இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஜெய்கா தலைவர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான செயலாக இருந்தாலும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை கலாநிதி தனக்கா அகிஹிக்கோ பாராட்டினார்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம், இலகு ரயில் திட்டம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜப்பானிய உதவியின் கீழ் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடியின்போது, இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜெய்காவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜெய்கா தயாராக இருப்பதாக கலாநிதி அகிஹிட்டோ மேலும் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் விவகார பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன்காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம்.ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சாந்தன் இலங்கைக்கு வர ஜனாதிபதி சம்மதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக தகுதியானவர் இல்லையெனில் ரணிலை ஆதரிப்போம் – பிரசன்ன ரணதுங்க

தற்போதைய ஜனாதிபதியை விட ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான ஒருவர் தமது கட்சியில் இருந்தால் அவருக்கு வழங்குவதே பொருத்தமானது எனவும் தகுதியானவர் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

இத்தருணத்தில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்கக்கூடிய எதிர்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் கூறினார். அதற்கான அதிக தகுதிகள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கனேஹிமுல்ல பிரதேச சபைக் கூட்டத்தில் நேற்று (4) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றியோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் பற்றியோ அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் பேசமாட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இப்படிப்பட்ட தற்பெருமைக்காரர்களிடம் இருந்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டுக்கான அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி பேசினார். அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து நாட்டுக்காக உழைக்கச் சொல்லி அரசியலைத் தொடங்கினார். பொருளாதார சீர்திருத்தங்களில் நாட்டுக்கு நல்லது செய்வதே தவிர, மக்கள் கேட்பதை அல்ல என்றார்.

நாங்கள் எடுத்த முடிவுகள் மக்கள் முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செய்தது, நாட்டு மக்களுக்கு இந்த அமைப்பைப் பழக்கப்படுத்தியதுதான். விலை அதிகரிக்கும் போது அதிகரிக்கவும், குறையும் போது குறையவும் விலை சூத்திரம் வழங்கப்பட்டது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது.

அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கங்களில் இல்லாதது போன்று இன்று பேசுகின்றார். திருமதி சந்திரிகா குமாரதுங்க வந்தபோது விகாரமஹாதேவி என்று கூறி அழைத்து வந்தவர். அவரை வெற்றியடைய வைத்து நான்கு அமைச்சர் பதவிகளையும் பெற்றார். அந்தத் தேர்தலில் ரெஜி அவர்கள் தோல்வியடைந்தார். அவர்கள் அரசாங்கத்தின் அங்கம் ஆனார்கள்.

மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்ட போது தெற்கிலிருந்து துட்டுகெமுனுவாகவே அழைத்து வரப்பட்டார். மஹிந்த சிந்தனையே நாட்டுக்கு சிறந்தது என தமது தலைவர்கள் கூறுவதை பார்க்கின்றனர். எம்முடன் இணைந்த பின்னர் சரத் பொன்சேகாவுடன் இணைந்தார். அங்கிருந்து ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு சென்றார்.

அதன் பின்னர் அனுரகுமாரவின் செயலாளர் ஊழல் குழுவின் தலைவராக செயற்பட்டார். அனுரகுமார அவரை இயக்கினார். அவரும் அந்த அரசாங்கத்தில் இருந்தார். நாங்கள் 225 பேரும் இருக்கவில்லை, ஆட்சி செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியாது. இன்று ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். 88/89 இல் என்ன நடந்தது என்று 2000க்குப் பின் வந்த தலைமுறைக்குத் தெரியாது.

அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தத்தை மதிக்கவில்லை என்றால், அல்லது துண்டுப் பிரசுரம் மூலமாக கடையை மூடவில்லை என்றால், அந்த மனிதனை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

இரவில் வீடுகளுக்குச் சென்று மக்களைக் கொன்றனர். எமது கட்சிகள் ஒருபோதும் அரச சொத்துக்களை கொன்று, எரித்து, அழித்ததில்லை.

அந்தக் குற்றங்களையெல்லாம் செய்த குழு ஜனதா விமுக்தி பெரமுன, இன்று அவர்களால் அந்தப் பாவத்திலிருந்து தப்ப முடியாது. அதனால்தான் அந்த வரலாறு தெரிந்தவர்கள் எப்போதும் ஜே.வி.பி.யை 3% என்று போடுகிறார்கள். நேற்று முன்தினம் மாபெரும் மகளிர் மாநாடு நடந்தது. சுமார் 300 பெண்கள் சைக்கிளில் சென்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு முன்பு அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நான் போய் அந்த கிராமத்தில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்று கேட்டேன். வாக்காளர் பட்டியலில் 170 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஊர் ஆண்களுக்கு இரண்டு இரண்டு மனைவிகளா என்று கேட்டேன்.

ராஜபக்சர்கள் திருடியதாக கூறும் ஜனதா விமுக்தி பெரமுன அவர்கள் செய்ததை மறந்து விட்டது. 88/89 இல் சொத்துக்களுக்கு தீ வைத்தனர். அதன் காரணமாக இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஜனதா விமுக்தி பெரமுனவும் காரணம். பொருளாதாரப் பிரச்சினை கோட்டாபயவின் காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல. 30 வருட யுத்தம் நடந்தது. போர்தான் அதற்குச் சிறந்த வழி. 2005 இல் மஹிந்த வெற்றி பெற்று 2009 இல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். அன்று சஜித் பிரேமதாசவின் தந்தை புலிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கினார்.

600க்கும் மேற்பட்ட நமது காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களால் கொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படியொரு வரலாறு நமக்கு இருந்தது. உலக நாடுகள் எமக்கு ஆதரவளித்த போது, யுத்தம் செய்ய எம்மை ஆதரிக்கவில்லை. நமது நாட்டின் வருமானம் போருக்கே செலவிடப்பட்டது. போர், இயற்கை சீற்றங்கள், 83 கறுப்பு ஜூலை போன்ற காரணங்களால் நமது பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.

88/89 இல் செய்ததை மே 9ம் திகதி ஜனதா விமுக்தி பெரமுன செய்தது. பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கம்பஹாவில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர்.

மினுவாங்கொடை தொகுதியில் 13 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எங்களை மக்களிடம் இருந்து விலக்கி வைப்பதற்காகவே அத்தனையும் செய்தார்கள். அடிபட்டு நாம் கூர்மைப்படுத்தப்படுகிறோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தற்போது இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

தற்போது ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கிராம அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதையும் நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். ஜனதா விமுக்தி பெரமுன அவர்களை கிராமத்தில் எந்த வேலையும் செய்ய விடவில்லை. அவர்களும் செய்யவில்லை. சமூக விரோதிகளாக செயல்படுகிறார்கள். கேவலமான அரசியல் செய்யாதீர்கள். நாட்டைப் பற்றி சிந்தித்து வேலை செய்யுமாறு நான் அனுரகுமாரவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனது அரசியல் கருத்துப்படி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்றவராக வரவேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டில் அச்சமோ சந்தேகமோ இன்றி நிம்மதியாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அன்று நாம் மஹிந்தவை வெற்றியடையச் செய்தோம்.

நாங்கள் தேசியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

யுத்தம் முடிவடைந்த போது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்கள் மஹிந்தவை தெரிவு செய்தனர். நாட்டை ஒரு முறைமைக்கு கொண்டு வர நல்லாட்சியை உருவாக்க மக்கள் மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்தனர்.

அப்போது நான் அவருக்கு எதிராக இருந்தவன். அவர் பணியாற்றுகிறாரா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஈஸ்டர் தாக்குதலுடன், தேசிய பாதுகாப்பு வீழ்ந்த போது கோத்தபாய கொண்டுவரப்பட்டார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக இன்று நாங்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம். ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற நபரும் அவரது மூன்று மகன்களும் சேர்ந்து குண்டுகளை வைத்தனர். மூன்று மகன்களும் ஜே.வி.பி கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள். கோட்டாபய வெற்றி பெறுவதற்காக ஜே.வி.பி கத்தோலிக்க மக்களை கொன்றதா என்று மக்கள் விடுதலை முன்னணியிடம் கேட்கிறேன்.

