மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (டிச 1) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பின் பெயரைத்தெரிவு செய்தல், உள்வாங்கப்படும் அங்கத்தவர்கள், பணிகள்,நோக்கம் ,எதிர்பார்ப்புக்கள், செயன்முறைகள்,அமைப்பின் நிர்வாகத் அங்கத்தவர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், Fairmed நிறுவன உத்தியோகத்தர், மாவட்ட செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3வது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த எட்டு வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதுடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. ஆனால் இன்றையதினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.

நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடாத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தரப்படுத்தலில் மீண்டும் கீழிறங்கிய இலங்கை

ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை ‘CCC இலிருந்து CC ஆக இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது.

அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்ளூர் நாணயங்களிலான கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை காரணம் காட்டி, நேற்று இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அரசியல் கட்சிகளிடையே அதிகாரத்திற்கான தாகம் அதிகம் – விக்டர் ஐவன்

இலங்கையின் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்தே அதிக ஆர்வம் கொணடுள்ளன என மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதில் தற்போதைய நெருக்கடியை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சீர்திருத்தங்களிற்கான இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊழல் மிகுந்த பொல்லாத அமைப்பு முறையை ஆழமான மாற்றத்திற்கு உட்படுத்தவேண்டும் என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு தேர்தல்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை என ராவயவின் ஸ்தாபக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கான நேரம் என ஒன்று உள்ளது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நெருக்கடி உள்ளது அதிகாரத்திற்கான தாகம் அதிகமாக உள்ளது எனவும் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு முயல்வதற்கு பதில் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து அதிக கரிசனையை இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் வெளிப்படுத்துகின்றன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

அமைப்பு முறை மாற்றத்திற்கான தற்போதைய வேண்டுகோள் அரசமைப்பிற்குள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என USAID நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தவேளை சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார் என USAID பேச்சாளர் ஜெசிகா ஜெனிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீட்சி வளர்ச்சிக்கு யுஎஸ்எயிட் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் இலங்கையின் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் அவசரதேவைகள் உட்பட இலங்கை எதிர்கொண்டுள்ள குழப்பமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கான யுஎஸ்எயிட்டின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களையும் இணைந்து முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே – கருத்துக்கணிப்பில் மக்கள்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என மக்கள் கருதுவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சமூகக் குறிகாட்டி அமைப்பு நடத்திய பொருளாதார சீர்திருத்த குறியீடு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை அவசியமான பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே என அதிகளவான இலங்கையர்கள் நம்புவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 56.6 வீதமானவர்கள் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 31.4 வீதமானவர்கள் தாங்கள் அவரை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 45 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வீதமானவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மீது 42 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை சம்பிக்க ரணவக்க மீது 23 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி கருகல்

யாழ். மாவட்டத்தில் காலபோக நெற் பயிர் செய்கையில் பயிர்களில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.

யாழ். மாவட்டதில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பொட்டாசிய குறைவால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, தைகடி, நவாலி, கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் போன்ற பல பிரதேசங்களிலும் நெற் பயிர்களில் பொட்டாசியக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும் மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசிய பற்றாக்குறை அதிகமாகும் போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள், கபில நிறமாக மாறும்.

அதாவது இலையின் நுனிப்பகுதியில் தலை கீழ் “வி” (V) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும். இலை நுனியில் இருந்து இறக்கத் தொடங்கும்.

இதன் காரணமாக மட்டம் பெயர்தல் பாதிக்கப்படுவதுடன் தாவர வளர்ச்சி குன்றி பயிர்கள் கட்டையாக காணப்படும் நிலையில் நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பாரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.

விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெற் செய்கையில் போசணை முகாமைத்துவத்தை அதிகரிக்க முடியும்.

பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை சிபாரிசுக்கு அமைய இடல் , பொட்டாசியம் அடங்கிய திரவ பசளையினை சிபாரிசுக்கமைய விசிறல், மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதனால் அடுத்த போகத்தில் வைக்கோலினை இட்டு உழவு செய்தல், நெல் அடிக்கட்டைகளை (ஒட்டுக்கள்) அறுவடையின் பின்னர் உழுதுவிடல் கிளிசிரியா இலைகளை வயலில் தூவிவிடல் வேண்டும் இதன் மூலம் நைதரசன் மற்றும் பொட்டாசியம் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு பிரிட்டன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றது – தாரிக் அஹமட்

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பிரபுக்கள் சபை இலங்கை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இதன்போது பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்துள்ளார். இவர் இலங்கை விவகாரத்தில் இந்தியா ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் கவனத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை மனிதாபிமான விவகாரங்களை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் – ஜனா எம்.பி

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் பெருமைப்படக்கூடியதாக அமைந்திருந்தது. கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர்கள் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சியடைந்துள்ளோமா என வினவுகிறேன்.சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியல் காலத்தில் வலு வேறாக்கல் கொள்கை முறையாக கடைப்பிடிக்கப்படு வந்தது.72 ஆம் ஆண்டு குடியரசான பின்னர் கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் அரசாங்க கட்சிகளின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள்நுழையத் தொடங்கியது. அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறல் கல்வித் துறையில் நடக்கின்றது.

கல்வியமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் தலைவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பின் அடிப்படையிலோ கல்வித் தகைமையின் அடிப்படையிலோ இன விகிதாசார அடிப்படையிலும் அல்ல. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். வட கிழக்கின் வாழ் கல்வித் திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. வட கிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தக் கூடியதாக மட்டுமே உள்ளது. பதவியிலுள்ளவர் அடுத்த பதவி உயர்வை எடுப்பதற்காக ஆளும் கட்சி அரசியல்வாதியின் காலில் விழுந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும். இப்படியான ஒரு கல்வியினால் எப்படி உயர்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கபடும் என்பதை வரவேற்கிறேன். தேசிய கல்வி நிறுவனம் 30 வருடங்களாக இயங்குகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தை வெளிநாடுகளில் காணப்படுவது போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பல்கலைக்கழகமாக இணைத்துக் கொள்ள வேண்டும். தேசிய கல்வி நிறுவனத்தில் பல கலாநிதிப் பட்டங்களை முடித்தவர்களும், பாரிய கட்டிடங்களையும் இதர வசதிகளையும் கொண்டிருப்பதால் இலகுவாக பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு பல்கலைக்கழமாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய கல்வி நிறுவகத்துக்கு 4000 மாணவர்களுக்குப் பதிலாக 8000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆசிரிய மாணவருக்கு 5000 ரூபா தான் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்பில் குறித்த தொகை போதாது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். ஜெய்க்கா திட்டத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி பயிலுநர்களுக்கான விண்ணப்பத்தை கோரி இருந்தார்கள். கல்வி அமைச்சுக்கு 09 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாகாண கல்வித்திணைக்களுக்கு 22 ஆம் திகதி நவம்பர் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்ப முடிவுத் திகதி 23 ஆம் திகதி ஒரு மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 23 ஆம் திகதி காலை 10 மணிக்கே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது . 03 மணித்தியால காலப்பகுதியினுள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? இது முழு நாட்டிலும் நடைபெற்றுளது. இதனூடாக அவர்கள் ஜெய்க்காவின் குறித்த கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது என தெரிவித்தார்.

அரசியல் அத்துமீறல், செல்வாக்கின் காரணமாகவுமே நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது-  பா.  உ . ஜனா

ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்த எமது நாட்டின் கல்வித்துறை 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம் இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கினாலும் மோசமாக வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவையும், இந்த விடயத்தின் தார்ப்பரியத்தை ஜனாதிபதியவர்கள் தற்போது உணர்ந்துள்ளமைமையையும் நான் வரவேற்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவதாக இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களுக்குள் தற்போது வெளியாகிய சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பதையொட்டி மட்டக்களப்பு வலயக் கல்;விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரிகள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர், மாணவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியையும், மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். இந்த அமைச்சுக்கள் தொடர்பான விடயப் பரப்பு எமது நாட்டின் சகல துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அமைச்சுக்களாகும். நாட்டின் நிகழ்கால நிலைமை மாத்திரமல்ல எதிர்கால நிலைமையினையும் வலுப்படுத்துகின்ற முக்கிய துறைசார் அமைச்சுக்கள் இவையாகும்.

எமது நாட்டின் கல்வித்துறை ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்தது. ஆனால், தமது வரவு செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சரும் மேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என வினவினார். நாங்கள் எங்கே தவறுவிட்டோம் என்று வினவினார். எங்களுக்குத் தவறிய இடம் எது எனவும் வினவினார்.

கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் திருப்தி அடையக்கூடிய வகையில் முன்னேறியுள்ளோமா? என நான் வினவுகின்றேன்.

சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியன் அந்தஸ்த்துக் காலத்தில் அரசாங்கத்தில் வலுவேறாக்கல் கொள்கை (Separation of power) முறையான அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனால் அரச துறையில் Check and Balance நிலைமை பேணப்பட்டு வந்தது. ஆனால், 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும், அரசியல்வாதிகளின் செல்வாக்கும், அரசாங்கக் கட்சி எம்பிக்களின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள் நுழையத் தொடங்கியது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை இதற்கு கல்வி அமைச்சும் விதிவிலக்கல்ல.

இன்று, எமது கல்வித்துறை நாம் பெருமைப்படத்தக்க நிலையில் இருக்கின்றதா? நான் இதற்காக கல்வி அமைச்சரை விரல் நீட்டி குற்றம் சாட்டவில்லை. அவர் திறமையானவர். அவரது திறமையில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால், கல்வித் துறையில் நடப்பது என்ன? அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவும் எமது நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மறையாக விமர்சிக்கின்றது. நேர்மறையாக சிந்திக்கிறது என்று எம்மீது இலகுவாக குற்றஞ்சாட்டி நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால், யதார்த்தம் அதுவல்ல. நாங்கள் யதார்த்தத்தைக் கண்டு யதார்த்தத்தை உணர்ந்து யதார்த்தத்தை உரைக்கின்றோம். உண்மை சிலவேளை உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். ஆனால், இதுவே கல்வித்துறையின் இன்றைய யதார்த்தம்.

கல்வி அமைச்சின் கீழ் இருக்கின்ற திணைக்களங்களையும் நிறுவனங்களையும் நோக்கினால் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இவை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்வீர்கள். ஆனால். இந்த திணைக்களங்களிலும், நிறுவனங்களிலும் தலைமைகள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பு அடிப்படையிலோ, கல்வித் தகமை அடிப்படையிலோ இல்லை. இன விகிதாசார அடிப்படையிலும் இல்லை. அந்த பிரதேசத்தின், அந்த தேர்தல் தொகுதியின், அந்த மாவட்டத்தின், அந்த மாகாணத்தின் அரசாங்கம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ, அவரவர் தேவைக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். இன்னும் கூறப்போனால், பாடசாலை அதிபர் இருந்து ஆசிரிய ஆலோசகர் ஈறாக கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் வரை அரசியல் ரீதியான நியமனங்களாகவே இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இன்று வடகிழக்கில் கல்வி திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. இவை வடகிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உள்ளதே ஒழிய மாணவர் நலனோ, கல்வி அபிவிருத்தி நலனோ இல்லை. பதவியிலிருப்பவர் அடுத்த பதவியுயர்வினை எடுப்பதற்காக அந்த அரசியல்வாதியின் காலடியில் விழும் நிலையில் இருந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும்? எப்படியொரு கல்வியினால் உயர்ந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்? உண்மையிலேயே எனது மாகாணத்தில் கல்வித் துறை சார் நிருவாகம் தொடர்பாக நடைபெறுகின்ற சீர்கேடுகளை இந்த உயரிய சபையில் எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகின்றேன். இது எவர் மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியோ, தனிப்பட்ட குரோதமோ அல்ல. எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பின் வெளிப்பாடே இதுவாகும்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவை நான் வரவேற்கின்றேன். ஏனெனில், இந்த நாடு இனப்பிரச்சினை என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முதல் காரணியே அரச பல்கலைக்கழக அனுமதியில் திறமையைப் புறக்கணித்து மாவட்ட விகிதாசாரக் கோட்டாவினைக் கொண்டு வந்ததேயாகும். இதனை, இதன் உண்மைத் தன்மையின் தார்ப்பரியத்தை எமது ஜனாதிபதியவர்கள் உணர்ந்துள்ளமைமையை வரவேற்கின்றேன்.

