13 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உடன்பாடு இல்லை

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் மீண்டும் சொன்னேன், 13க்கும் மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம்.

அப்படியானால் பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும் இப்போது எங்கே? அரசியலமைப்பில் உள்ளன, ஆனால் நடைமுறைப்படுத்த முடியாது. ஏன் 13 வேலை செய்யவில்லை தெரியுமா? மக்களுக்கு பிடிக்கவில்லை. ஜே.வி.பி. சார்பில் நான் கூறிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.

பைத்தியக்காரர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி!

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும், எதிரணியில் உள்ள எம்.பிக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதில் வழங்கும் போதே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமுலாகவில்லை. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

அதிகாரங்களைப் பகிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது” – என்றார்.

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக 132 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்தியப் பெருங்கடலில் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையமாக மாற இலங்கை எதிர்பார்க்கிறது.

இதற்கமைய துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது.

இந்த முதலீடுகள் துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் செய்யப்படும்.

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெயா கொள்கலன் முனையத்திற்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இரண்டு முனையங்களும் அரசுக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபையின் துணை நிறுவனங்களாகும்.

மேற்கூறிய முதலீடுகளைத் தவிர, திருகோணமலை துறைமுகத்தை மொத்த சரக்கு நடவடிக்கைகளுக்காகவும், காலி துறைமுகத்தை சுற்றுலாத் துறைக்காகவும் படகு சேவையுடன் மேம்படுத்தவும், பெரிய கப்பல்களை நங்கூரமிட வசதி செய்யவும் எதிர்பார்க்கிறோம். என கூறியுள்ளார்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயம்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க கூறினார்.

வாகன விபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி பற்றிய அறிவு இன்மையின் காரணமாக அனர்த்தத்தின் பாதிப்பு அதிகமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன  போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க  குறிப்பிட்டார்.

இரு வருடங்களுக்கான தவணை, வட்டியை இலங்கையிடம் குறித்தகாலப்பகுதியில் அறவிடப்போவதில்லை – சீன எக்ஸிம் வங்கி

2022 , 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய தவணைக் கடன் மற்றும் வட்டியை குறித்த காலப் பகுதியில் அறவிடப்போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்கான கடன், வட்டியை மீள செலுத்துவதற்கு EXIM வங்கி எனப்படும் சீனாவின் இறக்குமதி – ஏற்றுமதி வங்கி நிவாரணக் காலத்தை வழங்கியுள்ளதாக சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதன் ஊடாக இலங்கையின் குறுகிய கால கடனை மீள செலுத்துவதற்கு நிவாரணம் கிடைக்கும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பாகும்.

சீன EXIM வங்கி இலங்கையுடன் மத்தியகால, குறுகியகால கடனை மீள செலுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் இலங்கையின் கடன் ஸ்திரநிலையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 30,000 பீப்பாய் எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள், இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

குறித்த எரிபொருள் தொகைக்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, எதிர்வரும் நாட்களில் செலுத்தவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நெப்டா,  டீசல் மற்றும் பல எரிபொருள் வகைகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுகின்றன.

உபரியான சுத்திகரிப்பு எரிபொருள் தொகை களஞ்சியப்படுத்தப்படுவதுடன், இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தொகையானது கப்பல்கள் மூலம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்திற்கு அனுப்பப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயமல்ல – ஜனாதிபதி ரணில்

நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதார பிரச்சினை எனவும் அது நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளக்கூடிய  விடயமல்ல எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை முன்கொண்டு செல்லும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் நேற்று (22) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள், சட்டத்தரணிகளுடனான  சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெரிவித்த கருத்துகளை, ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வௌியிட்டுள்ளது.

இதேவேளை தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியின் இரான் , ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும் என  ஜனாதிபதி கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காவிட்டால், மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுவிப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக திறந்த நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து அவரது வழக்கு நடவடிக்கைளை முடிவுக்கு கொண்டு வர இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 5ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலை நடத்தக் கோரி சபைக்குள் ஆர்ப்பாட்டம்; ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்

சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் யாவும் நாளை (22) காலை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கள்ள அரசாங்கமே ! தேர்தலை நடத்து என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலை மார்ச் 9 நடத்த முடியாது! உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது

பல காரணங்களால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது

நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 41 கோடியே 6 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்கும் பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளார். இதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, தேர்தலுக்கு தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குமாறு பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப் பட்டபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் ஆதாரங்கள் – ஆவணங்களுடன் தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது