அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம், அராலி பகுதி கடலில் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். தற்கால பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

எமது கடலில் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

எங்களது கடல் சிறிய கடல். இந்தக் கடலில் பருவகாலத்திற்கு தான் நாங்கள் சிறப்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மற்றைய வேளைகளில் சாதாரண அளவிலேயே எமது மீன்பிடி நடவடிக்கைகள் அமைகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் அட்டைப் பண்ணைகள் இங்கே அமைத்தால் கடலில் உள்ள வளங்கள் அழியும் சந்தர்ப்பம் உள்ளது.

இறால், நண்டு, மீன் இனங்கள் போன்றன கடற்கரையோரங்களில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிலையில் கரையோரங்களில் அட்டைப் பண்ணைகளை நிறுவுவதால் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் நீரோட்டத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தயவுசெய்து எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள். மீனவர்களை வாழ விடுங்கள்.

தம்பாட்டி, பூநகரி போன்ற கடல்கள் உட்பட பல கடற்பகுதிகளில் அட்டைப் பண்ணைகள் அமைத்ததனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் பல நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களது குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை எண்ணி வருந்துகின்றோம். அவர்களுக்கு எங்களது ஆதரவுகளை தெரிவிக்கின்றோம்.

எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது. எனவே உரிய தரப்பினர் மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றனர்.

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என விசாரிக்கப்பட வேண்டும் – ஹக்கீம்

வேண்டுமென்றே வெறுப்புணர்வைத் தூண்டி அதன் மூலமாக எங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோரி நிற்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் சனிக்கிழமை (நவ.26) தவிசாளர் விருது வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

ஏப்ரல் 21 இன் பயங்கவாதக் கும்பலைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை. நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை. அந்தச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு. அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்திற்கான போராட்டமுமல்ல. இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்றது. இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், முள்ளிவாய்க்கால் சம்பவம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு நடந்த அநியாயங்களைக் கண்டறிவதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்துழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

அதேநேரம் அடுத்து வரும் அரசியல் என்பது வித்தியாசமாக நடக்கப் போகின்றது. அந்த வித்தியாசமான அரசியலில் முஸ்லிம் சமூகமாக இருக்கட்டும் தமிழ் சமூகமாக இருக்கட்டும் நாங்கள் எல்லோரும் மிகக் கவனமாகக் காய்நகர்த்தி சரியான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். என்னதான் பேசினாலும் துரோகச் செயல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவு காண முடியாது.

துரோகத்தைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தைக் கடத்துவதல்ல நோக்கம். தெற்கிலுள்ள சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மைச் சமூகத்தினரின் கோரிக்கைகள் நியாயமானது என்று நம்புகின்ற அளவக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்து கொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இதுவென நான் நம்புகின்றேன்” என்றார்.

அதிகார பகிர்வுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் மட்டத்தில் முன்னெடுப்பேன் – சரத் வீரசேகர

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதிகார பகிர்வு சாத்தியமற்றது என்பதை உறுதியாக குறிப்பிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சமர் வீரசேகர தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிம் அரசியல் தலைமைகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்களே தவிர,தமிழ் மக்களின் அடிப்படை பொருளாதார பாதிப்பு குறித்து அவதானம் செலுத்தவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் கோரவில்லை,இந்தியாவின் அழுத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஊரடங்கு சட்டத்தை பிரயோகித்து 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்டன.ஆனால் வழங்கப்பட்ட அரசியல் உரிமைகளை தமிழ் தலைமைகள் பாதுகாத்துக் கொள்ளவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடும் வகையில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு எதிராக செயற்படவில்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளினால் அவர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாமல் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.அரசியல் உரிமை என குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கான உண்மையான அபிவிருத்தியை இவர்கள் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள்.

வடக்கு மாகாண இளைஞர்களின் தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அரசியல் தீர்வுக்கான மதிப்பு இல்லாமல் போகும் என குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பிற நாடுகளில் உயர் கல்வியை கற்கிறார்கள்.சுகபோகமாக வாழ்கிறார்கள்.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளார்கள்.இதுவே உண்மை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளோம்.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.அதிகார பகிர்வு என்ற சொற்பதத்தின் ஊடாக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மலினப்படுத்த முடியாது.

அதிகார பகிர்வு சாத்தியமற்றது,மாவட்டங்களுக்கான அதிகாரங்களை விஸ்தரிக்கலாம் .ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.அதிகார பகிர்வு என்ற இலக்கை அடைவதற்காக பொருளாதார நெருக்கடி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தப்பட்டு,அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தற்போது செயற்பாட்டில் உள்ள போது நாட்டு மக்கள் வழங்கிய ஆணை எவ்வாறு வலுவற்றதாகும்,ஆகவே மக்கள் வழங்கிய ஆணையை மதித்து அரச தலைவர்கள் செயற்பட வேண்டும்.

அதிகார பகிர்வுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் மட்டத்தில் முன்னெடுப்பேன்.நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பேன்.எதிர்வரும் நாட்களில் ஒன்றுப்பட்ட சக்தியாக இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என்றார்.

கோப்பாய் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தை விலக்கி மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசு இடமளிக்க வேண்டும் – -ரெலோ தவிசாளர் நிரோஷ் 

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை குறித்த பிரதேசத்தின் ஆட்சிக்குரிய உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் போரில் ஆகுதியாகிய மறவர்களுக்கு நினைவஞ்சலிச் சுடரினை ஏற்றிய பின் கருத்துரைக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.

சேமக்காலைகளை இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களே முகாமை செய்கின்றன. போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்களை போருக்குப் பின் அரச படைகள் கிளறி எறிந்து மானிட தர்மத்திற்கும் போரியல் விதிமுறைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒரு தாய் இறந்த தன் பிள்ளையை நினைவு கொள்ள முடியாது என்று அரசு கருதுமாக இருந்தால் அதையொத்த அரச அடக்குமுறையும் அரச பயங்கரவாதம் வேறு என்னவாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றோம். உண்மையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட சடலங்களைக்கூட கிளறி எறிந்து இனவெறியைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் இலங்கையின் அரச கட்டமைப்பில் வேறுண்டி இருக்கையில் நாடு முன்னேறிச் செல்வதற்கே இடமில்லை. மனித நேயமுள்ள சிங்கள தாய்மாரிடமும் சகோதரர்களிடமும் எமது மக்கள் மீது இளைக்கப்பட்ட அநீதிகளை கலந்துரயாட அழைப்பு விடுக்கின்றோம்.

உலக அளவில் எதிரியாக இருந்த போதும் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு கௌரவமளித்து தூபிகளைக் கூட உலக அளவில்  அமைத்துள்ளார்கள். ஆனால், இன்றும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் உள்ளட்ட பல துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்களாக உள்ளன. அங்கு இருந்த கல்லறைகள் சிதைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இவ்வாறான மிக அருவருக்கத் தக்க மானிட கௌரவத்திற்கு கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளை நிறுத்தி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை உள்ளராட்சி மன்றத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

தற்போது அந் நிலம் அரச திணைக்களமென்றிற்குச் சொந்தமான நிலமாக இராணுவ முகாமாக உள்ளது. இந்த இடத்தில் அரசாங்கம் இராணுவ ஒழுக்கத்தினை பின்பற்றி அந் நிலத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதுடன் அந் நிலத்தினை உள்ளூராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக உரிய வகையில் மக்களின் நினைவேந்தல் உரிமையினை நிலைநாட்ட முடியும். அதற்கான கோரிக்கையினை முன்வைப்பதுடன் உத்தியோகபூர்வ நடவடிக்ககளயும் முன்னெடுக்கவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்  தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தமிழர் தாயகமெங்கும் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவஞ்சலியில் பங்கேற்பு

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்ததன் பிரகாரம் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றதுடன் , அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவீரர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

யாழ் நல்லூர்

யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயத்திலும் இன்று மாலை 06.05 மணிக்கு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சிவாஜிலிங்கம் அஞ்சலி

யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர். கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்களை நினைவு கூர்ந்து அன்னதான நிகழ்வு

இதேவேளை, யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் இன்றைய தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் இறுதி நாளில் அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வினை முன்னாள் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அஞ்சலி

முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதன் போது வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் அஞ்சலி

மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார். அச்சுவேலி பகுதியில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) மரணமடைந்திருந்தார்.

மாவீரா் மில்லருக்கு அஞ்சலி

மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லரின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா். இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் தின நாளான இன்று (27) திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக அக வணக்கத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான உறவுகள் ஈகைச் சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தினர். புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் இதனை அனுஷ்டித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். பலர் வீடுகளிலும் மாலை 6.00 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்

வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர்.

இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர். எனினும் குறித்த உருவப்படத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார்.

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு- தரவை மற்றும் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி

மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி

அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டு மாவீரர் நாள் நினைவேந்தல்களை மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்தனர்.
மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

 

Posted in Uncategorized

வட கிழக்கில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு, அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

வன்னி மண்ணில் பொது மைதானம் அமைக்கப்படுவதில் ஆட்சியாளர்கள் பாராபட்சம் – ரெலோ வினோ எம்.பி

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா வவுனியா மாவட்டங்களில் ஆட்சியாளர்கள் பொது விளையாட்டு மைதானம் ஒன்று அமையப்பெறுவதை தடுத்து வருகின்றார்கள். எமது மண்ணின் விளையாட்டு வீரர்களுக்கு பாரபட்சம் காட்டுகின்றார்கள். சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள். விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மன்னார் மாவட்டத்திற்கு என பொது மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தில் தலையீட்டுடன் ஆரம்பத்தில் நிர்மாணிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது,தற்போது உரிய காரணிகள் இல்லாமல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உதைப்பந்தாட்டத்திற்கு பிரசித்துப் பெற்றுள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு உரிய மைதானம் இல்லாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே குறித்த மைதானம் விரைவாக முழுமைப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அபிவிருத்தி தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. மாவட்ட அபிவிருத்திகளின் போது பாரப்பட்சம் காட்டப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் பொது மைதானம் இல்லை.அப்பிரதேச இளைஞர்களுக்கு என்று வசதிகளுடனான மைதானம் ஒன்று இல்லை. ஆகவே மாவட்ட அடிப்படையில் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்புக்கள் இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மைதானத்தை அமைப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,வெறும் இழுத்தடிப்புக்கள் மாத்திரம் இடம்பெறுகிறது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறது.வடமாகாணத்திற்கு என சகல வசதிகளுடன் மைதானம் என்பதொன்று இல்லை.

சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிபகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள்.விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து செல்கிறது,போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் சீரழிந்து செல்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

ஆகவே போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் பொலிஸார் மந்தகரமாக செயற்படுகிறார்கள்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது – இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்

தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால கல்வி வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டோம்.

2021 க.பொ.த உயர்தர பெறுபேறுகள், 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் கணிசமான மாற்றத்தை தந்துள்ளன. ஒப்பீட்டளவில் நாம் மீண்டெழ ஆரம்பித்துள்ளோம்.

இதனை நாம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிட முடியாது. இதற்காக பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் அக்கறையுடனும் தொழிற்பட வேண்டும்.

கடந்த 2021 க.பொ.த உயர்தர பெறுபேற்றுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, அதிபர்களின் விடாமுயற்சி, பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பன கணிசமான பங்கு வகித்தன. அதனாலேயே முதல் மூன்று இடங்களில் தமிழர் செறிந்து வாழும் மாகாணங்கள் முதல் நிலையில் வந்தன.

அதேபோன்று 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேற்றுக்கும் ஆசிரியர்களின் அளப்பரிய சேவை, அதிபர்களின் சீரிய மனப்பாங்கு, பெற்றோரின் வகிபாகம் என்பன காரணமாக அமைகின்றன.

தமிழர் செறிந்து வாழும் மாகாணங்களில் மாணவர்களுக்கான அரச பொதுப் பரீட்சைகளில் மாணவர்கள் எடுத்துள்ள பெறுபேற்று உயர்ச்சி எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை நாம் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும். இன்னும் மேலெழ வழி தேட வேண்டும். எத்தகைய நெருக்கடிகள், தலையீடுகள், கலாசார பிறழ்வுகள், போதை கலாசாரங்கள், திணிப்புகள் எது வந்தாலும் நாம் அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.

கல்வி என்பது எமது சொத்து. அதனை நாம் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே எமது வாழ்வின் ஆதாரம். அதற்காக அதிபர்கள் தாம் பொறுப்பேற்றுள்ள கல்விக் காப்பகத்தின் கண்ணியத்தையும், அங்கு காக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அன்போடு அரவணைப்போடு அனைவரையும் ஒன்றிணைத்து, ‘எமது இலக்கு ஒன்றே’ என்ற வாசகத்தை மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

ஆயிரம் சுமைகள், துன்பங்கள். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எம் தேசத்துக் குழந்தைகள் என்ற உணர்வோடு ஆசிரியர்களான நீங்கள் ஆற்றும் பணியை அனைவரும் மதிக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்!

இன்னும் நாம் எமது கடந்த கால இலக்குகளை அடையவில்லை. அவை அடையப்பட வேண்டியவை. அதுவும் எமது காலத்தில் அவை அடையப்பட வேண்டும். அதற்காக எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றுவோம்.

இறைவனின் ஆசியும், குழந்தைகளின் பெறுபேற்று வெற்றி, அவர்களின் உயர்ச்சி, அவர்கள் பெறும் பதவிகள், பட்டங்கள் என்பன உங்களுக்கு அணிகலன்களாக அமையும் என்பது உண்மை. உங்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

நாம் பல்லாண்டு காலம் கொடிய யுத்தம், அனர்த்தம் என்பவற்றை கடந்து வந்தவர்கள். அந்த காலங்களிலும் நாம் கல்வியை கைவிட்டதில்லை. அதற்காக அக்காலத்தில் யாரும் தடையாக இருந்ததும் இல்லை.

இன்று தடைகளும் திணிப்புகளும் எம்மை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தலையீடுகள் பல எமது எதிர்கால குழந்தைகளில் கல்வியை சீரழிக்க முனைகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் இடம்கொடுக்க முடியாது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நீங்கள் மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை

பயணிகள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தவிர்த்து, வலுவாக ஒன்றுபடுவதோடு, தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் அரவணைத்து செல்வதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், சனிக்கிழமை (26) முற்பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் அவருடைய தலைமையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் சுரேன்குருசுவாமி, புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன், தேசியப் பிரச்சினை விவகாரம் சம்பந்தமாக வெள்ளிக்கிழமை (25)தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளமையை வரவேற்று கருத்துக்களை பரிமாற்றியதோடு, தொடர்ச்சியாக அக்கருமத்தினை நீடிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து, கூட்டமைப்புக்குள் காணப்படும் பங்காளிக்கட்சிகளுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் உட்பூசல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து, எதிர்வரும் காலத்தில் உள்ளக விமர்சனங்களை பொதுவெளியில் உரையாடுவதை கைவிடுவதெனவும், கூட்டமைப்பின் பங்காளிகளும், அதற்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் இணைத்து தேசிய பிரச்சினைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளில் ஒருங்கிணைந்து செயற்படுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு, மற்றும் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை கிரமமாக நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாராளுமன்றக்குழு கூட்டத்தினை அவசியம் ஏற்பட்டால் சம்பந்தனின் இல்லத்தில் நடத்துவதெனவும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினை ஆகக்குறைந்தது மாதமொன்று ஒருதடவையேனும் முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.