இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது – சஜித்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களை ஒதுக்கப்பட்ட சமூகமாக பேசுவது முட்டாள் தனமானது – ஜீவன்

மலையகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டுவரும் நிலையில் மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது முட்டாள் தனமான விடயமாகும் என ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைந்கொண்டுவந்த நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஒதுக்கப்பட்ட சமூகம் எனும்போது அனைவரும் மலையக மக்களை மாத்திரமே சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.

நாட்டில் வேறுயாரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லையா என கேட்கின்றேன். மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது முட்டாள் தனமான விடயமாகும்.

மலையத்தில் ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் தொட்டத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனையவர்கள் வெளிப்பிரதேசங்களில் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடர்ந்தும் மலையக மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகமாக தெரிவிக்கப்படுவதுதான் மிகப்பெரிய கொடூரம்.

அத்துடன் இன்று எமது நாட்டில் இலவச கல்விக்கு காரணம் மலைய மக்களின் வியர்வை, இரத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை. முடியுமானால் அதனை யாரேனும் இல்லை என தெரிவிக்கட்டும். இதனை புரிந்துகொள்ளாமல் தொடர்ந்தும் ஒதுக்கப்பட்ட சமூகம் என வெட்கம் இல்லாமல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மலையகத்தில் அண்மையில் இரண்டு உயிர்கள் அநியாயமாக பலியாக்கப்பட்டன. தோட்ட நிர்வாகத்தில் கவனயீனத்தினாலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றன. அந்த மரணித்தவர்கள் தொடர்பில் கதைப்பதற்கு இன்று யாரும் இல்லை. இதனை விபத்து என தெரிவிக்க முடியாது. தோட்ட நிர்வாகம் இந்த இரண்டு பேரையும் கொலை செய்திருக்கின்றது. அப்படியான கொடூரமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றாேம்.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக மலையக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைவடைந்துள்ளது என கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார். பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் மலையக மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு சென்று படித்தார்களா என கேட்கின்றோம். மத்திய மாகாணத்தில் மாத்திரம் 728 பாடசாலைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் மாணவர்கள் எப்படி பாடசாலைக்கு சென்று படிக்க முடியும். அதேபோன்று ஏனைய மாவட்ட பாடசாலைகளில் இருக்கும் ஆங்கிலம், விஞ்ஞானம், தொழிநுட்ப கல்வி ஏனைய மலையகம் சார்ந்த மாவட்டங்களில் மாத்திரம் ஏன் இல்லை என கேட்கின்றோம். அதனால் மலைய மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகம் என தெரிவிக்க முடியாது. மாறாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சமூகம் என்றே தெரிவிக்க வேண்டும். ஏனெனில் மலைய பாடசாலைகளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தினால் அந்த மாணவர்கள் நல்ல முறையில் படித்தால் வேறு தொழில்களுக்கு சென்று விடுவார்கள். அதனால் தொட்டங்களில் வேலைசெய்ய யாரும் இருக்கமாட்டார்கள். அதனால்தான் மலையக பாடசாலைகளில் முறையான பாடங்கள் இடம்பெறுவதி்லலை.

அத்துடன் இரம்பொடை புளூம்பீல் தோட்டத்தில் நாங்கள் மேற்காெண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்கின்றோம். அந்த தோட்ட தொழிலாளர்களுக்குரிய ஈ.பி.எப். ஈ.ரி.எப் அனைத்தும் முழுமையாக செலுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 80ஆயிரம் முதல் ஒருஇலட்சம் ரூபாவரை நிவாரண பணம் வழங்கப்படுகின்றது. காணியும் வழங்குகின்றனர். எனவே இந்த வெற்றியை மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சமர்ப்பணமாக வழங்குகின்றேன் என்றார்.

சீனத் தூதுவருடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்

இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் (Qi Zhenhong) இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, இலங்கையின் பல்வேறு சவால்களை சமாளிக்க சீனாவின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை தூதுவர் மீண்டும் வலியுறுத்தியதாக சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

எனினும் தாம் இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மறுசீரமைக்க சீனா உடன்பட்டதா? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை தனது கடனை மறுசீரமைக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பை நடத்தியதாக இலங்கை கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உயரதிகாரி இலங்கை விஜயம் : சிவில் சமூகத்தினர், அதிகாரிகளுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதி உதவிச்செயலர் அஃப்ரீன் அக்தர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள அஃப்ரீன் அக்தர், இங்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தெற்காசிய அரசுகளுக்கான அமெரிக்க நிதியத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

இதன்போது குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்குவது பற்றிக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத் கடந்த வார இறுதியில் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதியின் விஜயம் இதுவாகும்.

கருத்து சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் நசுக்குகிறது – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆவேசம்

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குகிறது என்று, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இன்று (08) தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் அல்லது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தும் மனித உரிமைகளுக்கான போராட்டக்கார்களுக்கு எதிராக தற்போதுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படுவது கொடூரமான மற்றும் சகிக்க முடியாத அடக்குமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறான மற்றும் நியாயமற்ற முறையில் முறையில் பயன்படுத்துவதற்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் அத்தகைய கொள்கைகளுக்கு அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும் நாங்கள் அரசாங்கத்தை கண்டிக்க விரும்புகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட மூவர், அவர்கள் மீது தெளிவான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் அநியாயமான முறையில் 75 நாட்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கர்தினால் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த வகையான நெறிமுறையற்ற நடைமுறையை எந்த சூழ்நிலையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

அதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, எவ்வித தீவிர உணர்வும் இன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்படும் முறையற்ற விதம் குறித்தும் எமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காணாமல்பாேனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவி நீக்க வேண்டும் – மனோ

காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என்றால் காணாமல் போனோர் தொடர்பாக முறையிடுவதற்காக காரியாலயம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவிநீக்கம் செய்து, செயற்திறமையான ஒருரை நியமிக்கவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் தொடர்பாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்த கருத்து பதில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணாமல் போனாேர் தொடர்பாக ஆராய்ந்து விசாரணை நடத்த மிகவும் கஷ்டத்துடனே காரியாலயம் அமைத்தோம். ஆனால் தற்போதைய அதன் தலைவர், காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என தெரிவித்திருக்கின்றார்.

அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா என எனக்கு தெரியாது. ஏனேனில் காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என்றால், இதுதொடர்பாக ஆராய காரியாலயம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவர் தொடர்பாக நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்க காரியாலயம் அமைக்க பாராளுமன்றத்தில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அனுமதித்துக்கொண்டடோம். இதற்கு தற்போதுள்ள ஆளும்ரதப்பினரே எதிராக இருந்தனர்.

நான் அமைச்சராக இருக்கும்போது இதுதொடர்பான காரியாலயம் மாத்திறை, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நாங்கள் திறந்துவைத்தோம். எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எங்களுக்கு வேலைசெய்ய இடமளிக்கவில்லை.

அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக தேடிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு இல்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கின்றோம்.

அத்துடன் நாட்டில் 88, 89 காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் இருக்கின்றார். அதேபோன்று 2000ஆம் ஆண்டில் காணாமல் போனவர்களும் இருக்கின்றார்கள்.

வடக்கிலும் இடம்பெற்றது. தெற்கிலும் இது இடம்பெற்றது. அதனால் இந்த சாபத்தை நாட்டில் இருந்து முற்றாக துடைதெரிந்துவிடுவோம். அதற்காகத்தான் நாங்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய காரியாலயம் அமைத்தோம்.

அதனால் நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்து அன்று இதற்கு தெரிவித்தாலும் நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஆனால் அதன் தலைவரை மாற்றவேண்டும். அவரால் முறையாக செயற்பட முடியாது. அவரை வைத்துக்கொண்டு காரியாலயத்தின் பணிகளை மேற்கொள்ள முடியாது என்றார்

விபத்துக்குள்ளான கப்பலை மீட்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலளார் வைகோ  கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது.

கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள். எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புகொண்டு, கடற்படை மீட்புக் கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த கப்பலையும் அதில் உள்ளவர்களையும்  சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வெளிநாட்டில் தஞ்சம்: ஐ.நா.வுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கனடா நாட்டில் தஞ்சம் புகும் நோக்குடன் 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சிங்கப்பூர் அரசு காலத்தினால் செய்த உதவி பாராட்டத்தக்கது.

முதலில் போராலும், பின்னர் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாமல், பிற நாடுகளில் தஞ்சமடைய தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு அகதிகள் தகுதியும், கண்ணியமான வாழ்வுரிமையும் மறுக்கப்படுகிறது.

அதனால் கனடா, இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் தேடி பாதுகாப்பற்ற முறையில் கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் பல தருணங்களில் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்; இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தரவும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயக பொன்’ விருது

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னைஅர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகின்றது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பாடநெறியை முடித்த 75 பேர் டிப்ளோ பட்டத்தைப் பெற்றனர்.

இந்த வருடாந்த டிப்ளோமா வழங்கும் விழாவில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய பாடங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்களின் மதிப்பீடு நடத்தப்படுகின்றது.

அதற்கமைய, அதில் இரா.சம்பந்தன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஜனநாயகப் பொன் விருதைப் பெற்றார். நான்கு தசாப்த கால பாராளுமன்ற வாழ்க்கையில் ஜனநாயகத்துக்காகச் சம்பந்தன் காட்டிய அர்ப்பணிப்பை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.

அமெரிக்க செனட் சபை குழு வடக்குக்கு விஜயம்

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்றைய தினம் (07) திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.

இதன்போது, பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.