தமிழர் தாயகமெங்கும் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவஞ்சலியில் பங்கேற்பு

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்ததன் பிரகாரம் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றதுடன் , அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவீரர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

யாழ் நல்லூர்

யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயத்திலும் இன்று மாலை 06.05 மணிக்கு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சிவாஜிலிங்கம் அஞ்சலி

யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர். கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்களை நினைவு கூர்ந்து அன்னதான நிகழ்வு

இதேவேளை, யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் இன்றைய தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் இறுதி நாளில் அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வினை முன்னாள் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அஞ்சலி

முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதன் போது வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் அஞ்சலி

மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார். அச்சுவேலி பகுதியில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) மரணமடைந்திருந்தார்.

மாவீரா் மில்லருக்கு அஞ்சலி

மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லரின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா். இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் தின நாளான இன்று (27) திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக அக வணக்கத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான உறவுகள் ஈகைச் சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தினர். புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் இதனை அனுஷ்டித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். பலர் வீடுகளிலும் மாலை 6.00 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்

வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர்.

இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர். எனினும் குறித்த உருவப்படத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார்.

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு- தரவை மற்றும் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி

மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி

அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டு மாவீரர் நாள் நினைவேந்தல்களை மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்தனர்.
மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

 

வட கிழக்கில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு, அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

வன்னி மண்ணில் பொது மைதானம் அமைக்கப்படுவதில் ஆட்சியாளர்கள் பாராபட்சம் – ரெலோ வினோ எம்.பி

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா வவுனியா மாவட்டங்களில் ஆட்சியாளர்கள் பொது விளையாட்டு மைதானம் ஒன்று அமையப்பெறுவதை தடுத்து வருகின்றார்கள். எமது மண்ணின் விளையாட்டு வீரர்களுக்கு பாரபட்சம் காட்டுகின்றார்கள். சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள். விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மன்னார் மாவட்டத்திற்கு என பொது மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தில் தலையீட்டுடன் ஆரம்பத்தில் நிர்மாணிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது,தற்போது உரிய காரணிகள் இல்லாமல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உதைப்பந்தாட்டத்திற்கு பிரசித்துப் பெற்றுள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு உரிய மைதானம் இல்லாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே குறித்த மைதானம் விரைவாக முழுமைப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அபிவிருத்தி தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. மாவட்ட அபிவிருத்திகளின் போது பாரப்பட்சம் காட்டப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் பொது மைதானம் இல்லை.அப்பிரதேச இளைஞர்களுக்கு என்று வசதிகளுடனான மைதானம் ஒன்று இல்லை. ஆகவே மாவட்ட அடிப்படையில் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்புக்கள் இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மைதானத்தை அமைப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,வெறும் இழுத்தடிப்புக்கள் மாத்திரம் இடம்பெறுகிறது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறது.வடமாகாணத்திற்கு என சகல வசதிகளுடன் மைதானம் என்பதொன்று இல்லை.

சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிபகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள்.விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து செல்கிறது,போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் சீரழிந்து செல்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

ஆகவே போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் பொலிஸார் மந்தகரமாக செயற்படுகிறார்கள்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது – இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்

தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால கல்வி வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டோம்.

2021 க.பொ.த உயர்தர பெறுபேறுகள், 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் கணிசமான மாற்றத்தை தந்துள்ளன. ஒப்பீட்டளவில் நாம் மீண்டெழ ஆரம்பித்துள்ளோம்.

இதனை நாம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிட முடியாது. இதற்காக பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் அக்கறையுடனும் தொழிற்பட வேண்டும்.

கடந்த 2021 க.பொ.த உயர்தர பெறுபேற்றுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, அதிபர்களின் விடாமுயற்சி, பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பன கணிசமான பங்கு வகித்தன. அதனாலேயே முதல் மூன்று இடங்களில் தமிழர் செறிந்து வாழும் மாகாணங்கள் முதல் நிலையில் வந்தன.

அதேபோன்று 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேற்றுக்கும் ஆசிரியர்களின் அளப்பரிய சேவை, அதிபர்களின் சீரிய மனப்பாங்கு, பெற்றோரின் வகிபாகம் என்பன காரணமாக அமைகின்றன.

தமிழர் செறிந்து வாழும் மாகாணங்களில் மாணவர்களுக்கான அரச பொதுப் பரீட்சைகளில் மாணவர்கள் எடுத்துள்ள பெறுபேற்று உயர்ச்சி எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை நாம் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும். இன்னும் மேலெழ வழி தேட வேண்டும். எத்தகைய நெருக்கடிகள், தலையீடுகள், கலாசார பிறழ்வுகள், போதை கலாசாரங்கள், திணிப்புகள் எது வந்தாலும் நாம் அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.

கல்வி என்பது எமது சொத்து. அதனை நாம் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே எமது வாழ்வின் ஆதாரம். அதற்காக அதிபர்கள் தாம் பொறுப்பேற்றுள்ள கல்விக் காப்பகத்தின் கண்ணியத்தையும், அங்கு காக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அன்போடு அரவணைப்போடு அனைவரையும் ஒன்றிணைத்து, ‘எமது இலக்கு ஒன்றே’ என்ற வாசகத்தை மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

ஆயிரம் சுமைகள், துன்பங்கள். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எம் தேசத்துக் குழந்தைகள் என்ற உணர்வோடு ஆசிரியர்களான நீங்கள் ஆற்றும் பணியை அனைவரும் மதிக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்!

இன்னும் நாம் எமது கடந்த கால இலக்குகளை அடையவில்லை. அவை அடையப்பட வேண்டியவை. அதுவும் எமது காலத்தில் அவை அடையப்பட வேண்டும். அதற்காக எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றுவோம்.

இறைவனின் ஆசியும், குழந்தைகளின் பெறுபேற்று வெற்றி, அவர்களின் உயர்ச்சி, அவர்கள் பெறும் பதவிகள், பட்டங்கள் என்பன உங்களுக்கு அணிகலன்களாக அமையும் என்பது உண்மை. உங்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

நாம் பல்லாண்டு காலம் கொடிய யுத்தம், அனர்த்தம் என்பவற்றை கடந்து வந்தவர்கள். அந்த காலங்களிலும் நாம் கல்வியை கைவிட்டதில்லை. அதற்காக அக்காலத்தில் யாரும் தடையாக இருந்ததும் இல்லை.

இன்று தடைகளும் திணிப்புகளும் எம்மை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தலையீடுகள் பல எமது எதிர்கால குழந்தைகளில் கல்வியை சீரழிக்க முனைகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் இடம்கொடுக்க முடியாது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நீங்கள் மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை

பயணிகள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தவிர்த்து, வலுவாக ஒன்றுபடுவதோடு, தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் அரவணைத்து செல்வதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், சனிக்கிழமை (26) முற்பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் அவருடைய தலைமையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் சுரேன்குருசுவாமி, புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன், தேசியப் பிரச்சினை விவகாரம் சம்பந்தமாக வெள்ளிக்கிழமை (25)தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளமையை வரவேற்று கருத்துக்களை பரிமாற்றியதோடு, தொடர்ச்சியாக அக்கருமத்தினை நீடிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து, கூட்டமைப்புக்குள் காணப்படும் பங்காளிக்கட்சிகளுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் உட்பூசல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து, எதிர்வரும் காலத்தில் உள்ளக விமர்சனங்களை பொதுவெளியில் உரையாடுவதை கைவிடுவதெனவும், கூட்டமைப்பின் பங்காளிகளும், அதற்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் இணைத்து தேசிய பிரச்சினைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளில் ஒருங்கிணைந்து செயற்படுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு, மற்றும் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை கிரமமாக நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாராளுமன்றக்குழு கூட்டத்தினை அவசியம் ஏற்பட்டால் சம்பந்தனின் இல்லத்தில் நடத்துவதெனவும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினை ஆகக்குறைந்தது மாதமொன்று ஒருதடவையேனும் முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறைக்கு புதிய சட்டமூலம் கொண்டுவந்தால் ஆதரவளிக்க தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை விகிதாசார முறையில் நடத்துவதற்கு புதிய சட்டமூலம் கொண்டுவந்தால் நாங்கள் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு தயார்.

அரசாங்கம் சட்டமூலம் வர தயாரா  என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான இருக்கும் தடைகளை நீக்கி, புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு இருந்தது.

ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. தற்போது அந்த பெரும்பான்மை இல்லை.  அதனால் மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் புதிய  சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் தயார்.

ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தவேண்டும். அதனை பிற்போட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் தற்போது அதிகம் பேசப்படுவது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாகும்.

ஆனால் இந்த திருத்தத்துக்கு அன்று ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தார்கள். யாரும் எதிர்க்கவில்லை.

8ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களை 4ஆயிரமாக குறைக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்றால் அதனை ஒரு சரத்தின் ஊடாக விகிதாசார முறைக்கு மாற்ற முடியும்.

அதன் மூலம் தானாகவே 4ஆயிரமாக மாறும். அதனை நாங்கள் செய்வோம். அதற்கு நாங்கள் ஆதரவு. ஆனால் அரசாங்கத்துக்கு தேவையாக இருப்பது தேர்தலை பிற்போடுவதாகும் என்றார்.

இதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்குபுர பதிலளிக்கையில்,  தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு முடியுமான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவோம். வரவு செலவு திட்ட விவாதம் முடிந்ததுடன் அந்த சட்டமூலத்தை பாாரளுமன்றத்துக்கு கொண்டுவருவோம் என்றார்.

இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. இவ்வருட இறுதிக்குள் தேர்தலுக்கான தினம் மற்றும் வேட்புமனு தாக்கல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு நிச்சயம் வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மார்ச் 20 க்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில் , பெப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதுவாக அமையும் என்று பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பின் ஊடாக உரித்தாக்கப்பட்டுள்ள உதாசீனப்படுத்த முடியாத பொறுப்பிற்கு , எல்லை நிர்ணய குழுவின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

எல்லை நிர்ணய குழுவினால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இக்குழுவினால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேல் பாராளுமன்றமும் , நீதிமன்றமும் காணப்படுகின்றன. எனவே எல்லை நிர்ணய குழுவின் ஊடாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என்று எவரேனும்

கூறுவார்களாயின் , அவர்கள் அரசியல் மற்றும் சட்டம் என்பவற்றை அறியாதவர்களாகவே இருப்பர்.

தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வேறு எவராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. அதேபோன்று ஆணைக்குழுவிற்கு இதனை உதாசீனப்படுத்தவும் முடியாது.

இவ்வாண்டு நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கானதும் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை ஆணைக்குழு நிச்சயம் வெளியிடும் என எதிர்பார்க்கின்றோம்.

பெப்ரவரி 28 ஆம் திகதியே எம்மிடம் எல்லை நிர்ணய அறிக்கை கோரப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாம் எமது அறிக்கையை சமர்ப்பிக்கும் போது , தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனில் , பெப்ரவரி இறுதி வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு , முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது கட்டாயமாகும்.

எனவே எமது அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே , தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகிவிடும் என்றார்.

தமிழர்களின் நிலை தொடர்பில் உலகம் எவ்வாறு சிந்திக்கும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்- டலஸ் அழகப்பெரும

தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் பிற்போட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தோற்றம் பெறும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. தமிழர்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாகாண சபை தேர்தல் இல்லாமல் உள்ள நிலையில் உள்ளூராட்சிமன்றத்  தேர்தல் பிற்போடப்பட்டால் தமிழர்களின் நிலை தொடர்பில் உலகம் எவ்வாறு சிந்திக்கும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் செயற்படுவது பாரிய குறைப்பாடாக கருதப்படுகிறது.

1931 ஆம் ஆண்டு அரச நிர்வாக கட்டமைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் விடயதானத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவையாளர்கள் தற்போது சேவை கட்டமைப்பில் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளின் ஒருசில விடயங்கள் அரச சேவையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்படுகிறது.

2017ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்த பிரேணை கொண்டு வரப்பட்ட போது தெரிவு குழுவின் போது 31 திருத்தங்கள் உள்வாங்கப்பட்டன.மாகாண சபை தேர்தல் காலரையறையில்லாமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் என்ற சொல் கூட தற்போது வழக்கில் இல்லை.இது ஒரு பாரியதொரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலை விற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய அண்மையில் தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2018 ஆம் ஆண்ட விசேட தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை தொடர்பான தெரிவு குழு நியமிக்கப்பட்டது,கலப்பு தேர்தல் முறைமைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய தெரிவு குழுவை ஸ்தாபிப்பது எத்தன்மையானது.

ஆகவே மாகாண சபைகளுக்கு செய்ததை,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் செய்ய வேண்டாம் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தேர்தல் மீதான அச்சத்தில் முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூராட்சிமன்ற சபை முறைமை தொடர்பில் எவ்வித கொள்கையுட் நடைமுறையில் இல்லை,2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கொள்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,ஆனால் இதுவரை அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் இந்த  சபையில் உள்ளார்கள்.தேர்தல் புறக்கணிக்கப்படும் போது அது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைந்தளவில் உள்ளார்கள்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின் நிலை குறித்து உலகம் என்ன குறிப்பிடும் என்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

தமிழ்தேசிய கட்சிகள் தீர்வுக்காக ஒன்றிணைய வேண்டும் – எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழ்த்தேசியக் கட்சிகள்  பேச்சுவார்தை என்ற மாயைக்குள்   ஏமாந்து விடாது  தமிழ்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான  பேச்சுவார்தையாக அதனை மாற்றி அமைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினம்  இன்று சனிக்கிழமை வல்வேட்டிதுறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் வீட்டின்முன்பாக வெடிகொழுத்தி,எள்ளுப்பாகு வழங்கி கொண்டாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த நோக்கத்திற்காக விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக தமது உயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொண்டு அதனை அடையக்கூடிய வகையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் அதனை  அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் நடாத்தப்படவேண்டும்   தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தில் திட சங்கர்ப்பமாக ஒரு இனம் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்வகிக்கின்ற உரிமையை நிலைநாட்டவேண்டும்.

இதற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் சர்வஜன வாக்கெடுப்பு புலம்பெயர் தமிழர்களும் பங்குபற்றகூடிய வகையில் நடாத்தடப்படவேண்டும் இதனைத்தான் பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினத்தில் எடுத்துக்கூறவிரும்புகின்றோம். இதைவிடுத்து அரசாங்கம்  தீர்வு  தருவார்கள் ,போசுவார்கள் என்று ஏமாந்தது போதும் 75 சுதந்திர தினத்திற்கு முன்பாக தீர்வு காண்போம் எனக் கூறுவது ஏன் என்பது புரியவில்லை. இதில் தமிழ் தேசியக் கட்சிகள் ஏமாந்து விடக்கூடாது .தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான தீர்வுகளை பேறுவதற்கான    முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. நாங்கள் ஒன்றிணைவதே காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்