பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது – சபா.குகதாஸ் கோரிக்கை.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஐந்து மாதங்களை கடந்து போராடுகின்றனர்.

சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக தடுப்பதற்கு அரசியல்வாதிகள் மக்களுடன் நின்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது மட்டும் தான் நடைபெறுகிறது.

ஆனால் இதனை தடுப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மற்றும் புவியியல் சார்பான விளக்கங்கள் உரிய நிபுணர்கள் அல்லது விரிவுரையாளர்கள் போன்ற தரப்பால் இதுவரை அரசாங்கத்தை நோக்கியோ அல்லது பொதுவாகவோ முன் வைக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட புவியியல் சார்பு கல்விமான்கள் மௌனம் காப்பது நல்லதல்ல. புவியியல் ரீதியாக யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாகும்.

அத்துடன் இளமடிப்பு பாறை வகைக்கு உரியதாகவும் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் பாரிய அகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

இதனை மையமாக கொண்டு புவியியல் பேராசிரியர்கள் இவை தொடர்பான கருத்துக்களை வெளியிட வேண்டும் காப்பிரேட் கம்பனிகளினால் உலகில் பல இடங்கள் பாலை வனங்களாகவும் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாகவும் மாறி வருவதை போன்று எதிர் காலத்திலும் பொன்னாவெளி பிரதேசம் மாறிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி பதிவு செய்யாதோரிடம் தண்டப்பணம் அறவிடுவது சட்டவிரோதம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் தண்ட பணம் அறவிடப்படும் என்பது சட்டவிரோதம்.

ஏனெனில் இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுபவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களாக கருத முடியாது.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் வரி செலுத்த முடியாது அவர்களின் வருமானம் அதிகரிக்கும் போது வரி செலுத்த முடியும் பதிவு செய்யவில்லை என தண்டம் அறவிட முடியாது.

அது மட்டுமல்லாது 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்யா விட்டால் 50ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படும் என அறிவித்த அரசாங்கம் இவ்வளவு காலமும் வரி வருமானம் செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டம் என அறிவிக்கவில்லை.

ஆகவே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்குவது நல்ல விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் என கூறுவது சட்ட விரோதம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஆலோசனை சொல்லும் ஹரின் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? – சபா.குகதாஸ் கேள்வி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் எந்த முடிவை எடுக்கக் கூடாது எனவும் ரணிலை ஆதரிக்க வேண்டும் என மொட்டு அரசாங்கத்தை விமர்சித்து அதே அரசாங்கத்தில் தற்போது அமைச்சராக இருக்கும் ஹரீன் பெர்ணான்டோ நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரே நீங்கள் தமிழ்க் கட்சிகளிடம் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக நீங்களும் உங்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கூறமுடியுமா? நல்லாட்சியில் நடாத்திய நாடகத்தை தமிழ் மக்கள் இன்னும் மறந்து விட வில்லை.

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோருவதற்கு முன்பாக ஜனாதிபதி மூலம் தமிழர்கள் எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தால் உங்கள் மீது நாம் கேள்வி கேட்பதற்கான இடைவெளி ஏற்பட்டியிருக்க வாய்ப்பில்லாது இருந்திருக்கும்.

ஆனால் எதிர்மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளையும் தமிழ் மக்களையும் தொடர்ந்தும் ஏமாற்றியே வருகின்றார் .

ஜனாதிபதியின் அதிகாரத்துக்க உட்பட்ட அரச திணைக்களத்தால் நடைபெறும் தமிழர் நில அபகரிப்பைக் கூட தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கின்றார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தமிழர்களை சிறையில் அடைப்பதை நிறுத்துமாறு கேட்க பயங்கரவாத சட்டம் நடைமுறையில் உள்ளதா என கேட்கிறார் இதனை அமைச்சரே நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்.

