பயங்கரவாத தடைச்ச சட்டம் திருத்தியமைக்கப்படும் – நீதியமைச்சர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தில், அரசியல் நோக்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒருவரை தடுத்து வைப்பதற்கான அதிகாரம் இல்லாது ஒழிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சட்டத்தின் கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ சட்டத்தை தவறாக பயன்படுத்த அல்லது சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயற்படவோ இடமளிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் ஒருவரை நீண்டகாலம் தடுத்துவைக்கும் வாய்ப்பும், வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறையும் மாற்றி அமைக்கப்படும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேநபர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களின் விளைவாகவே அவர்கள் வாக்குமூலம் வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டிச்சேரி – KKS க்கான படகு சேவையை விரைந்து முடிக்க அரசாங்கம் திட்டம்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வடக்கு மற்றும் பாண்டிச்சேரிக்கான படகு சேவையைத் தொடங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சுங்கம் மற்றும் குடிவரவுத் துறையினருக்கான வசதிகளும் மார்ச் மாத இறுதிக்குள் ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பயணிகளை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கும், புறப்படுவதற்குமான சேவையை வழங்குவதற்கு படகுகள் உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவின் பல இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகள் அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கைப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்கின்றது – ஐ.எம்.எப்.

அதிக வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக இலங்கை பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இலங்கையின் கடன் தொடர்பாக, பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் இது என்றும் முறையான செயல்முறைகள் தேவை என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஜி20 உச்சிமாநாட்டில் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கடன் கட்டமைப்பை வலுப்படுத்த மற்றும் கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா- உக்ரைன் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தீர்வைக் கண்டறிய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நிலாவரை பகுதியில் புதிதாக முளைத்த புத்தர்சிலை வலி – கிழக்கு பிரதேச சபையின் எதிர்ப்பால் அகற்றப்பட்டது

யாழ்ப்பாணம் –அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டிருந்தது.

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருப்பதை அவதானித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உப தவிசாளர் மகேந்திரலிங்கம் கபிலன் தலைமையிலான அணியினர் தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு குறித்த புத்தர் சிலையை குறித்த பகுதியிலிருந்து அகற்றியிருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர்.

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருந்தது பரபரப்பை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை ரெலோ தலைவர் செல்வம் எம்.பி நிராகரித்தார்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கிய செயன்முறையில், நம்பிக்கை கொள்ளத்தக்க எந்தவிதமான உடனடி நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. காணி சுவீகரிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம, மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என எதையும் அரசாங்கம் செய்யாத சூழலில், அரசை காப்பாற்றும் விதமான எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டோம் என செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்த சட்டம் தேவையில்லாத ஒன்று – மகிந்த ராஜபக்ஷ

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் செய்தியாளர்களை மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார். இதன்போது, அவரிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மகிந்த, அவ்வாறான (13ஆவது திருத்தம்) ஒரு சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும் சிறீலங்கா பொதுஜன பெரமுன அதே கருத்தை கொண்டி ருக்கவில்லை – இது (13) தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் – என்று கூறினார்.

மக்களின் உரிமைகளை நிலைநாட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். மக்களின் தேவைகளை தீர்மானிக்கும் ஒரேவழி தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமை. எவ்வாறாயினும் அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது.

எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கிறது. நாம் வெற்றிபெறுவோம் என்பது தெரியும். இதனால்தான் நான் ஜனாதி பதியாக இருந்த காலத்தில் ஒரு தேர்தலையும் தாமதப்படுத்தவில்லை. தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் தேர்தலும் நிச்சயமற்று உள்ளது – என்றும் கூறினார்

தமிழரின் இதய பூமி தராசு சின்னத்திற்கு தாரைவார்ப்பு- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

தமிழரின் இதய பூமியான முல்லைத்தீவு மாவட்டம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விலை மதிப்பிட முடியாத தியாகத்தை கொடுத்த வரலாற்றுத்  தியாக பூமி. தற்போது பதவி வெறி பிடித்த சுயலாபக்  கட்சியான தமிழ் அரசுக் கட்சியினால்  முஸ்லீம் காங்கிரசின்  தராசுச் சின்னத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சு பதவி  எப்படி சரியான பேரப்பலம் இல்லாமல் சம்பந்தனால்  கொடுக்கப்பட்டதோ அதை விட மேலாக எந்தவித உரித்தும் இல்லாத தராசு சின்னத்தில் 21 அடிமைகளை போட்டியிட வைப்பதற்கு  கிழக்கு மாகாணத்தின் பல அதிகார உரிமைகளை தாரை வார்த்துள்ளது தமிழ் அரச்க் கட்சி .

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறையில் தமிழர் பிரதிநிதி இல்லாமல் போவதற்கும் மட்டக்களப்பு  மாவட்டத்தில் இரண்டு அரச பிரதிநிதிகளும் வெல்வதற்கும் காரணம்  கடந்த கிழக்கு மாகாணசபையில்  தமிழ் அரசுக் கட்சி ஆட்சிக்காலம் முழுவதும் முஸ்லிம் ஒரு வரை முதலமைச்சராக நியமித்தமையும் அதனால் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுமே காரணமாகும்.

கடந்த காலத்தில் கிழக்கில் ஏற்பட்ட நிலை போன்று எதிர்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டமும் அரச சக்திகளுக்கு இரையாகும் அவலநிலை உருவாக உள்ளது  இதனால் தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து தமிழ்த் தேசிய நீக்கத்தை முன்னேடுக்கும் தரப்புக்களையும் முகவர்களையும் விரட்ட தயாராக வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி, எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, திட்டமிட்டபடி மார்ச் 09ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், இந்த தகவல் வந்துள்ளது.

 

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை; கிளிநொச்சியில் சஜித்

அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். வீடு, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பெற்று கொடுக்கும் பணியை நாங்கள் முன்னெடுப்போம்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கம் பெற்று மூன்று ஆண்டுகள். இந்த கட்சிக்கு 3 வயது. ஆனாலும், நாங்கள் பல்வேறு திட்டங்களை மக்களிற்கு பெற்று  கொடுத்துள்ளோம். மாணவர்களின் நலன் கருதி 70 பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கியுள்ளோம். வைத்தியசாலைகளிற்கு வைத்திய உபகரணங்களையும், சிமாட்  வகுப்பறைகளையும் மாணவர்களிற்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளனர். இனப்பிரச்சினையாலும், மத பிரச்சினையாலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இதற்கு மேல் நாட்டை கொள்ளையடித்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கும் மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இன்றைய அரசு மக்களின் மனதை அறிந்து செயற்படாத அரசாங்க உள்ளது. இது மக்களிற்கான அரசு அல்ல. அதனால்தான் பொருட்களின் விலையை அதிகரித்தும்,  எரிவாயுவின் விலையையும் அதிகரித்துள்ளது. மேலாக வரியையும் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியானது மக்களை துன்பத்துக்குள்ளாக்கின ஆட்சி.

அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறான நிலையில் கரைச்சி, பச்சிலைப் பள்ளி பிரதேச சபைகளின் வெற்றிக்காக இன்று நாங்கள் கூடியுள்ளோம்.

என்னால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்ட பணிகள் கடந்த ஆட்சியாளர்களால் தடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சியமைத்த பின்னர் அதனை நான் தொடருவேன். அதற்காக எமக்கு ஆதரவினை தாருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவுடனான இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன.

இதன்போதே, இருதரப்பு பயிற்சிகளை மேம்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.