மன்னார் ரெலோ தலைமையகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் இன்று திங்கட்கிழமை(5) மதியம் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது தியாகி பொன் சிவகுமாரனின் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த்,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

மன்னாரில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று (6) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) காரியாலயத்தில் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

முழுமையாக முடங்கியது மன்னார்

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கர வாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும்,மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) செவ்வாய் கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

வட-கிழக்குத் தழுவிய பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து மன்னாரில் அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ),ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 11 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டானியல் வசந்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

குறிப்பாக வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கமானது எமது மக்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஏற்கனவே அடக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கின்ற எமது மக்களை மீண்டும் மீண்டும் அடக்கி ஆழ் வதற்கான ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகின்றது.
இதற்கு எதிராக நாங்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து துடைத்து எடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிறிய கருத்தை பதிவிட்டாலே அவர்களை கைது செய்து சிறை படுத்துவதற்கான அதிகாரம் இந்த ஆயுதப் படைகளுக்கு வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்த ஆயுதப் படைகளுக்கு இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் அதே போன்று அவசர கால தடைச் சட்டம் ஊடாக பல அடக்குமுறை அதிகாரங்கள் வழங்கி இருக்கிறது.

உதாரணத்திற்கு எமது கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான அதிகாரம் எமது நிலங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம் மற்றும் கேள்வி கணக்கின்றி எமது இளைஞர்கள் யுவதிகளை சிறை படுத்துவதற்கான அதிகாரம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரம் என்று பல அதிகாரங்களை வழங்கி இந்த நாடு எமது மக்களை அடக்கி ஆள்கிறது.

மீண்டும் மீண்டும் எமது மக்களை ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் வைப்பதற்கான புதிய சட்டத்தை நாட்டிலே இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.
அது தான்சட்டம் எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இந்த நாட்டில் கொண்டு வராத வகையில் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்பதுடன் எதிர் வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அன்றைய தருணம் வர்த்தக நிலையங்களை மூடி அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் முச்சக்கர வண்டிகள் அரச தனியார் பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதோடு இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பை காட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணை தூதுவரும், அந்நாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், இலங்கை கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் வடபகுதியில் உள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையான தனுஷ்கோடிக்கும் இடையிலான ராமர் பால பகுதியை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதன்மூலம் ஏற்படும் சாதகத் தன்மை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தமிழகத்துக்கு 3 கோடி பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரை ராமர் பாலம் ஊடாக அழைத்து வந்தால் அதன்மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்துள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

 

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் வர்த்தமானியை வெளியிடுமாறு பிரதமருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.அவசர கடிதம்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே, விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது்ளது.

இந்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை திருக்கேதீச்சரத்தில் வழிபாடு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை (9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர்.

இன்று காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன் போது இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண – இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர் ஆ கலந்து கொண்டார்.

இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இந்திய அரசின் நிதி உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு, ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை – இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் சென்ற 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மன்னார் அம்மாச்சி உணவகத்தை மீள திறக்க நடவடிக்கை

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும், 2018ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்களத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் வறுமை கோட்டில் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானத்தைப் பெற்று வந்தனர்.

அத்துடன் குறித்த உணவகத்தில், குறைந்த விலையில் பாரம்பரிய உணவு வகைகளை பெறக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் – 19 தொற்று நோய் காலப்பகுதியில் இந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டது. இதற்கு பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு காணப்படுவதால் இப் பகுதியிலும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரும் பாரம்பரிய உணவுகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முருங்கன் பகுதி அம்மாச்சி உணவகம் மீண்டும் இயங்கயுள்ளது.

மேலும், அம்மாச்சி உணவகத்துடன் இணைந்து பயணிப்பதற்கு சமையல் மற்றும் வியாபாரம் செய்வதில் ஆர்வம் உள்ள அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மற்றும் தனிப்பட்ட பெண்களிடமும் இருந்து விண்ணப்பங்களை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பியோர் முருங்கன் விவசாய போதனாசிரியர் அலுவலகம், 077-2911198 , 076-5459436 பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் உயிலங்குளம் 077-6614703 , 077-6640526 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு செல்வம் எம்.பி நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை (19) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிதி உதவி வழங்கி வைத்தார்.

நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்,ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

-மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.