சுடலைக்கழிவு அரசியல்? – நிலாந்தன்

1970களில் தமிழ் இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்தவரும் தமிழரசு கட்சியோடு நெருங்கிச் செயற்பட்டவரும்,பிந்நாளில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின், இணைந்த வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமாகிய, ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளரின் நேரடி அனுபவம் இது…….தமிழரசுக் கட்சியோடு நெருங்கிச் செயற்பட்ட காலப்பகுதியில் இளையவர்கள் அமிர்தலிங்கத்தின் வீட்டு முன் விறாந்தையில் தங்குவதுiண்டாம். ஒருநாள் இரவு அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்காக போகும்பொழுது அவர்களோடு சேர்ந்து அமிர்தலிங்கத்தின் மகன் ஒருவரும் சென்றிருக்கிறார். இரவு முழுதும் மகனைத் தேடிக் காணாத அமிர்தலிங்கம் அடுத்த நாள் காலை இந்த இளைஞர்களோடு அவரைக் கண்ட பொழுது பின்வரும் தொனிப்படப் பேசியிருக்கிறார்… “நீயும் படிக்காமல் இவங்களப்போல காவாலியாத் திரியப் போறியா?”

1970களில் அமிர்தலிங்கம் எந்த நோக்கு நிலையில் இருந்து அவ்வாறு கூறினாரோ,அதே நோக்கு நிலையில் இருந்துதான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின் சுமந்திரனும் கதைக்கிறாரா ? “20 வருடங்களாகக் கூட இருந்தவர்களை நல் வழிப்படுத்த எடுத்த முயற்சியிலும் நாம் தோல்வி அடைந்து விட்டோம்” இவ்வாறு சுமந்திரன் அண்மையில் சாவகச்சேரியில் வைத்துக் கூறியுள்ளார். முன்பு பங்காளிகளாக இருந்த கட்சிகளை நோக்கித்தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அவர்களை நல்வழிப்படுத்த முற்பட்டோம் என்று கூறுகிறார். ஆயின் அவர்கள் திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று பொருள்.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குற்றவாளிகள் அல்லது திருத்தப்பட வேண்டியவர்கள் என்று அவர் கருதுகிறாரா? இரண்டு தசாப்தங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது இனித் திருந்த மாட்டார்கள் என்று கூறுகிறாரா?

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஏறக்குறைய அரசாங்கம் கூறுவதுபோல புனர்வாழ்வழிப்பது என்ற பொருளில்தான்.ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்வாறு கூறத்தக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? நாங்கள் தூய மிதவாத கட்சி. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள்.எமது கைகளில் ரத்தம் இல்லை. கொலைப் பழி இல்லை.நாங்கள் படித்தவர்ள்;நாங்கள் எப்பொழுதும் நல்வழியில்தான் செல்கிறோம்…. என்று நம்பும் ஒரு மிதவாத பாரம்பரியத்தில் இருந்தா அவ்வாறு கூறப்படுகிறது?

ஆனால் தமிழரசுக் கட்சி அப்படி கூறமுடியாது. ஏனெனில் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அரசியல் செயற்பாட்டாளரும் உட்பட ஆயிரக்கணக்கான இளவயதினரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதே தமிழ் மிதவாதிகள்தான்.குறிப்பாக தமிழரசு கட்சியானது தேர்தல்களில் தோற்கும்பொழுது தீவிர தேசிய நிலைப்பாட்டை கையில் எடுக்கும்.(இப்பொழுது, பேச்சுவார்த்தை மேசையில் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பது போல).அப்பொழுது அவர்கள் பேசும் வீர வசனங்களில் மயங்கி இளையோர் அவர்கள் பின் செல்வார்கள்.அந்த இளையோரை தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் திருப்பி அவர்களைத் தண்டிக்குமாறு தூண்டியது தமிழ் மிதவாதிகள்தான். மேடைகளில் அவர்கள் செய்த முழக்கங்களை கலாநிதி சிதம்பரநாதன் “வார்த்தை வன்முறை-வேர்பல் வயலன்ஸ்” என்று வர்ணிப்பார். இவ்வாறு தமிழ் மிதவாதிகளால் தூண்டப்பட்டு போசிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் ஆயுதப் போராட்டம் ஆகும். எனவே தமிழரசுக் கட்சி இதில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறமுடியாது. தனது கையில் ரத்தம் இல்லை என்றும் கூறமுடியாது.

தமிழரசு கட்சியின் தேர்தல் மேடைகளில் இளையோர் உணர்ச்சிவசப்பட்டு விரலை வெட்டி தலைவர்களின் நெற்றியில் ரத்தத் திலகம் வைத்தார்கள். அவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த ஒருவர் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக வந்தார்.அவருக்கு இயக்க பெயரும் பொட்டு என்று வைக்கப்பட்டது. இப்படியாக இளைஞர்களை ரத்தம் சிந்துமாறு ஊக்குவித்த ஒரு கட்சி இப்பொழுது தன்னை ஒரு தூய மிதவாதக் கட்சியாக கூறிக்கொள்ள முடியாது.

ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் இந்தியாவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பொழுது அதை அமிர்தலிங்கம் தடுக்கவில்லை.

இவ்வாறு தமது இயலாமை,பொய்மை,போர்க்குணமின்மை என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசைதிருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன்மூலம் தமிழ்த் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின.ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேறத் தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள்.ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.கூட்டமைப்பு எனப்படுவதே 2009க்கு முந்திய ஒரு பண்புருமாற்றத்தின்-trasformation-விளைவுதான்.நவீன தமிழ் அரசியலில் தோன்றிய சாம்பல் பண்பு அதிகமுடைய (grey) ஒரு கட்டமைப்பு அது. அப்பண்புருமாற்றத்தை 2009 க்குப் பின் அடுத்த கட்டக் கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல சம்பந்தர் தவறிவிட்டார்.வரலாறு அவருக்கு நிர்ணயகரமான,உன்னதமான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது.ஆனால் வரலாறு அவருக்கு வழங்கிய பொறுப்பை அவர் பொருத்தமான விதத்தில் நிறைவேற்றவில்லை.ஒரு பண்புருமாற்ற காலகட்டத்தை அவர் வீணடித்து விட்டார்.ஒரு பண்புருமாற்றத்துக்குத் தலைமைதாங்க அவரால் முடியவில்லை.அதற்கு அவசியமான அரசியல் உள்ளடக்கமும் அவரிடமில்லை.

 

தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். ஆயுதப் போராட்டம் என்றாலே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். இதில் எல்லாருக்கும் ஏதோ ஒரு விகிதமளவுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு.தமிழ் மக்கள் தங்களுடைய இறந்த காலத்தைக் கிண்டத் தொடங்கினால் பிணமும் நிணமும் எலும்புக்கூடுகளுந்தான் வெளியேவரும்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை இறந்த காலத்தை கிண்டுவது என்பது அதன் பெரும்பாலான அர்த்தத்தில் புதைமேடுகளைக் கிண்டுவதுதான்.அப்படிக் கிண்டத் தொடங்கினால்,ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக்குவதிலேயே தேசம் பல துண்டுகளாக சிதறிப் போய்விடும்.

ஒர் ஆயுத மோதலுக்கு பின்னரான அரசியல் என்ற அடிப்படையில்,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்று நீதிக்கான போராட்டம்.இரண்டு,அந்தப் போராட்டத்துக்காக தேசத் திரட்சியை ஆகக்கூடியபட்சம் உடையவிடாமல் பாதுகாப்பது.அவ்வாறு தேசத்திரட்சியை பலமான நிலையில் பேணுவதென்றால்,அதற்கு தமிழ் அரசியலில் பண்புருமாற்றம் அவசியம்.அதாவது வெளி நோக்கிய நீதிக்கான போராட்டம்; உள்நோக்கிய பண்புருமாற்றம்.அதற்கு பரந்த மனம் கொண்ட பெருந்தலைவர்கள் வர வேண்டும்.

ஆனால் சம்பந்தர் அவ்வாறான ஒரு பெருந் தலைவரல்ல.தமிழ் அரசியலில் முன்னெப்பொழுதும் தோன்றியிராத ஒரு சாம்பல் பண்புமிக்க கூட்டுக்கு சுமார் 20 வருடங்கள் அவர் தலைமை தாங்கினார்.தமிழ் மிதவாத அரசியலிலேயே அதிகளவு ஆசனங்களை(22) வென்ற அக்கூட்டு படிப்படியாகச் சிதைந்து போய்விட்டது.அதற்கு அவரும் பொறுப்பு.அவர் தலைமை தாங்கிய ஒரு கூட்டுக் கலைந்தபொழுது,அதன் தலைவராக,அதைக்குறித்து அவர் உத்தியோகபூர்வமாக எதையும் சொல்லவில்லை.அல்லது சொல்ல முடியவில்லை.கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தருடைய தலைமைத்துவத்தின் தோல்வியுந்தான்.தமிழ் பண்புருமாற்ற அரசியலின் தோல்வியுந்தான்.அது தமிழரசுக் கட்சியின் தோல்வியுமா என்பதை இனிவருங்காலமே தீர்மானிக்கும்.

கடந்த சில கிழமைகளுக்குள் கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை தமிழரசு கட்சியும் இறுக்கமான ஒரு கட்சியாக உள்ளதா என்ற கேட்குமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன.கடந்த கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது மார்ட்டின் வீதியில்,கட்சித் தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.ஆனால் வேட்பு மனுக்கள் சுமந்திரனின் அணியைச் சேர்ந்த ஒருவருடைய அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு நேரடியாக கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றஞ் சாட்டப்படுகிறது.அதாவது கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை என்று பொருள்.அது மட்டுமல்ல, கிளிநொச்சியில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது, சுமந்திரனுக்கு விசுவாசமான அணியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகிறார்கள்.அவர்களில் சிலர் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் இணைந்து விட்டார்கள்.சிறீதரனின் அன்ரன் பாலசிங்கம் கட்சியை எங்கே கொண்டு போகிறார்?

பிரதேசசபைத் தவிசாளரின் வீட்டின் முன் போடப்பட்ட சுடலைக்கு கழிவு

கடந்த திங்கட்கிழமை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டுக்கு முன் சுடலைக் கழிவுகள் ஒரு மூட்டையாகக் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பதனை அவர் முகநூலில் பதிவேற்றியுள்ளார்.அதை யார் செய்தது என்பது நிரூபிக்கப்படவில்லை.எனினும் முகநூலில் பிரதேச சபை தவிசாளர் எழுதிய குறிப்பில்,சுயேட்சைக் குழுவின் மீதே குற்றஞ் சாட்டப்படுகிறது.ஒரே கட்சிக்குள் ஒரே தேர்தல் தொகுதிக்குள் ஏற்பட்ட மோதல்கள் சுடலைக் கழிவுகளை வீட்டின் முன் போடும் அருவருப்பான ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டனவா? இருபது வருடங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது முன்னாள் பங்காளிகளை ஒட்டுக் குழுக்கள்.தூள் கடத்திகள்,தலையாட்டிகள் என்று அழைக்கலாமென்றால்,நாளை,கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறுபவர்களுக்கு என்னென்ன பட்டங்களைச் சூட்டப் போகிறார்கள்?

இதுவே இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் கால எல்லை – ஜெகான் பெரேரா

பெருமளவு தாமதத்துக்கு பிறகு, இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம், ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால், அது சட்டவிரோதமான ஆட்சிமுறை சிக்கலுக்குள் நாட்டை தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும்.

நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் அரசாங்கத்தின் விருப்பம் அல்ல. தங்களது வெற்றிவாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் எதிர்க்கட்சிகளினதும் அவற்றின் வேட்பாளர்களினதும் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதில் அக்கறைகொண்ட சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு குழுக்களினதும் விருப்பமாகும்.

மக்களினால் தெரிவுசெய்யப்படும் பதவிகளை கைப்பற்றுவதற்கு அரசியல்வாதிகள் வாய்ப்புக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக பாடுபடுகின்ற சிவில் சமூக அமைப்புக்களை பொறுத்தவரையில், அவை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், ஜனநாயக பொறிமுறைகள் தொடர்ந்து செயற்படுவதை உறுதிசெய்வதில் நாட்டம் கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தல்களை மார்ச் 9 நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்ற போதிலும், உண்மையில் அந்த நேரத்தில் அவை நடைபெறுமா என்ற சந்தேகம் தொடர்கிறது. தேர்தல்களை நடத்துவதற்கு திறைசேரியில் பணமில்லை என்று அரசாங்க பேச்சாளர்கள் கூறுகிறார்கள். இதை அரசாங்கம் உயர் நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறது.

பொருளாதாரம் மீட்சி பெறும் வரை நாட்டுக்கு அரசியல் உறுதிப்பாடு தேவைப்படுகிறது என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் வேறு பேச்சாளர்கள் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புதுமையான வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு எடுத்தபோது அதன் ஐந்து உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்ததால், அந்த தீர்மானம் கேள்விக்குரியதாகும். ஏனைய மூன்று உறுப்பினர்களும் மெய்நிகர் காட்சி வழியாக கூட்டத்தில் பங்கேற்றதாக ஆணைக்குழு பதிலளிக்க வேண்டியேற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால், அது எவ்வாறு அமைந்தாலும், விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் கூட ஏதாவது வழியில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமாக இருந்தால், அதை எதிரணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கும். அவை நிவாரணம் பெற நீதிமன்றங்களை நாடும். சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் இதில் இணைந்துகொள்ளும்.

அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களை கவனத்தில் எடுப்பதா அல்லது நேரடியாக சட்டத்தின் பிரயோகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பதே நீதிமன்றம் எதிர்நோக்கக்கூடிய கேள்வியாக இருக்கும்.

அண்மைய வழக்குகளில் குறிப்பாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பெரிதும் விரும்பப்படுகின்ற ‘முறைமை மாற்றத்தை’ சட்ட முறைப்படியான வழிமுறைகளின் மூலம் கொண்டுவருவதற்கு நாட்டத்தை காட்டியிருக்கிறது.

போராட்ட இயக்கம்

தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வீதிப்போராட்டங்களில் இறங்கவேண்டும் என்று பெருமளவு நெருக்குதல்கள் அரசியல் கட்சிகள் மீது பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறு செய்வதற்கு எதிரணிக் கட்சிகள் துணிச்சல் கொள்ளலாம். ஏனென்றால், மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் தேர்தல் தோல்விக்கு அரசாங்கம் அஞ்சுகிறது என்று அவை ஒரு மதிப்பீட்டை செய்யக்கூடும். முறைகேடாக சொத்துக்களை குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கும் நிலையில், பொருளாதாரத்தை பாதுகாக்கவேண்டிய தேவை குறித்த அரசாங்கத்தின் கருத்தை பெருமளவுக்கு கவனத்தில் எடுக்கக்கூடிய நிலையில் மக்கள் இல்லை.

நேர்மைக்கேடான முறையில் வர்த்தகக் குழுக்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கின்ற பணம் 53 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த தொகை இலங்கையின் கடன்களை தீர்க்கப் போதுமானவை.

கடுமையான வரிகளினாலும் பணவீக்கத்தினாலும் படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் இதனால் பெரும் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அந்த பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இந்த கம்பனிகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை.

மக்களின் ஆதரவு மோசமாக குறைந்துபோயிருக்கும் பின்னணியில் போராட்ட இயக்கத்துக்கு எதிராக கடுமையான  நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தின்  ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத – ஜனநாயக தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயங்குகின்ற ஒரு அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கைகளில் இறங்குவதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து பாதுகாப்புப் படைகளும் அக்கறை கொள்ளக்கூடும். மக்களின் ஒரு பகுதியான ஆயுதப்படைகள் அவர்களுக்காக அவர்களுடன் நிற்கவேண்டும் என்று உணரக்கூடும்.

சர்வதேச மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்த தடைகள் பாதுகாப்பு படைகளுக்கு ஓர் எச்சரிக்கையாகும். அவர்கள் இருவருக்கும் நேர்ந்த கதி தங்களுக்கும் நேரலாம் என்று படையினர் உணரக்கூடும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் போராட்ட இயக்கத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்புப் படைகள் மிகுந்த கட்டுப்பாடான முறையில் நடந்துகொண்டதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. தனது ஆணையை இழந்துவிட்டதாக தோன்றிய ஒரு ஜனாதிபதிக்கு ஆதரவாக மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்பட பாதுகாப்பு படைகள் விரும்பவில்லை.

மறுபுறத்தில், அரசாங்கம் தேர்தலை நடத்த விடுவதற்கு தீர்மானித்தால், அதன் அச்சங்களையும் நடைமுறையில் காண நேரிடலாம். பொருளாதாரத்தை இயக்க நிலைக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் இயலாமை அதன் தேர்தல் வாய்ப்புக்களுக்கு பாதகமாக அமையும்.

பொருளாதார உறுதிப்பாடு போன்ற ஒரு தோற்றப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் இல்லாமலும், நீண்ட நேர மின்வெட்டு இல்லாமலும் இருக்கின்ற அதேவேளை பொருளாதாரம் அதிக பெரும்பான்மையான மக்களுக்கு சிறிய வருமானத்தையே கொடுக்கிறது. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் 8 சதவீதத்தினால் சுருங்கிய அதேவேளை இவ்வருடம் 4 சதவீதத்தினால் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இன்னமும் கிட்டாத நிலையில் பொருளாதார வளர்ச்சி நோக்கங்களுக்கான சர்வதேச கடனுதவிகளை அரசாங்கத்தினால் பெறமுடியாமல் இருக்கிறது.

உறுதிமொழி

உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க ஒரு தோல்வி அல்லது முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் நிலை கூட ஏற்பட்டால், அதன் நியாயப்பாடு மேலும் குறைந்துவிடும்.

தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு தீர்மானங்களை எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் ஆற்றலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். 2020 ஒகஸ்ட் பொதுத்தேர்தலில் பெற்ற ஆணையை வைத்துக்கொண்டு தற்போது அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு நியாயப்பாடு இருப்பதாக உரிமம் கோரக்கூடியதாக இருக்கிறது. அந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்தான வெற்றி கிடைத்தது. இப்போது கூட 225 ஆசனங்களில் 134 ஆசனங்களை அது கொண்டிருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகவைப்பதில் கடந்த வருடம் போராட்ட இயக்கம் கண்ட வெற்றி முன்னைய அந்த ஆணையின் நியாயப்பாட்டை வலுவிழக்கச் செய்துவிட்டது. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் மற்றும் இராணுவ பலத்தை மிகவும் சாதுரியமான முறையில் பிரயோகித்து போராட்ட இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதில் வெற்றி கண்டார். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய ஒரு தோல்வி பயனுடைய முறையில் ஆட்சியை தொடருவதில் அரசாங்கத்தின் ஆற்றலை பலவீனப்படுத்திவிடும்.

உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றனவோ இல்லையோ, அடுத்தகட்ட போராட்ட இயக்கம் பிரதான அரசியல் எதிரணிக் கட்சிகளின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும். அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தன்னியல்பாக மூண்ட முதல் கட்ட போராட்டத்தை போன்று இருக்காது.

கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பதவி விலகியபோது போராட்ட இயக்கத்தினால் சொந்த தலைமைத்துவத்தின் மூலம் அதை பதிலீடு செய்யக்கூடியதாக இருக்கவில்லை.

ஆனால், இனிமேல் போராட்ட இயக்கத்துக்கு பிரதான எதிரணி கட்சிகளே தலைமைதாங்கி வழிநடத்தும். பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கும்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில்  இரண்டரை வருடங்கள் நிறைவடைந்து, அதை எந்த நேரத்திலும் கலைக்கக்கூடிய அதிகாரத்தை ஜனாதிபதி பெறும் தருணத்துடன் சமாந்தரமானதாக அந்த கோரிக்கை அமையும். இத்தகைய சூழ்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக உறுதியளித்துவரும் அரசியல் சீர்திருத்தங்களை ஜனாதிபதி முன்னெடுப்பதற்கான கால எல்லை சுருங்கிப்போகும்.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நீடித்து வருகின்ற சிக்கலான இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி இன மற்றும் மத சிறுபான்மையினங்கள் மத்தியில் குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் பெரும் நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது. ஜனாதிபதியும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரச்சினைகளை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும்  கூட பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாதத்தை ரத்து செய்தல், சொத்துக்குரியவர்களின்  உரிமைகளை கருத்தில் எடுக்காமல் இராணுவத்தினாலும்  தொல்பொருளியல் திணைக்களத்தினாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், கடந்த கால மனித உரிமை மீறல்களை விசாரணை செய்து மனக் காயங்களை குணப்படுத்துவதற்கான வழிவகைகளை முன்வைப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைத்தல் என்பனவே அவையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைத்தால் நாட்டில் தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றி, நோபல் சமாதானப் பரிசு கமிட்டியினால் பரிசீலிக்கப்படக்கூடிய முன்னுதாரணத்தை உலகுக்கு காட்டிய ஒரு தலைவராக இலங்கையின் வரலாற்றில் தனது முத்திரையை பதிக்கமுடியும்.

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது?

ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிய பரா மிலிட்டரிக் குழுக்கள் அவ்வாறு ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கப்பட்டன. அதாவது அரசாங்கத்தோடு சேர்ந்து தமது சொந்த மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற பொருள்பட.

அப்படிப் பார்த்தால் இப்பொழுது தமது அரசியல் எதிரிகளை ஒட்டுக் குழுக்கள் என்று அழைப்பதனை எப்படி விளங்கிக் கொள்வது? அவர்கள் அரசாங்கத்தோடு நிற்கிறார்கள் என்ற பொருளிலா? கஜேந்திரகுமார் ஒரு படி மேலே சென்று அவர்களை இந்தியாவின் ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார். இவ்வாறு மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கும் தகுதிகளை இவர்கள் எப்பொழுது பெற்றார்கள்? எங்கிருந்து பெற்றார்கள்?குறிப்பாக சாணக்கியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வர முன்பு எங்கே நின்றார் ?யாரோடு நின்றார் ?எப்படி அவர் தமிழரசு கட்சிக்குள் வந்தார்? இப்பொழுது மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று கூறும் இவர்கள் எப்பொழுது தங்களை தியாகிகள் என்று நிரூபித்தார்கள்?

கடந்த 13 ஆண்டுகளாக நினைவு கூர்தலில் துணிச்சலான சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததைத் தவிர, நாடாளுமன்றத்தில் வீரமாகப் பேசியதைத் தவிர எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு தியாகமும் செய்திருக்கவில்லையே? குறைந்தது தங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சலுகைகளைக்கூடத் துறக்கவில்லை. மற்றவர்களைத் துரோகிகள் என்று அழைப்பதால் யாரும் தியாகிகள் ஆகிவிட முடியாது. அவரவர் தாங்கள் தங்களுடைய சொந்த தியாகங்களின் மூலந்தான் தங்களை தியாகிகளாகக் கட்டியெழுப்பலாம். ஆனால் கடந்த 13 ஆண்டு கால அரசியலானது ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இப்பொழுதும் தியாகி – துரோகி என்ற வகைப் பிரிப்புக்குள் சிக்கப் போகின்றதா?

ஆயுதப் போராட்டத்தில் ஒருவர் தன்னைத் தியாகி என்று நிரூபிப்பதற்கு ஆகக்கூடியபட்ஷ வாய்ப்புக்கள் இருக்கும்.ஆனால் ஒரு மிதவாத அரசியலில் அப்படியல்ல. இரண்டுமே இருவேறு ஒழுக்கங்கள். மிதவாத அரசியலில் ஒருவர் தன்னை தியாகி என்று நிரூபிப்பதற்கு காலம் எடுக்கும். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் யாருமே தங்களை தியாகிகள் என்று நிரூபித்திருக்கவில்லை. எனவே மற்றவர்களைத் துரோகிகள் என்று கூறுவதற்கு யாருக்குமே தகுதி கிடையாது.

தனது முன்னாள் பங்காளிகளை நோக்கி தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது ஒருபுறம் அவர்கள் தமது எதிரிகளைக் குறித்து பதட்டமடைவதையும் அது காட்டுகிறது. இன்னொரு புறம் இனி வரக்கூடிய தேர்தல் அரங்குகளில் பிரச்சார உத்திகள் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு இறங்கப் போகின்றன என்பதனையும் அவை கட்டியம் கூறுகின்றன.

தமிழ் மக்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். எனவே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். எல்லாருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு.ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டம் கடந்த காலத்தை கிண்ட வெளிக்கிட்டால், பெருமளவுக்குப் புதைமேடுகளைத்தான் கிண்ட வேண்டியிருக்கும். இறந்த காலத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்ட முற்பட்டால் புதை மேடுகளைத்தான் கிண்டவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் இறந்த காலத்தின் புதை மேடுகளைக் கிண்டினால் பிணமும் நிணமும் எலும்புக் கூடுகளும்தான் வெளியே வரும்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை. அது முன்னைய மிதவாத அரசியலின் தோல்வியில் இருந்தே பிறந்தது.இன்னும் கூராகச் சொன்னால் மிதவாத அரசியலின் மீது தமிழ் இளையோருக்கு ஏற்பட்ட விரக்தி சலிப்பு ஏமாற்றம் என்பவற்றின் விளைவே ஆயுதப்போராட்டம் எனலாம். அவ்வாறு இளையோரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதில் தமிழ் மிதவாதிகளுக்கு பெரிய பங்கு உண்டு.நமது தேர்தல் தோல்விகளின் போதெல்லாம் தீவிர அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதன்மூலம் தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க முற்றுபட்பட்டிருக்கிறது. இம்முறையும் அதைத்தான் தமிழரசு கட்சி பேச்சுவார்த்தை அரங்கில் செய்து கொண்டிருக்கிறது. தீவிர எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தான் இழந்த தமது வாக்கு வங்கியை மீளப் பெறலாம் என்று தமிழரசு கட்சி நம்புகின்றது.

இவ்வாறு தமது தேர்தல் தோல்விகளின் பின் தமிழரசு கட்சியும் ஏனைய தமிழ் மிதவாத கட்சிகளும் தீவிர நிலைப்பாடுகளை எடுத்ததன.அதன் விளைவாக அவர்கள் இளையோரை வன்முறைகளை நோக்கித் தூண்டி விட்டார்கள். இளம் தலைமுறையின் கோபத்தையும் ஆவேசத்தையும் விரக்தியையும் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக முதலில் தூண்டி விட்டார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ஆயுதப் போராட்ட அரசியலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று எந்த ஒரு தமிழ் மிதவாதக் கட்சியும் கூற முடியாது.

தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும், இளையோரின் கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்பும் நோக்கத்தோடும் தமிழ் மிதவாதிகள் முழங்கிய கோஷங்கள் பல “வேர்பல் வயலன்ஸ்” என்று கலாநிதி சிதம்பரநாதன் கூறுகிறார். ஒரு காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மேடைகளில் தொண்டர்கள் தமது விரலை வெட்டி அந்த ரத்தத்தால் தலைவர்களின் நெற்றிகளில் திலகம் இடுவார்கள். இவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் இயக்கத்தில் சேர்ந்த பொழுது பொட்டு என்று அழைக்கப்பட்டதாக ஒரு கதை உண்டு.

இவ்வாறு தமது இயலாமை, பொய்மை, அயோக்கியத்தனம் என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசை திருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன் மூலம் தமிழ் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின. ஆனால் ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேற தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.தமிழ் அரசியலில் தோன்றிய அதிகம் சாம்பல் தன்மை மிக்க ஒரு கட்டமைப்பு அது. அதை அதன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் வரலாறு அவருக்குத் தந்த ஒரு முக்கியமான பொறுப்பை அதாவது ஒரு பண்புருமாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறினார். அதன் விளைவாக கூட்டமைப்பு கடந்த 13 ஆண்டுகளாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசு கட்சி தனியே வந்துவிட்டது. ஏனைய கட்சிகள் ஒரு கூட்டாக நிற்கின்றன.

ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்கு தலைமை தாங்க முடியாத சம்பந்தர் கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்ல,சுமார் இரு தசாப்த காலங்களுக்கு தான் தலைமை தாங்கிய ஒரு கூட்டு ஏன் சிதைந்தது? அதற்கு யார் பொறுப்பு? என்பதைக் குறித்து இன்றுவரையிலும் உத்தியோகபூர்வமாக எதையுமே கூறாத அல்லது கூற முடியாத ஒரு தலைவராகக் காணப்படுகிறார்.

அவர் தலைமை தாங்கிய கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை அவருடைய கண்களுக்கு முன்னால் அவருடைய தாய்க் கட்சியாகிய தமிழரசு கட்சியும் சிதையக் கூடிய ஆபத்துக்கள் தெரிகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாளன்று,மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமைகள் இருக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்குள்ளேயே சிறு உடைவு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக சுமந்திரனின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சுயேட்சைக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். சில ஆதரவாளர்கள் சந்தரகுமாரின் சமத்துவக் கட்சியோடு இணைந்து விட்டார்கள். இவை தமிழரசு கட்சியும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் பலமான, இறுக்கமான கட்சியாக இல்லை என்பதனை காட்டுகின்றன.கட்சியின் தலைமைத்துவத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி எதிர்காலத்தில் மேலும் விகார வடிவத்தை அடையக்கூடும். முன்னாள் பங்காளிகளை இப்பொழுது ஒட்டுக் குழு என்று கூறுபவர்கள் தலைமைத்துவப் போட்டி என்று வரும் பொழுது உட்கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவரை எப்படி முத்திரை குத்தப் போகிறார்கள்?

எனவே கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தர் ஒரு தலைவராக தோல்வி அடைந்ததை மட்டும் காட்டவில்லை, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி சிதைவடையக்கூடிய ஆபத்துகள் அதிகரிப்பதையும் கட்டியம் கூறுகின்றதா?

ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்கிறாரா? – நிலாந்தன்

ணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை. ஆனால் அனைத்துலக அரங்கில் அவர் ஒப்பீட்டளவில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்படும் ஒரு தலைவர்.ஏனென்றால் அவர் எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒருவர்.அப்படிப்பட்ட முதிர்ச்சியான ஒருவரை விடவும் முதிர்ச்சியும் அனுபவமும் அங்கீகாரமும் குறைந்த டளஸ் அழகப்பெரும வைக் கையாள்வது இலகுவானது என்று இந்தியா கருதியிருக்கக் கூடும்

தாமரை மொட்டுக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான ஒரு முன் தடுப்பாக ரணிலே காணப்படுகிறார். அதனால் அவர் ஜனாதிபதியாக வருவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் தாமரை மொட்டுக்கள் நாடாளுமன்றத்தில் இப்பொழுதும் பலமாக காணப்படுகின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் இந்தியா அவரை அதிகம் வரவேற்கவில்லை என்று கருதப்படுகிறது. பொதுவாக இலங்கைத்தீவின் ஆட்சித்தலைவர் பதவியேற்றதும் முதலில் செல்லும் நாடு இந்தியாதான். ஆனால் ரணில் இன்றுவரை இந்தியாவுக்குப் போகவில்லை அல்லது இந்தியா அவரை வரவேற்கவில்லை?

இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை என்றும் கருதப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அன்மையில் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொழும்புக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.இதை எந்த ஒரு தரப்பும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.ஆனால் அவருடைய வருகைக்குப்பின் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவை கவரும் விதத்தில் தொடர்ச்சியாக நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. அடுத்த சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமரை அல்லது ஜனாதிபதியை பிரதான விருந்தினராக அழைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு இந்திய தலைவர் ஒருவர் வருவதற்கு இந்தியாவை திருப்திப்படுத்தும் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டி இருப்பதாக தெரிகிறது.அதன்படி அண்மை வாரங்களாக பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை புனரமைக்கும் வேலைகள் இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இரண்டாவதாக, மூடப்பட்டிருந்த பலாலி விமான நிலையம் கடந்த வாரம் மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

மூன்றாவதாக, காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு யாத்திரிகர் பயணிகள் சேவை ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கப்படும் என்று ஊகங்கள் நிலவுகின்றன. அதற்குரிய கட்டுமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஆக குறைந்தது 8 மாத காலம் எடுக்கும் என்றும் அதனால் அந்த படகுச் சேவையை உடனடியாக தொடங்க முடியாது என்றும் தகவல் உண்டு. மேலும் இது கடல் கொந்தளிக்கும் காலம் என்பதனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்காலிகமாக அந்த சேவையை தொடங்கலாம் என்றும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு. இந்த சேவையைத் ஆரம்பிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே குரலெழுப்பி வருபவர் ஈழத்து சிவசேனை அமைப்பின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம். அவர் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய தகவல்களின்படி இக்கப்பல்சேவையை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாலாவதாக, இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ்.கலாச்சார மையத்தை திறக்கும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக் கலாச்சார மையத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் விரும்பின. சீனாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட தாமரை மொட்டு கோபுரத்தைப் போல கலாச்சார மைய த்துக்கும் ஒரு அதிகார சபையை உருவாக்கி அதை நிர்வகிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது. எனினும் இக்கலாச்சார மண்டபமானது தமிழ் மக்களுக்கான தனது பரிசு என்ற அடிப்படையில் அதனை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியதாக தெரிகிறது. அதன்படி யாழ் மாநகர சபை மேற்படி மண்டபத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி உதவிகளை இந்தியா வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கென்று பிரதான குழு ஒன்றும் உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளன . அடுத்த சுதந்திர தின விழாவையொட்டி இம்மண்டபம் திறக்கப்படக்கூடும். இந்திய அரசுத் தலைவர்களில் யாராவது ஒருவர் இந்த மண்டபத்தை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலில் பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது இந்திய ஜனாதிபதி வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கலாச்சார மண்டபத் திறப்பு விழாவோடு யாழ்ப்பாணத்திலும் கொண்டாடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இந்தியத் தலைவர் ஒருவரை அழைப்பதன் மூலம் அரசாங்கம் பல்வேறு இலக்குகளை ஒரே சமயத்தில் அடைய முயற்சிக்கின்றதா?

ரணில் விக்ரமசிங்கே தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், இந்தியாவை நோக்கி நெருங்கி செல்வது என்பது அவருக்கு சாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவுகளை சீர்செய்ய முடியும்.அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கையாள முடியும்.அதை நோக்கி அவர் புத்திசாலித்தனமாக நகரத் தொடங்கி விட்டார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு முயற்சித்து வருகிறார். எனினும் இந்தியா அவரை முழுமையாக நெருங்கி வரவில்லை என்று தெரிந்தது.ஆனால் அண்மை வாரங்களாக அவர் அந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாகத் தெரிகிறது.அரசுடைய இனமாக இருப்பதில் உள்ள அனுகூலம் அதுதான். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் அவர்கள் இடைவெளிகளைக் கவனமாகக் கையாள முடிகிறது. ஆனால் தமிழ்த் தரப்போ அரசற்றது. இந்தியா உட்பட எல்லா பேரரசுகளும் இலங்கைதீவில் கொழும்பைக் கையாள்வதைத்தான் தமது பிரதான ராஜிய வழிமுறையாக கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த வை.கோபால்சாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதைக் காண முடிகிறது.பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா கொழும்புக்கு வழங்கிய உதவிகள் முழு நாட்டுக்குமானவை, எல்லா இனங்களுக்குமானவை என்று அவர் கூறுகிறார் .அதாவது கொழும்பில் உள்ள அரசாங்கத்தை கையாள்வதுதான் தொடர்ந்தும் இந்தியாவின் அணுகுமுறையாக காணப்படுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக இலங்கைத்தீவில் இந்தியாவின் பிடி ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்படுகிறது. முன்னைய அரசாங்கங்கள் இந்தியாவோடு இணங்கி ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து பின் வந்த அரசாங்கங்கள் பின்வாங்கின. உதாரணமாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்,பலாலி விமான நிலையத் திறப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.மேலும், வடக்கில் கடலட்டைப் பண்ணைகளின் மூலம் சீனா உள் நுழைவதாக இந்தியா சந்தேகிக்கிறது.அதேசமயம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு முதலில் புதிய நாடாக இந்தியா காணப்படுகிறது. அந்த உதவிகளின்மூலம் இந்தியா ஆறு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது. அவற்றில் முக்கியமானது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் கடல்சார் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு உடன்படிக்கையாகும்.மேலும் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் ஏற்கனவே இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்ட உடன்படிக்கையை முன்நகர்த்தும் விடயத்தில் இந்தியாவுக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்பட்டன. எனினும் வடக்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இணைப்பு திட்டங்கள் பொறுத்து, கொழும்பு இழுத்தடிக்கும் ஒரு போக்கை கடைப்பிடித்து வந்தது. ஆனால் அன்மை வாரங்களில் ரணில் விக்கிரமசிங்க டெல்லியை நெருங்கி செல்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறி இருப்பதாக தெரிகிறது. அதாவது இந்தியாவுடனான உறவுகளை அவர் சீர்செய்யத் தொடங்கிவிட்டார்.இது எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

-நிலாந்தன்

மாவீரர் நாள் 2022 உணர்த்துவது? நிலாந்தன்.

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கடந்த மாவீரர் நாளிலன்று பின்வருமாறு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார் “இன்று மாவீரர் நிகழ்வுக்குப் போனேன்.கடந்த வருடங்களில் எனது பிள்ளைகள் வந்தனர். இப்போது இல்லை. எனது தம்பிக்கு நான் மட்டும் மலர் தூவி அஞ்சலி செய்தேன்..இதை உங்களுடன் இன்று பகிர நினைத்தேன்…..இப்போது என் தம்பிக்கு நான்..இனி வருங்காலத்தில்…?யார் வருவார்…..என யோசித்தேன்‌.என் பிள்ளைகளின் பிள்ளைகள்….? “

இது மாவீரர் நாளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைக் குறித்து உரையாடும் எவரும் சுட்டிக்காட்டும் ஒரு விடயம்தான்.என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்..” உன்னுடைய சகோதரன் உனக்கு உதவுவான். ஆனால் அவனுடைய பிள்ளை உன்னுடைய பிள்ளைக்கு உதவுமா?” என்று. இதே கேள்வியை வேறு ஒரு தளத்தில் நின்று இலங்கைக்கான முன்னாள் ஸ்கண்டிநேவியத் தூதுவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.” முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி இறக்கும்பொழுது இரண்டாம் தலைமுறை எந்தளவு தூரம் தாயகத்தை நோக்கி ஈர்க்கப்படும்?” என்று.

உண்மை ஆயுதப்போராட்டம் நடந்த காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பெரும்பாலான கவனம் யுத்த களத்தை நோக்கி குவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் தாம் விட்டுப்பிரிந்த தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு ஊர்வலம் போனார்கள், வீதிகளை மறுத்தார்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். தமது பெற்றோரின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து அடுத்த தலைமுறையும் அதனால் ஈர்க்கப்பட்டது.அக்காலகட்டத்தில் ஒடுக்குமுறை ஒரு கொடிய போராக இருந்தது. அந்த ஒடுக்குமுறையின் விளைவாக தமிழ்மக்கள் உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்தாலும், அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்றாக திரண்டு காணப்பட்டார்கள். ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நிலைமை அவ்வாறு இல்லை.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நிலத்தை கட்டுப்படுத்தியது. ஒரு கடலை கட்டுப்படுத்தியது. ஒரு கருநிலை அரசை நிர்வகித்தது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையை கொண்டவர்கள். அக் கடல் வழி ஊடாக தாயகமும் டயஸ்போறாவும் இணைக்கப்பட்டன. அந்தக் கடல் வழியூடாக ஆயுதங்கள் வந்தன, ஆட்கள் வந்தார்கள், மருந்து வந்தது, அறிவு வந்தது. ஆனால் 2009 ஒன்பதுக்குப் பின் தாயகத்தையும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தையும் இறுகப் பிணைக்கும் விதத்திலான இடை ஊடாட்டத் தளங்கள்,வழிகள் எவையும் கட்டி எழுப்பப்படவில்லை. மிகக் குறிப்பாக சட்டரீதியாக ஏற்புடைய ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்புகள் எவையும் கிடையாது. சில புலம்பெயர்ந்த தன்னார்வ அமைப்புகள் தாயகத்தை நோக்கி உதவிகளை வழங்குகின்றன. தனி நபர்களும் வழங்குகிறார்கள். ஆனால் அரசியல் அர்த்தத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஓர் இடையூடாட்டத்தளம் தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கும் இடையே கிடையாது.

ராஜபக்சக்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை ஒருவித அச்சத்தோடு பார்த்தார்கள். ஒரு பகுதி அமைப்புகளையும் தனி நபர்களையும் தடைப்பட்டியலில் சேர்த்தார்கள். அதனால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தோடு நெருங்கி உறவாடுவதில் இடைவெளிகள் அதிகமாக காணப்பட்டன.ஆனால் ரணில் விக்கிரமசிங்க தடைகளை நீக்குகிறார் மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக வைத்து அவர் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை தாயகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்.

அதாவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலான அழைப்பு அது. மாறாக தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில் ஒரு தேசத்தை கட்டி எழுப்புவதற்கான முதலீடு என்ற அடிப்படையில் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளோடு இடையூடாடக் கூடிய விதத்தில் பொருத்தமான கட்டமைப்புகள் எத்தனை உண்டு? தாயகத்தை நோக்கி உதவிகளைப் புரியும் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு இடையே இடையூடாட்டமும் குறைவு, ஒருங்கிணைந்த செயல்பாடும் குறைவு. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கடந்த 13 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ஜெனிவாவை எவ்வாறு அணுகுகிறது என்பதுதான்.

இவ்வாறு தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் இடையே தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில், இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி மறையும் பொழுது தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடிய ஆபத்து உண்டா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவீரர் நாள் அந்த இடைவெளி அப்படி ஒன்றும் பாரதூரமாக இல்லை என்பதை உணர்த்தியது.கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த மாவீரர் நாள் தாயகத்திலும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பரவலாகவும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மாவீரர் நாள் என்ற உணர்ச்சிப்புள்ளியில் தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பீட்டளவில் ஒன்று திரண்டன.பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்வதற்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும்.மேலும்,அரசாங்கம் தமிழ்த்தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கும் ஒரு பின்னணியில்,நல்லெண்ணைச் சூழலை உருவாக்கவேண்டிய ஒரு நிர்பந்தமும் அரசாங்கத்துக்கு உண்டு.எனவே உணர்ச்சிகரமான நினைவு நாளை ரணில் ஒப்பீட்டளவில் தடுக்கவில்லை.அதனால், திட்டமிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பெருமளவுக்கு மக்கள் திரண்டிருக்கிறார்கள்.அது தானாக வந்த கூட்டம். அதை யாரும் வாகனம் விட்டு ஏற்றவில்லை. தண்ணீர் போத்தல்,சாப்பாட்டுப் பார்சல், சிற்றுண்டி கொடுத்து அழைத்துக் கொண்டு வரவில்லை.அது தன்னியல்பாகத் திரண்ட ஒரு கூட்டம்.அவ்வாறு மக்கள் திரள்வதற்குரிய ஏற்பாடுகளை கட்சிகளும் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் செய்து கொடுத்தார்கள்.அரசியல்வாதிகள் நினைவுநாட்களின் துக்கத்தையும் கண்ணீரையும் வாக்குகளாக ரசாயன மாற்றம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு அதைச் செய்யக்கூடும். ஆனாலும் தடைகள் அச்சுறுத்தல்களின் மத்தியில் அவர்கள் முன்வந்து ஒழுங்குபடுத்தும் போது மக்கள் திரள்வார்கள் என்பதே கடந்த 13 ஆண்டு கால அனுபவம் ஆகும்.

13 ஆண்டுகளின் பின்னரும் கண்ணீர் வற்றவில்லை;காயங்கள் ஆறவில்லை; கோபமும் தீரவில்லை என்பதைத்தான் நடந்து முடிந்த மாவீரர் நாள் உணர்த்தியிருக்கிறது. ஆனால் காலம் ஒரு மிகப்பெரிய மருத்துவர். அது எல்லாக் காயங்களையும் குணப்படுத்தக்கூடியது.நினைவுகளின் வீரியத்தை மழுங்கச் செய்யக்கூடியது.தமிழ் மக்கள் தமது கூட்டுத் துக்கத்தையும்,கூட்டுக் காயங்களையும்,கூட்டு மனவடுக்களையும் அரசியல் ஆக்கசக்தியாக மாற்ற வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறார்கள்.நீதிக்கான போராட்டத்தின் பிரதான உந்திவிசையே அதுதான்.நினைவுகூர்தல் என்பது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒருபகுதி.இந்த அடிப்படையில் சிந்தித்தால்,காலம் துக்கத்தை ஆற்றுவதற்கு இடையில் துக்கத்தையும் கண்ணீரையும் எப்படி அரசியல் ஆக்கசக்தியாக மாற்றலாம் என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் காயமும் துக்கமும் ஆறாமல் இருப்பதற்குப் பிரதான காரணம் ஒடுக்குமுறைதான். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுதான்.மாறாக தமிழ்த் தரப்பின் திட்டமிட்ட செயலூக்கமுள்ள அரசியலின் விளைவாக அல்ல.நடந்து முடிந்த மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர் ஒருவரிடம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..“மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு வழிகாட்ட அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியவில்லை” என்று. ஒப்பீட்டளவில் அதிக தொகை ஜனங்கள் திரண்ட ஒரு துயிலுமில்லத்தில் வைத்து கூறப்பட்ட வார்த்தைகள் அவை.அதுதான் உண்மை. ஒரு கூட்டுத் துக்கத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டிய ஒரு மக்கள் கூட்டம், கடந்த 13 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது?

கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் காயத்தையும் பொருத்தமான விதங்களில் பொருத்தமான காலத்தில் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றத் தவறினால்,காலகதியில் காயங்கள் இயல்பாக ஆறக்கூடும், துக்கம்  இயல்பாக வடிந்துவிடும். நினைவு நாட்கள் நாட் காட்டிகளில் மட்டுமே மிஞ்சியிருக்கும் ஒரு நிலை வரக்கூடும்?தமிழ் மக்கள் காலத்தை வீணாக்கக் கூடாது.

பேச்சுக்குத் தயாராகுதல்? நிலாந்தன்.

ரணில் விக்கிரமசிங்க விசுவாசமாக ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயாரா இல்லையா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பிடம் கடைசிவரை இருக்க வேண்டும். அவர் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய தேவை அவருக்கு உண்டு. மேற்கு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தை பிணை எடுப்பதென்றால் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக தெரிகிறது.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளும், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நகர்வுகளும் ஒரே பொதிக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வற்புறுத்துவதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியின் உரையிலும் அது கூறப்பட்டது. அதனால் அரசாங்கம் குறைந்தபட்சம் ஒரு தோற்ற மாயையாகவாவது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஆனால் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். அதுபோலவே இந்திய உளவுப் பிரிவின் தலைவர் அண்மையில் இலங்கைக்கு வந்ததாகவும்,இந்தியா சமஸ்ரித் தீர்வுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் அரசாங்கத்திடம் தெரிவித்ததாகவும் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதுவும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். ஆனால் இந்திய உளவுப் பிரிவின் தலைவர் இலங்கை வந்த செய்தி உண்மையல்ல என்றும்,ஒரு ஆங்கில ஊடகம் முதலில் அதைப் பிரசுரித்தது என்றும், அச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கொழும்பு ஊடக வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா கிட்ட எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் பெரியளவிற்கு பலன் அளிக்கவில்லை என்பதும் தெரிகிறது. இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உள்ள இடைவெளியும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். எனவே இப்போதிருக்கும் சூழலை வெற்றிகரமாக கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு. தமிழ் கட்சிகள் அதை எப்படிக் கையாளலாம்?

கடந்த வார கட்டுரையில் கூறப்பட்டது போல தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தங்களுக்கு இடையே ஓர் உடன்படிக்கைக்கு வந்து ஒப்பீட்டளவில் பொதுவான ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, பேச்சுவார்த்தைகளில் கட்சிகளை வழிநடத்தவும் ஆலோசனை கூறவும் ஒரு நிபுணர் குழுவை உருவாக்க வேண்டும். அதில் சிவில் சமூகங்களையும் உள்ளடக்க வேண்டும்.அந்நிபுணர் குழு பேச்சுவார்த்தைக்கான ஒரு நிகழ்ச்சி நிரலை கட்சிகளோடு இணைந்து உருவாக்கலாம். முடியுமானால் பேச்சுவார்த்தை மேசையில் கட்சிசாரா நிபுணர்களுக்கும் இடம் கொடுக்கலாம்.

இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்க் கட்சிகள் பெருமளவுக்கு சமஷ்ரித் தீர்வை அல்லது சமஷ்ரிப் பண்புடைய ஒரு தீர்வை வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்களக் கட்சிகள் அதற்குத் தயார் இல்லை.

ரணில் விக்ரமசிங்க தன்னிடம் என்ன தீர்வு உள்ளது என்பதனை வெளிப்படையாக இதுவரை கூறியிருக்கவில்லை. அவர் கூறவும் மாட்டார். ஆனால் நிச்சயமாக சமஷ்டிதான் தீர்வு என்று வெளிப்படையாகச் சொல்ல அவர் தயார் இல்லை என்று தெரிகிறது.

சஜித் பிரேமதாச, பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இந்த விடயத்தில் அவர் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கட்சிக்குத் தலைமை தாங்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அவர் அதைத்தான் கூறி வருகிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்புகளின் போதும் அவர் அதைத்தான் வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ச பதிமூன்று பிளஸ் என்று கூறுகிறார். அவரும் பல ஆண்டுகளாக அதைத்தான் கூறி வருகிறார்.

எனவே தொகுத்துப் பார்த்தால், சிங்களத் தரப்பில் 13 ஐத் தாண்டி வரத் தேவையான அரசியல் திடசித்தம் கிடையாது. ஆனால் தமிழ்த் தரப்போ கூட்டாட்சியை கேட்கின்றது. அதாவது தமிழ் தரப்பின் கோரிக்கைகளுக்கும் சிங்களத் தரப்பு தரக்கூடியவற்றிற்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. அதை கோட்பாட்டு அடிப்படையில் சொன்னால் நாட்டின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பை மாற்ற சிங்களக் கட்சிகள் தயாரில்லை என்பதுதான்.

அவர்கள் 13ஐப் பற்றிப் பிடிப்பதற்கு காரணம் அதுதான். அதைவிட மேலதிகமாக ஒரு காரணம் உண்டு. ,இந்தியாவையும் இதில் சிங்களத் தரப்பின் பங்காளியாக்குவது. கடந்த பல தசாப்தங்களாக இந்தியா 13-வது திருத்தத்தைத் தான் வலியுறுத்தி வருகிறது. இந்தியா ஏன் 13வது திருத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது? அது தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதாலா? இல்லை. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் ஒரே உறுப்பு அதுதான். இந்திய-இலங்கை உடன்படிக்கையின்படி இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்குரிய வாசல் அதுதான். அதாவது இந்தியா இலங்கை இனப்பிரச்சினையில் தனது பிராந்திய நலன்களின் அடிப்படையில் தலையிடுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக அதைப் பார்க்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு தமிழ்த் தரப்பு எதிராக இல்லை என்ற செய்தியை மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதை ஏற்கனவே கஜேந்திரகுமார் செய்துவிட்டார். அடுத்த கட்டமாக இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் கோரிக்கைகளை 13க்குள் முடக்க கூடாது என்பதையும் தமிழ்த் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

ரணிலுக்கும் புதுடில்லிக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக தெரிகிறது. ரணில் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த பொழுதும் இந்தியா அவரை இன்றுவரை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வரும் ஆண்டில் சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு தகவல் உண்டு. அதற்கு முன் இந்தியாவை திருப்திப்படுத்தும் நகர்வுகளை இலங்கை முன்னெடுக்க வேண்டியிருக்கும். பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது, கலாச்சார மண்டபத்தைத் திறப்பது, காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே படகுப்பாதையைத் திறப்பது, சீனாவின் கடலட்டைப் பண்ணைகளைக் கட்டுப்படுத்துவது…. போன்ற பல விடயங்களிலும் இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டியிருக்கும்.

சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் எதிராகவோ சிங்கள ஆட்சியாளர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் வெளிநாடுகளோடு தங்களை சுதாகரித்துக் கொள்வார்கள். இந்திய-இலங்கை உடன்படிக்கையில் ஜெயவர்த்தனா அதைத்தான் செய்தார்.இந்தியப் படைகளை வெளியேற்றும் விடயத்தில் பிரேமதாசவும் அதைத்தான் செய்தார். ஆட்சி மாற்றத்தின் போது 2015ல் மஹிந்த அதைத்தான் செய்தார். கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் அதைத்தான் செய்தார்.எனவே அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் வெளி அரசுகளோடு சுதாகரித்துப் போகும் ஒரு ராஜதந்திர பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார்கள். அரசுகளுக்கு வெட்கமில்லை. மானம் இல்லை. ரோஷம் இல்லை. எனவே ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை சுதாகரித்துக் கொள்ளமாட்டார் என்று கருதத் தேவையில்லை. பலாலி விமான நிலையம் அடுத்த வாரம் திறக்கப்படுமாக இருந்தால் அவர் இந்தியாவைச் சமாளிக்க முற்படுகிறார் என்று பொருள். இதுபோலவே யாழ்.கலாச்சார நிலையத்தை திறப்பதற்குரிய பேச்சு வார்த்தைகளை இந்த வாரம் அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.

ஆனால் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய பகைநிலைதான் தமிழ் மக்கள் பெறக்கூடிய தீர்வின் பருமனைத் தீர்மானிக்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பேச்சு வார்த்தைகளில் இந்தியாவை ஒரு மத்தியஸ்த்தர் ஆக தமிழ்த் தரப்பு அழைக்க வேண்டும். மேற்கு நாடுகளோடு இணைந்த ஒரு இணைத் தலைமைக்குள் இந்தியாவுக்கு முதன்மை வழங்க வேண்டும். தமிழ் மக்களாகக் கேட்டு இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமாக இருந்தால் அது தமிழ் மக்களின் பேரத்தை அதிகப்படுத்தும்.

ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் உடன்பாட்டுக்கு வர முடியாது என்பது கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு. இலங்கைத் தீவில் ஒப்பீட்டளவில் அதிக காலம் நீடித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய இலங்கை- உடன்படிக்கை முதலாவது.இதில் இந்தியப்படையின் பிரசன்னம் இருந்தது.இரண்டாவது, ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. இதில், ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னம் இருந்தது. மூன்றாவது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். அதில் ஐநா ஒரு மூன்றாவது தரப்பாக இல்லை என்றாலும் ஐநாவின் கண்காணிப்பு அங்கே இருந்தது. அது ஒரு பலமான மத்தியஸ்தம் இல்லை என்பதனால் மூன்று ஆண்டுகளில் அதை மைத்திரி தோற்கடித்தார். இந்த மூன்று உடன்படிக்கைகளின் ஊடாகவும் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல், மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கைத்தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வை எட்ட முடியாது என்பதுதான். எனவே தமிழ்த் தரப்பு ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும். அது பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபந்தனை என்று ரணில் கூறக்கூடும்.அது நிபந்தனை அல்ல.அதுதான் இலங்கை தீவின் யதார்த்தம்.

– நிலாந்தன்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என USAID நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தவேளை சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார் என USAID பேச்சாளர் ஜெசிகா ஜெனிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீட்சி வளர்ச்சிக்கு யுஎஸ்எயிட் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் இலங்கையின் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் அவசரதேவைகள் உட்பட இலங்கை எதிர்கொண்டுள்ள குழப்பமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கான யுஎஸ்எயிட்டின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களையும் இணைந்து முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

 

விட்டுக்கொடுப்பு இல்லாது தீர்வில்லை

–  எம்.எஸ்.எம். ஐயூப்

 

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது.

அல்விஸ், 1950களில் பிரதமராக இருந்த ஜோன் கொத்தலாவலவின் செயலாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றியவர். இந்த மாநாடுகளின் போது அவர் மிகவும் சுவாரசியமான கதைகளைச் சொல்வார். அவ்வாறான ஒரு மாநாட்டின் இறுதியில் அவர் off the record (வெளியிட வேண்டாம்) என்று கூறி ஒரு கதையைக் கூறினார். இது தான் அந்தக் கதை.

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை 1949 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்டு இருந்த நிலையில் ஜோன் கொத்தலாவல அம்மக்களின் பிரச்சினையைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடெல்லிக்குச் சென்றிருந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் அவர் பேச்சுவார்ததை நடத்தும் போது ஒரு கட்டத்தில் நேரு இவ்வாறு கூறினார்.

‘மிஸ்டர் கொத்தலாவல, உங்கள் நாடு சிறியதாக இருந்தாலும் இந்தப் பத்து இலட்சம் மக்களை உள்வாங்கிக் கொள்வது உங்கள் நாட்டுக்கு பெரிய விடயமல்ல. ஆனால், நீங்கள் அதனைச் செய்யப் போனால் உங்கள் எதிர்க் கட்சிக்காரர்கள் உங்களை அரசியலில் இருந்தே விரட்டிவிடுவார்கள். இவர்களை உள்வாங்கிக் கொள்வது இந்தியாவுக்கு அதை விட எவ்வளவோ சிறிய விடயம். ஆனால், எங்கள் எதிர்க் கட்சிகளும் அதற்கு இடம் கொடா. எனவே, இதனை நாம் இரு நாடுகளினது அதிகாரிகளிடம் ஒப்படைத்தால் அவர்கள் உலக அழிவு வரை அதைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எங்களுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது.’

அன்று நேரு கூறியதைப் போல் அதிகாரிகளிடம் ஒப்படைக்காவிட்டாலும் இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்ததைகளும் உலக அழிவு வரை நடைபெறும் போல் தான் தெரிகிறது.

பிரஜா உரிமை தொடர்டபான பேச்சுவார்ததைகள், 50:50 கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை, பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்தை, இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான சிறிமா-சாஸ்திரி பேச்சுவார்த்தை, அதே பிரச்சினை தொடர்பான சிறிமா-இந்திரா பேச்சுவார்ததை, டட்லி-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை, ஜே.ஆரின் வட்ட மேசை மாநாடு, அரசியல் கட்சி மாநாடு (PPC), இந்திய அதிகாரிகளான கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் ரொமேஷ் பண்டாரி ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள், திம்புப் பேச்சுவார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள், ரணசிங்க பிரேமதாசவின் சர்வ கட்சி மாநாடு, புலிகளுடனும் தமிழ் கட்சிகளுடனும் பல அரசாங்கங்கள் நடத்திய பேச்சுவார்ததைகள் போன்ற பல பேச்சுவார்ததைகள் 1940களில் இருந்து இன்று வரை இடம்பெற்றுள்ளன.

அதற்குப் புறம்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர்கள் இடையே எத்தனையோ சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ முறை இரு சாராரும் உடன்பாடுகளுக்கும் வந்துள்ளனர். ஆனால், இன்னமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதா இல்லையா என்று வாதிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

பொதுவாக இனப் பிரச்சினை இன்னமும் ஏறத்தாழ தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று சிங்கள் மக்கள் இன்னமும் கேட்கிறார்கள். சிங்களத் தலைவர்கள் சமஷ்டி முறையை பிரேரித்த போது தமிழர்கள் எதிர்த்தார்கள். இப்போது தமிழர்கள் அதனைக் கேட்கும் போது சிங்கள மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். 40 ஆண்டுகளாக அதிகார பரவலாக்கலைப் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றும் மாகாண சபைகளை அறிமுகப்படுத்தி சுமார் 35 ஆண்டுகள் கழிந்தும் அதிகாரப் பரவலாக்கலால் நாடு பிரிந்துவிடும் என்று சிங்கள் அரசியல்வாதிகள் இன்னமும் வாதிடுகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினையைப் பற்றி பேச்சுhவர்த்தை நடத்த அரசியல் கட்சிகளுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது அந்த அழைப்பை விடுத்த அவர் அதிகார பரவலாக்கலை விரும்புகிறீர்களா என ஒவ்வொரு கட்சித் தலைவர்களிடமும் கேட்டார்.

பேச்சுவார்த்தையே தீர்வுக்காகன ஒரே வழி என்பதால் நேர்மையானதோ இல்லையோ ஜனாதிபதியின் இந்த அழைப்பு பாராட்டுக்குறியதாகும். ஆனால், சுமார் 75 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்ததைகளைப் பற்றிய அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்நாட்டு மக்களில் குறைந்தபட்சம் ஒரு சத வீதத்தினராவது ஜனாதிபதி நடத்தப் போகும் பேச்சுவார்தைகள் வெற்றியளிக்கும் என்று நம்புகிறார்களா என்பது சந்தேகமே.

அது அவர் மீதான நம்பிக்கையின்மை மட்டுமல்ல. ஓரளவுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அதேவேளை அது பொதுவாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் திறந்த மனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்பதைப் பற்றிய நம்பிக்கையின்மையேயாகும்.

தமிழ் தலைவர்கள் அதிகார பரவலாக்கல் வேண்டும் என்கிறார்கள. சில சிங்களத் தலைவரகள் அதிகார பரவலாக்கலால் நாடு பிளவுபடும் என்று கூறுகிறார்கள். ஆனால் 34 ஆண்டுகளாக மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட்டுத் தான் இருக்கிறது. அவ்வாறு இருந்தும் எந்தவொரு சாராரும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

தமிழ் தலைவர்கள் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே வேண்டும் என்கிறார்கள். அதற்குக் குறைந்த ஒரு தீர்வை எந்தவொரு தமிழ் கட்சியாவது ஏற்றுக் கொண்டால் ஏனைய தமிழ் கட்சிகள் அக்கட்சியின் தலைவர்களை துரோகிகள் என்பார்கள். அதேபோல் சிங்களத் தலைவர் ஒருவர் சமஷ்டி முறையை ஏற்றுக் கொண்டால் இனவாத சிங்களக் கட்சிகள் அவரை துரோகி என்பார்கள். துரோகிப் பட்டம் அடுத்த தேர்தலில் தம்மை பாதிக்கும் என்பதால எவரும் அதனை ஏற்கத் தயாராக இல்லை. இவ்வாறு எந்தவொரு தரப்பினரும் இறங்கி வரத் தயாராக இல்லாவிட்டால் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது எவ்வாறு?

2015 ஆம் ஆண்டு பதவிக்க வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசியலமைப்புச் சபையொன்றை நிறுவியது. அச்சபையால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதில் தமிழர்கள் வெறுக்கும் ஒற்றை ஆட்சி என்ற பதம் தமிழில் இருக்கவில்லை. சிங்கள மொழியில் இருந்தது. சிங்கள தேசியவாதிகள் வெறுக்கும் சமஷ்டி என்ற பதம் எந்த மொழியிலும் இருக்கவும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதில் ‘ஒருமித்த நாடு’ என்ற எண்ணக்கருவே தமிழ் மொழியில் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால் அது சமஷ்டிக் கோரிக்கையை நிராகரிப்பதாகும் என்றும் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை அங்கீகரிப்பதாகவும் அப்போதைய வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கூறினார்.

அதேவேளை அந்த அறிக்கையானது தந்திரமாக சமஷ்டி முறையை திணிக்கும் முயற்சி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிங்கள் இனவாதிகள் கூறினர். இந்த இழுபறியோடு வேறு பல அரசியல் பிரச்சினைகள் உருவாகி அந்த அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சி கைவிடப்பட்டது. சண்டையிட்டோர் அந்தத் திட்டத்தின் பெயரை வைத்து தான் சண்டையிட்டார்களேயொழிய அதன் உள்ளடக்கத்தை எவரும் எதிர்க்கவில்லை.

இது ஒற்றையாட்சி என்ற பதத்தை கைவிட சிங்களத் தலைவர்களுக்கும் சமஷ்டி என்பதைக் கைவிட தமிழ் தலைவர்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. எனினும் ஜனாதிபதி சந்திரிகா 1995 ஆம் ஆண்டு முன்வைத்து ‘பக்கேஜ்’ என்ற அக்காலத்தில் சகலராலும் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் இலங்கை ஒரு பிரந்தியங்களின் ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒற்றையாட்சி என்ற பதம் அதில் இருக்கவில்லை. அதுவே பொருத்தமான தீர்வு என்று சில தமிழ் தலைவர்களும் கடந்த வாரம் கூறியிருந்தனர்.

அத்திட்டத்தை ஏற்றிருக்கலாம் என்று புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலிகளின் புதிய நீதிமன்றத் தொகுதியை திறந்து வைக்கும் வைபவத்தின் போது கூறினார். ஆனால் ஜீ.எல். பீரிஸூடன் சேர்ந்து அந்தத் தீர்வுத் திட்டத்தை தயாரித்த நீலன் திருச்செல்வத்தை புலிகளே 1999 ஆம் ஆண்டு தற்கொலை குண்டுதாரி ஒருவர் மூலம் கொன்றனர்.

ஒற்றையாட்சிக்குப் பதிலாக சமஷ்டி முறையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று புலிகளும் ரணிலின் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஒஸ்லோ நகரில் வைத்து உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனால் புலிகள் அந்த இணக்கப்பாட்டை உதறித் தள்ளிவிட்டு 2005 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் போரை ஆரம்பித்தனர்.

இந்த ஒற்றையாட்சி – சமஷ்டி சர்ச்சை விடயத்தில் போலவே வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திலும் சம்பந்தப்பட்ட எவரும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. அவ்வாறாயின் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தி எதனை சாதிக்கப் போகிறார்கள்? நியாயத்தின் அடிப்படையில் விட்டுக்கொடுக்க சகல தரப்பினரும் தயாராக இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தையும் சிரமத்தையும் வீணடித்து போதாதக்குறைக்கு இன உணர்வுகளையும் தூண்டுவிடுவதை விட சும்மா இருப்பதே மேல் என்றும் வாதிடலாம். எனினும் பேச்சுவார்த்தையைத் தவிர் தீர்வுக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

ரணில் விரித்திருக்கும் புதிய வலை


புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த நாட்களில் வெளியிட்ட இருவேறு கருத்துக்கள் தமிழ் மக்களை எரிச்சலடைய வைத்திருக்கின்றன. முதலாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு தமிழ்க் கட்சிகள் முன் நிபந்தனைகள் ஏதுமின்றி வரவேண்டும் என்பது. இரண்டாவது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் முன்வைக்கப்பட்டு தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீள கொண்டுவருவது தொடர்பிலானது.

சுதந்திர இலங்கையில் தமிழ்த் தரப்புக்களுக்கும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை பண்டா -செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி, நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காண்பது வரையான பேச்சுக்கள் வரை நீண்டிக்கின்றன. பண்டா – செல்வாவுக்கு இடையிலான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு நீண்ட நெடிய ஆயுத மோதலைக் கண்டிருக்காது. இன முரண்பாடுகள் பாரியளவில் எழுந்தும் இருக்காது. ஆனால், நாட்டின் நலன், ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம் கடந்து பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தின் மேலாண்மையும் அதன் வழியான ஆட்சியமைப்பும் பிரதான இடத்தில் இருப்பதாலேயே நாடு படுபாதாளத்துக்குள் வீழ்ந்தது. பௌத்த சிங்கள மேலாதிக்கத்தினால் தென் இலங்கையின் சிங்கள மக்கள் எதுவித நன்மையையும் அடைந்துவிடவில்லை. மாறாக, ஆளும் வர்க்கமும், அவர்களுக்கு இணக்கமான தரப்புக்களுமே ஆதாயங்களை அடைந்திருக்கின்றன.

அப்படியான நிலையில், நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை ஆளும் வர்க்கமும், பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளும் தொடர்ச்சியாக தவிர்த்தே வந்திருக்கின்றன. நாட்டில் நீடிக்கும் அரசியல் பிரச்சினையும் அதனால் மேலும் மோசமடையும் இன முரண்பாடுகளுமே ஆட்சியைப் பிடிப்பதற்கும் தக்க வைப்பதற்குமான பிரதான சூத்திரமாக தென் இலங்கையில் பேணப்படுகின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளினால் அரசியல் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு ஆளும் தரப்பு வந்தால், அதனை எதிர்க்கட்சி பலமாக எதிர்க்கும். அந்த எதிர்க்கட்சியே, அடுத்து ஆளும்தரப்பாக வந்ததும் பேச்சுவார்த்தை நடத்தினால், முன்னைய ஆளும்கட்சி அதனை எதிர்க்கும். இதுதான், தென் இலங்கை ஆட்சியாளர்களின் தொடர் செயற்பாடு.

பண்டா – செல்வா ஒப்பந்தம், பௌத்த தேரர்களின் போராட்டத்தினால் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் கிழித்தெறியப்பட்டது. அந்த ஒப்பந்தம் சிலவேளை நடைமுறைக்கு வந்திருந்தால், சிலவேளை, இலங்கை முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும். இலட்சக்கணக்கான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டிருக்கும். பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தல்கள் காணாமல் போதால்களினால் இல்லாமல் ஆகியிருக்க மாட்டார்கள். ஆனால், நடந்ததோ வேறு. சிங்கள மட்டும் சட்டத்தினை முன்னிறுத்தி இனவாத அரசியலை ஆட்சிபீடம் ஏறுவதற்காக முன்னிறுத்திய பண்டாரநாயக்க, அதனை பேரழிவின் பெரும் புள்ளியாக வைத்துச் சென்றார்.

பிரித்தானியாவிடம் இருந்து ஆட்சியுரிமையை தென் இலங்கையின் பெரும் அரசியல் வர்த்தக குடும்பங்கள் பெற்ற போது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் தென் இலங்கையின் சாதாரண சிங்கள மக்களும் எதுவித நம்பிக்கைகளும் இன்றியே இருந்தார்கள். அந்த நம்பிக்கையீனம் இன்று வரையில் மாறவில்லை. மாறாக இனவாத, வர்க்க முரண்பாடுகள் தென் இலங்கை பூராவும் விதைக்கப்பட்டன. குறிப்பாக, மகா வம்ச மனநிலையோடு, பௌத்த அடிப்படைவாத சிந்தனைகளை முன்னிறுத்தினார்கள்.

அப்படி முன்னிறுத்தியவர்களில் பெரும்பாலானோர், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில், பிரித்தானியரின் மதத்தையும், கல்வியையும் பெற்றவர்கள். அவர்களுக்கு பௌத்தம் குறித்த எந்தவித கோட்பாட்டு விளங்கங்களோ, அறிவோ இல்லை. மாறாக, சுதந்திர இலங்கையில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பௌத்த அடிப்படைவாதத்தை முன்னிறுத்துவதே இலகுவான வழி என்ற புள்ளியில் அவர்கள் அனைவரும் அதனை தெரிவு செய்தார்கள்.

சேனநாயக்க குடும்பம், விஜயவர்த்தன குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் என்று இலங்கை ஆட்சி செய்து யார் யாரெல்லாம் சீரழித்தார்களோ, அவர்கள் எல்லாருக்கும் அது பொருந்தும்.

சிங்கள மட்டும் சட்டமும், பௌத்தத்துக்கு முதலிடம் எனும் நிலையும் தென் இலங்கை ஆட்சியாளர்களினால் நாட்டை சீரழிப்பதற்காக வைக்கப்பட்ட பொறிகள். சுதந்திரத்துக்குப் பின்னரான 75 ஆண்டுகளில் இந்த இரு சட்டங்களினாலும் தென் இலங்கையின் சாதாரண மக்கள் கூட எந்தவித நன்மையையும் அடையவில்லை. மாறாக, இன்றைக்கு தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உணர்வோடு அலைகிறார்கள். இப்போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு மாதக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்கின்றது. வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கடவுச்சீட்டுக்கான வரிசை, காத்திருப்பு காணப்படுவதாக குடிவரவு -குடியகல்வு திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

அப்படியானால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள். அதில், பெரும்பான்மையான சாதாரண மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வசதி வாய்ப்பின்றி இருக்கிறார்கள். இல்லையென்றால், ஒருசில மாதங்களிலேயே நாட்டிலிருந்து கணிசமானவர்கள் வெளியேறிவிடுவார்கள். அதுதான் இன்றைய நிலை. இதுதான் பெளத்த சிங்கள அடிப்படைவாதமும், அதனைமுன்னிறுத்தி விட்ட ஆட்சிமுறையும் செய்த சாதனைகள்.

நிலைமை அப்படியிருக்க, தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் இன்றி வர வேண்டும் என்று ரணில் கூறுவதை எவ்வாறு காண வேண்டும். தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகள், பௌத்த சிங்கள மேலாதிக்க நிறுவனங்களும், கட்டமைப்பும் வடக்கு கிழக்கில் புரியும் அத்துமீறல்கள் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோருவதாகும். அதனை, அரச இயந்திரம் நினைத்தால் உடனயே நிறுத்திவிடலாம்.

ஏனெனில், அந்த ஆக்கிரமிப்புக்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை. அப்படியான நிலையில், அதனை நிறுத்தக் கோருவது முன் நிபந்தனையாக கொள்ள வேண்டியதே இல்லை. அத்தோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பகுதியில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை கோருவது எவ்வாறு முன் நிபந்தனையாகலாம் என்று தெரியவில்லை. தமிழ் மக்களின் தொடர் கோரிக்கையே, பாரம்பரிய நிலப்பகுதியில், மேலாதிக்கம், ஆக்கிரமிப்புக்கள் அற்ற, ஒருங்கிணைந்த நாட்டுக்குள்ளான ஆட்சி முறையே, அதனையே, சமஷ்டி என்கிற சொல்லின் கீழ் வரையறுக்கிறார்கள். பேச்சுவார்த்தை மேசையில் சமஷ்டி அதிகார பகிர்வு குறித்து பேச வேண்டும் என்று கோருவதை முன் நிபந்தனையாக ரணில் காட்டுவது, மிக மோசமான அணுகுமுறை.

அத்தோடு, ஜே.ஆர். காலத்து மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்கிற முறையினூடாக நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்று அவர் பேச ஆரம்பித்திருப்பது சதி நோக்கிலானது. அது, இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் பிரகாரம் தோற்றம்பெற்ற மாகாண சபைகளையும் இல்லாமற் செய்யும் தந்திரத்துடனானது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை இல்லாமற் செய்ய வேண்டும் என்பது, தென் இலங்கையின் இனவாத மதவாத சக்திகளின் ஒரே நிலைப்பாடு. அப்படியான நிலையில், அதனை நிறைவேற்றுவதற்காக மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற தோல்வியடைந்த முறையை ரணில் முன்நகர்த்துவது திட்டமிட்ட செயலாகும்.

அதன்போக்கில்தான், சமஷ்டி கோரும் தமிழ்க் கட்சிகளை முன் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்கு வருமாறு அவர் கோருகிறார். அவர், அதிகபட்சம் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் விடயத்தை முடித்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், தமிழ்க் கட்சிகளோ மாகாண சபை முறைகளைத் தாண்டிய சமஷ்டிக் கோரிக்கைகள் சார்ந்த நிலைப்பாடுகளில் இருக்கின்றன. அப்படியான நிலையில், ரணிலின் பேச்சினை விசமத்தனமாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது. காலங்காலமாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் தந்திரத்தின் வழியாக தமிழ் மக்களை தோற்கடிக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த முயற்சி தமிழ் மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே தோற்கடித்திருக்கின்றது. இப்போதும் அந்த முயற்சிகளிலேயே ரணில் ஈடுபடுகிறார். அவர், தன்னுடைய முன்னோர்கள் வழியில் நின்று விலகுவதற்கு தயாராக இல்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகளும் சமஷ்டி யோசனையும்

டி.பி.எஸ் ஜெயராஜ் ஆல் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

 

இலங்கை தமிழ் தேசியவாதம் அடிப்படையில் எதிர்வினை இயல்புடையது. நவீன இலங்கை தேசத்தின் இணை ஸ்தாபகர்களாக சிங்கள மக்களுக்கு இணையாக தமிழர்கள் தங்களை நினைத்துக் கொண்டனர். சர்வஜன வாக்குரிமை மற்றும் ஆட்புல பிரதிநிதித்துவம் அவர்களை முதன்மை சிறுபான்மையினராக குறைத்தது. தமிழர்கள் இன்னமும் தங்களை முழுவதுமாக தீவைச் சேர்ந்தவர்கள் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் சமநிலையான பிரதிநிதித்துவத்தை விரும்பினர். பின்னர் பதிலளிக்கக்கூடிய ஒத்துழைப்பை அரசியல் உத்திகளாக ஏற்றுக்கொண்டனர். அவை தோல்வியடைந்தபோது சமஷ்டி கோரிக்கை வந்தது. தமிழர்களின் சுயபுலனுணர்வு இப்போது  ஒரு பிராந்திய சிறுபான்மையினராக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது. இங்கும் கூட, அரசியல் தலைவர்கள் சமஷ்டி முறைக்கு மிகக் குறைவான சமரசத்திற்கு தயாராகி, பிராந்திய சபைகள், மாவட்ட சபைகள் போன்ற மாற்றுகளைத் தேர்ந்தெடுத்தனர். இறுதியாக பிரிவினைக்கான விரக்தியான குரல் மற்றும் விளைவாக ஆயுதப் போராட்டம் வந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 நவம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்கும் என்று நாளிதழ் ஒன்றிற்கு கூறியதன் மூலம் சாதகமாக பதிலளித்தார். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்.தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்விலேயே எமது முக்கிய கவனம் செலுத்தப்படும் என சுமந்திரன் தெரிவித்தார். நவம்பர் 19 ஆம் திகதி வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சுமந்திரன் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தியிருந்தார் .

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அரசியல் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ஐ.ரி.ஏ.கே), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றை உள்ளடக்கியது. 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களை  ஒரு தேசியப் பட்டியல் எம்.பி .உட்பட  வென்றது. 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் (3), வன்னி (3), மட்டக்களப்பு (2), திருகோணமலை (1) மற்றும் அம்பாறை (1) ஆகிய தேர்தல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கட்சி வாரியாக தமிழரசு கட்சி  6, டெலோ 3 மற்றும் புளொட்  1 ஆகும். ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடனான சாத்தியமான கலந்துரையாடல்களில் தமிழ்த் தரப்பின் பொதுவான நிலைப்பாட்டை முன்வைக்கும் முயற்சியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்,ராஜவரோதயம் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் ஒன்றுகூடி, வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான ஏற்பாட்டிற்குள் அரசியல் தீர்வைக் கோரும் பொதுவான அணுகுமுறையை உருவாக்குவதற்கு ஒரேவிதமான எண்ணப்பாட்டை கொண்ட தமிழ் தேசியவாதக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

கடந்த வாரம் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறவில்லை. அதன் பின்னர் கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நவம்பர் 25 வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று அங்கங்களான தமிழரசுக்கட்சி, டெலோ , புளொட் ஆகிய கட்சிகளைத் தவிர தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்றத்தில் இரண்டு எம்.பி.க்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு ஒரு எம்.பி.யும் உள்ளனர். பொதுவாக தமிழ்க் கட்சிகளுக்கிடை யிலான உட்கட்சிப் போட்டி மற்றும் குறிப்பாக தமிழ்க் கட்சிகளுக்குள் உள்ள உட்கட்சி பூசல் காரணமாக, அழைக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் கூட்டத்தில் பங்கேற்பார்களா அல்லது ஒருமித்த கருத்து எட்டப்படுமா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், உட்கட்சி மற்றும் உட்கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கை தமிழ் தேசியவாதக் கட்சிகளும் சமஷ்டி கோட்பாடுகள் அல்லது சமஷ்டி யோசனையின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு உறுதியான ஆதரவை வழங்குகின்றன.

இந்தப் பின்னணியில்தான் இந்தக் கட்டுரை  முந்தைய ஆக்கங்களின் உதவியு டன்  தேசிய மற்றும் சர்வதேச சூழலில் சமஷ்டி அல்லது கூட்டாட்சி யோசனை யின் மீது கவனம் செலுத்துகிறது. கடந்த காலங்களில் இலங்கை அரசியல் சூழலில் சமஷ்டி என்ற வார்த்தைகள் அழுக்கான வார்த்தைகளாக மாறியது அனைவரும் அறிந்ததே. சிங்கள கடும்போக்கு கருத்து, சமஷ்டி வாதத்தை பிரிவினைவாதத்திற்கான ஒன்றாக அல்லது தனிநாட்டுக்கான படிக்கல்லாகவே பார்க்கிறது. இதனால் இலங்கை அரசியலில் கூட்டாட்சி என்பது தவறான வார்த்தை ஆனது. சமஷ்டி அல்லது கூட்டாட்சி யோசனை அதன் தகுதிகள் அல்லது கூடுதல் அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் மிகவும் கொச்சையாகவும் கொடூரமாகவும் நிராகரிக்கப்பட்டது என்பது உண்மையில் ஒரு சோகமாகும்.

சமஷ்டி யோசனை என்று அழைக்கப்படுவது சில சமயம் தகுதியானதாக இருக்கலாம், இது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனை அவதானிக்கக்கத் தூண்டியது, ஒருவேளை சமஷ்டி யோசனை அவ்வளவு மோசமான யோசனையாக இருக்காது. இது 1999 இல் கிளின்டன் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக இருந்தபோது கியூபெக்கில் உள்ள மொண்ட்ட் ரெம்ப்ளாண்ட்டில் சமஷ்டி முறை குறித்த மாநாட்டின் முடிவில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். தற்செயலாக இலங்கையின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒட்டாவாவை தளமாகக் கொண்ட கூட்டமைப்புகளின் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.

சமஷ்டி யோசனை என்றால் என்ன?