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோகணேசன்

ராஜபக்ஷர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோட்டாபய ராஜபக்ஷ போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்ஷர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என்றார்.

ரணிலின் தவறான கோரிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது – சுரேஷ் பிரமச்சந்திரன்

IMF இன் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் ரணில் விக்கிரமசிங்க அதற்காக தவறான பொருளாதாரக் கொள்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது ஒரு கோரிக்கை முன்வைத்திருக்கிறார். எல்லோரும் இணைந்து இந்த IMF னுடைய கோரிக்கைகள் பூர்த்தி செய்யவேண்டும், எதிர்க்கட்சிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரையும் இணைத்து போவது போன்ற ஒரு பாவனையை ஜனாதிபதி முன் வைத்திருக்கின்றார்.

உண்மையாகவே IMF இனுடைய கோரிக்கைகள் என்று சொன்ன அடிப்படையில் நாட்டு மக்கள் மீது மிகப்பெருமளவிலான வரிச்சுமைகள் சுமத்தப்பட்டிருக்கின்றது. அந்த சுமைகளை தாங்க முடியாத நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றது. 3 நேரம் சாப்பிட்டவர்கள் எல்லாம் ஒரு நேர சாப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே பல்வேறு பட்ட பிரச்சினைகள் தோன்றி இருக்கின்றது.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பொருளாதார பிரச்சினையை சந்தித்து கொண்டிருக்கிற ஒரு சூழ் நிலையில் வெறுமனே IMF னுடைய நிபந்தனையை மாத்திரமே செய்கின்ற கோணத்திலிருந்து அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அதாவது அவர்கள் எடுக்க கூடிய தவறான முடிவுகளுக்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது முதலாவது தவறான விடயம்.

இரண்டாவதாக அவர் ஒரு ஜனாதிபதி தேர்தலை முகம் கொடுக்க கூடிய சூழ்நிலையில் அவர் சுமக்க கூடிய சகல பிரச்சினைகளையும் ஏனையோரும் சேர்ந்து சுமக்க வேண்டும் என அவர் எதிர் பார்க்கின்றார். ஆகவேதான் அவர் ஏனைய கட்சிகளை தம்முடன் இணைந்து இந்த பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்.

ஜனாதிபதி 17 மாதங்களில் 18 வெளிநாட்டு பயணங்கள் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் நெருக்கடி இயற்கையாக உருவானதொன்றல்ல. திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொருளாதார பயங்கரவாதிகள், தங்கள் குண்டர் கும்பல்களுடன் கைகோர்த்து, நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு உலகம் சுற்றி வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களை உணர்வாறின்றி செயற்படும் ஆட்சிப் போக்குக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மக்களை பலிகடாக்கி மக்கள் படும் துன்பங்களையும், வலிகளையும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருகிறார். நாட்டின் ஜனாதிபதியாக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாரம்மல நகரில் நேற்று(21) இடம்பெற்ற ஜன பௌர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்றும் தொங்கு பாலத்தால் சென்று நாட்டை கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி அவர்கள் கூறினாலும், வரிசையில் நின்று இறந்தவர்கள், தரக்குறைவான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது. நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் இராமேஸ்வர வருகையை முன்னிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இராமேஸ்வர வருகையையொட்டி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 40 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையே விடுவிக்க முயற்சிக்கப்படுகின்றது.

இம் மாதம் 26, 29, 30ஆம் திகதிகள் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வழக்குகளை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் நீதிமன்றங்கள் விடுமுறை தினம் என்பதால் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றப் பதிவாளர்கள் மூலம் இந்த விடயத்தை நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வழக்குக் கோவைகள் மற்றும் இதர பணிகளுக்கான நீதிமன்றின் ஏனைய பணியாளர்கள் உட்பட அனைவரையும் அழைப்பதில் தடை ஏற்பட்டால் இந்திய மீனவர்களின் விடுவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமையே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized