தமிழ்க் கட்சிகளை நோக்கி ரணில் அடித்த பந்து

புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில், அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து வந்தால், பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இதன்மூலம், தமிழ்க் கட்சிகளை நோக்கி, பேச்சுவார்த்தை என்கிற பந்தை, ரணில் உதைத்திருக்கின்றார்.

இந்தப் பந்தை தமிழ்க் கட்சிகள் தங்களுக்கிடையில் எப்படி வெற்றிகரமாக கையாண்டு, ரணிலுக்கு எதிராக க ோலாக மாற்றப் போகின்றன என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதை, தென்இலங்கையின் ஆட்சித் தரப்புகள் எப்போதும் விரும்புவதில்லை. ‘ஒரே இலங்கை; ஒரே ஆட்சி; பௌத்தத்துக்கு முதலிடம்’ என்பனதான், தென்இலங்கையின் ஒற்றை நிலைப்பாடு. இதைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த முன்முயற்சிகளையும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நினைப்பார்கள்.

சர்வதேச ரீதியில் இலங்கை மீது பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டாலன்றி, உள்ளக இன முரண்பாடுகள் குறித்தோ, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்தோ, தென் இலங்கை ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தலைப்பட்டதில்லை.

சர்வதேச அழுத்தம் அல்லது போர் முனையில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களில், சமாதானப் பேச்சு என்கிற உத்தியைப் பயன்படுத்தி, நெருக்கடிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்திருக்கிறார்கள். மற்றப்படி, தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய பேச்சுகள் எழுவதைக்கூட, அவர்கள் விரும்புவதில்லை.

இதற்கு தென்இலங்கையை ஆண்ட எந்தவோர் அரசியல் தலைவரும் விதிவிலக்கில்லை. டீ.எஸ் சேனநாயக்கா தொடங்கி இன்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க வரையில் இதுதான் நிலைமை.

இப்படியான நிலைமையில், தமிழ்க் கட்சிகள் எல்லாமும் இணைந்து ஒன்றாக வந்தால், அரசாங்கம் பேச்சுக்கு தயார் என்பது, இலகுவாகத் தப்பிக்கும் ரணிலின் உத்தியாகும். இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடித்திருக்கின்ற பந்தானது, தமிழ்ககட்சிகள் என்கிற பொதுப் பரப்பை நோக்கி அடிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பட்டாலும், அது உண்மையில், தமிழ்த் தேசிய கட்சிகளை நோக்கி அடிக்கப்பட்ட பந்தாகும்.

ஆட்சியில் பங்கெடுத்திருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ, சிவநேசதுரை சந்திரகாந்தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோ அரசாங்கத் தரப்பில் இருக்கக் கூடியவை. இவை, அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை கொண்ட தரப்புகள் அல்ல. இந்தக் கட்சிகளின் அதிகபட்ச இலக்கு, பிரதேச அபிவிருத்தி என்பதுதான். அதற்கு ஆட்சியில் பங்காளியாக இருக்க வேண்டுமென்பது, இவர்களின் அரசியல் சித்தாந்தம்.

ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்கிற ஒற்றைப் புள்ளியைச் சார்ந்திருப்பது. அதுதான் அடிப்படை. அந்த அடிப்படைக்கு அப்பால் நின்று சிந்திக்க முடியாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியோ எதுவாக இருந்தாலும், அரசியல் தீர்வு பற்றி சிந்தித்து செயலாற்றியாக வேண்டும். ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று, நேரெதிரான செயற்பாட்டு நிலைகளைப் பேணுபவையாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக, கூட்டமைப்பு மக்களை காட்டிக் கொடுப்பதாக கூறிக் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களம் கண்டது. அதுபோல, கூட்டமைப்பை எதிர்த்து விக்னேஸ்வரன் களம் கண்ட போது, ஒரு கட்டத்தில் அவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரித்தது. அடுத்த சில மாதங்களில், முன்னணியும் விக்னேஸ்வரனும் முட்டிக்கொண்டு, தனித்தனியாகக் களம் கண்டன.

அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயே, மூன்று பங்காளிக் கட்சிகளும் முரண்பாடுகளின் உச்சத்தின் நின்று மோதிக் கொள்கின்றன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், அதன் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒவ்வொரு தரப்பும், நவக்கிரகங்கள் போன்று முகங்களை எதிர்த்திசையில் திருப்பிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் தீர்வு குறித்து பேச்சு நடத்த, கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தாலே, டெலோவும் புளொட்டும் வருவதில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவரே, “சம்பந்தனின் அழைப்பை கருத்தில் எடுக்கத் தேவையில்லை; யாரும் பேச்சுக்கு வர வேண்டாம்” என்று பங்காளிக கட்சிகளிடம் அறிவிக்கின்றார்.

அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்புடன் இணைந்து, பேச்சு மேசைக்கு கொண்டுவந்து சேர்ப்பது என்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம்.

அடிப்படையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள், தங்களை முன்னிறுத்துவதைத் தாண்டி, எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதில்லை. இவர்களைத் தாண்டி, கட்சிகளைத் தாண்டி, தமிழ் மக்களுக்கான தீர்வு, அவசியமும் அவசரமுமானது என்பதுதான் நிலைமை.

ஆனால், தன்னால் முடியாது என்றால், மற்றவர்களாலும் எந்த அதிசயமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற மனநிலை, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள் அனைவரிடத்திலும் வந்துவிட்டது.

ஒன்றாகக் கூடி, ஒன்றாக முடிவெடுத்து, மக்களிடம் அறிவித்துவிட்டு, அந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி இயங்கும் அரசியல்வாதிகளை, எந்தவொரு தரப்பினாலும் திருத்திவிட முடியாது. அவர்களைத் தேர்தல் என்கிற புள்ளியில் வைத்து, மக்கள் தோற்கடித்து வெளியேற்றினால் அன்றி, இவர்களை நேர்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

அரசியல் ஆர்வலர்கள், கட்சி அபிமானிகள், புத்திஜீவிகள் தொடங்கி யார் யாரோவெல்லாம், “தமிழர் நலனை முன்னிறுத்திய நிலைப்பாடுகளுக்கு ஒன்றிணைந்து வாருங்கள்” என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி விட்டார்கள்.

ஆனால், அவற்றையெல்லாம் இந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் கேட்டுக் கொண்டதில்லை. விமர்சனங்களை அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொள்வதோடு, விடயத்தை கடந்துவிடுகிறார்கள்.

எம்.ஏ சுமந்திரனோ, சி.வி விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ பாராளுமன்றத்துக்குள் இனி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுகளை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று அழைக்க முடியாது. ஏனெனில், அதற்கான பதிலை ஏற்கெனவே ரணில் வழங்கிவிட்டார்.

பாராளுமன்றத்துக்குள், ஹன்சாட்டில் பதியப்படும் உரைகளை மாத்திரம் நிகழ்த்துவதோடு பணி முடிந்துவிட்டதாக, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களோ முக்கியஸ்தர்களோ விலக முடியாது. ரணில் இப்போது அடித்திருக்கின்ற பந்து கூட்டமைப்பையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையோ அல்லது இன்னொரு தமிழ்த் தேசிய கட்சியையோ நோக்கித் தனித்து அடிக்கப்பட்டதில்லை. மாறாக, அனைவரையும் நோக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றது.

இதனை, யாரும் தனித்துக் கையாளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. அப்படி நடந்து கொண்டுவிட்டு, மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நின்று, அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட உணர்ச்சிபூர்வ உரைகளை நிகழ்த்த முடியாது. அதனால், பலனும் இல்லை.

அப்படியான நிலையில், ரணிலின் பந்தை அனைத்து தமிழ்க் கட்சிகளும் தலைவர்களும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு, காழ்ப்பு மனப்பான்மைகளைக் கடந்து நின்று கையாள வேண்டும். அதன்மூலமே ரணிலின் தந்திரத்தை கடக்க முடியும்.

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றும் இப்போது தனி நாட்டுக்கோரிக்கையோடு இல்லை. தேர்தல் மேடைகளில் கூட, சமஷ்டி தீர்வு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் பேசுவதில்லை.

வேறு விடயங்களில் அதீத உணர்ச்சிவசப்பட்ட உரைகளை நிகழ்த்தினாலும், தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற புள்ளியை தாண்டுவதில்லை. அப்படியான நிலையில், தங்களுக்கு இடையில் சமஷ்டித் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, எழுத்து வடிவிலான இணக்கத்தை தமிழ்க் கட்சிகள் காணுவதற்கு முயல வேண்டும்.

அதன்போது, சந்தர்ப்பங்களைக் கையாளும் உத்தி, இராஜதந்திர நோக்கு பற்றியெல்லாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதன்மூலம், தேர்தல்களில் மோதிக் கொண்டாலும், தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் வாக்குகளைக் பெற்ற கட்சிகளாக அவை நடத்து கொள்ள வேண்டும்.

அதுதான், ரணிலுக்கு எதிராக கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதற்படி. அது நிகழவில்லை என்றால், தீர்வு குறித்த அதிசயம் நிகழ்வதற்கான வாய்ப்புகளை, முளையிலேயே கிள்ளுவது போன்றதாகும்.

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்

கலாநிதி ஜெகான் பெரேராவில் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஈழநாடு பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வருடம் இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நாட்களில் தீர்வொன்றைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதை தமிழ் அரசியல் சமுதாயம் ஓரளவு சந்தேகத்துடனேயே நோக்கியிருக்கிறது. 1960 களில் இருந்து அடுத்தடுத்து பதவிக்குவந்த அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதிகள் முழுமனதுடன் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். ஜனாதிபதியின் முன்னைய ஆட்சிக்காலங்களும் எந்த வகையிலும் வித்தியாசமானவையாக அமையவில்லை.

