அந்த மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி மீள அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

எவ்வாறாயினும், சட்டங்களை தனித்தனியாக திருத்துவதற்கு பதிலாக, புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

சீன கடலட்டை பண்ணைகள்: மோடியிடம் உதவிகோரும் வடக்கு கடற்தொழிலாளர்கள்!

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து இன்று (13) காலை கலந்துரையாடினர்.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர்.

டொலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.

கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கினர்.