பாரிய புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 17 முழுமையான மனித உடல்கள் தொடர்பான எலும்புகள் மீட்கப்பட்டன. மூன்றாம் கட்டத்தின் ஆறாவது நாளில் மேலும் 4 மனித உடல்கள் தொடர்பான எலும்புக் கூண்டுகள் மீட்கப்பட்டன.
மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் இதுவரை 18 மனித உடல்களின் எலும்புக்கூடுகளை கண்டெடுக்க முடிந்தது.
இதுவரை 35 முழு மனித உடல்களின் எலும்புக் கூடுகள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
வெடிமருந்துகள் போன்ற 8 பாகங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் 6 இலக்கத் தகடுகள், நீர் சுத்திகரிப்பு சாதனம், சயனைட் குப்பி, பெண்களின் மேல் உள்ளாடைகளும் கண்டெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொக்குத்தொடுவாய் குழுவின் சடலம் தொடர்பில் நேற்று முன்தினம் (24) ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தடி உலோகங்கள், எலும்புகள் மற்றும் ஆயுதங்களை கண்டறிவதற்காக விசாரணைகளை முன்னெடுத்த விசேட குழுவினர் புதைகுழியை சூழவுள்ள பகுதியில் ஸ்கேன் மேற்கொண்டனர். 3 டி பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமைக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான வீதிக்கு கீழும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. பரிசோதனை முடிவில் அது உறுதியானால், பிரதான வீதியும் தோண்டப்படும். எவ்வாறாயினும் வரும் வியாழக்கிழமைக்குள் புதைகுழி தோண்டும் பணிகள் முழுமையாக முடிவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் முல்லைத்தீவு நீதவான் உத்தரவின் பேரில் விசாரணைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் தற்போதைய நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகள், தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் இந்தப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.