காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே தரைவழித் தொடர்புகள் அவசியம் – மிலிந்த மொராகொட

தரைப்பாலங்கள் பாலங்கள் மின்விநியோக கட்டமைப்புகள் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை போன்றவற்றை ஏற்படுத்துவதிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலிருந்து பயன்பெறும் பொருளாதாரவளர்ச்சியிலிருந்து மீளும் இலங்கையின் நம்பிக்கைகள் தங்கியுள்ளன என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

தரைப்பாலங்களை அமைப்பதன் மூலம் இருநாடுகளின் மத்தியிலான பயணங்களை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஐக்கிய இலங்கைக்குள்ளேயே காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் அதன் அயல்நாடான இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்துகள் அதிகமாவதற்கு தரைத்தொடர்புகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் சூழல் குறித்த கரிசனைகளிற்கு தீர்வு காணப்பட்டால் பிரிட்டனிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கால்வாய் போன்ற திட்டங்களை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் நெடுஞ்சாலைகள் பெருந்தெருக்கள் போன்றவற்றை அமைப்பாதற்கு சூழல்பாதிப்பு குறித்த மதிப்பீடுகளை பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் வளர்ச்சியிலிருந்து நன்மை பெறும் எண்ணம் இலங்கைக்கு காணப்பட்டால் அது நிலரீதியான இணைப்புகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு குறித்து இந்திய பிரதமர் வெளியிட்ட கரிசனைகள் ஏன் இரு நாடுகளிற்கும் இடையிலான கூட்டறிக்கையில் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது சமீபத்தைய யோசனைகளை பிரதமர் நரேந்திரமோடியுடன் விவாதித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் தனது கருத்துக்களை வெளியிட்டார் இலங்கை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தினார் இந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ள மிலிந்தமொராகொட இறுதியில் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஐக்கிய இலங்கைக்குள் காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு திருகோணமலை துறைமுகம் போன்றவற்றிற்கு செல்வதற்கும் இலங்கையிலும் இந்தியாவிலும் பொருளாதாரவளர்ச்சியை செழிப்பை ஊக்குவிப்பதற்கும். இருநாடுகளிற்கும் இடையிலான மில்லேனிய வருட உறவுகளை மேலும் ஸ்திரப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலத்தொடர்பினை ஏற்படுத்த இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர் எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

எனினும் இதன் அர்த்தம் சேதுசமுத்திர திட்டமா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கமறுத்துவிட்டார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியப்பிரதமர் கோரிக்கை

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இன்று நேரில் தெரிவித்தார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று இந்தியத் தூதுவர் மேலும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன் பிரதித் தூதுவர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம், சி.சிறிதரன்,  சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டபோது, என்னென்ன விடயங்கள் இந்தியத் தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்தியத் தூதுவர் விளக்கமளித்தார். அத்துடன் இலங்கை – இந்தியக் கூட்டறிக்கையையும் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் கையளித்தார்.

இரண்டு கட்சிகளும் எப்படியான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என தூதர் கேட்டார்.

13வது திருத்தத்தை இறுதி இலக்காக கொள்ளவில்லையென்றும், சமஸ்டி அடிப்படையிலான தீர்வை பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தை தாம் அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்திய தூதர் குறிப்பிட்டார். துறைமுகம், சக்தி, முதலீட்டு வலயம் ஆகியவற்றில் இந்தியா பங்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்த அழுத்தங்களை வழங்குமாறு இந்தியத் தூதுவரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தகக் குழுவொன்று வடக்குக்கு விஜயம்

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை  திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது .

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது  கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பல துறை பிரதிநிதிகள், மரபுசார் போன்ற துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தன.

இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதே வேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

வடமாகாணத்திற்கான தமது 3 நாள் விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் நாளை முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இந்தச் சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்கள், சர்வகட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் – இந்திய நிதி அமைச்சர்

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா ஜப்பான் பிரான்ஸ் ஆகியநாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்வதை வரவேற்பதாக அவர்தெரிவித்துள்ளார்.கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கான நிவாரண நடவடிக்கைகளை உலகவங்கியும் சர்வதேச நாணயநிதியமும் துரிதப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என்பதைசுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான பொருத்தமான முன்மொழிவுகளை தான் கொண்டு வருவதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாகாண சபை முறைமையை பேண வேண்டுமாயின், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திய அவர்,. விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற அடிமட்ட நடவடிக்கைகள் உட்பட தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

மத்திய அரசாங்கம் நாட்டுக்கான கொள்கைகளை வகுக்கும் அதே வேளையில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகள் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவருடன் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் சந்திப்பு

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல்,அரசியலமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அரசாங்கத்தின் ஜனநாயகத்தின் அப்பட்டமான மீறல் போலவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசின் திறமையின்மை,ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தாதது மற்றும் சட்டத்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் Julie J Chung ,நெதர்லாந்தின் தூதுவர் Bonnie Horbach, இந்தியா உயர்ஸ்தானிகர் Gopal Baglay, நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton, ஆஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் Paul Wesley Stephens, பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet, கனேடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh, ஐக்கிய இராச்சியத்தின் பதில் பிரதி உயர்ஸ்தானிகர் Lisa Whanstall, ரோமானிய தூதுவர் Victor Chiujdea, ஜப்பானிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Katsuki Kotaro, இத்தாலிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Dr. Francesco Perale, ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகாரப் பிரிவின் பிரதானி Anne Vaugier Chatterjee ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

வேண்டுமென்றே தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பாக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையின்மையால் அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் சுகாதாரத்துறை எவ்வாறு சீர்குலைந்துள்ளது மற்றும் தரமற்ற மருந்துகளால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தார்.

சட்டத் துறையில் பல சிக்கல்கள் உள்ளன என்றும்,சகல சட்டமூலங்களிலும் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் சட்டத்துறைக் கட்டமைப்பின் தரம் குறைந்துள்ளதாகவும் தூதுவர்களிடம் எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.