இந்த சமஷ்டி யோசனை என்றால் என்ன? இது ஒரு வகையில் கூட்டாட் சியாகும். கூட்டாட்சி அமைப்புகள், கூட்டமைப்பு மற்றும் கூட்டாட்சி போன்ற பல்வேறு தொடர்புடைய விடயங்களை உள்ளடக்கிய ஒரு கருத்தாகும். சமஷ்டி என்ற வார்த்தை அரசியலில் கிட்டத்தட்ட தகாத வார்த்தை ஆக மாறிவிட்ட உலகம் இது. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நாடுகளும் வெவ்வேறு நிறுவனங்களும் இந்த தகாத வார்த்தை தொடர்பாக முகம் சுளிக்கின்றன. எனவே சமஷ்டி யோசனை என்பது இந்த தகாத வார்த்தையின் மறைமுக குறிப்பாக மாறியுள்ளது. வேறு எந்தப் பெயரிலும் இது ஒரு இனிமையானதாக இருக்கும் என்றால், சமஷ்டி என்ற வார்த்தையையும் சமஷ்டி யோசனை என்று தூய்மைப்படுத்தி கலந்துரையாடலாம்.

இது குறித்து ஐ.நா.வில் கனடாவின் பிரதிநிதி பொப் ரேவை மேற்கோள் காட்டுகிறேன். அவர் முன்னாள் ஒன்டாரியோ என். டி.பி முதல்வரும் முன்னாள் எம்.பியும் லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவரும் ஒட்டாவாவில் அமைந்துள்ள கூட்டமைப்பு மன்றத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். மன்றத்தால் வெளியிடப்பட்ட சமஷ்டி நாடுகளின் கையேடுக்கு அவர் எழுதிய முன்னுரையில், ரே இவ்வாறு கூறுகிறார்  கடந்த தசாப்தத்தில் சமஷ்டி யோசனையில் ஆழ்ந்த மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. நான் சமஷ்டி யோசனை என்ற சொற்றொடரை தேர்வு செய்கிறேன். ஏனெனில் கூட்டாட்சியில் உள்ள விவாதம் மற்றும் புரிதலைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியைக் கொண்டுள்ளது.

ஸ்பெயினில் மத்திய அரசாங்கம் சமஷ்டி என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது இறைமை அதிகாரத்தில் பாதிப்பைக் குறிக்கிறது. முரண்பாடாக ஸ்பெயினில் உள்ளக கட்டலோனியர்களும் இதைப் பற்றி முகம் சுளிக்கின்றனர். ஏனெனில் அவர்களின் கருத்துப்படி தனித்துவமான கட்டலோனிய அடையாளத்தையும் சுயராஜ்ய உரிமையையும் வெளிப்படுத்த சமஷ்டி போதாது என்பதாகும். தென்னாபிரிக்காவில் முன்னைய ‘நிறவெறி’ ஆட்சியானது சுதந்திரத்திற்கான பரந்துபட்ட ஆபிரிக்க ஏக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பரவவும் சில சமஷ்டி முறைமைகளை அமைத்தது. எனவே சமஷ்டி என்பது கறுப்பினத்தவர்களுக்கு ஒரு அழுக்கான வார்த்தையாக மாறியது. ‘ஒரே தென்னாப்பிரிக்கா’என்ற பார்வையுடன் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதிகாரத்தை அடைந்தபோது, புதிய அரசியலமைப்பை ‘சமஷ்டி’ என்று விபரிக்க ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் விரும்பவில்லை.

ரே எதனை அர்த்தப்படுத்துகின்றார் என்பது இலங்கையர்களுக்கு நன்றாகவே தெரியும். இலங்கையின் ஆழமாக துருவப்படுத்தப்பட்ட சமூகத்தில் சமஷ்டி என்பது நிச்சயமாக ‘தவறான வார்த்தை’மற்றும் மோசமானது. சமஷ்டியை வெளிப்படையாக வலியுறுத்துவதில் பலரது தயக்கமும் நடுக்கமும் உள்ளது. ‘சமஷ்டி’என்பது தேசத்தை உடைப்பதற்கான ஒரு சதியாகக் கருதப்படும் சூழ்நிலையில் இது வருத்தமளிக்கிறது. ஆனால் புரிந்து கொள்ளக்கூடியது.

பல இலங்கையர்கள் சமஷ்டியை சந்தேகத்துடன் பார்க்கும் அதே வேளையில், உலகின் ஏனைய பகுதிகள் சமஷ்டி யோசனையை தள்ளிப் போடுகின்றன.

உலகின் பல அரசியல் நோய்களுக்கு சிறந்த தீர்வாக சமஷ்டி முறை கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. வேற்றுமையில் ஒற்றுமையை அடைவதற்கான உலகளாவிய சாதனமாக இது உணரப்பட்டது. ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் இது அவசியம் இல்லை என்பதை அனுபவம் காட்டுகிறது. அதேநேரத்தில் சமஷ்டி ஏற்பாடுகள் நிச்சயமாக பல சந்தர்ப்பங்களில் ஒற்றுமையைப் பலப்படுத்த உதவி உள்ளன.

 

உலக மக்கள் தொகையில் 40%

இருபத்தைந்து நாடுகளில் இன்று சமஷ்டி அல்லது அரைசமஷ்டி கட்டமைப்புகள் உள்ளன. இவை வல்லரசான அமெரிக்காவிலிருந்து சிறிய செயின்ட் கிட்ஸ் (Saint Kitts) மற்றும் நெவிஸ் (Nevis) வரை உள்ளன; வடக்கில் கனடாவிலிருந்து தெற்கில் மைக்ரோனேஷியா (Micronesia) வரை; கிழக்கில் இந்தியாவிலிருந்து மேற்கில் சுவிட்சர்லாந்து வரை காணப்படுகின்றது. இந்த நாடுகளின் மக்கள் தொகை உலகின் மொத்த மனிதகுலத்தில் 40%க்கும் அதிகமாக உள்ளது. கூடுதலாக, சமஷ்டி இல்லாத சில நாடுகள் உள்ளன. ஆனால் நடைமுறையில் அரைசமஷ்டி முறைக்கு விசேட நிர்வாக ஏற்பாடுகள் உள்ளன.

அகர வரிசைப்படி தொடர்வோம். அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா(Herzegovina), பிரேசில், கனடா, கொமோரோஸ் (Comoros), எதியோப்பியா, ஜெர்மனி, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, மைக்ரோனேஷியா (Micronesia), நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, செயின்ட் கிட்ஸ் (Saint Kitts) மற்றும் நெவிஸ் (Nevis), தென்னாபிரிக்கா, ஸ்பெயின் , சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, வெனிசுலா ஆகியவை சமஷ்டி நாடுகள்.பெரும்பாலானவை வெளிப்படையாக சமஷ்டியாக இருந்தாலும், ஸ்பெயின் போன்ற சில அவ்வாறாக இல்லை. ஆனால் உண்மையில் பெயரளவிலேயே அனைத்திலும் சமஷ்டி. தற்செயலாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தசாப்தங்களுக்கு முன்னர் அவரின் சீதா ஜயவர்தன நினைவேந்தல் உரையில், இலங்கையின் அதிகாரப் பகிர்வுக்கு ஆஸ்திரியா ஒரு சாத்தியமான முன்மாதிரி என்று பேசியிருந்தார்.

சமஷ்டி ரீதியாக இந்த நாடுகளில் எதுவும் சரியாக ஒரே முறைமையை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் உள் கட்டமைப்புகள் உள்ளன. அவை அளவிலும் பெரிதும் வேறுபடுகின்றன. ரஷ்யாவிற்குள் குடியரசுகள் மற்றும் பல வகையான பிராந்தியங்கள் உள்ளன. இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ங்கள் உள்ளன; சுவிட்சர்லாந்தில் மண்டலங்கள் உள்ளன, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் லாண்டர்கள் உள்ளன. பெல்ஜியம் மூன்று பிராந்தியங்களையும் மூன்று கலாசார சமூகங்களையும் கொண்டுள்ளது. அதே சமயம் ஸ்பெயின் தன்னாட்சிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு மாநிலங்கள், கூட்டமைப்புகள், உள்ளூர் ஆட்சிப் பகுதிகள், இணைக்கப்படாத பிரதேசங்கள் மற்றும் பூர்வீக அமெரிக்க உள்நாடு சார்ந்த தேசங்கள் உள்ளன, அதே நேரத்தில் கனடாவில் மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியின அமைப்புகள் உள்ளன. வெனிசுலாவில் மாநிலங்கள், பிரதேசங்கள், கூட்டாட்சி சார்புகள், கூட்டாட்சி மாவட்டங்கள் மற்றும் பல தீவுகள் உள்ளன.

சமஷ்டி மற்றும் அரைசமஷ்டி நாடுகளைத் தவிர, சமஷ்டி அம்சங்களுடன் மையப்படுத்தப்பட்ட யூனியன்களை கொண்ட நாடுகளும் உள்ளன. இங்கி லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஐந்து சுயராஜ்ய தீவுகளை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியம் இந்த வகையான சிறந்த உதாரணம். 15 சாதாரண மற்றும் ஐந்து தன்னாட்சிப் பகுதிகளைக் கொண்ட இத்தாலி மற்றொன்று; நெதர்லாந்து 11 மாகாணங்களையும் ஒரு தொடர்புடைய மாநிலத்தையும் கொண்டுள்ளது; ஜப்பான் 47 மாகாணங்களைக் கொண்டுள்ளது; பிஜி தீவுகள் இரண்டு இன சமூகங்களின் ஒருங்கிணைப்பு ஆகும்; கொலம்பியாவில் 23 துறைகள், நான்கு சார்புநிலைகள் மற்றும் மூன்று ஆணையங்கள் உள்ளன. உக்ரைனில் 24 பிராந்தியங்கள், இரண்டு பெருநகரப் பகுதிகள் மற்றும் கிரிமியாவின் தன்னாட்சி குடியரசு, சீன மக்கள் குடியரசில் 22 மாகாணங்கள், 5 தன்னாட்சிப் பகுதிகள், நான்கு நகராட்சிகள் மற்றும் ஹொங்கொங் மற்றும் மக்காவோவின் விசேட நிர்வாகப் பகுதிகள் உள்ளன.

 

சமஷ்டிகளும் மற்றும் துணை நாடுகள்

மற்றொரு தன்மை சமஷ்டி மற்றும் துணை அரசுகளைக் கொண்ட நாடுகளாகும். பூட்டான் இந்தியாவின் ஒரு துணை நாடாகும். குக் தீவுகள் நியூசிலாந்தின் சுய ஆளும் துணை மாநிலமாகும். நெதர்லாந்து அண்டிலிஸ், சான் மரினோ, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ ஆகியவை நெதர்லாந்து, இத்தாலியின் துணை மாநிலங்கள். முறையே சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ். போர்ட்டோரிக்கோ மற்றும் வடக்கு மரியானாக்கள் அமெரிக்காவின் கூட்டாட்சிகள். மடீரா மற்றும் அசோர்ஸ் தீவுகள் போர்த்துகீசிய சமஷ்க்குட்பட்டவை. அதேபோல் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகள் டேனிஷ் கூட்டாட்சிகள். பிரிட்டனில் ஜெர்சி, குர்ன்சி மற்றும் ஐல் ஆஃப் மேன் கூட்டமைப்புகள் உள்ளன. ஆலண்ட் தீவுகள் பின்லாந்தின் சமஷ்டி ஆகும்.

எனவே, சமஷ்டி யோசனையானது சமஷ்டி அல்லது அரைசமஷ்டி மாநிலங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் காணலாம். சமஷ்டி யோசனை என்பது பல அரசுகளின் அரசியலில் ஊடுருவிச் செல்லும் ஒரு சுதந்திர உணர்வாகும். இங்கே தனிப்பட்ட கொள்கை இல்லை. ஒவ்வொரு நாடும் அதன் தேவைகளுக்கு ஏற்ப தனித்தனியான ஏற்பாட்டை வடிவமைத்துள்ளது. நிர்வாக வசதி மற்றும் சிறந்த அரசாங்க வடிவத்தை குடிமக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் தவிர, இந்த நாடுகள் மக்களின் பன்முகத்தன்மை, பிராந்திய வேறுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள், வரலாற்று மற்றும் புவியியல் தேவைகள் போன்றவற்றையும் நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதற்கான அளவுகோல்களாக எடுத்துக் கொண்டுள்ளன.

 

சமஷ்டி முறைமைகளை ஒப்பிடுதல்

சமஷ்டி யோசனை சமீப காலங்களில் ஒரு புதிய முக்கியத்துவத்தையும் தொடர்புடைய வீரியத்தையும் பெற்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கனடாவின் கிங்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள அரசுகளுக்கிடையேயான உறவுகளின் நிறுவனத்தைச் சேர்ந்த ரொனால்ட் வாட்ஸ் சமஷ்டி முறைமைகளைகளை ஒப்பிடுதல் என்ற நூலின் ஆசிரியர் ஆவார். அதிலிருந்து ஒரு பகுதி இந்த உலகளாவிய போக்கை விளக்குகிறது, போக்குவரத்து, சமூக தொடர்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைப்புகளில் நவீன முன்னேற்றங்கள் பெரிய அரசியல் அமைப்புகளுக்கும் சிறிய நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அழுத்தங்களை உருவாக்கியுள்ளன. இன்று பெரும்பாலான மேற்குலக மற்றும் மேற்கத்திய சமூகங்கள் பகிர்ந்து கொள்ளும் இலக்குகளால் பெரிய அரசியல் அலகுகளுக்கான அழுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது; முன்னேற்றத்திற்கான விருப்பம் , உயர்ந்து வரும் வாழ்க்கைத் தரம், சமூக நீதி மற்றும் உலக அரங்கில் செல்வாக்கு மற்றும் ஒரு சகாப்தத்தில் உலகளாவிய ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் பற்றிய வளர்ந்து வரும் விழிப்புணர்வு பேரழிவு மற்றும் வெகுஜன கட்டுமானம் இரண்டையும் சாத்தியமாக்குகிறது.

