கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத் தலைவர் உயிரிழப்பு

பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் செயலாளர் சந்திரா சாப்டரின் புதல்வரும் ஜனசக்தி குழுமத்தின் தலைவருமான தினேஷ் ஷாப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறக்கும் போது அவருக்கு 51 வயது.

நேற்று பிற்பகல் குருந்துவத்தை மல் வீதி வீட்டில் இருந்து பல கோடி ரூபா கடனாகப் பெற்றுக் கொடுக்கவுள்ள ஒருவரை சந்திக்கச் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு குறித்த நபர் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவி சிறிது நேரத்தில் அவரை அழைத்ததாகவும், தலைவரின் தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் பொரளை மயான அருகில் இருப்பதாக மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு சமிஞ்ஞை கிடைத்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரின் மனைவி, நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில், காரின் சாரதி இருக்கையில் குறித்த நபரின் கைகள் கப்பியினால் கட்டப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாகவும், கழுத்து ஒரு வயரினால் இறுக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரி மயானத்தில் பணிபுரியும் தொழிலாளியின் உதவியுடன் தலைவரின் கைகளிலும் கழுத்திலும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கம்பிகளை அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

தலைவரின் காரை விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் குறித்த நிறுவனத்தில் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்று முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைவரை கடத்திச் சென்ற சிலர் அவரை மயானத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரளை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.ஜே.எம்.ஆர். சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Posted in Uncategorized

வட,கிழக்கில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகுளிருடன் கூடிய காலநிலையால், வடக்கு, கிழக்கில் பெரும் தொகையிலான கால்நடைகள் மரணமடைந்தன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டுமென வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறையில் உள்ள 31 முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் – சம்பிக்க

பிரபாகரனுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகச் செயற்பட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள்.

எனவே,  தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தெரிவிக்கும் 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, சிறைச்சாலையில் உள்ள இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவ த்தின் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பபட்டுள்ளது.

மேலும், நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியால் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் அந்த இயக்கத்துக்கு தலைமை ஏற்றிருந்த குமரன் பத்மநாதன் வௌியில் இருக்கிறார். ராமன், நகுல், கருணா  போன்றவர்களும் வௌியில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் சிறைச்சாலையில் உள்ள 31 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

அதேபோல் இராணுவத்தினரையும் விடுதலை செய்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மேலும் அரசியலமைப்பு தொடர்பில் இதன்போது பேசப்பட்டது. அது தொடர்பில் பாராளுமன்றத்துக்குள்ளேயே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொருளாதார பிரச்சினையால் கஸ்டத்தில் உள்ள தமிழர்கள் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார்கள். கஸ்டத்தில் உள்ள சிங்களவர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள். பணமுள்ளவர்கள் விமானங்கள் மூலம்  வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள். எனவே, பொருளாதாரப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும்,  தேர்தல் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. மீண்டும் ஜனவரி மாதம் சர்வக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றார்.

இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

இனப்பிரச்னை தீர்ந்தால் பொருளாதார நெருக்கடி நீங்கும் – அனுர பிரியதர்ஷன யாப்பா

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டுமாயின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு எட்டப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காண்பது அவசியமாகும். இனப்பிரச்னைக்கு தீர்வு காண குறுகிய கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.

அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய ரீதியான பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியமாகும். இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண இணக்கப்பாடு எட்டப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் அரசியலமைப்பினை அடிப்படையாக கொண்டு அரசியல் தீர்வு விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும். தேசிய பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவேண்டிய தருணம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே சகல தரப்பினரது ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக கருதி தீர்வு காண இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அடிப்படை பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.

மாகாணத் தேர்தலை பிற்போட்டவர்களே 13ஐ பற்றி பேசுவது வேடிக்கைக்குரியது – நாமல் ராஜபக்ச

தேர்தலைக் காலந்தாழ்த்த முயற்சித்தவர்கள் தற்போது 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மின்சாரம், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறைத்திருந்தாலும், போராட்டம் ஊடாக மக்கள் அவரை விரட்டியடித்தார்கள் எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் நாட்டில் தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.

அன்று மாகாணசபைத் தேர்தலைக் காலந்தாழ்த்துவதற்காக செயற்பட்டவர்கள் இன்று அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது. 13ஆவது திருத்தச் சட்டம், தேர்தல்கள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இருந்தால் கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்பு தேர்தலைக் காலந்தாழ்த்தி இருக்க மாட்டார்கள். நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான நீண்டக் கலந்துரை யாடல்களை நடத்தி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். என்றார்

இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது வடக்குக்கும் தெற்குக்கும் நல்லது – அலி சப்ரி

இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கலந்துரையாடல்களும் இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கு நாம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம் பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறி முறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக் காட்டியுள்ளன.

இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்த போதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி கூறியதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார். இதற்கு முன்னைய இருந்த ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இப்பொறி முறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சில படைப் பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். எவ்வாறானாலும் அது போன்றதொரு ஒழுங்கு முறையை இதுவரை எங்களால் நடை முறைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம்.

இந்தக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம் – என்றார்.

தமிழர்களின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

திருக்கோணேஸ்வரத்தில் இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார். இதைப்போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்க ளுக்கு இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் கடந்த 13.12.2022 அன்று காசியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில், மரபுரிமைகளைப் பாதுகாக்கும் கடமைகளை இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இந்தியா செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 12 ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த இலங்கையின் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தையும் தாங்கள் மீளக் கட்டியெழுப்பி புனர்நிர்மாணம் செய்திருப்பதாகவும் அதன் மூலம் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலநூறு கோடி ரூபாய்களை செலவு செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கேதீஸ்வரம் சிவாலயத்தை மீட்டெடுத்து புனர் நிர்மாணம் செய்தமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன் எமது நன்றிகளையும் தெரிவித் துக்கொள்கின்றோம்.

இலங்கை திருநாடு இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமி என அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈஸ்வரங்கள் (சிவஸ்தலங்கள்) இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர். அவ்வாறான ஒரு நாட்டில், சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டு, புதிய புதிய பௌத்த கோயில்களை உருவாக்குகிற ஒரு வேலையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது.

திருக்கேதீஸ்வரத்திற்கு இணையாக பாடல் பெற்றுத் திகழும் திருக்கோணேஸ்வரத்தில்கூட இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகியவற்றின் அடையாளங்களை எப்படி இலங்கை அரசு மாற்ற முற்படுகிறதோ அவ்வாறே ஏனைய இடங்களும் மாற்றப்படும்.

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொன்மைமிக்க சைவ ஆலயங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதன் ஊடாகவே நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்ட அவர்களது மரபுரிமையும் பாதுகாக்கப்படும். ஆகவே இந்திய அரசாங்கம் இவற்றைக் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களின் மரபுரிமைகளை காலாதி காலத்திற்குப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவை பதவியிலிருந்து விரட்டி ஜனாதிபதியாவதற்கு பஸில் திட்டமிட்டார் – உதய கம்மன்பில

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அந்த நெருக்கடியை மேலும் பெரிதாக்கவே பஸில் ராஜபக்ஷ திட்டம் தீட்டினார். கோட்டாபயவை விரட்டி பாராளுமன்றம் ஊடாக தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயல்பட்டார்” – என்று பிவித்திரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், “கோட்டாபயவின் ஆட்சியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையாமல் தடுப்பதற்குப் போதுமான வாய்ப்பு இருந்தது. ஆனால், பஸில் அதைச் செய்யவில்லை.

நிலைமையைத் தனக்கு சாதகமாக பயன் படுத்துவதற்கு அவர் திட்டம் தீட்டினார். பொருளாதார நெருக்கடி உக்கிர மடைந்து கோட்டாபய பதவியை விட்டு ஓடினால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாகும் திட்டம் ஒன்றை பஸில் வகுத்திருந்தார்.

அதற்காவே இரசாயன பசளைக்கான தடைக்கு அவர் அனுமதி வழங்கினார். இரசாயனப் பசளைக்கான தடை எந்தளவு விளைவை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட பஸில் அதற்கு அனுமதி வழங்கினார். அதேபோல், எரிபொருள் நெருக்கடி வந்தபோது 14 மணி நேர மின்வெட்டுக்கு பஸில் அனுமதி வழங்கினார்.

இவை அனைத்தும் நாட்டில் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும். அதனூடாகக் கோட்டாபய பதவியை விட்டு ஓடுவார் என்று பஸில் அறிந்து வைத்திருந்தார். அப்படி நடந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாவது தான் பஸிலின் திட்டம். ஆனால், இடையில் வந்து ரணில் விக்கிரமசிங்க புகுந்து கொண்டதால் எல்லாம் பிழைத்துவிட் டது” – என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள் – சஜித்

அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார்.

பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும் உடன்பாடில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வடக்கு-கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.