அமைச்சர் ஹரீன் அவர்களே இன்னும் சில மாதங்கள் இருக்கின்றது. முடிந்தால் ஜனாதிபதியும் நீங்களும் இணைந்து தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பாராளுமன்றத்தால் மீளப் பெறாத அதிகாரப் பகிர்வை வழங்குங்கள்.

இது உங்களால் முடியும். காரணம் உங்களின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பலமாக உள்ளது. இதனை ஒர் இரு மாதங்களில் உறுதி செய்யுங்கள் நீங்கள் கேட்கும் ஆதரவை பெரும் பாண்மை தமிழ்க கட்சிகள் பரிசீலிக்கும் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயம் இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பது போன்றது – சபா.குகதாஸ்

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயம் இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பதாகவே அமையும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அடிப்படை மூலோபாய விடையங்கள் சிலவற்றை கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடந்த உள்நாட்டு இறைவரி தொடர்பான கலந்துரையாடலில் முன்வைத்து உரையாற்றினார்.

ஜனாதிபதி கூறிய மூலோபாயம் ஒன்று வெளிநாடுகளுடன் வர்த்தக உடனபடிக்கைகளை மேற் கொள்ளுதல் குறிப்பாக இந்தியா, சீனா, தாய்வான் , ஜப்பான் போன்ற நாடுகளிடம் எதிர்காலத்தில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடுதல் இரண்டாவது ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உறவை விரிவுபடுத்தல் மூன்றாவது நாட்டின் அனைத்து துறைகளையும் டிஐிற்றல் மயப்படுத்தல் அதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாயம் இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்பதற்கானது அல்ல இவை அரசியல் அமைதி உடைய , ஊழல் அற்ற ஆட்சியாளர்களை கொண்ட நாடுகளுக்கோ பொருத்தமான மூலோபாயங்கள் மாறாக இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பதாகவே அமையும்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது தலைகீழாக கிடக்கின்றது அதனை நிமிர்த்தி இருத்த முதல் கட்டம் ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அடிப்படை மூலோபாயம் முதலாவது இனப்பிர்ச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு இரண்டாவது ஊழல் வாதிகளின் ஊழல் பணங்களை நாட்டின் திறைசேரிக்கு கொண்டு வருதல் மூன்றாவது ஊழல்வாதிகளை தண்டித்தல் தடுப்பதற்கான சட்டங்களை சட்ட ஓட்டை இன்றி நடைமுறைப்படுத்தல் எனவே இவ்வாறான மூலோபாயங்களே வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடிய அடிப்படைகள்.

மேலும் வரிகளை அதிகரித்து சொந்த மக்களை கருவறுத்து உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்காது தொடர்ச்சியான கடன்களை பெற்றுக் கொண்டு சந்தர்ப்பவாத கால எல்லைகளை கூறி அந்நியச் செலாவணி வருமானத்தை பெற்றுக் கொள்ளாமல் பொருளாதாரம் பற்றி கதைப்பது தேர்தல் இலக்குகள் மட்டுமே இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இணக்கம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு மாதவணை பிரச்சனை, உள்ளூராட்சி மன்றங்களில் அமைய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கல், 13வது திருத்தம் முழுமையாக அமுலாக்கல், வடகிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஜனாதியுடனான இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, பேச்சளவில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பிற்பகல் 03 மணியளவில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை அமைப்பதற்கான வரைபொன்று அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஜனவரி மாதத்தில் இதனை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவதாகப் பேசப்பட்டது.

அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது. பூநகரியில் சோளார் மற்றும் காற்றாளை திட்டங்கள், இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வது, இந்தியாவில் இருந்து குழாய் மூலமாக மின்சாரம், எரிபொருட்கள் கொண்டுவருவதுடன், இலங்கை இந்தியாவிற்கிடையில் தரைவழிப் பாதை போன்றவற்றுக்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதன்போது எங்களாலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்த வண்ணம் இருப்பது தொடர்பிலும், கடந்த நவம்பர் மாதமளவிலும் மட்டக்களப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டு அதில் 4 பேர்தான் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையும் மாவீரர் தின நிகழ்வுக்காக நிதி கோரியதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயமும் சுட்டிக் காட்டப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பில் ஒரு வித்தியாசமான நிலைமை இருப்பதாகவும், மட்டக்களப்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என்ற கருத்துப்பட ஜனாதிபதி விடயங்களைத் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு தான் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் காணிப் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது நாங்கள் மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை விவகாரம் சம்பந்தமாகத் தெரிவித்தோம். அது தொடர்பிலும் மிக விரைவில் உரிய தீர்மானம் எடுப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உள்ளூரட்சி மன்றங்களிலே நீண்ட காலமாக அமைய, தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்ற ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் நாங்களும் எமது கோரிக்கையை முன்வைத்தோம். இது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களால் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விடயத்திற்கும் விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 வது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தெரிவித்தார். இதன்போது பிரதேச செயலாளர்களை மாகாண சபையின் கீழ் கொண்டு வருவதற்கு தான் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் போது நான் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டது. ஆரம்ப காலத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் என்று தான் இருந்தது. அதனை 1988ல் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் என்று சொல்லி அவர்களை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றைய நிலையில் கிராமசேவை உத்தியோகத்தர் பதவி கூட மாகாணசபைக்கு பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றது.

அதுமாத்திரமல்லாமல் பாராளுமன்றத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்த போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினரகளிடமும் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தீர்கள் அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தார்கள். எனவே 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்ப்படுத்துவதற்குப் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வராது என்று நினைக்கின்றோம்.

13வது திருத்தம் புறையோடிபோயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு இடைக்காலத் தீர்வாகக் கிடைக்கப்பட்டது. அதையாவது முற்றுமுழுதாக நிறைவேற்றினால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு மிக விரைவில் மீண்டெழும் என்ற விடயங்களும் எம்மால் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு , சுகாதார வசதிகளை வழங்குங்கள் – சபா குகதாஸ் கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு , சுகாதார வசதிகளை வழங்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்க யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயற்கை அன்னையின் சீற்றத்தால் பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு , மன்னார் வவுனியா, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் பெருமளவு மக்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ உதவிகள் முழுமையாக போதாமையால் தன்னார்வு அமைப்புக்கள் , அறக்கட்டளைகள் , கொடையாளர்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து தேவைகளை பூர்த்தி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் எல்லோருக்குமான சுகாதாரத்தை ஒரளவு உறுதி செய்வதுடன் நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாப்பதற்கான உதவிகள் தொற்றா நேயாளர்களுக்கான உதவிகள் மிக முக்கியமானவை.

டெங்கு , வாந்திபேதி., வயிற்றோட்டம் போன்ற நோய்கள் விரைவாக பரவும் அபாயம் உள்ளதால் தூய குடிநீர் வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் உதவி செய்ய உதவும் கரங்கள் கைகொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

முன்னாள் தவிசாளர் நிரோஷ்க்கு எதிரான நிலாவரை வழக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்காமையினால் ஒத்திவைப்பு

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தடுத்ததன் மூலம் அரச கருமங்களுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தடை ஏற்படுத்தினார் என தொடரப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைப்பதில் தாமதம் நிலவுவதால் எதிர்வரும் ஆண்டின் யூன் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தினம் (15.12.2023) வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் கிடைக்கப்பெறவில்லை என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் எதிர்வரும் ஆண்டின் யூன் மதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணையினை நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த 2021 ஆண்டின் ஆரம்பத்தில் தொல்லியல் திணைக்களமும் இராணுவத்தினரும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் பௌத்த விகாரை அமைப்பது போன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதனை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களத்தினர் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பெருமளவானவர்களுடன் நிலாவலைப் பகுதிக்கு வருகை தந்து தமது அரச கருமத்திற்கு தொடர்ந்தும் தடை ஏற்படுத்திவருகின்றார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இருதரப்பினையும் அழைத்து சமரச முயற்சி என்ற போர்வையில் –  தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குள் தவிசாளர் தலையிடக் கூடாது என வலியுறுத்தினர். எனினும் இன நல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு தன்னால் இடமளிக்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் வெளியேறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்துகின்றார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வருட ஆரம்பத்திலும் நிலாவரையில் பௌத்த வழிபாட்டிடம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்த நிலையில் அது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரணில் ராஜபக்சக்களுக்கு வெள்ளையடிப்பதா உலகத்தமிழர் பேரவையின் நோக்கம்? – சபா குகதாஸ் கேள்வி

புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஐபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஐபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இன நல்லிணக்கம் ஏற்படும் வகையில் பிரகடனம் ஒன்றை ஐனாதிபதி ரணிலிடம் வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன மிகவும் வேதனையாக உள்ளது ஐனாதிபதியின் நல்லிணக்கம் தமிழர் விவகாரத்தில் இதுவரை எப்படி இருக்கிறது என்று தெரியாது போன்று நடிக்கிறார்களா? GTF ரணிலுடன் இணைந்து.

தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் சிங்கள மயப்படுத்தல் , ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்தமை, அரசியல் அமைப்பு சபையில் தமிழர் பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாமை, அரசியல் அமைப்பில் உள்ள 13 திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பாராளுமன்றத்தை சாட்டியமை , வடக்கு மீனவர் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் தள்ளுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதியை தட்டிக்கழித்தல், நினைவேந்தல்களில் ஈடுபட்டோரை பயங்கரவாத சட்டத்தல் சிறையில் அடைத்துள்ளமை, தமிழர் தாயகத்தில் இந்திய சீனாவிற்கு இடையில் போட்டியை ஊக்குவித்தல், தமிழர் மீது சிங்கள இனவாதிகள் வீசும் இனவாத கருத்துக்களை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் ஐனாதிபதி ரணிலின் இன நல்லிணக்கமா?

ரணில் விக்கிரமசிங்க ஐனாதிபதியாக வந்த பின்னர் தமிழர் விவகாரத்தில் கடந்த காலங்களைப் போன்றே சந்தர்ப்பவாத வேடம் போட்டு வருகிறார் இது உலகத் தமிழர்களுக்கே புரியும்.

ரணிலின் தந்திரம் தெரிந்து தான் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்னர் நீங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுமையாக அமுழ்ப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்தனர் இதனை எதிர்பார்க்காத ஐனாதிபதி ரணில் தன்னையே ஏமாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற வேண்டும் என பொய் உரைத்தது மட்டுமல்லாமல் பொலீஸ் அதிகாரம் தர மாட்டேன் என தான் தான் அரசியலமைப்பை தீர்மானிப்பவர் போல பதில் அளித்தார் இத்தோடு வெளியில் வந்தது ரணில் இனநல்லிக்க தீர்வு நாடகம்.

தற்போது GTF குழுவிற்கு வழமையான பல்லவியை பாடியுள்ளார் ரணில் அதாவது புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வு தருவதாக இதனை வடிவேல் பாணியில் சொன்னால் வரும் ஆன வராது.

புலம் பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் பெரும் தியாகத்தின் பெயரால் வடிவமைக்கப்பட்டவை அதனை தரம் தாழ்த்தும் வகையில் நடந்து கொண்டால் வரலாறு பதில் சொல்லும்.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கேள்வியெழுப்பிய செல்வம் எம்.பி.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் போகின்றார்களா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம். அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன.

அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது? இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ?

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும் பொறுப்புண்டு. அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.

இன்று காசாப் போரை நிறுத்துமாறு கோருவோர் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் இன்று கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். ஏனெனில் அப்பாவிப் பொதுமக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தமை மாத்திரமல்ல, போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியமையை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஐபக்ஷாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது, அன்று இதே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியமையைப் பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர்.

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீன் மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும், இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை அன்று ஈழத் தமிழர்களுக்கும் காட்டினீர்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.

இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை. – எனவும் தெரிவித்துள்ளார்.