முல்லைத்தீவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தென்னிலங்கைக்கு மாற்றம்

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் தமது பகுதிக்கே பெற்றுத் தருமாறு கோரி 07 பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உலக வங்கியின் உதவியின் கீழ் கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி தென்பகுதிக்கு மாற்றப்பட்டமை எமது பிரதேச மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு ஜனவரி மாதம் பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு பெப்ரவரி மாதம் வரை விண்ணப்ப முடிவு திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கான காரணங்களை தேடிய போது குறித்த ஆயிரம் மில்லியன் ரூபா நிதியானது தென்னிலங்கை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரியவந்தது.

இது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும் குடிப்பதற்கு பொருத்தமற்ற நிலத்தடி நீரை கொண்டுள்ள எமது பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களில் அதிகளவானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தன் உள்ளிட்ட தோல்வியடைந்த தமிழ் தேசிய தலைவர்கள் பதவிவிலக வேண்டும் – ரெலோ வினோ எம்.பி

இரா.சம்மந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப் போன தலைவர்களே. அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (13) இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வு தொடர்பில் ஆரம்பத்தில் பல சந்தேங்கள் இருந்தது. காலையில் எழுந்தவுடன் இரண்டு மூன்று பத்திரிகைள் பார்ப்பது வழமை. யாழ்ப்பாண பிராந்திய பத்திரிகை ஒன்று, இரண்டு பேரை முதன்மைப்படுத்தி அவர்களின் தயார்ப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது என்று ஆசிரியர் தலையங்கம் அல்லது வேறு பந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதையும் பார்த்தேன். எனக்கு இது தேவையா? இதில் அரசியல் விளையாடப் போகிறதா? இதில் உள்ள சாதக பாதகம் பற்றி இரண்டு பக்கமும் யோசித்து விட்டு தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

ஒரு நேரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் சம்மந்தன் ஐயாவின் தலைமையில் வவுனியாவில் கூடியிருந்த வேளை, அப்பொழுது யாழ் ஊடகவியலாளர் முன்னாள் சிரேஸ்ட போராளிகளை அழைத்து வந்து இந்த தேர்தலில் எங்களையும் இணைத்து போட்டியிட வேண்டும். போராளிகளுக்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் எகன்று கேட்ட போது, ஒரேயடியாக அதற்குரிய தகுந்த காரணம் இப்போது இல்லை. போராளிகளை இப்போது இணைக்க முடியாது என சம்மந்தன் ஐயா சொல்லிவிட்டார். பிறகு அதே ஊடகம் அல்லது அதே ஊடகவியலாளர் எழுத்துக்களெல்லாம் இந்த போராளிகளை யாரோ தவறாக வழிநடத்துகிறார்களாம். அன்று தான் செய்கின்ற போது சரியாக பட்டது. இன்று பிழையாகப்படுகிறது. அந்த ஊடகவியலாளரை யரோ பிழையாக வழிநடத்துகிறார்களா?. போராளிகள் மத்தியில் ஏன் நலன்பேணும் விடயத்தில் திடீர் அக்கறை என போராளிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அந்த பத்தி ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிற நிலமையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்கட்சி முரண்பாடுகள் அது மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை கொண்டு வந்திருக்கின்றது. உங்களையும் பாதித்து செல்வதால் இந்த விடயத்தை சொல்கின்றேன். விடுதலைப்புலிகளால், தலைவர் பிரபாகரனால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதனால் அதனுடைய வீழ்சியோ அல்லது மக்களிடம் இருந்து அந்நியய்படுகின்ற ஒரு நிகழ்சித் திட்டமோ எல்லோரையும் பாதிக்கும். எங்களுக்குள் வேறுபாடு இருக்கின்ற போது அதில் உங்களுக்கும் பங்கு இருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற போது தலைவர் விடுகின்ற தவறுகளை அல்லது ஒரு பங்காளிக் கட்சி விடுகின்ற தவறுகளை எப்படி அதில் இருக்கின்றவர்கள் சுட்டிக்காட்ட முடியுதோ அதேயளவுக்கு போராளிகளாகிய உஙகள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. அரசியல் ரீதியாக உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களின் நலன்களிலும் எதிர்காலத்தில் செயற்படக்கூடிய ஒரு அமைப்பு தவறு செய்யும் பட்சத்தில் அதை தடுக்க அல்லது எதிர்த்து குரல் கொடுக்க கூடிய தகமை உங்களுக்கும் இருக்கிறது.

அண்மையில் எங்களது கூட்டமைப்பினுடைய தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை. ஒற்றுமையாகத் தான் இருக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினத்களுக்குள் பிளவு இல்லை என்ற ஒரு கருத்தை கூறியிருந்தார். அது சுத்தப் பொய். பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஒரே கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருகின்றன. அண்மையில் எங்களுடைய தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவராக இருகின்றவர் அண்ணன் தவராசா அவர்களே ஏற்றுக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறிய கருத்து உண்மையானது என அவர் ஏற்றுக் கொண்டார். அப்படியெனில் முக்கிய தலைவர்களே உணர்திருக்கிறார்கள். தவறுகள் நடக்கின்றது என்பதை அவர்களே உணர்ந்துள்ளார்கள். சம்மந்தன் ஐயா அதை மறைக்கப் பார்கின்றார். அவரால் தற்போது ஒழுங்காக செயற்பட முடியாது. இதனை பொதுவெளியில் சொல்லவும் நான் தயாராக இருகின்றேன். அவரால் செயற்பட முடியாத நிலமை இக்ருகிறது. அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு தலைவர் இல்லாத நிலமை இருந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதிக்கப்பட போகிறது. ஒட்டுமொத்த தமிழர் என்கின்ற போது அதற்குள் விடுதலைப் புலிகள், போராளிகள் அடங்காது எப்படி இருக்க முடியும்.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் தலைவருடன் சந்திப்பை ஏற்படுத்துகின்ற போது, நாங்கள் ஒன்றாக பேசிய போது, பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனைப் பார்த்து தலைவர் கூறினார். செல்வம் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவம். கடந்த காலங்களில் நாங்கள் எல்லோரும் பிழை விட்டிருந்தால் எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய மக்களுக்காக இந்த கூட்டை உருவாக்கி அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஒன்றாக இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருந்தார். அதற்கு பின் நாங்கள் எவ்வளவோ விட்டுக் கொடுப்பு செய்து பிரிநதிருந்த போராட்ட இயக்கங்கள், மிதிவாதக் கட்சிகள் இணைந்து இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக கூட்டமைப்பு உள்ளது. முதலில் கூட்டமைப்பில் உள்ள பழைய தலைவர்கள் எல்லாம் தங்களது பதவிகளை ராஜனாமா செய்து விட்டு போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். போராளிகள் என்று நான் சொல்வது இளைஞர்களை. ஒவ்வொரு கட்சியிலும், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய பழைய தலைவர்கள் எல்லோரும் தோற்றுப் போன தலைவர்களாக தான் இருக்கிறார்கள். தந்தை செல்வா, ஜி.ஜிஜ.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் இரா.சம்மந்தன் ஆகியோராக கூட இருக்கலாம். தோற்றுப்போன தலைவர்களாக இருக்கிறார்கள். ஏனைய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட கூட தாங்கள் தொடர்ந்தும் கட்சியினுடைய தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்க கூடாது. வேணும் என்றால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துவிட்டு போகலாம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை ஊடாக அவர்கள் வரலாம். ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்களின் உடைய தலைவர்கள் எல்லோருமே தோற்றுப்போன தலைவர்கள் தான். மக்களுக்கான விடுதலையை வென்று கொடுக்க முடியாத தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தலைமைப் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லாத தலைவர்களாக தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது உங்களுடைய விடயம். நீங்கள் போரளிகள். எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, நலன்புரி சங்கம் என்ற பெயரில் போராளிகளின் எதிர்காலம், அவர்களுடைய தேவைகள் தொடர்பாக செயற்படவுள்ளீர்கள். அவர்களுடைய தேவைகள் உண்மையாக உணரப்பட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இனத்தின் ஒரு விடுதலைக்காக ஆயுதம் தூக்கிப் போராடிய ஒரே குற்றத்திற்காக இந்த போராளிகள் வெறுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு போரளிகளும் மன ரீதியாக உடைந்து போய் இருகிறார்கள். அவர்களது மனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சிலருடைய நடவடிக்கைகளே இதற்கு காரணம். சமூகத்தில் சில இடங்களில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். உரிய மரியாதை வழங்கப்படுகிறது. சில இடங்களில் சாதாரண ஒரு பேராளியாக கூட மதிக்கப்படாத நிலமை இருந்து கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளான போராளிகள் கூட நாங்கள் இந்த இனத்திற்காகவா போராடினோம் என்றொரு ஏக்கம், ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கிறது. அதனை நாம் உணர்கின்றோம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

தலைவர்கள் ஒரு போதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. எனது அனுபவத்தில் அரசியல் தீர்வுக்காய் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஏதோ அரசியல் நடந்து கொண்டு தான் இருக்குமே தவிர, உரிமைக்காக தமிழ தலைவர்கள் என தமிழ் தேசியத்தின் பேரில் சொல்லிக் கொண்டு, அரசியல் நடத்தும் எந்த தலைவரும் உண்மையான அக்கறையாக செயற்படாது தான் உள்ளார்கள். பாராளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களிள் உரிமைக்காக கடைசிவரை இணையப்போவதில்லை.

விக்கினேஸ்வரன் ஐயா அண்மையில் பிரிந்து செயற்படுவது தொடர்பில் ஙாங்கள் உணர்ந்திருக்கின்றோம் எனக் கூறினார். முழுக்க முழுக்க அவர் தான் காரணம். அவர் உடைப்பதற்காக, சிதைப்பதற்காக, அவருடைய நிகழ்சி நிரலை கொண்டு சென்று விட்டு இன்று கூட்டமைப்பில் இருந்து பிரிந்திருப்பதை உணர்ந்திருக்கின்றேன் என்கிறார். தமிழ மக்களின் கூட்டுக்குள் அவர் மிகப்பெரிய ஒரு குற்றவாளி. அதேபோல் தான் ஏனையவர்களும். கூட்டமைப்பு என்பது பலமான ஒரு சக்தி. அதில் தவறுகள் இருகின்றன. அண்மையில் கூட்டமைப்பை பற்றி எனது முகநூலில் விமர்சனம் செய்தேன். கூட்டமைப்பு ஒரு விபச்சார இல்லமாக செயற்படுவதாக நான் குறை கூறினேன்.

அங்கத்துவ கட்சி ஒன்றின் செயலாளர் என்னுடைய கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் விளக்கம் கேட்டு கடித் அனுப்பியுள்ளார். முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கட்சியிக் சின்னத்தை விபச்சார வீடாக விமர்சிப்பதாக தெரிவித்து கடிதம் வந்தது. நான் விமர்சிப்பேன். தொடர்ந்தும் விமர்சிப்பேன். உள்ளுக்குள் இருந்தாலும், சரி வெளியில் இருந்தாலும் சரி தொடர்ந்தும் விமர்சிப்பேன். ஏனென்றால் இந்த கட்சியை போராளிகள், ஏனையவர்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டோடு வளர்தெடுத்தடுத்தவர்கள். அதற்காக பாடுபட்டவர்கள் நாங்கள். இவர்கள் தங்களது சொந்தக் கட்சியை வளர்தால் கூட அது கூட்டமைப்பின் பிரச்சனை தான். தமிழரசுக் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். அதனை நாங்கள் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு விமர்சிப்போம். தமிழரசுக் கட்சிக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். ரொலோவுக்குள் பிளவு என்றாலும், புளொட்டுக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். அதனையே பொது வெளியில் கூறுகின்றோம்.

அதற்கு பிறகு தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே அந்தக் கட்சியை விமர்சிக்கிறார்கள். அதுவும் தவறு தானே. நாங்கள் விமர்சித்தால் பிழை. ஒரே கட்சிக்குள் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு இருகிறார்கள். அந்தச் செயலாளர் இப்ப பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். விளக்கம் கேட்டாரா? தவராசா தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா, சிறிதரன் தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா. அல்லது சுமந்திரன் தவறு விடுகின்றார் என விளக்கம் கேட்டாரா. தவறுகள் கடந்த காலங்களில் எல்லாம் நடந்தது தான். நாங்கள் இனியும் திருந்தவில்லை பலனில்லை. தமிழ் தலைவர்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி சொல்கிறார். இவர்கள் விழுந்தடிக்துக் கொண்டு பேசுவோம் என்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒன்றுபட்டு போய் அங்கு பேசப்போவதில்லை.

ஒரே கட்சியாக இருந்த கஜேந்திரகுமார் கொன்னம்பலம், மணிவண்ணன் இன்று இரண்டு கட்சியாகிவிட்டார்கள். இதேபோல் நாளை எத்தனை கட்சிகள் எப்படி எப்படி உடையப் போகுதோ தெரியாது. ரணிலுடன் பேச முற்பட்டால் சிலர் பேச முடியாது, சிலர் நிபந்தனை போடனும், அப்படி, இப்படி என சொல்வார்கள். நாங்கள் ஒன்றுபட மாட்டோம் என அவர்களுக்கு தெரியும். அதனால் பிரச்சனைக்கு தீர்வு இல்லை.

முன்னாள் போராளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்க அனுமதி தர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அவர்கள் வேறு காரணங்களை கூறி நிராகரித்து விட்டார்கள். போராளிகள் மத்தியில் ஒற்றுமை வராது என சொல்வதற்கு இடம் கொடுக்க முடியாது. ஒற்றுமையாக செயற்படுங்கள். அன்று போராளிகளுக்கு உதவி செய்ய போவதாக சொன்ன யாழ் ஊடகவியலாளர் இன்று இங்கு இருப்பவர்கள் உதவி செய்ய வருவதை குற்றம் சாட்டுகின்றார். அன்று அவர் உண்மையில் போராளுக்கு உதவி செய்ய சென்றாரா அல்லது தன்னுடைய நலன்களுக்காக சென்றாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம் எனத் தெரிவித்தார்.

2023 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிப்பு

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும்.

2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரசாங்கத்தின் செலவீனத்திற்கு 7,885 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.

இளைஞர், யுவதிகளின் சிறந்த நாளைய தினத்திற்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பணிநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளைத் தாண்டி புதிய அணுகுமுறை மற்றும் புதிய வேலைத்திட்டம் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்.

  • 8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது.
  • சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார கொள்கையினூடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியன் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது.
  • போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும்.
  • புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும்.
  • 52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது.
  • பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன.
  • இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
  • இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் புதிய வரிகள் அறிவிக்கப்படலாம்.
  • பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
  • 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மீண்டும் நெருக்கடியில் வீழ்த்தி விடாமல் இருக்க நாம் சிந்தித்து செயற்ப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • பரிட்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த வரவு – செலவுத்திட்டம் சம்பிரதாய வரவு – செலவுத்திட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்.
  • வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் போயுள்ளமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.
  • சர்வதேச வர்த்தகத்திலிருந்து இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
  • சர்வதேச மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர்ச்சியான வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்கவும் கலந்துரையாடவும் எதிர்பார்க்கிறோம்.
  • முதலீட்டுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவது அவசியமாகவுள்ளது. இதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • விவசாயத்துறைக்கு தனியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்குள் தொழிற்சங்கங்கள், தனியார் உாிமையாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்படுவர்.
  • நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
  • எண்மாண தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
  • கறுவா உற்பத்தி மேம்பாட்டுக்கு தனியான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு, அதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்படும்.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • அரச மற்றும் தனியார் துறையில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்களின் பங்குபற்றலுடன் புதிய தேசிய அபிவிருத்தி குழு நியமிக்கப்படும்.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கு 130 மாகாண பாடசாலைகள் மற்றும் 20 தேசிய பாடசாலைகளுக்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வரிச்சலுகையின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றுப் பொறிமுறையொன்றை கட்டியெழுப்ப 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • புகைத்தல் பொருட்கள் சார் வரிவிதிப்பின் படி பீடிக்கு 2 வீத வாி அறவிடப்படும்.
  • விசா மற்றும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் 20% அதிகரிக்கப்படும்.
  • அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வருட இடைநடுவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதுடன் 2023 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
  • இரத்தினக்கல் விற்பனையை மேம்படுத்துவதற்காக புதிய வலயம் உருவாக்கப்படும். இதற்காக புதிய தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7%-8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
  • சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் ஊடாக மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தை 100%க்கு மேல் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
  • உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் எண்மாண பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்படும்.
  • ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம் உருவாக்கப்படும்.
  • தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்.
  • வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படும்.
  • உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும்.
  • தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
  • 2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
  • அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
  • முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சமுர்த்தி வேலைத்திட்டத்தினூடாக நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட நிவாரணம்.
  • சிறுவர்களின் போசாக்குக்காக தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மதுவரித் திணைக்களத்துக்கு பாிசோதனைகளுக்கென நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூாிய சக்தி கட்டமைப்புகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சிறைச்சாலைகளில் கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
  • பதுளை, குருநாகல், பொலன்னறுவை வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகளாக மாற்றப்படும்.
  • தொழிலாளர் சந்தைக்கான புதிய கொள்கைகள் காலாவதியான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்படும்.
  • விவசாய ஏற்றுமதிக்கு காணி வழங்கப்படுவதுடன், குறைந்த பயன்பாடுள்ள பயிரிடப்படாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்காக தொழின்முனைவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேசிய அபிவிருத்திக்காக கனிம வளங்களை திறம்பட பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • எங்களிடம் மக்கள் சவால்களை முன்வைத்திருக்கிறார்கள். முகங்களை மாற்றும் அரசியலைத் தவிர்த்து முறைமையை மாற்றும் பொறிமுறையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
  • நாட்டை உயர்த்தும் புதிய முயற்சிக்கு செயல்வடிவிலான பங்களிப்பை வழங்குமாறு அனைவாிடமும் கோருகிறேன்.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட உரை நிறைவுக்கு வந்தது.

கிழக்கு ஆளுநர் மற்றும் வியட்நாம் தூதுவருக்கிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு இயன்றளவு வசதிகளை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, அதே ஹோட்டல் வளாகத்தில் ஆளுநருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றதுடன், இரு நாடுகளின் சுற்றுலா, பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் பலவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹரி பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது : மனோ

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்றைய வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலக வங்கி, ஐநா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை.

  • உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும்.

அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு, தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனதுவரவு – செலவுத் திட்ட உரையில் கூறி உள்ளார்.

நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார்.

அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி. ஆனால், நாம் மறக்கவில்லை. நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்

நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இணக்கப்பாடுடன் தேசிய அபிவிருத்தி கொள்கையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஜனாதிபதி
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள்

பொதுச் செலவினங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த பல சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள்

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா உற்பத்தியை ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்படும்

ஆயுதப்படையினருக்கு முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதிக்கப்படுகிறது. 18 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது கட்டாயம் அல்ல, விரும்புபவர்கள் மட்டுமே ஓய்வு பெறலாம்

2023 இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கணிசமான நிவாரணம் வழங்கலாம் என நினைக்கிறோம்.அதற்குள் தனியாருக்கு நிவாரணம் வழங்குவோம் என நம்புகிறோம்.

2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணம் உட்பட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தொடர்பான பல கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 % ஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கை

சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% – 8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது

2023 ஜனவரி முதல் பல இறக்குமதி வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்

பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டும் குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியும் சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம்.

அரச ஊழியர்களுக்கு 2023 ஆண்டு இறுதியில் சலுகைகள் வழங்க நடவடிக்கை, தனியார் துறைக்கும் வழங்க ஆலோசனை.

இலங்கையின் வரலாறு மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி சலுகைகள் போன்று தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரச வருவாயில் பெரும் பகுதி அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கே செலவிடப்படுவதால் அபிவிருத்திப் பணிகளுக்குப் பணத்தை ஒதுக்குவது சவாலாகியுள்ளதால் தற்போதைய தேவைக்கேற்ப அரச சேவைகளை வழங்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது.

பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெறும் 75 மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்பை படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது : ஜனாதிபதி
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு 75 வெளிநாட்டுப் பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள். இதற்கான நிதி ஜனாதிபதி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம்.

கிராமப்புற பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்.

வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு
தகவல் பாதுகாப்பு அதிகார சபை உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரச சேவை துறையை முழுமையாக மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.

யாழ்ப்பாணம், பேராதெனிய, ருஹுணு பல்கலைக்கழங்களின் மருத்துவ மேற்படிப்புக்களை ஆரம்பிக்க 60 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

 

உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு
பல்துறைசார் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணிவிக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை.

பரீட்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாய்லாந்துடன் பொருளாதார – வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் சிங்கப்பூருடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தப்படுத்தவும் தீர்மானம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம் ,இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது. வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு.

முதலீட்டு சபையும் தேசிய ஏற்றுமதி சபையும் தோல்வியடைந்தமையே சர்வதேச முதலீடுகளின்மைக்கு காரணம் : இவற்றை மேம்படுத்த 100 மில்லியன் – ஜனாதிபதி
8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை.

உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது என ஜனாதிபதி தெரிவிப்பு
சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 வீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியின் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது என ஜனாதிபதி தெரிவிப்பு.

போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதார கொள்கைகள் : ஜனாதிபதி
புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது என ஜனாதிபதி தெரிவிப்பு.

பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன என குறிப்பிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

சுயாதீனமாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தனர்

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளனர்.

சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஜயரட்ண ஹேரத் சந்திம வீரக்கொடி அனுரபிரியதர்சன யாப்பா பிரியங்கர ஜெயரட்ண டபில்யூடீஜே செனிவரட்ண ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு இணைந்துகொண்டுள்ளனர்

ரணில் மெய்யாகவே தீர்வுக்குத் தயாரா ?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக வடக்கு,கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் கஜேந்திரக்குமாரை நோக்கி அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும்,காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும், நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில்+மைத்திரி ஆட்சிக் காலத்தில் சம்பந்தர் ஒரு ஜோதிடரைப் போல அல்லது,ஆவிக்குரிய சபையின் போதகரைப்போல”அடுத்த தீபாவளிக்குள் தீர்வு”; “அடுத்த புத்தாண்டுக்குள் தீர்வு ” என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். இப்பொழுது ரணில் அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று கூறத் தொடங்கியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறுகிறார்? ஒன்றில் அவரிடம் ஏதும் மந்திரக்கோல் இருக்க வேண்டும்.அல்லது அவரிடம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் அவர் தந்திரம் செய்கிறார் என்று பொருள். அவரிடம் மந்திர கோல் இல்லை.அவர் மந்திரம் தந்திரங்களில் நம்பிக்கை உள்ள ஆளும் அல்ல. எனவே அவர் எதையோ புத்திசாலித்தனமாக செய்ய முயற்சிக்கிறார் என்று மட்டும் தெரிகிறது.

அண்மை வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

முன்னாள் சமாதானத் தூதுவர் சூல் ஹெய்ம் மீண்டும் அரங்கில் குதித்திருக்கிறார்.அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும், அது ஓர் உருமறைப்பு என்று நம்பப்படுகிறது. இது முதலாவது.

இரண்டாவது,நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்சவும் கூறுகிறார், அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று.அதோடு காணாமல்போன எவரும் உயிருடன் இல்லை என்றும் கூறுகிறார்.

மூன்றாவதாக்க, மற்றொரு அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார்..”வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தயாராகவுள்ளது. அதற்கு முன்னர் பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் சங்கமிக்க வேண்டும்.” என்று.

நாலாவதாக,காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் கூறுகிறார், இறுதிக் கட்டப்போரில் யாரும் சரணடையவோ காணாமல் போகச் செய்யப்படவோ இல்லை என்று.படைத்தரப்பு கூறுகிறது,இறுதிக் கட்டப் போரில் யாரும் சரணடையவில்லை என்று. அதாவது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரத்தை அவர்கள் எப்படியாவது முடித்து வைக்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாவதாக உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்கப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,ரணில் விக்ரமசிங்க மீண்டும் நல்லிணக்க முயற்சி ஒன்றை நோக்கி நகரப் போகிறாரா என்ற கேள்வி பலாமாக எழும்.

யாழ்ப்பாணத்தை நோக்கி மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்கள் அரசியல்வாதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்கள். மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் மட்டுமல்ல தென்னாபிரிக்கத் தூதுவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து போயிருக்கிறார். சிவில் சமூகங்களுடனான சந்திப்புகளின்போது, அவர்கள் ஒரு தீர்வுக்கான களநிலைமை குறித்துத் தகவல்களைத் திரட்ட முற்படுவதாகவே தோன்றுகிறது. தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா முன்னெடுத்த நல்லிணக்க முயற்சிகளைப் போன்ற ஒரு ஏற்பாட்டுக்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு என்பது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு ஆகும். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவோடு ஆட்சியைப் பகிர்ந்த காலகட்டத்தில் ரணில், அவ்வாறான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.இப்பொழுது அந்த முயற்சிகளை அவர் தொடரப் போகிறாரா?

அப்படியென்றால் நிலைமாறுகால நீதிச் செய்முறையின் கீழ் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பலவீனமான கட்டமைப்புகளை இயங்க வைத்து, தேவையான புதிய கட்டமைப்புகளையும் உருவாக்கி, தென்னாபிரிக்கா பாணியிலான ஒரு நல்லிணக்க முயற்சியை நோக்கி ரணில் நகரப் போகிறாரா?

அவ்வாறு ஒரு தீர்வு முயற்சியை நோக்கி ரணில் சீரியஸாக உழைக்கத் தேவையான ஒப்பீட்டளவில் சாதகமான ஒரு சூழல் அவருக்கு இப்பொழுது உண்டு. அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவதாக,முன்பு ரணில்+ மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவர் தீர்வைக் கொண்டுவர முற்பட்டபொழுது அவர் ஒரு பலவீனமான பிரதமர்.ஆனால் இப்பொழுது அவர் ஒரு பலமான ஜனாதிபதி.குறிப்பாக வரும் மார்ச் மாதத்தோடு அவர் மேலும் பலமடைந்து விடுவார். எனவே பலமான நிலையில் இருந்து கொண்டு தான் ஏற்கனவே தொடங்கிய தீர்வு முயற்சிகளைத் தொடரலாமா என்று அவர் யோசிக்க முடியும்.

இரண்டாவதாக, அவர் அந்தத் தீர்வு முயற்சியை முன்னெடுத்த பொழுது கூட்டமைப்பு அதில் பங்காளியாக இருந்தது. சஜித் பிரேமதாச அவருடைய கட்சிக்குள் இருந்தார். எனவே அதே முயற்சியை மீண்டும் தொடங்கினால் இரண்டு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புக்கு வாய்ப்புகள் ஒப்பிட்டளவில் குறைவு. சுமந்திரன் இப்பொழுது ரணிலுக்கு எதிரானவர் போல தோன்றுகிறார்.ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வு முயற்சிகளுக்கு தாம் ஆதரவு அளிக்கப் போவதாக கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. ஆனால் கஜேந்திரகுமார் அணி எதிர்க்கும்.அதனால்தான் ரணில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரக்குமாரை நோக்கி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

மூன்றாவதாக,முன்னைய தீர்வு முயற்சியை குழப்பியது மைத்திரி. அவரைப் பின்னிருந்து இயக்கியது மகிந்த அணி. புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அடுத்தகட்ட வாசிப்புக்கு போவதற்கிடையில் மைத்திரி ஒரு யாப்புச்சதியைச் செய்தார். ஆனால் இப்பொழுது மகிந்த ரணிலில் ஒப்பீட்டளவில் தங்கியிருக்கிறார். எனவே தனது யாப்புருவாக்க முயற்சியை எதிர்த்த மகிந்தவை ஒப்பிட்டுளவில் சமாளிக்கக்கூடிய பலத்தோடு ரணில் காணப்படுகிறார்.அதனால் ஒரு தீர்வு முயற்சிக்கு எதிராக மஹிந்த காட்டக்கூடிய எதிர்ப்பை ஒப்பிட்டுளவில் குறைக்கலாம் என்று அவர் நம்ப முடியும்.

நாலாவதாக,தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படுகிறார்கள்.கூட்டமைப்பு முன்னைய தீர்வு முயற்சியின் பொழுது 16 ஆசனங்களைக் கொண்டிருந்தது. இப்பொழுது 10 ஆசனங்கள்தான். தமிழ்த் தேசியத் தரப்பு மூன்றாகச் சிதறிக் கிடக்கிறது. அதேசமயம் தமிழ் தேசியப் பரப்புக்கு வெளியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. குறிப்பாக கிழக்கில்,கிழக்குமைய வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் வியாழேந்திரன் போன்றவர்கள் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார்கள்.எனவே வடக்கு-கிழக்கு இணைப்புப் பொறுத்து கிழக்கு வாழ் தமிழ்மக்கள் மத்தியிலேயே அதற்கு எதிரான கருத்துக்களை உருவாக்கக்கூடிய சக்திகள் பலமடைந்து வருகின்றன.இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரம்சம். அண்மையில் அவர் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைமைப் பொறுப்பை பிள்ளையானுக்கு வழங்கியிருந்தார் என்பதனை இங்கே கவனிக்க வேண்டும்.

எனவே தொகுத்துப் பார்த்தால் முன்னைய சமாதான முயற்சிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை ரணில் ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறார். சூல் ஹெய்மை அரங்குக்குள் கொண்டு வந்ததன்மூலம் அவர் மேற்கு நாடுகளையும் கவர முடியும். தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், சிங்கள மக்கள் மத்தியிலும் கடும்போக்கு வாதிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க தனது தீர்வு முயற்சியை புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் முன்னகர்த்த முடியும்.

எதிர்ப்பு-ஆதரவு, தமிழ்த் தரப்பின் பலம்-பலவீனம் என்பவற்றைக் கூட்டி கழித்துப் பார்த்தால்,ரணிலுக்கு ஒப்பீட்டளவில் சாதகமான நிலை என்று கூறலாம்.எனவே அவர் மெய்யாகவே ஒரு தீர்வு முயற்சியை நோக்கி நகரக்கூடுமா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தைக் கவர்வதற்கும் அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரித்துக் கையாள்வதற்கும் அவருக்கு அது உதவும்.ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரு முதலாளிகளை அவர் நெருங்கிச் செல்லத் தொடங்கிவிட்டார். முன்னைய நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் அவர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றை நெருங்கிச் சென்றார். இம்முறை பெரு முதலாளிகளை நெருங்கிச் செல்கிறார். அவரிடம் ஏதோ ஓரு புத்திசாலித்தனமான திட்டம் இருப்பதாகவே தெரிகிறது. அல்லது குறைந்தபட்சம், பன்னாட்டு நாணய நிதியம், ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்காகவாவது,அவர் ஒரு தீர்வை கண்டுபிடிக்க போவதான தோற்றத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்.

இந்நிலையில் மூன்றாகச் சிதறிக் காணப்படும் தமிழ்த் தேசியத் தரப்பு அதனை புத்திசாலித்தனமாக அணுக வேண்டியுள்ளது. அவர் ஒரு நரி. சூழ்ச்சிகள் செய்வார் என்று கூறிக்கொண்டு, தமிழ்த் தரப்பு அப்பாவி வெள்ளாடுகளாக இருக்கத் தேவையில்லை. பதிலுக்குத் தாங்களும் சூழ்ச்சிகளில் வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும்.

– நிலாந்தன்

புனித யாக்கப்பர் தேவாலய படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளையில் இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதோடு உயிரிழத்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி அஞ்சலியும் செலுத்தினர்.

குறித்த தேவாலயமானது 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் பதற்றம்

கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் குழுவினர் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

கூட்டம் முடிவடைந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியேறிய போது, ​அங்கிருந்த இளைஞர்கள் அவர்களை கூச்சலிட்டு கடுமையாக திட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் விமல் வீரவன்ச தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தை விட்டு வாகனத்தில் வெளியேறியனார்.

இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் வெளியே வரமுடியாமல் மண்டபத்திற்குள் இருந்தனர்.

பின்னர் வாசுதேவ மற்றும் திஸ்ஸ விதாரணவும் எதிர்ப்புக்கு மத்தியில் தமது வாகனங்களில் ஏறிச் சென்ற வேளையில் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான நிலைமை தொடர்ந்தது.

சுமார் 15 நிமிடங்களுக்கு இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான நிலைமை நீடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.