இலங்கையின் கடன் சுமையை கடன் வழங்கிய அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்

இலங்கையின் கடன் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு சீனாவின் நிதியமைப்புகளிற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன்சுமைகளை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் சர்வதேச நிதிஅமைப்புகளுடன் இணைந்து சீனா செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நியாயமான சுமை என்ற அடிப்படையில் வர்த்தக மற்றும் பன்னாட்டு கடன்கொடுப்பனவாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணக்கறிக்கை சமர்ப்பிக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை முடிவுறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதை தொடர்ச்சியாக தாமதமப்படுத்தி வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

14 நாட்களுக்குள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு, அரசியல் கட்சிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த காலக்கெடு, கடந்த வாரம் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்கறிக்கைகளை உரிய முறையில் இதுவரை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை முடிவுறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் வாக்குமூலம்

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் கோட்டை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

இந்த 50 இலட்சம் ரூபாவினை யாராவது திருடினார்களா அவ்வாறு இல்லை எனின் நிதி கணக்கீட்டின் போது ஏதேனும் தவறு இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பணம் வைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் மூன்றாவது மாடியானது அதி உயர் பாதுகாப்பு கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் அதற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகங்களைக் கட்டுபடுத்தும் சட்டத்துக்கு ஆதரவு வழங்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும். ஊடக சுதந்திரத்தைப் புதிய சட்டம் மூலம் அரசு தட்டிப் பறிக்க முடியாது.

ஊடகங்களின் விமர்சனங்களுக்கு இந்த அரசு ஏன் அஞ்சுகின்றது? எமது நல்லாட்சி அரசையும் சில ஊடகங்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்தன. அதை நாம் எதிர்கொண்டோம்.

விமர்சனங்களை எதிர்கொள்ள – அவற்றுக்குத் தகுந்த பதில் வழங்க அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். – என்றார்.

நிதி விடுவிப்பினை உறுதிப்படுத்தினால் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆலயம் என்ற போர்வையில் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடும் மத போதகர்: தவிசாளர் நிரோஸ் குற்றச்சாட்டு

ஆலயம் என்ற போர்வையில் மதபோதகர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்  யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அரசிற்கு சொந்தமான நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு எமது சமூகம் செய்தி பிரிவிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று தாம் முன்னெடுத்துள்ள போராட்டமானது மதங்களுக்கு எதிரானது அல்ல எனவும் மாறாக மதங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான நடத்தைகள் மற்றும் சட்டவிரோதமான மதமாற்றங்களுக்கு எதிரான போராட்டம் என்றும் தியாகராஜா நிரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த கட்டிடத்தினை உரிய திணைக்களம் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தியாகராஜா நிரோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கம்

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது படி என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இன நல்லிணக்க செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கவலை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் சில பாராட்டத்தக்க விதிகள் இருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக கோரும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தில் சில மாற்றங்களை வரவேற்றாலும், அந்த அமைப்பு இரண்டு குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.

முதலாவதாக, முன்மொழியப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீறுவதாக கூறியுள்ளது.

இரண்டாவதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசியப் பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதிற் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் வினைத்திறன் முழுமையாக அதனை அமுல்படுத்துவதை பொறுத்தே அமையும் எனவும் இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கு மேலதிக மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.