சிறிய சுயஆட்சி அரசியல் அலகுகளுக்கான விருப்பம் , தனிப்பட்ட குடிமகனுக்கு அரசாங்கங்கள் மிகவும் பதிலளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் மற்றும் முதன்மையான குழு இணைப்புகளை வெளிப்படுத்த வேண்டும்  மொழியியல் மற்றும் கலாசார உறவுகள், மத தொடர்புகள், வரலாற்று மரபுகள் மற்றும் சமூக நடைமுறைகள். ஒரு சமூகத்தின் அடையாள உணர்வு மற்றும் சுயநிர்ணயத்திற்கான ஏக்கத்திற்கான தனித்துவமான அடிப்படை. இந்த இரட்டை அழுத்தங்கள் காரணமாக, அதிகமான மக்கள் சமஷ்டி முறையைப் பார்க்க வந்துள்ளனர், சமகால உலகின் பல தேசிய யதார்த்தம் குறிப்பிட்ட பொதுவான நோக்கங்களுக்காக ஒரு பகிரப்பட்ட அரசாங்கத்தை ஒருங்கிணைத்து, அரசாங்கத்தின் தொகுதி அலகுகளின் தன்னாட்சி நடவடிக்கைகளுடன் தங்கள் பிராந்திய தனித்துவத்தைப் பேணுவது தொடர்பான நோக்கங்களுக்காக மிக நெருக்கமான நிறுவன தோராயத்தை அனுமதிக்கிறது.

ரொனால்ட் வாட்ஸ் சமஷ்டி யோசனையின் சாரத்தை சுருக்கமாகக் கூறுகிறார். ஒருபுறம் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உயர் தேசிய அமைப்புகள் உட்பட பெரிய நிறுவனங்களை உருவாக்கும் போக்கு உள்ளது.மறுபுறம், ஒரு இன இயல்புடைய பல்வேறு உள் தேசிய அபிலாஷைகளுக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.எனவே பெல்ஜியம் பிளெமிஷ் மற்றும் வாலூன்களை திருப்திப்படுத்த சமஷ்டி முறைக்கு திரும்புகிறது, அதே நேரத்தில் பிரஸ்ஸல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் இடமாக உள்ளது. யூனியன் ஜாக் கொடியில் செயின்ட் ஜோர்ஜ், செயின்ட் ஆண்ட்ரூ, செயின்ட் டேவிட் மற்றும் செயின்ட் பேட்ரிக் ஆகியோரின் சிலுவைகள் இருக்கலாம் ஆனால் மகிழ்ச்சியான இங்கிலாந்து ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு அதிகாரத்தை வழங்காமல் ஐக்கிய இராச்சியத்தை ஒன்றாக வைத்திருக்க முடியாது.

இலங்கை இனமுரண்பாடு காலனித்துவத்தில் அதன் தோற்றம் கொண்டது. இலங்கை என்று அழைக்கப்படும் நவீன சிலோன் பிரிட்டிஷ் உருவாக்கம். தீவு நிர்வாக ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் மக்கள் இனவாத அடிப்படையில் அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டனர். சுரண்டுவதற்கு ஒன்றுபட்டது ஆள பிரிக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வின் போதுமான மற்றும் சமமான வடிவங்கள் இல்லாத நிலையில், தீவு சுதந்திரத்திற்கு முன்னைய எல்லைகளுக்குள் சுதந்திரத்திற்குப் பின்னரான மோதல்களால் சிதைக்கப்படுகிறது.

 

எதிர்வினை தமிழ் தேசியம்

இலங்கை தமிழ் தேசியவாதம் முதன்மையாக எதிர்வினை இயல்புடையது. நவீன இலங்கை தேசத்தின் இணை நிறுவனர்களாக சிங்கள மக்களுக்கு இணையாக தமிழர்கள் தங்களை நினைத்துக்கொண்டனர். சர்வஜன வாக்குரிமை ஆ டபுல பிரதிநிதித்துவம் அவர்களை முதன்மை சிறுபான்மையினராக குறைத்தது. தமிழர்கள் இன்னமும் தங்களை முழுவதுமாக தீவைச் சேர்ந்தவர்கள் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் சமநிலையான பிரதிநிதித்துவத்தை விரும்பினர், பின்னர் பதிலளிக்கக்கூடிய ஒத்துழைப்பை அரசியல் உத்திகளாக ஏற்றுக்கொண்டனர்.

இவை தோல்வியடைந்தபோது சமஷ்டி கோரிக்கை வந்தது. தமிழர்களின் சுயஅபிப் பிராயம் இப்போது ஒரு பிராந்திய சிறுபான்மையினராக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது. இங்கும் கூட, அரசியல் தலைவர்கள் சமஷ்டி முறைக்கு மிகக் குறைவான சமரசத்திற்குத் தயாராகி, பிராந்திய சபைகள், மாவட்ட சபைகள் போன்ற மாற்றுகளைத் தேர்ந்தெடுத்தனர். இறுதியாக பிரிவினைக்கான விரக்தியான கூக்குரல் மற்றும் அதன் விளைவாக ஆயுதப் போராட்டம் வந்தது. 1987 இன் இந்தியஇ லங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13 வது அரசியலமைப்புத் திருத்தம் மாகாண சபைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. சமஷ்டி முறை சரியான நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் , இனக்கலவரம் தீவிரமடைந்து பின்னர் இரத்தக்களரி மற்றும் படுகொலைகளைத் தடுத்திருக்கலாம்.

சமஷ்டி முறைமைக்கான ஆதரவாளர்கள் அதை ஏற்றுக்கொள்வது ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்று வாதிடுகின்றனர். சுவிட்சர்லாந்து, இந்தியா, மலேசியா, பெல்ஜியம், ஜேர்மனி, ஸ்பெயின் போன்றவை உதாரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால் பிரிவினையையும் தடுக்க கூட்டாட்சி தவறிவிட்டது என்பதை மறுக்க முடியாது. சோவியத் ஒன்றியம் மற்றும் யூகோஸ்லாவியாவின் சிதைவு நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள். கடந்த காலத்தில் மலேசியா சிங்கப்பூர் மற்றும் பாகிஸ்தான் பங்களாதேஷ் பிளவுகள் மற்றும் செக்ஸ்லோவாக்கியா, செர்பியா மற்றும் மொண்டினீக்ரோவின் நவீன பிரிவினைகளும் படிப்பினைகள். கனடாவில், சமஷ்டி முறை இருந்த போதிலும் கியூபெக்கில் பிரிவினைவாதம் வளர்ந்தது. பிரிட்டன் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தது, ஆனால் பிரிவினைவாதம் அங்கு நிலைபெற்றதாகத் தெரிகிறது. நைஜீரிய கூட்டாட்சி பியாஃப்ரான் உள்நாட்டுப் போரைத் தடுக்கவில்லை.

 

கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள்

இருப்பினும் பிரச்சினைக்குரிய நாடுகளை பகுப்பாய்வு செய்யும் போது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பல நுணுக்கங்கள் உள்ளன. அலைக்கற்றையின் ஒரு முனையில் பெல்ஜியமும் ஸ்பெயினும் பிரிவினைவாதப் போக்குகளைத் தடுப்பதற்கான ஒரு தீர்வாக சமஷ்டி முறையை விருப்பத்துடன் தேர்வு செய்கின்றன. இருப்பினும் பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. கனடாவில் பிரிவினைவாத ‘‘இறைமை’யை இலகுவாக்குவதற்கான வாக்கெடுப்பு எதுவும் எதிர்காலத்தில் நடத்தப்படாது என்று பிரிவினைவாத கட்சி கியூபெகோயிஸ் அறிவித்ததன் மூலம் சமன்பாடு மாறுகிறது. முக்கிய கியூபெக் கட்சிகள் இப்போது ஐக்கிய கனடாவிற்குள் அதிக சுயாட்சி மற்றும் அதிகாரங்களை பெற்றுள்ளன.

ஜேர்மனியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சமஷ்டியை வலுப்படுத்தியுள்ளன. இந்தியா அதன் கூட்டுறவு சமஷ்டி மாதிரியின் மூலம் நடைமுறையில் மென் மேலும் கூட்டாட்சியாக மாறியது. ஆனால் பா.ஜ.க அரசாங்கத்தின் மையப்படுத்தல் மற்றும் ஓற்றை மொடல் மீதான முக்கியத்துவம் கவலையளிக்கிறது. இந்த போக்கு அவுஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் காணப்படுகிறது, அங்கு அதிகரித்து வரும் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் தூய சமஷ்டியின் அர்த்தத்தை மெதுவாக அழிக்கிறது.

எனவே சமஷ்டியானது ஒரு அளவில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையான தீர்வை வழங்காது.ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட தேவைகளுக்கு உகந்த மற்றும் பொருத்தமான ஏற்பாடுகளை ஆராய்ந்து பின்பற்ற வேண்டும்.

 

இயக்கமும் மற்றும் எப்போதும் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மாற்றமும்

இலங்கையும் சமஷ்டி யோசனையை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா அல்லது பொருத்தமான புதுமையுடன் ஏற்றுக்கொள்வதா என்பதை தீர்மானிப்பதற்கு முன் அதை தீவிரமாகவும் முழுமையாகவும் ஆராய வேண்டும். சமஷ்டி யோசனை மாறுவதுடன் மற்றும் தொடர்ந்து உருவாகி வருகிறது. இலங்கையில் நாம் செய்ய வேண்டியது, சமஷ்டி யோசனையை ஆராய்ந்து, அதன் நன்மை தீமைகள் பற்றிய தகவலறிந்த கலந்துரையாடல் மற்றும் அதை ஏற்றுக்கொள்கிறோமா அல்லது நிராக ரிக்கிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டும். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.யின் தீர்க்கதரிசன வார்த்தைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. 1926 இல் பண்டாரநாயக்கா கூறியபோது, (சமஷ்டி) முறைக்கு எதிராக ஆயிரத்து ஒரு ஆட்சேபனைகள் எழுப்பப்படலாம், ஆனால் ஆட்சேபனைகள் களையப்படும்போது, ஏதேனும் ஒருவகையான சமஷ்டி முறையிலான அரசாங்கமே ஒரே தீர்வு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 

பாப்ரேயின் வார்த்தைகளில்

இந்த “தகாதவார்த்தை இலங்கையில் சூடுபிடித்த போதிலும், சமஷ்டி யோசனை உலகில் சந்தேகிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. வேகமாக மாறி வரும் உலகில் சமஷ்டி யோசனை பெரிதும் பாதிக்கிறது. பொப்ரேயின் வார்த்தைகளில், சமஷ்டி யோசனையின் மீள் எழுச்சி அதன் மையத்தில் பல்வேறு காரணங்களைக் கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் மதிப்புகளின் உயிர்ச்சக்தி, அடையாள அரசியலில் புரட்சிகள் , மனித உரிமைகள், நிறவெறி , அதிகாரத்துவ கம்யூனிசத்தின் இரட்டை சரிவு, தொழில்நுட்ப புரட்சியின் தாக்கம், நாம் தொடர்புபடுத்தும் பொருளாதார மாற்றங்கள்உலகமய மாக்கல் என்ற வார்த்தையுடன், இவை அனைத்தும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளன.

இந்த புதுப்பித்தலானது சமஷ்டி முறை தொடர்பான பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகளுக்கு மட்டும் அல்ல. புவியியல் என்பது தன்னியக்க ஒருமைப்பாட்டுடன் அரிதாகவே ஒத்ததாக இருக்கிறது என்ற எளிய உண்மையு டன் நாடுகள் நீண்ட காலமாக போராட வேண்டியிருந்தது. இன, மொழி, மற்றும் மத மோதல்கள் இன்று உலக ஒழுங்கை எதிர்கொள்ளும் மேலாதிக்கப் பிரச்சினைகளாக மாறியுள்ளன.

1945 க்குப் பின்னர் போர்கள் நாடுகளுக்குள்ளேயே இருந்தன, சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான பேரழிவு விளைவுகளுடன். இலட்சக்கணக்கில் இறப்பது படையினர் அல்ல, பொதுமக்களாகும் . ருவாண்டாவிலிருந்து கம்போடியா வரை, பால்கன் முதல் கிழக்கு திமோர் வரையில் போர்க்களமானது மைக்கேல் இக்னாடிஃப் இரத்தம் மற்றும் சொந்தம் என்று அழைத்த மோதல்களைத் தீர்க்க இயலாததாக நாடுகளுக்குள் இருந்தது.

இந்தச் சூழலில்தான் சமஷ்டி யோசனை மீண்டும் உருவாகி வருகிறது. உண்மையில், சமஷ்டி நிர்வாகத்தின் சிக்கல்கள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நடைமுறையில் உள்ள அரசியல் மற்றும் சட்ட விவாதங்களின் மையத்தில் உள்ளன, குறிப்பாக மோதல் தீர்வு ஒரு முக்கியமான தேவையாக இருக்கும் பகுதிகளில். தேசிய இறைமை மரணிக்கவில்லை, தேசிய அரசின் ஆயுள் முடிந்துவிடவில்லை. ஆனால் இவை பிரத்தியேகமானவை அல்லது அனைத்தையும் வரையறுக்கின்றன என்ற கருத்து தெளிவாக காலாவதியானதாகும். நாடுகளுக்குள் உள்ள நிர்வாக நடைமுறைகள் தவிர்க்க முடியாமல் உலக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான கருத்தின்பிரகாரம் ஆய்வுக்கு உட்பட்டவை, மிக முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கே.

ஒரு கட்சி அரசின் சரிவு, அடையாளக் கோரிக்கைகள், உள்ளூர் அதிகாரமளிப்பதற்கான தூண்டுதல், அரசாங்கத்தில் அதிக வெளிப் படைத்தன்மை, வெளிப்படைத்தன்மைக்கான வலியுறுத்தல், ஒரு சிறிய மற்றும் மிகவும் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள உலக இறைமை இனி முழுமையானது அல்ல என்ற அங்கீகாரம். சமஷ்டி யோசனையை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்துள்ளது.