நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் இன்றைய விவாதம் இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. உண்மையிலே ஜனநாயகத்தின் தூண்களில் நாலாவது தூணான ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? அல்லது தொடர்ச்சியாக இந்த ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என கோவிந்தன் கருணாகரம் எம்.பி தெரிவித்துள்ளார்
இன்றைய தினம்(24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்த சட்ட மூலம் இந்த கால கட்டத்திலே எதற்காக கொண்டு வரப்படுகிறது? உண்மையில் இந்த சட்ட மூலத்தில் கூறிய நோக்கங்களை அடைவதற்காகவா என்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல இந்த உயரிய சபையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் உண்டு. நமது அரசியல் அமைப்பு போதுமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அரசியலமைப்பை பேணி பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறும் செயல்பாடாகவே நான் இந்த சட்ட மூலத்தை நான் நோக்குகின்றேன். மீண்டும் ஒரு அரகலய நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது, என்ற அச்சமே இந்த சட்டமூலத்தை பின்னணி என்பது எனது கருத்து.
ஆட்சித்தலைவர்களிடமிருந்து அமைச்சர்கள் வரை விமர்சனங்களை எதிகொள்ள தயாரில்லை. தமது ஊழல் நிர்வாக சீர்கேடுகளை புள்ளி விபரங்களுடன் புட்டு வைக்கும் போது ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் பயப்பிரதிபலிப்பே இந்த சட்ட மூலம். நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு சாவுமணி. மக்களின் சிந்தனை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கல்லறையில் வைப்பதே இச்சட்ட மூலமாகும். உண்மையிலே இந்த நாட்டில் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் ஊடக அடக்குமுறையை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார்கள்.
மேலும் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசாங்க அமைச்சர்களினால் ஏற்படுத்தப்படும் ஊழல்களுக்கு எதிராகவோ யாரவது கருத்திட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இந்த நாட்டிலே உண்மையை எழுதிய ஊடகவியலாளர்கள் அரசினால் நடத்தப்படும் படுகொலைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே கொல்லப்பட்டுள்ளார். அதிலும் 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் ஊடகவியலாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசினாலும் அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் அரசதரப்பு படைகளினால் அல்லது வெள்ளை வான்களாலும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் இந்த நாட்டிலே நடந்தேறி இருக்கிறது.
கருத்து வெளிப்பாடு தொடர்பாக இன்னுமொரு ஜனநாயகவாதி கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் இவ்வேளையில் எனக்கு ஞாபகம் வருகின்றது. உன்னுடைய கைத்தடியை சுழற்ற உனக்கு பூரண சுதந்திரம் உள்ளது. ஆனால் உன்னுடைய கைத்தடி எனது மூக்கு நுனியை தொடாதவரை என்று நான் படித்தது எனக்கு ஞாபகம் வருகின்றது.
இன்று கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்துதலும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டி பார்ப்பதுவுமே கருத்துச்சுதந்திரம் என்ற கருதுகோளாக உள்ளது. அதுவும் தற்போது சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகியமை. உண்மைகளை திரிவுபடுத்துவதை ஊக்கமளிக்கும் நிலைமைகளை ஏற்படுத்துதப்பட்டுள்ளது. போலிப் பெயர்களில், போலி முகங்களில் உண்மைக்கு சவாலாக இருப்பவர்களை தண்டிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.
ஊடகவியலாளர்கள் என்று முகம் காட்டி ஊடக தர்மத்தை சிதைக்க முகம் காட்டுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தேவையும் அரசுக்கு உண்டு. உண்மையிலே இந்த முகநூல் வழியாகவோ அல்லது வட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களூடாகவோ, தனிப்பட்ட காழ்புணர்ச்சியினால் பல சமூக சீர்கேடுகள் எமது சமூகத்திலே இடம் பெறுகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் குடும்பங்கள் பிரிவதும் சிலர் தற்கொலைக்கு தூண்டபடுவதற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் உள்ளது. ஆனால் அரசு தன்னை பாதுகாக்க, ஊழலை பாதுகாக்க, தனது அமைச்சரவையை பாதுகாக்க, தனது ஆட்சியை பாதுகாக்க, பொதுவான மக்கள் எழுச்சியை அடக்குவதாக இது இருக்க கூடாது. இதற்கேற்ப வகையிலும் இச்சட்டங்களில் திருத்தங்கள் ஏற்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது என்றும், கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. 13ஆவது திருத்தம் இன்று நலினமடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், 13ஆவது திருத்தத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் உரிய முறையில் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து மோதல்களுக்கும் அரசியல் முரண்பாட்டுக்கும்தான் தமிழ்க் கட்சிகள் முக்கியத்துவம் வழங்கிச் செயற்பட்டனவே அன்றி, 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது உரியமுறையில் பயன்படுத்த எத்தனிக்கவில்லை.
இதனால்தான் வடக்கு மாகாணத்துக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படாமல் மீளத் திரும்பியது. கிழக்கு மாகாணத்திலும் இதேபோன்றதொரு நிலையே இருந்தது. ஆக, இருக்கும் அதிகாரங்களைக்கூட சரிவரப் பயன்படுத்தாமலிருந்துவிட்டு கூடுதல் அதிகாரங்களைத் தாருங்கள் என்று கேட்பது பொருத்தமற்றது.” – என்றார்.அ
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை குறிப்பிடும் சகலரையும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதி;ப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கள் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் பாராளுமன்றத்துக்குள் உள்ளதா,வெளியில் உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும், 225 உறுப்பினர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அமைப்புகள் பல யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் அவற்றை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 98 சதவீதமானோர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆகவே ஜனநாயகம் பாராளுமன்றத்தில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சட்டமூலம் கண்காணிப்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.ஆகவே எமது அரசாங்கத்தில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு,அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டமியற்றப்படும்.
இந்த சட்டமூலத்தில் சமூக வலைத்தளங்கள் குற்றவாளியாக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் குற்றவாளியாக பார்க்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை பேஸ்புக், மெட்டா, கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த சட்டமூலத்தினால் கிராமிய மற்றும் நகர வணிக பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில் ”உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இராணுவம், காவல்துறை மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
”தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இந்த நடைமுறை மூலம் தெளிவான தரவு அமைப்பொன்றை உருவாக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் இன்று உரையாற்றியிருந்தனர்.
இணைய பாதுகாப்புச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பெரும் சர்ச்சைகளுக்கு இது முகம் கொடுத்திருந்தது.
ஊடக நிறுவனங்கள் மட்டுமன்றி, சிவில் சமூக அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள், புத்திஜீவிகள் என பலரும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இந்த சட்டமூலமானது பல்வேறு திருத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதையடுத்து, நேற்றும் இன்றும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இடம்பெற்றது.
இன்று சபையின் இரண்டாம் வாசிப்பின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்ற நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் ஆளும் தரப்பினர் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தரலங்கா சபாவ, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களித்தன.
அந்தவகையில், குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 46 மேலதிக வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டது.