இலங்கைளயில் தேசிய கல்வி நிறுவகம் கடந்த முப்பது வருடங்களாக இயங்குகின்றது. 1985ம் ஆண்டு 25ம் இலக்க சட்டத்தின்படி இலங்கையிலுள்ள ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களுக்குத் தொழில் அங்கீகரச் சான்றிதழ்களை வழங்கவும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தான் அதிகாரம் இருக்கின்றது. தற்போது அத்தேசிய கல்வி நிறுவகங்களை பல்கலைக்கழகம் ஆக்குவதற்கான யோசனை எழுந்துள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்காவில் இருப்பதைப் போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு தேசிய கல்விப் பல்கலைக்கழகமாக மாற்றலாம். இங்கு 24 கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்தவர்களும், பாரிய கட்டிட மற்றும் இதர வசதிகளும் இருப்பதனால் இலகுவாக இதனை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

அதேபோல் பத்தொன்பது தேசிய கல்விக் கல்லூரிகளையும் இணைத்து அதனையும் உங்கள் யோசனையின் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் கீழ் ஒரு பல்கலைக்கழகமாக மாற்றலாம். ஆனால் 2019, 2020 களிலே தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவான மாணவர்களிலும் பார்க்க இவ்வருடம் இரட்டிப்பான மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிய வருகின்றது. ஒரு ஆசிரிய மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு தற்போது ஐயாயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதாரச் சூழலிலே ஒருநாளைக்கு நூற்றுஅறுபது ரூபாய்களே கிடைக்கின்றன. இதிலேயே அவர்களின் ஒருநாளைக்கான மூன்றுவேளை சாப்பாடு உட்பட இதர செலவுகளும் அடங்குகின்றன. எனவே இந்த ஐயாயிரம் ரூபா விடயத்தில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி அந்த ஆசிரியர்கள் போசாக்கான ஆசிரியர்களாக வெளிவந்து கற்பிப்பதற்காக ஆவன செய்ய வேண்டும்.

அது மட்டுமலல்லாமல், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஜெய்கா திட்டம் ஊடாக ஜப்பானில் விசேட கல்வியினைப் பயிற்றுவிப்பதற்காக விணப்பம் கோரியிருந்தார்கள். அந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்கம் 2022.11.09ம் திகதியிட்டு கல்வி அமைச்சிற்கு அந்தக் கடிதத்தை அனுப்;பியிருந்தார்கள். ஆனால் கல்வி அமைச்சு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு 2022.11.21ம் திகதியே அதற்குரிய கடிதத்தை அனுப்பியிருக்கின்றார்கள். அந்தக் கடிதங்கள் அந்தந்த வலயங்களுக்கு 22ம் திகதியே கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த விண்ணப்ப முடிவுத்திகதியோ 23ம் திகதியுடன் முடிவடைகின்றது. இவ்;வாறிருக்க சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்த விடயம் 23ம் திகதி காலை 10.00 மணிக்கே அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது பகல் 01.00 மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்று. இவ்வாறு மூன்று மணி நேர கால அவகாசத்தில் விண்ணப்பிக்கச் சொன்னால் அவர்கள் தங்களது விடயங்களை எவ்வாறு தேடி எடுப்பார்கள். இது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாமல் இந்த நாட்டிலிருந்து எவரும் ஜெய்கா திட்டத்தின் விசேட பயிற்சிக்கு செல்ல முடியாமல் போயுள்ளமை மிகவும் கவலையான விடயம் என்று தெரிவித்திருந்தார்.