கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகள் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை. ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
கோப் குழுவின் தலைவரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. ஆகவே கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணைகளை அவர் தலைமையில் முன்னெடுப்பது முறையற்றது. பதில் தலைவரை நியமியுங்கள் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள். முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உரையாற்றுகையில், பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு கௌரவமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவுக்கு ஒருமுறை நான் முன்னறிவிப்பு இல்லாமல் சென்றதால் அவர் என்னை குழுவில் கலந்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குழு நடவடிக்கையில் கலந்துக்கொள்ளுமாறு உறுதியாக அறிவித்தார்.ஆனால் தற்போது பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையிலான கோப் குழுவுக்கு வருபவர்கள் யார் என்று தெரியவில்லை.
கோப் குழுவின் நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழுவின் தலைவரின் ஊடக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.கோப் குழுவின் கௌரவத்தை பாதுகாப்பதை விடுத்து பேராசிரியர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு நிறுவனங்களுடன் மோசடி செய்கிறார். ஆகவே இவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோப் குழுவின் தலைவரது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம்.கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் கோப் குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுப்பதை நிறுத்தி மாற்று தீர்மானங்களை முன்னெடுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை.ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதால் தான் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களின் தலைமைத்துவ பதிவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குங்கள் என்று வலியுறுத்தினேன். மக்கள் போராட்டத்துக்கு பயந்து நீங்கள் ( சபாநாயகரை நோக்கி) அப்போது அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். போராட்டம் முடிவடைந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதியை மறந்து விட்டீர்கள். இதுவே உண்மை என்றார்.
கோப் குழு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.