2024 பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனாதிபதி ரணில்

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அத்துடன், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரவு – செலவுத் திட்டத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் நேற்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சஜித்தால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது – ஹரின்

“சஜித் பிரேமதாஸவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. இதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.”

– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வாக்குகளால் வெற்றியடைவார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின்  உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள்.” – என்றார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை – பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

அவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், தற்போது சுயேச்சையாகச் செயற்படும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இருபுறமும் கால்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பஸில் ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்,நாடாளுமன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க முடியாது – டியூ குணசேகர

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தகவல்கள் வெளியாகும் நிலையில், இவ்விரு தேர்தல்களையும் ஒத்திவைக்க முடியாது என்று இலங்கை கம்யூனிஸ் கட்சி தலைவரான டியூ குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசமைப்பில் இடமுள்ளது. ஆனால், அதனை ஒத்திவைப்பதற்கு இடமில்லை. அதேபோல் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கும் அரசமைப்பில் இடமில்லை. ஆளுந்தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடினால்கூட அதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றே நம்புகின்றேன்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அரசமைப்புக்கு அப்பால் சென்று, சிற்சில சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிகாரம் இல்லை.” – என்றார்.

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கத் தயார் – தயாசிறி ஜயசேகர

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கத் தான் தயார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், நாட்டுக்குப் புதிய அரசியல் இயக்கமொன்றின் தேவை எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியலில் எந்த ஏமாற்றமும் தனக்கு இல்லை என்றும், தான் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் போது சில பிரச்சினைகளை மாத்திரம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், தனது போராட்டம் கைவிடப்படவில்லை என்றும், தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலே இருக்கின்றார் என்றும் தயாசிறி எம்.பி. தெரிவித்தார்.

சில கட்சிகள் தன்னுடன் பேச்சில் ஈடுப்பட்ட போதும் தான் அந்தக் கட்சிகளில் எதிலும் இணைவதற்குத் தயார் இல்லை என்றும், புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Posted in Uncategorized

யாழ்.பல்கலைக்கழக சிற்றூழியர் வெற்றிடத்திற்கு தெற்கை சேர்ந்த 7 பேர் நியமனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் இவர்களுக்கான நேர்காணல் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நடாத்தி முடிக்குமாறு பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்தும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பலர் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பத்திருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் ஐ.நா தலையிட வேண்டும் – இலங்கை கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வெளிப்படையான விசாரணைக்கான இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவளிக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகளிற்கான ஐக்கிய நாடுகளின் பிரதி ஆணையாளர் நடா அல் நசீவை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஐநாவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கர்தினாலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சமில்பெரேராவும் கலந்துகொண்டுள்ளார்.

நீதிக்கான எங்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் குறித்து ரணில்ராஜபக்ச அரசாங்கம் அலட்சியமாகயிருப்பதால் ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் குற்றச்சாட்டினை தொடர்ந்து சர்வதேசரீதியில் கண்காணிக்கப்பட்ட முழுமையான விசாரணைக்கு கத்தோலிக்க திருச்சபை விடுத்த வேண்டுகோளிற்கு அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனக்கப்பல் மேலும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்க அனுமதி

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான “ஷி யான் 6″ மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சனிக்கிழமை பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவிருந்தது.

இந்தநிலையில், நாளை மறுதினம் வரை குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை இலங்கைவின் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோருமெனவும், இதற்கமைய ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி சபைத் தேர்தல்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

ஆகவே, வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.” என்றார்.