2015 – 2019 காலப்பகுதியில் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டை உள்ள டக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதாக விக்கிரமசிங்க பிரத மர் என்ற வகையில் உறுதியளித்தார். ஆனால், 2018 பிற்பகுதியில் 52 நாள் சதி முயற்சியின்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவரை நியாயமில்லாத வகையில் பதவி நீக்கம் செய்தார். அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான போராட்டத்தில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரா. சம்பந் தன், எம்.ஏ.சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் முன் னின்றார்கள். விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றபோது அரசியல மைப்பு சீர்திருத்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என்ற ஒரு எதிர் பார்ப் பும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதும் நடக்கவில்லை. மாகாணசபை தேர்தல்கள் கூட நடத்தப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முயற்சிகளுக்கு புறம்பாக புதிய உண்மை மற்றும் நல் லிணக்க செயன்முறையொன்றுக்கும் தலைமை தாங்கி வழிநடத்த விக்கிரம சிங்க முன்வந்திருக்கிறார். இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை அமைப்பதற்கு தென்னா பிரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோ சாவை சந்தித்து அவர் கலந்துரையாடினார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தனது கோட்பாடு குறித்து சிவில் சமூக தலைவர்களுடன் அண்மையில் கருத்துக்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி யோசனைகளை முன்வைக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த ஆணைக்குழுவை வெற்றிகரமான தாக்குவதற்கான உறுதியான அரசியல் துணிவாற்றல் இருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஆயுதப்படைகளும் அவற்றின் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவதனால் உண்மை ஆணைக்குழு கோட்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்சமயம் இலங்கை ஆயுதப்படைகளின் சகல பிரிவுகளுமே சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் சில வெளிநாட்டு அரசாங்கங்களினாலும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஆணைக்குழு வொன்று நம்பகத்தன்மையுடையதாக வும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியதாகவும் அமைவதற்கு கருத் தொருமிப்பைக் காண்பதில் வெளியுறவு அமைச்சர் அக்கறை கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் தாங்கள் செய்வதை உண்மையில் அக்கறையுடனும் நேர்மையாகவுமே செய்வதாக பொதுமக்களை நம்பவைப் பதில் பெரும் சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. தென்னாபிரிக் காவின் நல்லிணக்கச் செய்முறைகளைப் பற்றி ஆராய தூதுக்குழுவொன்றை அந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. அத்தகைய ஆய்வுகள் கடந்த காலத்தி லும் மேற்கொள்ளப்பட்டன.

சனத்தொகையில் ஒரு பிரிவினருக்கு ஒரு நேரத்தில் உண்மையையும் நல்லி ணக்கத்தையும் கொடுக்கமுடியாது. உண்மையையும் நல்லிணக்கத்தையும் பிரிவு பிரிவாக செய்யமுடியாது. அவற்றை தமிழர்களுக்கு கொடுத்து சிங்களவர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இல்லாமல் செய்யமுடியாது. இரு மாணவ தலைவர் களை நீண்ட நாட்களாக தடுத்துவைத் திருப்பது உண்மையும் இல்லை, நல்லிணக் கமும் இல்லை. அரசாங்கத்தின் நீதியுணர்வு சமத்துவமானதாக இருக்க வேண்டும். சகல சமூகங்கள் மீதுமான கடப்பாட்டை அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டியது அவசியம்.

தேர்தல்களை ஒத்திவைத்தல்

ஊழல், வளங்களின் முறைகேடான ஒதுக்கீடை ஒழிக்கக்கூடியதும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடியதுமான முறைமை மாற்றம் ஒன்றுக்கான போராட்ட இயக்கத்தின் கோரிக்கை பல்கலைக்கழக மாணவர்களுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வடிவில் வெளிப்படையாக காண்பிக்கப்படாவிட்டாலும் அந்த கோரிக்கை மிகவும் பரந்த ஒரு தளத்தைக் கொண்டதாகும். இரு மாணவ தலைவர்களையும் மற்றையவர்களையும் போன்று கைது செய்யப்பட்டு நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படக்கூடும் என்ற பயத்தில் தான் தாங்கள் அண்மைய போராட்ட இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கவில்லை என்று மட்டக்களப்பில் சிவில் சமூக சந்திப்பொன்றில் கடந்தவாரம் மௌலவி ஒருவர் தெரிவித்தார்.

மாணவ தலைவர்கள் நீதியற்ற முறை யில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மிகவும் பெரியவையாக இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்றும் அவர் சொன்னார். இத்தகைய சூழ்நிலையில் மாற்றத்தை விரும்புகின்ற போதிலும் கைது செய்யப்படுவதை விரும்பாத மக்கள் தங்களது விருப்பங்களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்த தேர்தல்களை மாத்திரமே எதிர்பார்த் திருக்கமுடியும்.

நாட்டின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் – கஞ்சன விஜேசேகர

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்னதாக இங்கு உள்ளவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

வெளிநாட்டில் இருந்து ஒரு முதலீட்டாளர் நாட்டுக்கு வரும் போது, இங்குள்ள சில தரப்பினர் எமது நாட்டின் வளங்களை குறித்த முதலீட்டாளர் தமது நாட்டுக்கு எடுத்துச் செல்வதாக போலியான தோரணையை உருவாக்கி விடுகிறார்கள்.

அண்மையில் இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் மின்சார உற்பத்தித்துறையில் முதலீட்டை மேற்கொள்ள எத்தனித்த போது, நாட்டின் மின் வளத்தை இந்தியாவுக்கு சூறையாடிச் செல்லப் போகிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள்.

எனினும் இந்த நிலைப்பாட்டை மாற்றி, எமது நாட்டை அபிவிருத்தியடைய செய்ய வேண்டும் என்றால் பிராந்திய நாடுகளுடன் போட்டியிட வேண்டும்.

அத்துடன், பெருந்தோட்டத்துறை அல்லது கைத்தொழில்துறை ஆகியவற்றில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் முதலீடுகளை அதிகரிப்பதே சிறந்த வழியாகும் என்றும் கஞ்சன விஜேயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்? – யதீந்திரா

சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்தியரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது. மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை, எனது சிறிய வயதில், பல்வேறு சந்தர்பங்களில் கேட்டிருக்கின்றேன். இது சரியானதொரு பார்வைதானா -என்னும் கேள்வி இருந்துகொண்டேயிருந்தது.

2002இல், யாழ்வீரசிங்கம் மண்டபத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மானுடத்தின் தமிழ் கூடல் இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் மு.திருநாவுக்கரசு (திருமாஸ்டர்) பேசுகின்றார்-நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று சிங்களவர்கள் மூடர்கள் அல்லர். அவர்களின் ராஜதந்திர ஆற்றல் அபரிமிதமானது. மேற்குலகில் மாக்கியவல்லியையும் பிஸ்மார்க்கையும் படித்த ஜே.ஆர்ஜெவர்த்தன, கீழைத்தேயத்தின் கௌடில்யரையும் படித்தார். கௌடியல்யர் கூறுகின்றார்: உனக்கு இரண்டு எதிரிகள் இருந்தால், ஒரு எதிரியை நண்பணாகிக்கி, இன்னொரு எதிரியுடன் மோதவிடு, இறுதியில் உனது இரண்டு எதிரிகளும் இல்லாமல் போவார்கள். இதுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். ஒரு எதிரியான இந்தியாவை நண்பணாக்கி, இன்னொரு எதிரியான விடுதலைப் புலிகளுடன் மோதச் செய்தனர். சிங்களவர்களின் அபாரா ராஜதந்திர ஆற்றல் தொடர்பில் பார்வையாளார்களை, திரு திக்குமுக்காடச் செய்தார். அதே போன்று, வரலாற்றியலாளர் பேராசிரியர். இந்திரபாலா கூறிய ஒரு கருத்தையும் திருநாவுக்கரசு, நினைவுபடுத்தியிருந்தார். அதாவது, ஒரு குட்டித் தீவு, பிரமாண்டமான இந்தியாவிற்கு அருகில், இரண்டாயிரம் வருடங்கள் தனித்துவமாக தப்பிப்பிழைக்க முடிந்திருக்கின்றதென்றால், அது மூளையினால்தான் சாத்தியப்பட்டது. சிங்களவர்களின் அறிவாற்றல் தொடர்பில் விடுதலைப் புலிகளின் மேடையிலேயே திருநாவுக்கரசு புகழ்ந்து கொண்டிருந்தார். எனக்குள் எழுந்த கேள்வி, சரி, அவர்கள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் ஏன் இவற்றை தமிழர்களால் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியாமல் போனது? நாங்கள் புத்திசாலிகளல்லவா!

சீன போரியல் நிபுனர் சன் சூ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறியது. நீ ஒவ்வொரு போரில் தோற்கின்ற போதும், எதிரி உன்னைவிட பலமானவனாக இருந்தனால்தான் நீ தோற்றுப் போனாய் என்று கூறாதே, நீ பலவீனமாக இருந்ததால் தோற்றுப் போனாய் என்று கூறு. ஆனால் நமது சூழலில் ஒரு பார்வைக் குறைபாடுண்டு. நாம் தோல்வியடையும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் மற்றவர்கள் மீதே விரல் நீட்டுகின்றோம். இந்தியாவின் மீது விரல் நீட்டுகின்றோம். அமெரிக்காவின் மீது விரல் நீட்டுகின்றோம். இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உலகத்தின் மீதும் விரல் நீட்டுகின்றோம். இது எவ்வாறென்றால், பரிட்சையில் சித்தியடைந்தால், அது மாணவனின் கெட்டித்தனம், பரிட்சையில் தோல்விடைந்தால், அது ஆசிரியரின் பிரச்சினை. இந்த சிந்தனைப் போக்கே எங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது.

2009இற்கு முன்னர் நம் அனைவரது விருப்பமும் விடுதலைப் புலிகள் வெற்றியடை வேண்டும் என்பதாகவே இருந்தது. 95 வீதமான தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளின் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர். ஏதாவது அதிசயங்கள் நடந்தாவது அவர்கள் வென்றுவிடுவார்கள் என்பதே சாமானிய தமிழனின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இறுதியில் அனைத்தும் நிராசையானது. உண்மையில் அது வெறும் தோல்வியல்ல. நாம், நமது அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், சிந்திப்பதற்கும் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம். ஆனால் அவ்வாறானதொரு தேடலை செய்ய நம்மால் முடியவில்லை. நமது தவறான அரசியல் புரிதல்களும், இயலாமைகளும் நம்மை தடுத்தது. இன்று யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போதும் கூட, சுலோகங்களை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் முன்வைக்கும் சுலோகங்களில் எவற்றையுமே எங்களால் சாத்தியப்படுத்த முடியவில்லை. இப்போதும் சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றோம். சமஸ்டிதான் தேவையென்பதில் எவருக்கு முரண்பாடுண்டு? ஆனால் அதனை எவ்வாறு அடையப் போகின்றோம்? 1949இல், இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட போது, அதன் இலக்கு சமஸ்டியடிப்படையிலான அரசியல் ஏற்பாடொன்றை பெறுவதுதான். ஆனால் அதனை அடைவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை செல்வநாயகம் புரிந்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, ஆகக்குறைந்தளவிலாவது, சில அரசியல் எற்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில், பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். ஆனால் தென்னிலங்கையின் சிங்கள இனவாத அரசியல் சூழல், அதனை உள்வாங்கிக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே செல்வநாயகம் தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நகர்ந்தார். ஆனால் அதனை எவ்வாறு அடைவதென்னும் வழிமுறை அவருக்கு தெரியாது. அது என்ன வழிமுறை? இந்தக் கேள்விக்கு பதிலாக வந்ததுதான், தமிழ் ஆயுத இயக்க அரசியலாகும்.

