மக்களின் உரிமைகளை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் நாடுகளில் இலங்கை ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை

மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஒப்புதல்

இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சூரிய சக்தி, காற்றாலை திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

தேர்தலுக்கான நிதியை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு

2023 உள்ளூராட்சி தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக இந்த வாரம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உறுப்பினர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி கூடுவார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

கொழும்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

இந்த சட்டமூலம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு மிகவும் ஒத்ததாக இருப்பதாக சட்டத்தரணி சுனில் வதகல தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பை மீறுகிறது என்பதோடு மக்கள் அனுபவிக்கும் சிவில் உரிமைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இந்த சட்டமூலத்தினால் பாதுகாக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் நாவலர் மண்டபத்தை கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர்

யாழ் நல்லூர் நாவலர் மண்டபத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி புனிதத் தன்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்ப்பாண மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் தொடர்வதற்கு ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது

வெடுக்குநாறி மலையில் மீண்டும் ஆதிசிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் – சபா குகதாஸ்

கச்சதீவில் புத்த விகாரை என்ற விடயம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசங்களை தங்களது ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவதற்கு கையில் எடுத்திருக்கின்ற புத்த பெருமானுடைய சிலையை வைத்துக்கொண்டு விகாரைகளை அமைத்து அதன் மூலமாக ஒரு பாரிய நிகழ்ச்சித் திட்டத்தை நகர்த்திச் செல்கின்றார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இருந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆட்சியாளர்கள் இன நல்லிணக்கம் மத நல்லிணக்கம் என கூறிக்கொண்டு இப்படியான சட்டவிரோதமான விகாரைகளை அமைத்தல், புத்தர் சிலைகளை வைத்தல் என்பது உண்மையிலேயே இந்த நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற வகையில் பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் மத்திய மக்களின் கலாச்சாரங்கள் மதம் உள்ளிட்ட விடயங்களை மதிக்காது அவற்றினுடைய வரலாறுகளை மாற்றி அமைக்கின்ற வகையிலும் அவற்றினுடைய புனித தன்மைகளை செயல் இழக்க செய்வதாகத்தான் இவர்களுடைய செயற்பாடுகள் முன்னெடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கச்சதீவில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் புத்தக விகாரை என்பது உண்மையிலேயே ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த ஆட்சியாளர்கள் மதத்தின் பெயரால் ஏனைய இனங்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துகின்றனர்.

இதற்கான பூரண ஆதரவை இந்த அரசு இயந்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்த அரசு இயந்திரம் என்பது நாட்டில் உள்ள அத்தனை மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு இயந்திரம் பெரும்பான்மை இனத்தின் நலன் சார்ந்து செயற்பாடுகிறது.

இது உண்மையிலேயே ஒரு மனித உரிமை மீறல், அடிப்படை ஜனநாயக உரிமை மீறல். இதை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கச்சதீவு என்பது இந்திய பூகோள அரசியலில் ஒரு முக்கிய இடமாக விளங்குகின்றது. இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்ற விடயம் இலங்கைக்கு இந்தியாக்கும் இடையிலான ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்க கூடியதாகவும் அந்த நாடுகளின் உறவுகளை சீண்டுகின்ற விதமாகவும் அமைகிறது.

அடுத்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் தகர்த்தெறியப்பட்டு அங்கிருந்த சூலங்களும் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

இது சைவ மக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகும். யாரும் உள்ளே செல்ல முடியாது என்று நீதிமன்றம் தடையுத்தரவை போட்டுள்ள நிலையில் இவ்வாறு நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் மீது சந்தேகம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் மீது சந்தேகம்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்,

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம். மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றோம் என்றனர்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை பெளத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ் பல்கலையில் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மண்திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, வெடுக்குநாரி மலை கச்சதீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா, இராணுவமே வெளியேறு கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

வட,கிழக்கு மாகாணங்களை பெளத்த மயமாக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது

கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு வழிபாட்டுத் தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.