தமிழர் அரசியல் எப்போது, ஆயுதவழிமுறையை தழுவிக் கொண்டதோ, அப்போதே அன்னிய தரப்புக்களின் தலையீடுகளும் தமிழ் அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. ஆயுத பயிற்சிக்காக பலதரப்பட்ட அன்னியர்களை அணுகும் போக்கும் உருவாகியது. தெரிந்தும், தெரியாமலும் பல்வேறு முகவர்கள் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்தனர். இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் அதிகாரியான விக்டர் ஒட்ரோவ்ஸ்கி எழுதிய நூல், அந்தக் காலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மொசாட் ஒரே நேரத்தில், சிறிலங்கா இராணுவத்திற்கும் பொதுவாக புலிகளென்று அறியப்படும் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பயற்சியளித்தமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தக் காலத்தில் புலிகளென்று அறியப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். அன்றைய உலக அரசியல் சூழலில், தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்குள், எவ்வாறெல்லாம் அன்னிய தரப்புக்கள் உள்நுழைந்தன என்பதற்கு, இதுவொரு சிறந்த உதாரணமாகும். எந்தவொரு அன்னிய தரப்பும் தங்களின் நலன்களை புறம்தள்ளி செயற்படாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்தியா, ஈழத் தமிழர் பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்தது. தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தது. இதன் தொடர்சியாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. தமிழர்களின் நண்பனாக வடக்கு கிழக்கில் கால்பதித்த இந்திய அமைதிப் படையினர், எதிரியாக நாட்டைவிட்டு வெளியேறும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. இதன் பின்னரான மூன்றுதசாப்த கால விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.

முள்ளிவாய்காலுக்கு பின்னரான அரசியல் முற்றிலும் சம்பந்தனின், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் காலத்தை சம்பந்தனால் சரியாக கையாள முடிந்ததா? மீண்டும் தோல்வி தொடர்பிலேயே விவாதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உருவாகியது. மகிந்த ராஜபக்ச காலத்தின் விடயங்கள் தொடர்பில் பேசுவதில் பயனில்லை. மகிந்த ராஜபக்ச முற்றிலும் வெற்றிப் பெருமிதத்தோடு மட்டும்தான் விடயங்களை அணுகியிருந்தார். எனவே மகிந்த ராஜபாக்சவின் காலத்தில் கூட்டமைப்பால் விடயங்களை நகர்த்த முடியவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஆனால் 2015இல் தமிழர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் அப்படியல்ல. அது சில சாதகமான வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. இந்தியாவின் உதவியோடு சில விடயங்களை முன்னெடுப்பதற்கான வாய்புக்கள் ஏற்பட்டது. ஆனால் சம்பந்தன் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சாத்தியமற்ற புதிய அரசியல்யாப்பின் பெயரில் காலத்தை விரயம் செய்திருந்தார். அப்போது இந்தக் கட்டுரையாளர் உட்பட, பலரும் ஒரு விடயத்தை வலியுறுத்தியிருந்தனர். அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையை பலப்படுத்த முயற்சியுங்கள். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்கு இந்தியாவின் உதவியை கோராலாம். ஏனெனில், யுத்தம் முடிவுற்ற பின்னர், 2009இல், சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டி மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், 13வது திருத்தச்சட்டம் அதற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுற்ற உடனேயே ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் 13வது திருத்தச்சட்டம் வலியுறுத்தப்பட்டதிலிருந்து, விடயங்களை சம்பந்தன் தரப்பு புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனை கவனமாக பற்றிப்பிடித்திருக்க வேண்டும். இங்கு 13இல் என்ன இருக்கின்றது, என்ன இல்லை என்பதல்ல விடயம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, பற்றிப்பிடிப்பதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது மரக்கட்டையாக கூட இருக்கலாம். கரைசேர்வதே முதல் தேவையாகும். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதிய அரசியல் யாப்பென்னும் பெயரில், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சம்பந்தன் நாசமாக்கினார். நாங்கள், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் பயணித்துவிட்டோம். புதிய அரசியல்யாப்பை நெருங்கிவிட்டோம், என்றவாறு கதைகள் சொன்னார். இறுதியில் அனைத்தும் புஸ்வானமாகியது. மீண்டும் தமிழர் அரசியல் நகர்வுகள் தோல்விலேயே முடிந்தது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் தோல்வி பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கப் போகின்றோம். தோல்வி பற்றியே விமர்சித்துக் கொண்டிருப்பது? தோல்வி பற்றியே அங்கலாய்த்துக்கொண்டிருப்பது? நமது இயலாமைகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்திக்கொண்டிருப்பது? ஏன் நமது அரசியல் நகர்வுகள் தொடர்ந்தும் தோல்வியடைந்து கொண்டேயிருக்கின்றது? ஒன்றில் நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையா அல்லது நல்ல தலைவர்களை தமிழ் சமூகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது தமிழர் அரசியல் ஏதோவொரு முள்ளில் சிக்கியிருக்கின்றதா, அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும், தமிழர்கள் அரயல்ரீதியில் மட்டுமல்ல, சமூக பொருளாதார நிலையில் மேலும் பின்நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளை ஒரு சொல்லில் மதிப்பிடுவதனால், தீர்வும் இல்லை முன்னேற்றமும் இல்லை. சமூகரீதியான முன்னேற்றம் தொடர்பிலேயே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. நாம் ஓய்வில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றோம். எழுதிக் கொண்டிருக்கின்றோம். விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஏன்? தமிழ் சமூகம் இதற்கான பதிலை கண்டடையாவிட்டால், தோல்விகள் மட்டுமே நமது கதையாக நீண்டுசெல்லும்.

 

– தினக்குரல் பத்திரிகையில் அரசியல் ஆய்வாளர் யதீந்திராவால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரை

தந்திரம் செய் – நிலாந்தன்

ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கும் ஐநாவை சமாளிப்பதற்கும் இது போன்ற அறிவிப்புகள் தேவை. அல்லது தமிழ் மக்களின் தலையில் ஏதாவது ஒரு அரைகுறைத் தீர்வை கட்டி விடுவதற்கு இது உகந்த தருணம் என்று ரணில் சிந்திக்கிறாரா?

ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் ரணில்+மைத்திரி அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்க முற்பட்டது.அந்த யாப்புருவாக்கச் செய்முறைகள் இடைக்கால வரைபுவரை முன்னேறின.ஆனால் இடையே மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.அதனால் யாப்புருவாக்க முயற்சிகள் இடையில் நின்று போயின. அதன்பின் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இப்பொழுது ரணில் மீண்டும் வந்து விட்டார் அவர் 2018 இல் விட்ட இடத்திலிருந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது அதே பழைய முயற்சிக்கு ஒரு புதிய லேபலை ஒட்டி அதைத் தொடரப் போகிறாரா?அல்லது முற்றிலும் புதிதாக ஒரு முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது பன்னாட்டு நாணய நிதியம் ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்குத் தமிழ் மக்களையும் பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமா ? என்ற கேள்விகளை தமக்குள் எழுப்பி தமிழ்த் தரப்பு ரணிலை எதிர் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தமிழ்த் தரப்பு ரணிலை எதிர்கொள்வதற்காக தங்களுக்கிடையே கலந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று கூறி கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எனைய கட்சித் தலைவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.அதில் அவர் சமஸ்ரிதான் தமிழ் மக்கள் கேட்கும் தீர்வு என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அது தொடர்பில் அவர் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடுகூட உரையாடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவருடைய அழைப்பை, கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் பொருட்படுத்தவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளும் அந்த அழைப்பை பொருட்படுத்தவில்லை.சம்பந்தர் அழைத்தால் மேசைக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டை ஏனைய கட்சிகள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் சுமந்திரனின் அழைப்பு வெற்றி பெறவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சம்மந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெறவிருந்த அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.அதாவது பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக தமிழ்த்தரப்பு தங்களிடையே பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முயற்சி சறுக்கிவிட்டது.

அப்படி ஒரு முயற்சி அவசியமானது. அதை கட்சிகள் தங்களுக்கிடையே தாங்களாக செய்ய வேண்டும். அல்லது குடிமக்கள் சமூகங்கள் அதை நோக்கி கட்சிகளை உந்தித்தள்ள வேண்டும்.ஏனென்றால் தமிழ்த்தரப்பு என்ன கேட்கின்றது என்பதனை ஒரே குரலில் சொன்னால் அதற்குப் பலம் அதிகம் என்று அபிப்பிராயம் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் மத்தியில் உண்டு. தமிழ் குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதை வலியுறுத்திப் பேசுவதுண்டு. தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் பிரதான பலவீனமாக அதைச் சுட்டிக்காட்டிப் பேசும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உண்டு.இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமிழ்த்தரப்பு தான் எதைக் கேட்கிறது என்பதனை ஒரே குரலில் முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாயத் தேவை உண்டு.

தமிழ் கட்சிகள் என்ன கேட்கின்றன ?இதுவரையிலும் தமிழ்த் தரப்பு முன்வைத்த தீர்வு முன்மொழிவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுமே,எல்லாக் குடிமக்கள் சமூகங்களுமே ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றன.அவை கூட்டாட்சிப் பண்புடைய -சமஸ்ரிப் பண்புடைய தீர்வைத்தான் – கேட்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் தமிழ்த்தரப்பு அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த ஒரு காலகட்டம் எதுவென்றால் கடந்த ஆறு ஆண்டுகாலப் பகுதிதான்.2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 ஐநா தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றினார். அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசன பேரவையாக மாற்றப்பட்டது.அதிலிருந்து தொடங்கி கோத்தாபயவின் யாப்புருவாக்கத்திற்கான நிபுணர்குழு வரையிலும் தமிழ்த்தரப்பு தனது முன்மொழிவுகளை முன்வைத்து வருகிறது.இதில் தமிழ்க்கட்சிகள்,தமிழ் குடிமக்கள் சமூகங்கள்,தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்புகளும் கடந்த 6 ஆண்டு கால பகுதிக்குள் அதிகளவு முன்மொழிவுகளை வைத்திருக்கின்றன.

இதில் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது ஒரு சமஸ்ரி முன்மொழிவு.அதுபோலவே வட மாகாண சபை முன் வைத்ததும் ஒரு சமஸ்ரி முன்மொழிவு.விக்னேஸ்வரனின் கட்சி கொன்பெடரேஷனை கேட்கின்றது.அதுவும் உயர்வான ஒரு சமஸ்ரிதான்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு சமஸ்ரிக் கட்டமைப்பைக் கேட்கிறது.அரசாங்கம் ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி கூட்டாட்சிக்குத் தயார் என்று அறிவித்தால் தாம் ரணிலுடன் பேசத்தயார் என்று அக்கட்சி கூறுகிறது.

இதில் கூட்டமைப்பு ரணிலோடு இணைந்து உருவாக்க முயன்ற யாப்பைக் குறித்து விமர்சனங்கள் உண்டு.தமிழ் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் முதலாவது யாப்புருவாக்க முயற்சி அதுவென்று சம்பந்தர் சொன்னார். கூட்டமைப்பு அதை சமஸ்ரிப் பண்புடையது என்று கூறியது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அமைச்சர்களும் அது ஒற்றை ஆட்சிதான் என்று சொன்னார்கள்.சம்பந்தர் “பிரிக்கப்படமுடியாத, பிளவுபடாத இலங்கைத் தீவு” என்று திரும்பத் திரும்ப ஒரு மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.சமஸ்ரி என்று வெளிப்படையாக லேபலை ஒட்டினால் அதைச் சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்றும் காரணம் கூறப்பட்டது. அதாவது நடைமுறையில் அந்தத் தீர்வு முயற்சியை அவர்கள் சிங்கள மக்களுக்கு ஒற்றை ஆட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். தமிழ் மக்களுக்கு அது கூட்டாட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது சுமந்திரன் கூறுகிறார் ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி எல்லாக் கட்சிகளும் ஒரு குரலில் பேச வேண்டும் என்று.

அவர் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டபடி சமஸ்ரிதான் தீர்வு என்பதனை தமிழரசுக்கட்சி உறுதியாகவும் வெளிப்படையாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் கூறுமாயிருந்தால் ஏனைய கட்சிகளும் அவர்களோடு இணைந்து ஒரே குரலில் அந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைய மறுத்தால் அதுவும் நல்லதே.அக்கட்சி வெளியில் நின்று கொண்டு ஏனைய கட்சிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும். எனைய கட்சிகள் தமது கோரிக்கைகளில் இருந்து இறங்கினால் அவற்றை முன்னணி அம்பலப்படுத்தும். எனவே ஒரு கட்சி எதிர் நிலையில் நிற்பதும் நல்லது.

ரணில் இனப்பிரச்சினையை சர்வதேசமயநீக்கம் செய்ய முற்படுகிறார்.வெளியாரின் தலையீடின்றி பிரச்சினையைத் தீர்க்க வருமாறு தமிழர்களை அழைத்திருக்கிறரார்.போரில் வெல்வதற்கு அவர்களுக்கு வெளி நாடுகளின் ஆயுதமும் உதவிகளும் தேவை.ஆனால் சமாதானத்துக்கு அது தேவையில்லையாம்.தமிழ்த் தரப்பு அதை ஏற்கக்கூடாது.இந்தியாவையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும்.அந்த மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தின்கீழ் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் கூட்டாட்சிக்கான ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதுவதற்காகப் பேச வேண்டும்.

மேலும் இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக அமைப்புக்களிடம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பதை பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக வைக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்

ரணில் இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி.தந்திரமும் நிறைவேற்று அதிகாரமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.ரணில் ஒரு நரி.அவர் தந்திரங்கள் செய்வார் என்று தமிழ்த்தரப்பு தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்மக்கள் தாங்களும் புத்திசாலிகள் என்பதனை நிரூபிக்க வேண்டிய ஆகப்பிந்திய தருணம் இது.

– நிலாந்தன்

விடுவிக்கப்பட்ட அரசியற் கைதிளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தல் – நிலாந்தன்.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுருவான ரகுபதி சர்மா அண்மையில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட அவருடைய மனைவி வசந்தி சுமார் 15 ஆண்டுகளின் பின் குற்றமற்றவர் என்று நீதிமன்றினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டார். ரகுபதி சர்மா இப்பொழுது இரத்மலானையில் உள்ள உள்ள இந்துமா மன்றத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து அவர் விடுதலையாகும் வரையிலும் அதற்கு பின்னரும் இந்து மாமன்றம் அவருக்கு பல விதங்களிலும் உதவி வருகிறது.

கைது செய்யப்படுகையில் அந்த ஐயரும் அவருடைய மனைவியும் இளம் தம்பதிகளாக இருந்தார்கள். அப்போதிருந்த அரசியல் சூழலில் அவர்களோடு சேர்ந்து தங்களை அடையாளப்படுத்த உறவினர்களும் விரும்பவில்லை. விடுவிக்கப்பட்ட வசந்தி சர்மா தனது பிள்ளைகளோடு வெளிநாட்டில் வசித்துவருகிறார். இப்பொழுதும் தனித்து விடப்பட்டிருக்கும் ஐயரை இந்து மாமன்றம் பராமரிக்கின்றது.

அவரைப் போல பல அரசியல் கைதிகள் சிறையில் இருந்த காலத்தில் அவர்களுடைய குடும்பங்கள் தனித்து விடப்பட்டன. உறவினர்களின் மனநலம் பாதிக்கப்பட்டது. குடும்பத்துக்குள் அமைதி குலைந்தது. சில குடும்பங்கள் பிரிந்தன. சில உறவினர்கள் மருந்தில் தங்கியிருக்கும் அளவுக்கு அவர்களுடைய மனநலம் கெட்டது. விடுவிக்கப்பட்ட எல்லா அரசியல் கைதிகளுக்கும் பொருத்தமான உதவிகள் பொருத்தமான நேரத்தில் கிடைத்தன என்று கூற முடியாது. இதுவிடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான கட்டமைப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

அண்மை ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் அதிக தொகை கைதிகளுக்கு (16) பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது கோட்டாபய ராஜபக்ஷதான் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண். மேலும் தம்மை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை விடுவிப்பதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிகா குமாரரரணதுங்கவும் கைதிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். மொத்தம் 33 கைதிகள் இப்பொழுதும் சிறையில் உள்ளார்கள். அவர்களில் இருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

அரசியல் கைதிகளுக்காக தொடக்கத்தில் இருந்தே போராடியது அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான அரசியல் கைதிகளுக்கான தேசிய அமைப்பாகும். அண்மை ஆண்டுகளாக மற்றொரு அமைப்பு “குரலற்றவர்களின் குரல்” என்ற பெயரில் இயங்கி வருகிறது. இது அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட கோமகனின் தலைமையில் இயங்குகின்றது. இந்த அமைப்பில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்படுகிறார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் ஒரு காலச் சூழலில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் அடுத்தகட்ட வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் அமைத்துக் கொள்ளத்தக்க உதவிகள் அவர்களுக்கு தேவை.தமிழ்ச் சமூகம் இதுதொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடயத்தில் “குரலற்றவர்களின் குரல்” அமைப்பானது அண்மை காலங்களில் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது. கைதிகளை எதுவிதத்திலாவது விடுவிப்பதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். விடுவிக்கப்பட்ட கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கு அந்த அமைப்பிடமும் போதிய வளங்கள் இல்லை.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் தனி நபர்களும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக “தோழமைக் கரங்கள்” என்ற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு கைதிகளுக்கு உதவி வருகிறது. அண்மையில் லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் பொது மன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் ஒவ்வொருவருக்கும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக 25 லட்சம் ரூபாய்கள் வழங்கியிருந்தார். விடுவிக்கப்பட்ட கைதிகள் அல்லது புனர்வாழ்வின்பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்களுக்கு இதுவரை உலக நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை எல்லாவற்றிலும் இது மிகப் பெரியது.

இது ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம். புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இருக்கும் பெரு முதலாளிகளும் நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் தனி நபர்களும் இதுபோன்ற விடயங்களில் எவ்வாறு பொருத்தமான விதங்களில் உதவி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு எதையாவது செய்ய வேண்டும் என்ற தவிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தம்மிடம் உள்ள வளங்களை கொண்டு எப்படி ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தேசத்தை கட்டி எழுப்புவது அல்லது தேச நிர்மாணம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பலப்படுத்தி நீடித்திருக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுதான்.இந்த அடிப்படையில் பார்த்தால் அரசியல் கைதிகள்,நில ஆக்கிரமிப்பு,காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி,முன்னாள் இயக்கத்தவர்களுக்கு வாழ்வாதாரம் போன்ற எல்லாவற்றிற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தாயகத்தில் தேவை உண்டு. புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் போதிய அளவு வளமும்,நிபுணத்துவ அறிவும்,உதவி செய்ய வேண்டும் என்ற தவிப்பும் உண்டு. இரண்டையும் இணைப்பது தேச நிர்மாணிகளின் வேலை.

தாயகத்தில் நடக்கும் அரசியல் செயற்பாடுகள் முதற்கொண்டு ஆன்மிகச் செயல்பாடுகள்வரை அனைத்திலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கை இருக்கிறது. இதற்கு ஆகப்பிந்திய சில உதாரணங்களை இங்கு காட்டலாம்.

யாழ்ப்பாணத்தில் விழிப்புலன் மற்றும் செவிப்புலனை இழந்தவர்களுக்கான ஒரு நிறுவனம் “கருவி” என்ற பெயரில் இயங்குகின்றது. யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தால் விரும்பி நுகரப்படும் “சைன்” என்று அழைக்கப்படுகின்ற திரவ சவர்க்காரத்தை அந்த நிறுவனமே தயாரிக்கின்றது.அந்த நிறுவனம் தனக்கென்று ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு நீர்வேலியில் ஒரு காணியை வாங்கியுள்ளது. அதற்குரிய நிதி உதவிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளே பெருமளவிற்கு வழங்கின.

அவ்வாறுதான் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மாற்றம் அறக்கட்டளை நிதியத்துக்கும் உதவிகள் கிடைக்கின்றன. போதைப் பொருள் பாவனையால் நோயாளிகளாக மாறியவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் அந்நிலையம் கத்தோலிக்கத் திருச்சபையால் பராமரிக்கப்படுகிறது. அங்கே பொருத்தமான வளங்களோ ஆளனியோ கிடையாது. ஒரு மத குருவும் ஒரு துறைசார் உழவள ஆலோசகரும் அவர்களுக்கு சில உதவியாளர்களும் மட்டுமே உண்டு. அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு மருதங்கேணியில் 10 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் தரப்பு உதவியிருக்கிறது.

இவ்வாறு தாயகத்தில் தேவையான கட்டுமானங்களை உருவாக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ்து தரப்பு உதவமுடியும். அதை ஒரு கொடையாக அல்ல. தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகச் செய்ய வேண்டும். முதலீடு செய்வது அல்லது முதலீட்டை தேச நிர்மானத்தின் ஒரு பகுதியாகச் செய்வது. எல்லாவற்றையும் கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திக்க வேண்டும்.அரூபமாகக் கற்பனை செய்து கோஷங்களோடு வாழ முடியாது. யதார்த்தமான கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றை பலப்படுத்தினால்தான் தூலமாக ஒரு தேசத்தை நிர்மாணிக்கலாம்.

எல்லா வெற்றி பெற்ற சமூகங்களிலும் பிரமிக்கத்தக்க நிறுவன உருவாக்கிகளைக் காணலாம்.லாப நோக்கமற்ற நிறுவன உருவாக்கிகளால் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழ்ச் சமூகத்திலும் ஒரு காலகட்டத்தில் அவ்வாறு நிறுவன உருவாக்கிகள் தோன்றினார்கள். இந்து மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் உருவாக்கிய நிறுவனங்களின் விளைவாகத்தான் நவீன தமிழ்ச் சமூகம் உருத்திரண்டது. எனவே ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு காலகட்டத்தில் சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கும் தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் எப்படிப்பட்ட நிறுவனங்கள் கட்டமைப்புகள் தேவை என்று கண்டு அவற்றை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளுக்கான கட்டமைப்பு முதற்கொண்டு போதைப்பொருள் நோயாளிகளை பராமரிப்பதற்கான புனர்வாழ்வு அமைப்புகள்,தனித்து விடப்பட்ட முதியோரைப் பராமரிப்பதற்கான கட்டமைப்புக்கள் என்று எல்லாவற்றுக்கும் துறைசார் அறிவும் நவீன வளங்களும் தேவைப்படுகின்றன. அவையெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தாராளமாக உண்டு.எனவே தேவையையும் வளங்களையும் இணைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டும்.

– நிலாந்தன்

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை நீண்டகால நோக்கில் எதிர்விளைவுகளைக் கொண்டுவரும்

– கலாநிதி ஜெகான் பெரேரா

 

ஏனைய சகல துறைகளுக்கும் செலவினங்கள் குறைக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை  அதிகாரத்தை இறுகப்பிடித்து அரசியல் உறுதிப்பாட்டு தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் பாதுகாப்பு படைகள் மீது எந்தளவுக்கு தங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மோசமான நிலைமை்இனிமேல் தான் வரப்போகிறது என்ற அரசாங்கத்தின் பயத்தையும் இது பிரதிபலிக்கிறது. முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் நாடு விடுபடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களைப் பொறுத்தவரை இது தீமைக்கான அறிகுறியேயாகும்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்ததமை தொடர்பில் எழுந்த நியாயப்பாட்டு கேள்விகளுக்கு அப்பால் அவரின் வருகை அவருக்கு சர்வதேச முறைமைகளுடன் இருக்கும் பரிச்சயத்தின் ஊடாக சர்வதேச ஆதரவைப் பெற்று அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்கு உதவும் என்ற எதிர்பார்ப்புடன் வரவேற்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு இன்னமும் நிறைவேறவில்லை. நாட்டுக்கு இறுதியாக கிடைத்த பெருமளவு உதவி இந்தியாவிடம் இருந்தே வந்தது.விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர்தான் இது நடந்தது.

நாட்டுக்கு தேவைப்படுகின்ற கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் என்றே தற்போது நம்பிக்கை வைக்கப்படுகிறது. அவ்வாறு கிடைக்கக்கூடிய கடனுதவி இவ்வருடம் மார்ச் மாதம் கடன்தீர்க்க வக்கில்லாத நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கையுடன் மீண்டும் அலுவல்களை ஆரம்பிக்க கடன்வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு பச்சைவிளக்காக அமையும்.சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை பிரதிபலிப்பதாக பட்ஜெட் அமையும் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளிப்படையாகவே கூறினார்.

இதுவரையில் இறுக்கமான இரகசியமாக இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை பகிரங்கப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார்.அந்த யோசனைகள் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கடுூமயான சந்தேகங்கள் பொதுவெளியில் கிளம்பியிருந்தன.சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள்  பொதுமக்களிடம் வேண்டிநிற்கும் தியாகம் தொடர்பில் மூளக்கூடிய கோபம் ஜனாதிபதிக்கு எதிராக திருப்பிவிடப்படக்கூடும்.தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டு மக்களை சிறப்பாக பாதுகாக்கமுடியும் என்று அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள (ஆட்சிக்கு வரும் ஆர்வம்கொண்ட ) தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

இத்தகைய பில்புலத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான எதிர்ப்பை மக்கள் தேர்தல்களின் மூலமாகவோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவோ காட்டுவதை ஜனாதிபதியும் அவரது குழுவினரும் விரும்பமாட்டார்கள்.உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்கும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைய அரைவாசியாக குறைப்பதற்கும்  தேசிய எல்லை நிர்ணய குழு தீடீரென்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இதை அரசாங்கம் கூறுகிறது.இது அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்படவேண்டியிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய தந்திரோபாயமாகவும் நோக்கப்படலாம். அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கக்கூடிய வாய்ப்பை அது இல்லாமல் செய்யும்.சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியையும் விட கூடுதலானதாக இருக்கும் பாதுகாப்பு பட்ஜெட் அரசாங்கத்துக்கு எதிரான எந்த கிளர்ச்சியையும் ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படைகள் ஊக்கம் பெறுவதை உறுதிசெய்யும் எனலாம்.

நியாயப்பாட்டு நெருக்கடி 

இவ்வருடம் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கி மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கிய நேரத்தில் இருந்து அரசாங்கம் அதன் நியாயப்பாடு தொடர்பிலான நெருக்கடியொன்றை எதிர்நோக்கிவருகின்றது.அந்த நெருக்கடியை அரசாங்கத்தினால் அலட்சியம் செய்ய இயலாது.இவ்வருடம் மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவையின்்பதவி விலகல் அரசாங்கத்தை பெரும்்பீதிக்குள்ளாக்கி பாதுகாப்பற்ற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறது.இரு மாணவர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி பதாதைகளை ஏந்திய வண்ணம் வீதிப்போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசாங்கத்தின் இந்த பாதுகாப்பின்மையின் ஒரு அறிகுறியாகும்.

இவ்விரு பெண்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்திருக்கிறது.பெரும் எண்ணிக்கையான பொலிசார் பெண்களை சுற்றிவளைத்து வாகனத்தில் பலவந்தமாக ஏற்றியதை காணக்கூடியதாக இருந்தது.இந்த களேபரத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெண் பொலிசாரை கழுத்தில் பிடித்து கொடூரமாக நடத்தியதை சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில் காணமுடிந்தது. அந்த பொலிஸ் அதிகாரிகள் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கும் தெரியவில்லை.

அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை மற்றவர்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் பாதுகாப்பு அக்கறைகளில் மூழ்கியிருக்கிறது.இது நாட்டையும் அரசாங்கத்தையும் பொறுத்தவரை துரதிர்ஷ்டமானது.இரு மாணவர் தலைவர்களை எந்த குற்றச்சாட்டும் சுமத்தாமல்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கும் கூடுலாக தடுத்துவைத்திருக்கும் அரசாங்கத்தின் செயல் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை மாத்திரமல்ல, நியாயமாக சிந்திக்கக்கூடிய எவரையும் கடும் சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த செயல் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பைக் கொண்டுவரக்கூடியதாகும்.இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பயனுடையதாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதா இல்லையா என்பது அடுததவருடம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவிருக்கிறது.ஐரோப்பிய ஒன்றியம் அந்த சலுகையை நீடிப்பது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை பொறுத்ததேயாகும்.இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும் தற்போது தொடருகின்ற மனித உரிமை மீறல்களும் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச அரங்குகளிலும் விவாதத்துக்கு எடுக்கப்படுகின்றன.இது நாட்டுக்கு பெரும் பாதிப்பைக் கொண்டுவரும்.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த வாரம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மக்கள் சபையில் (House of Commons) நடைபெற்ற விவாதத்தின்போது நாட்டில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.இலங்கை மீது சில வகையான தடைகளை கொண்டுவரவேண்டும் என்று கோரிய அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என்றும் இராணுவச் செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு புதிய தலைமுறை தடைகள் திட்டமான உலகளாவிய மக்னிட்ஸ்கி  சட்டத்தை இலங்கைக்கு பிரயோகிக்கவேண்டும் என்று  ஒரு உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.இந்த சட்டம் தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்து விதிக்கப்படுகின்ற பாரம்பரிய தடைகளுக்கு மாறாக, உலகம் பூராவும்  குற்றமிழைத்தவர்களுக்கு — அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் — எளிதாக பிரயோகிக்கக்கூடியதாகும்.

இராணுவ வரையறை

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை நீண்டகால நோக்கில் எதிர்விளைவுகளைக் கொண்டுவரப்போகிறது என்பது கவலை தருகிறது.அந்த அணுகுமுறையினால்  நெருக்கடியின் அறிகுறிகளை தற்போதைக்கு மாத்திரம் அடக்கிவைக்கமுடியும்.மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் ‘ இலங்கை ; பல்பரிமாண நெருக்கடி —  மனிதாபிமான தேவைகளும் முன்னுரிமைகளும் — ஜூன் — டிசம்பர் 2022 ‘ என்ற தலைப்பில் அறிக்கையொன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு கோடி 35 இலட்சம் மக்கள் — சனத்தொகையில் 61.1 சதவீதமானோர் — உணவு தட்டுப்பாடு  காரணமாக சமாளிப்பு யுக்திகளை கையாளுவதாகவும் 47.7 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை சமாளிக்கும் யுக்திகளை கையாளுவதாகவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

8 நவம்பர் 2022  வெளியிடப்பட்ட அந்த அறிக்கை ,” சுமார் 53 இலட்சம் மக்கள் அல்லது சனத்தொகையில் 24 சதவீதமானோர் தங்களது உணவு வேளைகளை குறைத்திருக்கிறார்கள்.சனத்தொகையில் அதே சதவீதத்தினரில் வயதுவந்தவர்கள் பிள்ளைகள் சாப்பிடவேண்டும் என்பதற்காக தங்களது உணவைக் குறைக்கின்றார்கள்.குடும்பத்தில் பெண்களே இறுதியாக சாப்பிடுகிறார்கள்.2021 இறுதிப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ளமுடியாத உணவுவகைகளை சாப்பிடும் குடும்பங்களின் விகிதம் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது.” என்று கூறுகிறது.உண்மையிலேயே மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தேர்தல்கள் பின்போடப்பட்டு தங்களது நம்பிக்கைக்குரியவர்களை மக்கள் தெரிவுசெய்யமுடியாமல் போகும் பட்சத்தில் தாங்கள் அனுபவிக்கும் இடர்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதியால் இறங்கி போராடவே செய்வர்.விலைவாசி உயர்ந்து, எரிபொருட்களும் பசளை வகைகளும் கிடைக்காத நிலையில், தினமும் அரைவாசி நேரம் மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுந்து அறகலய போராட்டம் மூண்டது.அதேபோன்ற விரகத்தியான ஒரு கட்டம் மீண்டும் தோன்றி மக்கள் கிளர்ந்தெழுவார்களேயானால், பாதுகாப்பு படைகளினால் அதை அடக்க இயலும் என்று எதிர்பார்க்கமுடியாது.

நியாயபூர்வமான போராட்டங்களை ஒடுக்குவதை விடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம்  கிடைப்பதற்கு அரிதான அதன்  வளங்களை ஒதுக்குவதே தற்போதைய தருணத்தின் பிரதான தேவையாகும்.மறுபுறத்தில், அரசாங்கம் மக்களை அடக்கி எதிர்காலத்தில் கிளர்ச்சிகள் மூளாமல் இருப்பதை தடுப்பதற்கு பாதுகாப்பு படைகளில் தங்கியிருக்கிறது என்றே  தோன்றுகிறது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆயுதப்படைகள் மீது அரசாங்கம் ஏன் இந்தளவு கூடுதல் கவனத்தைக் குவிக்கிறது ? 2030 பாதுகாப்பில் ஏன் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது? என்று கேள்விகள் கிளம்பலாம் என்பதை ஒத்துக்கொண்டார்.” நாம்்பிறந்தபோது இந்து சமுத்திரத்தில் எந்த தகராறும் இருக்கவில்லை.ஒரு கட்டத்தில் இந்து  சமுத்திரம் ஒருவருக்கும் தேவைப்படவில்லை.இன்று அவ்வாறில்லை. நாம் தப்பிப்பிழைக்கவேண்டும் என்றால், ஆற்றல்களை, பாதுகாப்பு ஆற்றல்களை, மூலோபாய ஆற்றல்களை, எல்லாவற்றையும் பயன்படுத்தவேண்டியிருக்கும்” என்று ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.

கடல் போக்குவரத்து சுதந்திரம் இல்லையென்றால் நாடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையைக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இந்த பதில்  நம்பும்படியாக இல்லை.ஏனென்றால், பிரிட்டிஷ் அல்லது பிரெஞ்சு  இராணுவங்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கும் இராணுவத்தை பேணுவதற்கு பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்பகுதி போகிறது.மக்களை தவறாக வழிநடத்திய இந்த வகையான கூற்றுக்களும் நியாயப்படுத்தல்களுமே சுதந்திரம் பெற்று 74 வருடங்களுக்கு பிறகு நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தன.உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி அதன் மூலம் தெரிவாகின்ற அரசியல் பிரதிநிதிகளுடன் அடுத்து முன்னெடுக்கவேண்டிய திட்டங்கள் குறித்து பேச்சு நடத்துவதே பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான நிலைபேறான அரசியல் உறுதிப்பாட்டை அடைவதற்கான ஜனநாயக பாதையாகும்.

Posted in Uncategorized

ரணில் மெய்யாகவே தீர்வுக்குத் தயாரா ?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக வடக்கு,கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் கஜேந்திரக்குமாரை நோக்கி அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும்,காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும், நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில்+மைத்திரி ஆட்சிக் காலத்தில் சம்பந்தர் ஒரு ஜோதிடரைப் போல அல்லது,ஆவிக்குரிய சபையின் போதகரைப்போல”அடுத்த தீபாவளிக்குள் தீர்வு”; “அடுத்த புத்தாண்டுக்குள் தீர்வு ” என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். இப்பொழுது ரணில் அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று கூறத் தொடங்கியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறுகிறார்? ஒன்றில் அவரிடம் ஏதும் மந்திரக்கோல் இருக்க வேண்டும்.அல்லது அவரிடம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் அவர் தந்திரம் செய்கிறார் என்று பொருள். அவரிடம் மந்திர கோல் இல்லை.அவர் மந்திரம் தந்திரங்களில் நம்பிக்கை உள்ள ஆளும் அல்ல. எனவே அவர் எதையோ புத்திசாலித்தனமாக செய்ய முயற்சிக்கிறார் என்று மட்டும் தெரிகிறது.

அண்மை வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

முன்னாள் சமாதானத் தூதுவர் சூல் ஹெய்ம் மீண்டும் அரங்கில் குதித்திருக்கிறார்.அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும், அது ஓர் உருமறைப்பு என்று நம்பப்படுகிறது. இது முதலாவது.

இரண்டாவது,நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்சவும் கூறுகிறார், அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று.அதோடு காணாமல்போன எவரும் உயிருடன் இல்லை என்றும் கூறுகிறார்.

மூன்றாவதாக்க, மற்றொரு அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார்..”வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தயாராகவுள்ளது. அதற்கு முன்னர் பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் சங்கமிக்க வேண்டும்.” என்று.

நாலாவதாக,காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் கூறுகிறார், இறுதிக் கட்டப்போரில் யாரும் சரணடையவோ காணாமல் போகச் செய்யப்படவோ இல்லை என்று.படைத்தரப்பு கூறுகிறது,இறுதிக் கட்டப் போரில் யாரும் சரணடையவில்லை என்று. அதாவது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரத்தை அவர்கள் எப்படியாவது முடித்து வைக்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாவதாக உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்கப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,ரணில் விக்ரமசிங்க மீண்டும் நல்லிணக்க முயற்சி ஒன்றை நோக்கி நகரப் போகிறாரா என்ற கேள்வி பலாமாக எழும்.

யாழ்ப்பாணத்தை நோக்கி மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்கள் அரசியல்வாதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்கள். மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் மட்டுமல்ல தென்னாபிரிக்கத் தூதுவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து போயிருக்கிறார். சிவில் சமூகங்களுடனான சந்திப்புகளின்போது, அவர்கள் ஒரு தீர்வுக்கான களநிலைமை குறித்துத் தகவல்களைத் திரட்ட முற்படுவதாகவே தோன்றுகிறது. தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா முன்னெடுத்த நல்லிணக்க முயற்சிகளைப் போன்ற ஒரு ஏற்பாட்டுக்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு என்பது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு ஆகும். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவோடு ஆட்சியைப் பகிர்ந்த காலகட்டத்தில் ரணில், அவ்வாறான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.இப்பொழுது அந்த முயற்சிகளை அவர் தொடரப் போகிறாரா?

அப்படியென்றால் நிலைமாறுகால நீதிச் செய்முறையின் கீழ் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பலவீனமான கட்டமைப்புகளை இயங்க வைத்து, தேவையான புதிய கட்டமைப்புகளையும் உருவாக்கி, தென்னாபிரிக்கா பாணியிலான ஒரு நல்லிணக்க முயற்சியை நோக்கி ரணில் நகரப் போகிறாரா?

அவ்வாறு ஒரு தீர்வு முயற்சியை நோக்கி ரணில் சீரியஸாக உழைக்கத் தேவையான ஒப்பீட்டளவில் சாதகமான ஒரு சூழல் அவருக்கு இப்பொழுது உண்டு. அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவதாக,முன்பு ரணில்+ மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவர் தீர்வைக் கொண்டுவர முற்பட்டபொழுது அவர் ஒரு பலவீனமான பிரதமர்.ஆனால் இப்பொழுது அவர் ஒரு பலமான ஜனாதிபதி.குறிப்பாக வரும் மார்ச் மாதத்தோடு அவர் மேலும் பலமடைந்து விடுவார். எனவே பலமான நிலையில் இருந்து கொண்டு தான் ஏற்கனவே தொடங்கிய தீர்வு முயற்சிகளைத் தொடரலாமா என்று அவர் யோசிக்க முடியும்.

இரண்டாவதாக, அவர் அந்தத் தீர்வு முயற்சியை முன்னெடுத்த பொழுது கூட்டமைப்பு அதில் பங்காளியாக இருந்தது. சஜித் பிரேமதாச அவருடைய கட்சிக்குள் இருந்தார். எனவே அதே முயற்சியை மீண்டும் தொடங்கினால் இரண்டு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புக்கு வாய்ப்புகள் ஒப்பிட்டளவில் குறைவு. சுமந்திரன் இப்பொழுது ரணிலுக்கு எதிரானவர் போல தோன்றுகிறார்.ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வு முயற்சிகளுக்கு தாம் ஆதரவு அளிக்கப் போவதாக கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. ஆனால் கஜேந்திரகுமார் அணி எதிர்க்கும்.அதனால்தான் ரணில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரக்குமாரை நோக்கி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

மூன்றாவதாக,முன்னைய தீர்வு முயற்சியை குழப்பியது மைத்திரி. அவரைப் பின்னிருந்து இயக்கியது மகிந்த அணி. புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அடுத்தகட்ட வாசிப்புக்கு போவதற்கிடையில் மைத்திரி ஒரு யாப்புச்சதியைச் செய்தார். ஆனால் இப்பொழுது மகிந்த ரணிலில் ஒப்பீட்டளவில் தங்கியிருக்கிறார். எனவே தனது யாப்புருவாக்க முயற்சியை எதிர்த்த மகிந்தவை ஒப்பிட்டுளவில் சமாளிக்கக்கூடிய பலத்தோடு ரணில் காணப்படுகிறார்.அதனால் ஒரு தீர்வு முயற்சிக்கு எதிராக மஹிந்த காட்டக்கூடிய எதிர்ப்பை ஒப்பிட்டுளவில் குறைக்கலாம் என்று அவர் நம்ப முடியும்.

நாலாவதாக,தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படுகிறார்கள்.கூட்டமைப்பு முன்னைய தீர்வு முயற்சியின் பொழுது 16 ஆசனங்களைக் கொண்டிருந்தது. இப்பொழுது 10 ஆசனங்கள்தான். தமிழ்த் தேசியத் தரப்பு மூன்றாகச் சிதறிக் கிடக்கிறது. அதேசமயம் தமிழ் தேசியப் பரப்புக்கு வெளியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. குறிப்பாக கிழக்கில்,கிழக்குமைய வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் வியாழேந்திரன் போன்றவர்கள் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார்கள்.எனவே வடக்கு-கிழக்கு இணைப்புப் பொறுத்து கிழக்கு வாழ் தமிழ்மக்கள் மத்தியிலேயே அதற்கு எதிரான கருத்துக்களை உருவாக்கக்கூடிய சக்திகள் பலமடைந்து வருகின்றன.இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரம்சம். அண்மையில் அவர் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைமைப் பொறுப்பை பிள்ளையானுக்கு வழங்கியிருந்தார் என்பதனை இங்கே கவனிக்க வேண்டும்.

எனவே தொகுத்துப் பார்த்தால் முன்னைய சமாதான முயற்சிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை ரணில் ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறார். சூல் ஹெய்மை அரங்குக்குள் கொண்டு வந்ததன்மூலம் அவர் மேற்கு நாடுகளையும் கவர முடியும். தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், சிங்கள மக்கள் மத்தியிலும் கடும்போக்கு வாதிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க தனது தீர்வு முயற்சியை புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் முன்னகர்த்த முடியும்.

எதிர்ப்பு-ஆதரவு, தமிழ்த் தரப்பின் பலம்-பலவீனம் என்பவற்றைக் கூட்டி கழித்துப் பார்த்தால்,ரணிலுக்கு ஒப்பீட்டளவில் சாதகமான நிலை என்று கூறலாம்.எனவே அவர் மெய்யாகவே ஒரு தீர்வு முயற்சியை நோக்கி நகரக்கூடுமா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தைக் கவர்வதற்கும் அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரித்துக் கையாள்வதற்கும் அவருக்கு அது உதவும்.ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரு முதலாளிகளை அவர் நெருங்கிச் செல்லத் தொடங்கிவிட்டார். முன்னைய நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் அவர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றை நெருங்கிச் சென்றார். இம்முறை பெரு முதலாளிகளை நெருங்கிச் செல்கிறார். அவரிடம் ஏதோ ஓரு புத்திசாலித்தனமான திட்டம் இருப்பதாகவே தெரிகிறது. அல்லது குறைந்தபட்சம், பன்னாட்டு நாணய நிதியம், ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்காகவாவது,அவர் ஒரு தீர்வை கண்டுபிடிக்க போவதான தோற்றத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்.

இந்நிலையில் மூன்றாகச் சிதறிக் காணப்படும் தமிழ்த் தேசியத் தரப்பு அதனை புத்திசாலித்தனமாக அணுக வேண்டியுள்ளது. அவர் ஒரு நரி. சூழ்ச்சிகள் செய்வார் என்று கூறிக்கொண்டு, தமிழ்த் தரப்பு அப்பாவி வெள்ளாடுகளாக இருக்கத் தேவையில்லை. பதிலுக்குத் தாங்களும் சூழ்ச்சிகளில் வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும்.

– நிலாந்தன்

தமிழர்கள் சிறுக்கிறார்களா? பெருக்கிறார்களா?

“இனி நாங்கள் எப்பவுமே ஸ்ரீலங்கா பக்கம் போகமாட்டம்.நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது ஒரு  வழிபண்ணி எங்களை யு.என் பொறுப்பெடுத்து காப்பாத்தோனும்”இவ்வாறு கூறியிருப்பவர் வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப் புலம்பெயரி. அவர் ஒரு இளம் தாய்.ஒரு சிறு பிள்ளையை கையில் வைத்திருக்கிறார்.பயணத்தின் போது தாங்கள் அருந்திய அழுக்கான நீர் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் போத்தலையும் கையில் வைத்திருக்கிறார்.கனடாவை நோக்கிக் கப்பலில் புறப்பட்ட 303 தமிழர்களில் அவரும் ஒருவர்.அவர்கள் பயணம் செய்த படகு கடந்தவாரம் சேதமடைந்து சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோலவே ஒஸ்ரேலியாவை நோக்கியும் ஆபத்தான கடல்வழிகளின் ஊடாக தமிழர்கள் புலம்பெயர முயற்சிக்கிறார்கள்.இவ்வாறு கடல் வழியாக வருபவர்களை திருப்பி அனுப்பப்போவதாக ஒஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்துவருகிறது.கடல் வழியாக மட்டுமல்ல வான் வழியாக வரும்  புலம்பெயரிகளையும் திருப்பி அனுப்பப்போவதாக  ஒஸ்ரேரேலிய அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்திருக்கிறது. கொழும்பில் உள்ள ஒஸ்ரேரேலிய தூதரகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் ஓர் ஆங்கில ஊடகவியலாளரோடு உரையாடும்பொழுது ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.இலங்கையிலிருந்து பெருந்தொகையான மூளை உழைப்பாளிகளின் விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும்,அண்மை காலங்களில் அந்த விண்ணப்பங்களின் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனால் விசா விண்ணப்பங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை வரலாம் என்ற பொருள்பட அவர் கதைத்திருக்கிறார்.

கனடா,ஒஸ்ரேலியா போன்ற நாடுகளை நோக்கி மட்டுமல்ல,ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் பெருந்தொகையான தமிழர்களும் சிங்களவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக மேற்படிப்பு அல்லது தொழில் வாய்ப்பு என்ற அடிப்படையில் படித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆண்டு மட்டும் இதுவரையிலும் 500க்கும் அதிகமான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.

போர்க்காலங்களில் தமிழ் இளையோர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பொருளாதார காரணங்களுக்காகவும் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். ஆனால் அண்மைக்  காலங்களில் சிங்கள இளையோரும் அவ்வாறு வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.இவர்களின் கணிசமானவர்கள் மூளை உழைப்பாளிகள்.

ராஜபக்சக்கள் இந்த நாட்டை எந்த மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததாக பெருமைப்பட்டுக் கொண்டார்களோ,அந்த மக்களே நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதில் குறிப்பாக தமிழ்மக்களைப் பொறுத்தவரை 2009க்கு பின்னரும் புலப்பெயர்வு நிகழ்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் குவிமையம் ஆகும்.

அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பயிலும் ஒரு மாணவரிடம் கேட்டேன்… நல்ல பெறுபேறு கிடைத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அவர் சொன்னார் “வெளிநாட்டுக்குப் போவேன்” என்று. அவருடைய இரண்டு சகோதரர்களும் அவ்வாறு வெளியேறத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.தமிழ் இளையோரில் வகைமாதிரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினரை எடுத்து “எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள்?”என்று கேட்டால்…அதற்கு நாட்டை விட்டு வெளியேற விரும்புவோரின் தொகையே  அதிகமாயிருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏற்கனவே நிதிரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்றுவிட்டது.அந்நாடுகளில் கல்வி ஒரு சுமையாகவோ சித்திரவதையாகவோ இல்லை.அதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாட்டில் உள்ள இளைய தலைமுறையில் ஒரு பகுதி வெளியேற முயற்சிக்கின்றது.இவ்வாறு வெளியேற விரும்பும் பலருக்கும் புலம்பெயர்ந்த பரப்பில் யாரோ ஒரு உறவினர் அல்லது ஏதோ ஒரு தொடர்பு உண்டு.அவ்வாறு புலம்பெயர்ந்து செல்வதன்மூலம் தமது குடும்பத்தின் நிதிநிலையை உயர்த்தலாம்,தாமும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.

ஒருபுறம் போதைப்பொருள் பாவனை  வாள் வெட்டுக் கலாச்சாரம் தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றன. இன்னொருபுறம் 2009க்கு பின்னரும் நாட்டை விட்டு வெளியேறும் இளையோரின் தொகை குறையாமல் இருக்கிறது.

தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தாயகம்,தேசியம் சுயநிர்ணயம் என்ற கோஷங்களை விடாது உச்சரிக்கின்றன. ஆனால் தாயகத்தில் தமிழ் மக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது. ஒருபுறம் தாயகத்திலும் டயஸ்பெறாவிலும் பிள்ளைப்பேறு விகிதம் பெருமளவிற்கு குறைந்து வருகிறது. இன்னொரு புறம் தாயகத்திலிருந்து தொடர்ச்சியாக மணப்பெண்களாக ஒரு தொகுதி பெண்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு சமாந்தரமாக மூளை உழைப்பாளிகளும் கள்ளமாகக் குடியேறுபவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதுதொடர்பில் தமிழ்க் கட்சிகளிடம் அல்லது செயற்பாட்டாளர்களிடம் தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் ஏதாவது உண்டா?

ஒரு மக்கள் கூட்டத்தை தேசிய இனமாக வனையும் பிரதான அம்சங்கள் ஐந்து இனம்,நிலம்,(அதாவது தாயகம்), மொழி,பொதுப்பண்பாடு,பொதுப் பொருளாதாரம் என்பவையே அவையாகும். இதில் இனம் என்று குறிப்பிடப்படுவது பிரயோகத்தில் தமிழ் சனத் தொகையைத்தான்.ஏற்கனவே போரில் தமிழ் சனத்தொகையில் குறைந்தது மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். அல்லது காணாமல் போய்விட்டார்கள். தப்பிப் பிழைத்தவர்களில் இளையவர்கள் இப்பொழுது புலம்பெயர முயற்சிக்கிறார்கள். இனப்படுகொலை புலப்பெயர்ச்சி என்பவற்றால் ஏற்கனவே சனத்தொகை மெலிந்து வருகிறது. இந்நிலையில் பிள்ளைப் பேறு விகிதமும் குறைந்து வருவதனால் சனத்தொகை மேலும் குறையக் கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.

கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.சர்வோதயத்தில் நடந்த ஒரு கருத்தரங்கின்போது அங்கு பிரசன்னமாகியிருந்த நடுத்தர வயதைக் கடந்த சுமார் முப்பது பெண்களிடம் வளவாளர் ஒரு கேள்வி கேட்டார்.”நீங்கள் எல்லாரும் எத்தனை சகோதரர்களோடு பிறந்தீர்கள்?”அவர்களில் அநேகமானவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களோடு பிறந்ததாகச் சொன்னார்கள்.அதன்பின் வளவாளர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டார் “உங்களில் எத்தனை பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்?”துரதிஷ்டவசமாக அங்கிருந்த பெண்களில் மூவருக்குத்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்.ஏனைய அனைவருக்கும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான்.இதுதான் தமிழ்ச் சமூகத்தின் இப்போதுள்ள நிலைமை. தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிள்ளைப்பேறு விகிதம் குறைந்து வருகிறது.அதேசமயம் புலப்பெயர்ச்சியும் தொடர்கிறது.

தமிழ் இளையோர் தாயகத்தை விட்டு வெளியேறுவதனால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் நிதி ரீதியாக பாதுகாப்பான ஒரு எதிர்காலம் கிடைக்கலாம். ஆனால் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பார்த்தால் அது தாயகத்தில் சனத்தொகையைக் குறைக்கிறது.தேர்தல்மைய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் வாக்காளர்களின் தொகை குறைக்கிறது.எல்லா விதத்திலும் அது தமிழ் மக்களை பலவீனப்படுத்துகிறது. காசிருந்து என்ன பலன்? தாயகத்தில் சனத்தொகை மெலிந்து கொண்டே போகிறது. ஒரு தேசமாக தமிழ் மக்கள் பெருக்கவில்லை சிறுத்துக் கொண்டே போகிறார்களா?

தமிழ் இளையோர் மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தவிப்பு ஏன் அதிகரிக்கின்றது? இதைக் குறித்து தமிழ் கட்சிகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது குடிமக்கள் சமூகங்களோ சிந்திக்கின்றனவா?

சில மாதங்களுக்கு முன்பு வலிகாமம் பகுதியிலுள்ள ஒரு பங்குத்தந்தை என்னை தனது பங்கில் உள்ள இளையோர் மத்தியில் பொருளாதார நெருக்கடிகள்பற்றி பேசுமாறு அழைத்திருந்தார். நான் பேசிக்கொண்டிருந்தேன் ஆனால் அங்கு கூடியிருந்த இளையோர் அந்தப் பேச்சை ரசிக்கவில்லை.அக்கறையோடு கேட்கவில்லை.ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்தி விட்டுக் கேட்டேன் “உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நான் கதைக்கின்றேனா?” “ஆம்” என்று சொன்னார்கள.”உங்களைப் பாதிக்கும் விடயங்களைப்பற்றி அறிய விரும்பவில்லையா?” என்று கேட்டேன்.அறிந்து என்ன பயன் என்ற தொனிப்படக் கேட்டார்கள்.“சரி,எதிர்காலத்தில் என்னவாய் வர விரும்புகிறீர்கள்? உங்களுடைய வாழ்வின் இலட்சியம் என்ன?” என்று  கேட்டேன். சுமார் 40 பேர் வந்திருந்த அந்தச் சந்திப்பில் நான்கு பேர்களிடம்தான் எதிர்கால இலட்சியம் இருந்தது. ஏனையவர்கள் கேட்டார்கள் “ஏன் அப்படி ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்? வாழ்க்கையை இப்பொழுது இருப்பதை போலவே அனுபவித்து விட்டு போகலாமே?” என்று.உங்களை நீங்கள் புதிய சவால்களுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லையா என்று கேட்டேன். “ஏன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார்கள்.

அவர்களில் அநேகரிடம் ஆகப்பிந்திய தயாரிப்புகளான கைபேசிகள் இருந்தன. பெரும்பாலானவர்கள் ஆகப்பிந்திய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்தார்கள்.அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களிடம் கேட்டேன்..”உங்களுடைய வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்டவை; உங்களுடைய கைபேசிகள் அப்டேட் செய்யப்பட்டவை ;உங்களுடைய வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகள்,கணினிகள் அப்டேட் செய்யப்பட்டவை; ஆனால் நீங்கள் மட்டும் உங்களை அப்டேட் செய்ய விரும்பவில்லையா?” என்று. அப்பொழுதுதான் அவர்கள் ஈடுபாட்டோடு உரையாடத் தொடங்கினார்கள்.

நான் பேசவந்த விடயத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு அவர்களோடு அவர்களுடைய அலைவரிசையிலேயே நின்று கதைப்பது என்று முடிவெடுத்து, கேள்விகளை கேட்கத் தொடங்கினேன்.அது வெற்றியளித்தது. என்னை அங்கே பேச அழைத்த பங்குத் தந்தையிடம் சொன்னேன் ” ஒரு புதிய தலைமுறையின் நம்பிக்கைகளை நாங்கள் எங்களுடைய நம்பிக்கைகளுக்கூடாக அணுகப் பார்க்கிறோம்.எங்களுடைய நம்பிக்கைகளே அவர்களுடைய நம்பிக்கைகளாகவும் இருக்க வேண்டும் என்று இல்லை.அவர்கள் கைபேசிச் செயலிகளின் கைதிகள். எல்லாவற்றையும் “ஸ்க்ரோல்” பண்ணி கடந்துவிட முயலும் ஒரு தலைமுறை. பெரும்பாலான விடயங்களில் ஆழமான வாசிப்போ, யோசிப்போ,தரிசிப்போ கிடையாது.அவர்களை அவர்களுடைய அலைவரிசைக்குள் சென்று அணுகினால்தான் அவர்கள் எங்களோடு உரையாட வருகிறார்கள்” என்று

கொழும்பில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடத் தொடங்கிய நடுத்தர வர்க்கம் குறிப்பாக இளையோர் காலிமுகத்திடலில் முதலில் வைத்த கோஷம் “You are messing up with a wrong generation” – நீங்கள் பிழையான ஒரு தலைமுறையோடு சொதப்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என்பதாகும்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பொருந்தும் ஒரு காலம் வருகிறதா?

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்றனர்

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டைவேட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றதே தவிர, நடைமுறையில் எதுவும் பயனுள்ளதாகத் தெரியவில்லை. சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்தி, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்த நிலைமைகளில் சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னரும்கூட சுய அரசியல் இலாப நோக்கிலான கபடத்தனமான அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவேற்பட்டதாகத் தெரியவில்லை. அந்தப் போக்கில் இருந்து பேரின அரசியல்வாதிகள் தடம் மாறுவதாகவும் தெரியவில்லை.

அரசியல் இலாபத்திற்கும் அதிகாரப் பேராசைக்கும் இனவாத வெறியூட்டி சிங்கள மக்களை உசுப்பேற்றி, அதில் அரசியல் குளிர்காய்ந்த ஆட்சியாளர்களுக்கு அரகலய – போராட்டக்காரர்கள் சரியான பாடம் புகட்டினர். பொருளதார நெருக்கடியினால் எழுந்த பிரச்சினைகளின் தாக்கத்தில் உயிர்ப்பு பெற்ற சிங்கள மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏமாற்றத்தின் விளைவாக தன்னெழுச்சி பெற்று கொதித்தெழுந்த மக்கள் பேரலைக்கு முகம் கொடுக்க முடியாத ஜனாதிபதியும் பிரதமருமாகிய ராஜபக்ச சகோதரர்கள் பதவிகளைத் துறந்தார்கள். கோத்ட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டே ஓடித்தப்பினார்.

இந்த மக்கள் எழுச்சியின் மூலம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் பிரசார அரசியல் போக்கிலேயே சென்று கொண்டிரக்கின்றது. கடன் தொல்லையில் இருந்தும் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் அகலக் கால்வைத்து முனைப்பாகச் செயற்பட முற்பட்டிருக்கின்றார். அவருடைய அரசியல் அகலக்கால் வெளிப்படுத்துவதைப் போன்று பெரிய வெற்றியை ஈட்டித் தரும் என்று கூறுவதற்கில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்த அதே அரசியல்வாதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட்டப்பட்ட அதிகாரங்களைக் குறைப்பதற்கும் பின்னர் மீண்டும் அவற்றைக் கூட்டுவதற்கும் வாக்களித்திருந்தார்கள். அதே அரசியல்வாதிகளே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் வேறு நோக்கங்களுக்காகவும் கொண்டு வரப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்.

இது, நாட்டை ஆள்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான சுய அரசியல் இலாப நோக்கத்தையும் அதிகாரப் பேராசையையும் வெளிப்படுத்துவனவாகவே இருக்கின்றது. மக்களின் நலன்களை மேம்படுத்தவும் நாட்டை முன்னோக்கி முன்னேற்றிச் செல்வதற்குரிய செயற்பாடாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சூட்டோடு சூடாக அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டிருந்த தன்னெழுச்சி பெற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்களை அதிகாரப் பிடிகொண்டு அடக்கினார். அவரது நீண்டகால ஜனாதிபதி பதவி ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு கோட்டாபய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருந்த போராட்டமே உந்து சக்தியாக அமைந்திருந்தது. ஆனால் அந்தப் போராட்டத்தை அதிகார பலம் கொண்டு அவர் அடக்கினார். அதன் மூலம் மக்கள் அனைவரும் தனது பிடியின் கீழ் அடங்கி இருக்க வேண்டும் என்ற அதிகார மேலாண்மையை அவர் புலப்படுத்தி இருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த எரிபொருள் பற்றாக்குறை உணவுப் பொருள் பற்றாக்குறை போன்றவற்றில் அவர் சிறு தளர்வை ஏற்படுத்தி உள்ளார். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பொருட்களின் விலையேற்றம், அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமைகள், கட்டுப்பாடின்றி வீங்கிச் செல்கின்ற பணவீக்கம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர் இன்னும் வெற்றி காணவில்லை. சிறிய அளவில்கூட முன்னேற்றம் காணவில்லை.

இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற பாரிய முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிர கவனம் செலுத்தியிருப்பதாகக் காட்டியிருக்கின்றார். அரசாங்கத் தரப்பினால் கொண்டு வரப்படுகின்ற – 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீரமானங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கிட்டியுள்ள போதிலும், நாட்டில் அரசியல் உறுதித்தன்மை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

கடன் சுமைகளும், கட்டுப்படுத்த முடியாமல் எகிறிச் செல்கின்ற பண வீக்கமும் நாட்டின் பொருளதார உறுதிப்பாட்டைக் குலைத்திருக்கின்றன. பொருளாதார நிலைமையை உறுதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ள போதிலும், அந்த நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் அரசு நிலைதடுமாறி நிற்கின்றது.

அதேவேளை, மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதிலும், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதிலும், ஜனநாயத்தை முறையாகப் பேணுவதிலும் அரசாங்கம் இன்னும் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களினதும் இலங்கைக்கான உதவிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி அகலக்கால் வைத்து பல்வேறு விடயங்களில் நாட்டு மக்களினதும், சர்வதேசத்தினதும் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி), இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அந்த முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இதனால் அவற்றுக்கு எதிரான போராட்டங்களே எதிர்வினையாக கிளர்ந்திருக்கின்றன.

காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்திருக்கின்றது. ஆனால் அந்த ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகைளயும் அவர்கள் புறக்கணித்துள்ளார்கள். அத்துடன் இழப்பீடாக 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் அவர்கள் உதாசீனம் செய்துள்ளார்கள். தங்களுக்கு இழப்பீட்டுப் பணம் தேவையில்லை. நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதங்களை வவுனியவைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் எரியூட்டியிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியாகிய டொக் ஸொனெக்கிடம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (ஓ.எம்.பி) இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வடக்கு கிழக்குப் பிரதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.

பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக எடுக்கப்படுகின்றது என சர்வதேசத்துக்குக் காண்பிக்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றது. ஆனால் அதற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசின் முயற்சிகளை ஆட்டம் காணச் செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்குத் தீர்வு காண்பதற்காக அதற்கென அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு அரசு ஊக்கமளித்திருக்கின்றது. ஆனால் அந்த அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல பாதிக்கப்பட்டவர்களை சீற்றமடையச் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், (இராணுவத்திடம்) சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று எவரும் கிடையாது எனக் கூறியிருக்கின்றார். அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்களை எல்ரீரீயினரே கடத்திச் சென்றனர் என்றும் ஏனைய குழுக்களும் அவர்களைக் கடத்திச் சென்றிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இராணுவத்திடம் விடுதலைப்புலி உறுப்பினர்களே சரணடைந்தனர். அதுவும் யுத்த முடிவில் பாதுகாப்பளிக்கப்படும். பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசு அளித்த உத்தரவாதத்துக்கமைவாகவே அவர்கள் சரணடைந்தனர். இந்தச் சம்பவம் இரகசியமாக நடைபெறவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் அவர்களின் கண்முன்னால்தான் நடைபெற்றது. குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தார்கள். இதற்கு ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கின்றன.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்குகளில், வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளில் இது தொடர்பில் கண்கண்ட சாட்சிகள் போதிய அளவில் சாட்சியமளித்திருக்கின்றனர். இத்தகைய ஒரு நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல சரணடைந்தவர்கள் காணாமல் போனதற்கான சாட்சிகள் இல்லையென கூறியிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற நடவடிக்கையாகும்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ள நிலையில் அவர் வெளியட்டுள்ள கருத்துக்கள் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்ற நிலைமையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

– பி.மாணிக்கவாசகம்

Posted in Uncategorized