கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் – ஜனா எம்.பி

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் பெருமைப்படக்கூடியதாக அமைந்திருந்தது. கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர்கள் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சியடைந்துள்ளோமா என வினவுகிறேன்.சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியல் காலத்தில் வலு வேறாக்கல் கொள்கை முறையாக கடைப்பிடிக்கப்படு வந்தது.72 ஆம் ஆண்டு குடியரசான பின்னர் கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் அரசாங்க கட்சிகளின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள்நுழையத் தொடங்கியது. அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறல் கல்வித் துறையில் நடக்கின்றது.

கல்வியமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் தலைவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பின் அடிப்படையிலோ கல்வித் தகைமையின் அடிப்படையிலோ இன விகிதாசார அடிப்படையிலும் அல்ல. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். வட கிழக்கின் வாழ் கல்வித் திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. வட கிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தக் கூடியதாக மட்டுமே உள்ளது. பதவியிலுள்ளவர் அடுத்த பதவி உயர்வை எடுப்பதற்காக ஆளும் கட்சி அரசியல்வாதியின் காலில் விழுந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும். இப்படியான ஒரு கல்வியினால் எப்படி உயர்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கபடும் என்பதை வரவேற்கிறேன். தேசிய கல்வி நிறுவனம் 30 வருடங்களாக இயங்குகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தை வெளிநாடுகளில் காணப்படுவது போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பல்கலைக்கழகமாக இணைத்துக் கொள்ள வேண்டும். தேசிய கல்வி நிறுவனத்தில் பல கலாநிதிப் பட்டங்களை முடித்தவர்களும், பாரிய கட்டிடங்களையும் இதர வசதிகளையும் கொண்டிருப்பதால் இலகுவாக பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு பல்கலைக்கழமாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய கல்வி நிறுவகத்துக்கு 4000 மாணவர்களுக்குப் பதிலாக 8000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆசிரிய மாணவருக்கு 5000 ரூபா தான் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்பில் குறித்த தொகை போதாது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். ஜெய்க்கா திட்டத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி பயிலுநர்களுக்கான விண்ணப்பத்தை கோரி இருந்தார்கள். கல்வி அமைச்சுக்கு 09 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாகாண கல்வித்திணைக்களுக்கு 22 ஆம் திகதி நவம்பர் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்ப முடிவுத் திகதி 23 ஆம் திகதி ஒரு மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 23 ஆம் திகதி காலை 10 மணிக்கே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது . 03 மணித்தியால காலப்பகுதியினுள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? இது முழு நாட்டிலும் நடைபெற்றுளது. இதனூடாக அவர்கள் ஜெய்க்காவின் குறித்த கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது என தெரிவித்தார்.

வன்னி மண்ணில் பொது மைதானம் அமைக்கப்படுவதில் ஆட்சியாளர்கள் பாராபட்சம் – ரெலோ வினோ எம்.பி

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா வவுனியா மாவட்டங்களில் ஆட்சியாளர்கள் பொது விளையாட்டு மைதானம் ஒன்று அமையப்பெறுவதை தடுத்து வருகின்றார்கள். எமது மண்ணின் விளையாட்டு வீரர்களுக்கு பாரபட்சம் காட்டுகின்றார்கள். சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள். விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மன்னார் மாவட்டத்திற்கு என பொது மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தில் தலையீட்டுடன் ஆரம்பத்தில் நிர்மாணிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது,தற்போது உரிய காரணிகள் இல்லாமல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உதைப்பந்தாட்டத்திற்கு பிரசித்துப் பெற்றுள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு உரிய மைதானம் இல்லாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே குறித்த மைதானம் விரைவாக முழுமைப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அபிவிருத்தி தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. மாவட்ட அபிவிருத்திகளின் போது பாரப்பட்சம் காட்டப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் பொது மைதானம் இல்லை.அப்பிரதேச இளைஞர்களுக்கு என்று வசதிகளுடனான மைதானம் ஒன்று இல்லை. ஆகவே மாவட்ட அடிப்படையில் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்புக்கள் இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மைதானத்தை அமைப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,வெறும் இழுத்தடிப்புக்கள் மாத்திரம் இடம்பெறுகிறது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறது.வடமாகாணத்திற்கு என சகல வசதிகளுடன் மைதானம் என்பதொன்று இல்லை.

சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிபகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள்.விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து செல்கிறது,போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் சீரழிந்து செல்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

ஆகவே போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் பொலிஸார் மந்தகரமாக செயற்படுகிறார்கள்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

தமிழரசுக் கட்சியினர் மன்னிப்புக் கொடுத்ததாக சொல்லுவது நகைப்புக்குரியது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

அண்மையிலே இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் தமிழ் மக்களின் நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

ரெலோ, புளோட் மீது தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களின் ”இவர்களுக்கு நாங்கள் தான் மன்னிப்பு வழங்கினோம்” என்ற விமர்சனங்கள் தொடர்பில்

எங்களுக்கு அரசியலில் 40 வருட அனுபவம் உள்ளது. எங்களை விட அனுபவம் வாய்ந்த செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்ற தலைவர்கள் இருக்கின்றார்கள். இளைய உறுப்பினர்கள் அவர்களது அறிவுக்கேற்றவாறு அப்படி வளர்க்கப்பட்டுள்ளார்கள். யார் யாருக்கு மன்னிப்பு கொடுப்பது. தமிழரசுக் கட்சி எங்களுக்கு மன்னிப்பு கொடுத்தார்களா? தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? படித்தவர் என்று கூறிக்கொள்கின்ற முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் போன்ற இளையவர்களுக்கு வரலாற்றைப் பற்றி என்ன தெரியும்? புலிகளும் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் தங்களுக்குள்ளே மோதிக் கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் போது புலிகளின் தலைவரும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களும் ஒன்றாக கூடி தமிழ் மக்களின் நலனுக்காக ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார்கள். மன்னிப்பு கொடுத்ததாகப் பேசுகின்ற தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இழந்த தலைவர்களை விட தமிழரசுக் கட்சி இழந்த தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன், தங்கதுரை, சம்பந்தமூர்த்தி, சிவ சிதம்பரம், நீலன் திருச்செல்வம் இப்படி பல தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் துரோகிப் பட்டத்துடன் புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. அவர்களிடமும் ஆயுதம் இருந்திருந்தால் சுட வந்தவர்களைத் திருப்பிச் சுட்டிருப்பார்கள். எங்களிடம் ஆயுதம் இருந்தமையால் எங்களைச் சுட வந்த போது எங்களின் பாதுகாப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட்டோம். இது வரலாறு. உண்மையிலேயே தமிழரசுக் கட்சிக்குத் தான் மன்னிப்புக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் நாங்கள் ஒற்றுமையாகப் பேசி அரசியல் செய்கின்றோம். போராட்டக் காற்றுக் கூடப்படாத தமிழரசுக் கட்சியினர் மன்னிப்புக் கொடுப்பதாக சொல்லுவது நகைப்புக்குரியது.

உண்மையிலேயே இலங்கை இராணுவத்துடன் முதலில் இணைந்து பணியாற்றியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே. பிரேமதாசவின் காலத்தில் 88 -91 வரை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள் புலிகள். அப்போதே அமிர்தலிங்கம் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். தம்பிமுத்து அவரது மனைவி கொழும்பிலே கனடிய உயர்ஸ்தானிகராலயம் முன் வைத்து புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. இந்த வரலாறு தெரிந்த மூத்த உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியினுள் இருந்தாலும் ஜனநாயக வழிக்கு வந்த ஆயுத போராட்ட இயக்கங்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் பேசாமல் இருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில்

உண்மையிலே ஓ.எம்.பி தலைவரின் கருத்து முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். சரணடையும் போது அவர்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினர் பஸ் வண்டியிலே ஏற்றிச் செல்வதை நேரில் பார்த்தவர்கள் இருக்கின்றார்கள். இன்று ஒருவரும் சரணடையவில்லை என கூறுவது அப்பட்டமான பொய் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிங்களத் தலைவர்கள் மத்தியில் மாற்றம் தென்படுகின்ற இந்தக் காலகட்டத்திலே கோத்தபாயவினால் நியமிக்கப்பட்ட இப்படியான அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும். உண்மையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.

காணி சுவீகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசிக் கொண்டே உள்ளார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் வாயே திறப்பதில்லை. காணி சுவீகரிப்பு வடக்கைப் போல் கிழக்கில் பெருமளவில் நடைபெறவில்லை. கிழக்கு மாகாணத்துக்கென விசேடமாக கோத்தபாயவினால் முழுதாக பெளத்தர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி பல இடங்களைத் தொல் பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக திருக்கோணேச்சரம் கோவிலை அண்டிய பகுதிகள், அம்பாறையிலே இறக்காமம் போன்ற பல இடங்களை அடையாளப்படுத்தி அதைச் சுற்றி வேலியமைப்பது, கல் நடுவது போன்ற விடயங்கள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாண ஆளுநரின் ஒத்தாசையுடன் எல்லைப்புறங்களிலே மேட்டு நிலப் பயிர்ச்செய்கை என்ற பெயரில் காணிகள் களீபரம் செய்யப்படுகிறது. நாங்கள் தொடர்ச்சியாக இது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம். வியாழேந்திரன், பிள்ளையான் தமது பிரதேசங்களைக் காப்பாற்றுவார்கள் என்றே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகளுக்கு வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசிய அரசியல்

தனிமனித ஆதிக்கத்தையே நாம் எதிர்க்கின்றோம். சம்பந்தன் ஐயாவுக்கு உடல் நலமின்மையால் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முடியாமலிருக்கின்றது. அதனால் சுமந்திரன் சம்பந்தனின் பெயரை நன்றாகவே பயன்படுத்துகின்றார். இது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவுகின்றது. ஏனைய கட்சிகள் கூட அவரது நடவடிக்கைகளைக் கண்டித்துக் கொண்டுள்ளார்கள். சில நேரங்களில் சுமந்திரன் நடந்து கொள்கின்ற முறை அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும் அளவில் இருக்கின்றது. அங்கத்துவக் கட்சிகளுடனோ, தன்னுடைய கட்சியினருடனோ கலந்துரையாடி முடிவுகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்கின்றார். அவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். அண்மையிலே கூட பாராளுமன்றத்தில் நாங்கள் இருக்கும் போது எங்களுடன் கலந்துரையாடாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கையொப்பமிட்டு வந்திருக்கின்றார். அவர்கள் தங்களுடைய நலனுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைந்து நடத்துமாறு கோருகின்றார்கள். எங்களுடன் கலந்து பேசிருந்தால் மாகாணசபைத் தேர்தலையும் விரைந்து நடாத்துமாறு வலியுறுத்தும் சந்தர்பமாக அது அமைந்திருக்கும். இப்படியான விமர்சனங்களே அவர் மீது வைக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

ஒரு கட்டிட பிரச்சினையை தீர்க்க முடியாத ஜனாதிபதி இனப்பிரச்சினையை எப்படி தீர்க்க போகிறார்- ரெலோ வினோ எம்.பி

ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்திற்கான விஜயம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வு அவரின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு திறந்து வைக்கப்படவில்லை.

சில பிரச்சினைகளினால் ஒரு கட்டிடத்தையே திறந்து வைக்க முடியாத ஜனாதிபதியினால் இந்த நாட்டின் இனப்பிரச்சினையை  எப்படி தீர்த்து வைக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை ஒரு நல்ல நோக்கத்திற்காக வவுனியா வந்திருந்தார். அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அவர் முதல் முதல் தனது விஜயத்தை வன்னி மாவட்டத்திற்கு மேற்கொண்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஜனாதிபதி அங்கு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோது யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா செயலக வாசலில் குழுமியிருந்தனர்.

இந்த நாட்டின் தலைவரை நாம் சந்திக்க வேண்டும், அவரிடம் எமது பிரச்சினைகளை கூற வேண்டும் என்பதற்காகவே  அங்கு குழுமியிருந்தனர்.

ஆனால் அங்கிருந்த பொலிஸார் நீங்கள் ஊடகங்களுக்காகவும், சர்வதேசத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றீர்கள் என் கூறி ஜனாதிபதியை சந்திக்க விடாது தடுத்தனர்.

அந்த உறவுகளின் தூய்மையான போராட்டத்தை கேவலப்படுத்தினர். இதன்மூலம் அந்த தாய்மார்களுக்கு இந்த அரசோ ஜனாதிபதியோ  ஒரு போதும் தீர்வை வழங்கப்பபோவதில்லையென்பதனை உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியும் அந்த போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கான தீர்வை அதிலே வழங்காமல் நழுவிச் சென்றுள்ளார்.

இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களும்  ஊடகங்களுக்காவே பேச முடியும். மக்களி திருப்திப்படுத்த, பொய் வாக்குறுதியாகலிக்கொடுக்கவே இங்கு பேச முடியும். ஏனெனில்  இங்கு நாம் முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சபாநாயகரினாலோ அல்லது  சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினராலோ பதிலோ, தீர்வோ வழங்க முடியாது.  சபைக்கு அமைச்சர்களும் வருவதில்லை. எனவே தீர்வுகள் கிடைக்காது என்ற நம்பிக்கை நூறு வீதம் உள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்த போது  எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் மன்னார் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆகவே இதில் ஒரு உள்நோக்கம் உள்ளது. இந்த திருட்டுத்தனமான  பயணம் எதற்கு என்ற சந்தேகம் எமக்கும் மக்களுக்கும் உள்ளது. இதற்கான விடையை எங்கிருந்து எதிர்பார்ப்பது?

அதுபோன்றே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் இதுவரையில் அது திறக்கப்படவில்லை ஜனாதிபதியின் விஜயத்தின்போது அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.

ஆனால் அது தவிர்க்கப்பட்டு மத்திய நிலையம் திறக்கப்படவில்லை. ஏன் திறக்கப்படவில்லை? வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் இருக்கலாம். அவை என்ன? திறக்கப்படாததற்கான காரணம் என்ன? ஒரு கட்டிடத்தை தீர்ப்பதற்கான பிரச்சினையைக்கூட ஜனாதிபதியினால் தீர்க்க முடியவில்லை. அப்படிப்பட்டவரால் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினையென ஒட்டு மொத்த பிரச்சினையை எப்படித்  தீர்க்க முடியும்?

மன்னாருக்கு சென்ற ஜனாதிபதி ஒரு சிறு கிராம மீனவர்களை மட்டும் சந்தித்து விட்டு மீன்பிடி சங்கங்கள், சமாசம் போன்றவற்றை சந்திப்பதனை தவிர்த்தது ஏன்? வடக்கில் ஒரு விமான நிலையம்  இருந்தும் அதனை இயக்க முடியவில்லை. அதில் உள்ள தடைகளை இந்தியாவுடன் பேசி தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கையில் வவுனியாவில் ஒரு விமான நிலையம் அமைக்கபபோகின்றார்களாம், ஒன்றையே இயக்க முடியாதவர்கள் எப்படி இன்னொன்றை இயக்குவார்கள்?எனவே ஜனாதிபதியின் வன்னிக்கான விஜயத்தில் இது போன்ற பல சந்தேகங்கள் எமக்குண்டு என்றார்.

அதிகாரங்களை பிரதி முதல்வருடன் பகிர மறுக்கும் மணிவண்ணன் – பிரதி முதல்வர் ஈசன் குற்றச்சாட்டு

யாழ் மாநகரசபைக்கென இதுவரையில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பிரதித் தலைவரும் யாழ் மாவட்ட துணை முதல்வருமான துரைராசா ஈசன் தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையில் பிரதி முதல்வருக்கு அதிகாரங்களை தற்போதை முதல்வர் மணிவண்ணன் தரவில்லை. வடகிழக்கிலுள்ள ஏனைய சபைகளில் முதல்வர்கள் அதிகாரங்களை பகிர்ந்து பிரதி முதல்வருக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளார்கள். ஆனால் யாழ் மாநகரசபையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

யாழ் மாநகரசபையில் உள்ள நான்கு குழுக்களில் ஒரு குழுவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. 22 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்தமானது. 50% வீதத்திற்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை அங்கத்துவர்களாகக் கூட இணைத்து கொள்ளவில்லை. முதல்வர் திட்டமிட்ட வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி) இணைந்து கூட்டமைப்பை புறக்கணித்து வருகிறார்.

ஒரு வட்டாரத்துக்கு 5 மில்லியன் என 135 மில்லியன் ரூபா யாழ் மாநகரசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சதத்தை கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கூட எம்முடன் இது வரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆனால் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) மூன்று உறுப்பினர்களை சந்தித்து முதல்வர் மணிவண்ணன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்தார்.

சம்பந்தன் உள்ளிட்ட தோல்வியடைந்த தமிழ் தேசிய தலைவர்கள் பதவிவிலக வேண்டும் – ரெலோ வினோ எம்.பி

இரா.சம்மந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப் போன தலைவர்களே. அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (13) இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வு தொடர்பில் ஆரம்பத்தில் பல சந்தேங்கள் இருந்தது. காலையில் எழுந்தவுடன் இரண்டு மூன்று பத்திரிகைள் பார்ப்பது வழமை. யாழ்ப்பாண பிராந்திய பத்திரிகை ஒன்று, இரண்டு பேரை முதன்மைப்படுத்தி அவர்களின் தயார்ப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது என்று ஆசிரியர் தலையங்கம் அல்லது வேறு பந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதையும் பார்த்தேன். எனக்கு இது தேவையா? இதில் அரசியல் விளையாடப் போகிறதா? இதில் உள்ள சாதக பாதகம் பற்றி இரண்டு பக்கமும் யோசித்து விட்டு தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

ஒரு நேரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் சம்மந்தன் ஐயாவின் தலைமையில் வவுனியாவில் கூடியிருந்த வேளை, அப்பொழுது யாழ் ஊடகவியலாளர் முன்னாள் சிரேஸ்ட போராளிகளை அழைத்து வந்து இந்த தேர்தலில் எங்களையும் இணைத்து போட்டியிட வேண்டும். போராளிகளுக்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் எகன்று கேட்ட போது, ஒரேயடியாக அதற்குரிய தகுந்த காரணம் இப்போது இல்லை. போராளிகளை இப்போது இணைக்க முடியாது என சம்மந்தன் ஐயா சொல்லிவிட்டார். பிறகு அதே ஊடகம் அல்லது அதே ஊடகவியலாளர் எழுத்துக்களெல்லாம் இந்த போராளிகளை யாரோ தவறாக வழிநடத்துகிறார்களாம். அன்று தான் செய்கின்ற போது சரியாக பட்டது. இன்று பிழையாகப்படுகிறது. அந்த ஊடகவியலாளரை யரோ பிழையாக வழிநடத்துகிறார்களா?. போராளிகள் மத்தியில் ஏன் நலன்பேணும் விடயத்தில் திடீர் அக்கறை என போராளிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அந்த பத்தி ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிற நிலமையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்கட்சி முரண்பாடுகள் அது மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை கொண்டு வந்திருக்கின்றது. உங்களையும் பாதித்து செல்வதால் இந்த விடயத்தை சொல்கின்றேன். விடுதலைப்புலிகளால், தலைவர் பிரபாகரனால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதனால் அதனுடைய வீழ்சியோ அல்லது மக்களிடம் இருந்து அந்நியய்படுகின்ற ஒரு நிகழ்சித் திட்டமோ எல்லோரையும் பாதிக்கும். எங்களுக்குள் வேறுபாடு இருக்கின்ற போது அதில் உங்களுக்கும் பங்கு இருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற போது தலைவர் விடுகின்ற தவறுகளை அல்லது ஒரு பங்காளிக் கட்சி விடுகின்ற தவறுகளை எப்படி அதில் இருக்கின்றவர்கள் சுட்டிக்காட்ட முடியுதோ அதேயளவுக்கு போராளிகளாகிய உஙகள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. அரசியல் ரீதியாக உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களின் நலன்களிலும் எதிர்காலத்தில் செயற்படக்கூடிய ஒரு அமைப்பு தவறு செய்யும் பட்சத்தில் அதை தடுக்க அல்லது எதிர்த்து குரல் கொடுக்க கூடிய தகமை உங்களுக்கும் இருக்கிறது.

அண்மையில் எங்களது கூட்டமைப்பினுடைய தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை. ஒற்றுமையாகத் தான் இருக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினத்களுக்குள் பிளவு இல்லை என்ற ஒரு கருத்தை கூறியிருந்தார். அது சுத்தப் பொய். பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஒரே கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருகின்றன. அண்மையில் எங்களுடைய தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவராக இருகின்றவர் அண்ணன் தவராசா அவர்களே ஏற்றுக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறிய கருத்து உண்மையானது என அவர் ஏற்றுக் கொண்டார். அப்படியெனில் முக்கிய தலைவர்களே உணர்திருக்கிறார்கள். தவறுகள் நடக்கின்றது என்பதை அவர்களே உணர்ந்துள்ளார்கள். சம்மந்தன் ஐயா அதை மறைக்கப் பார்கின்றார். அவரால் தற்போது ஒழுங்காக செயற்பட முடியாது. இதனை பொதுவெளியில் சொல்லவும் நான் தயாராக இருகின்றேன். அவரால் செயற்பட முடியாத நிலமை இக்ருகிறது. அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு தலைவர் இல்லாத நிலமை இருந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதிக்கப்பட போகிறது. ஒட்டுமொத்த தமிழர் என்கின்ற போது அதற்குள் விடுதலைப் புலிகள், போராளிகள் அடங்காது எப்படி இருக்க முடியும்.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் தலைவருடன் சந்திப்பை ஏற்படுத்துகின்ற போது, நாங்கள் ஒன்றாக பேசிய போது, பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனைப் பார்த்து தலைவர் கூறினார். செல்வம் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவம். கடந்த காலங்களில் நாங்கள் எல்லோரும் பிழை விட்டிருந்தால் எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய மக்களுக்காக இந்த கூட்டை உருவாக்கி அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஒன்றாக இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருந்தார். அதற்கு பின் நாங்கள் எவ்வளவோ விட்டுக் கொடுப்பு செய்து பிரிநதிருந்த போராட்ட இயக்கங்கள், மிதிவாதக் கட்சிகள் இணைந்து இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக கூட்டமைப்பு உள்ளது. முதலில் கூட்டமைப்பில் உள்ள பழைய தலைவர்கள் எல்லாம் தங்களது பதவிகளை ராஜனாமா செய்து விட்டு போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். போராளிகள் என்று நான் சொல்வது இளைஞர்களை. ஒவ்வொரு கட்சியிலும், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய பழைய தலைவர்கள் எல்லோரும் தோற்றுப் போன தலைவர்களாக தான் இருக்கிறார்கள். தந்தை செல்வா, ஜி.ஜிஜ.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் இரா.சம்மந்தன் ஆகியோராக கூட இருக்கலாம். தோற்றுப்போன தலைவர்களாக இருக்கிறார்கள். ஏனைய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட கூட தாங்கள் தொடர்ந்தும் கட்சியினுடைய தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்க கூடாது. வேணும் என்றால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துவிட்டு போகலாம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை ஊடாக அவர்கள் வரலாம். ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்களின் உடைய தலைவர்கள் எல்லோருமே தோற்றுப்போன தலைவர்கள் தான். மக்களுக்கான விடுதலையை வென்று கொடுக்க முடியாத தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தலைமைப் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லாத தலைவர்களாக தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது உங்களுடைய விடயம். நீங்கள் போரளிகள். எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, நலன்புரி சங்கம் என்ற பெயரில் போராளிகளின் எதிர்காலம், அவர்களுடைய தேவைகள் தொடர்பாக செயற்படவுள்ளீர்கள். அவர்களுடைய தேவைகள் உண்மையாக உணரப்பட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இனத்தின் ஒரு விடுதலைக்காக ஆயுதம் தூக்கிப் போராடிய ஒரே குற்றத்திற்காக இந்த போராளிகள் வெறுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு போரளிகளும் மன ரீதியாக உடைந்து போய் இருகிறார்கள். அவர்களது மனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சிலருடைய நடவடிக்கைகளே இதற்கு காரணம். சமூகத்தில் சில இடங்களில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். உரிய மரியாதை வழங்கப்படுகிறது. சில இடங்களில் சாதாரண ஒரு பேராளியாக கூட மதிக்கப்படாத நிலமை இருந்து கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளான போராளிகள் கூட நாங்கள் இந்த இனத்திற்காகவா போராடினோம் என்றொரு ஏக்கம், ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கிறது. அதனை நாம் உணர்கின்றோம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

தலைவர்கள் ஒரு போதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. எனது அனுபவத்தில் அரசியல் தீர்வுக்காய் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஏதோ அரசியல் நடந்து கொண்டு தான் இருக்குமே தவிர, உரிமைக்காக தமிழ தலைவர்கள் என தமிழ் தேசியத்தின் பேரில் சொல்லிக் கொண்டு, அரசியல் நடத்தும் எந்த தலைவரும் உண்மையான அக்கறையாக செயற்படாது தான் உள்ளார்கள். பாராளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களிள் உரிமைக்காக கடைசிவரை இணையப்போவதில்லை.

விக்கினேஸ்வரன் ஐயா அண்மையில் பிரிந்து செயற்படுவது தொடர்பில் ஙாங்கள் உணர்ந்திருக்கின்றோம் எனக் கூறினார். முழுக்க முழுக்க அவர் தான் காரணம். அவர் உடைப்பதற்காக, சிதைப்பதற்காக, அவருடைய நிகழ்சி நிரலை கொண்டு சென்று விட்டு இன்று கூட்டமைப்பில் இருந்து பிரிந்திருப்பதை உணர்ந்திருக்கின்றேன் என்கிறார். தமிழ மக்களின் கூட்டுக்குள் அவர் மிகப்பெரிய ஒரு குற்றவாளி. அதேபோல் தான் ஏனையவர்களும். கூட்டமைப்பு என்பது பலமான ஒரு சக்தி. அதில் தவறுகள் இருகின்றன. அண்மையில் கூட்டமைப்பை பற்றி எனது முகநூலில் விமர்சனம் செய்தேன். கூட்டமைப்பு ஒரு விபச்சார இல்லமாக செயற்படுவதாக நான் குறை கூறினேன்.

அங்கத்துவ கட்சி ஒன்றின் செயலாளர் என்னுடைய கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் விளக்கம் கேட்டு கடித் அனுப்பியுள்ளார். முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கட்சியிக் சின்னத்தை விபச்சார வீடாக விமர்சிப்பதாக தெரிவித்து கடிதம் வந்தது. நான் விமர்சிப்பேன். தொடர்ந்தும் விமர்சிப்பேன். உள்ளுக்குள் இருந்தாலும், சரி வெளியில் இருந்தாலும் சரி தொடர்ந்தும் விமர்சிப்பேன். ஏனென்றால் இந்த கட்சியை போராளிகள், ஏனையவர்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டோடு வளர்தெடுத்தடுத்தவர்கள். அதற்காக பாடுபட்டவர்கள் நாங்கள். இவர்கள் தங்களது சொந்தக் கட்சியை வளர்தால் கூட அது கூட்டமைப்பின் பிரச்சனை தான். தமிழரசுக் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். அதனை நாங்கள் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு விமர்சிப்போம். தமிழரசுக் கட்சிக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். ரொலோவுக்குள் பிளவு என்றாலும், புளொட்டுக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். அதனையே பொது வெளியில் கூறுகின்றோம்.

அதற்கு பிறகு தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே அந்தக் கட்சியை விமர்சிக்கிறார்கள். அதுவும் தவறு தானே. நாங்கள் விமர்சித்தால் பிழை. ஒரே கட்சிக்குள் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு இருகிறார்கள். அந்தச் செயலாளர் இப்ப பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். விளக்கம் கேட்டாரா? தவராசா தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா, சிறிதரன் தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா. அல்லது சுமந்திரன் தவறு விடுகின்றார் என விளக்கம் கேட்டாரா. தவறுகள் கடந்த காலங்களில் எல்லாம் நடந்தது தான். நாங்கள் இனியும் திருந்தவில்லை பலனில்லை. தமிழ் தலைவர்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி சொல்கிறார். இவர்கள் விழுந்தடிக்துக் கொண்டு பேசுவோம் என்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒன்றுபட்டு போய் அங்கு பேசப்போவதில்லை.

ஒரே கட்சியாக இருந்த கஜேந்திரகுமார் கொன்னம்பலம், மணிவண்ணன் இன்று இரண்டு கட்சியாகிவிட்டார்கள். இதேபோல் நாளை எத்தனை கட்சிகள் எப்படி எப்படி உடையப் போகுதோ தெரியாது. ரணிலுடன் பேச முற்பட்டால் சிலர் பேச முடியாது, சிலர் நிபந்தனை போடனும், அப்படி, இப்படி என சொல்வார்கள். நாங்கள் ஒன்றுபட மாட்டோம் என அவர்களுக்கு தெரியும். அதனால் பிரச்சனைக்கு தீர்வு இல்லை.

முன்னாள் போராளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்க அனுமதி தர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அவர்கள் வேறு காரணங்களை கூறி நிராகரித்து விட்டார்கள். போராளிகள் மத்தியில் ஒற்றுமை வராது என சொல்வதற்கு இடம் கொடுக்க முடியாது. ஒற்றுமையாக செயற்படுங்கள். அன்று போராளிகளுக்கு உதவி செய்ய போவதாக சொன்ன யாழ் ஊடகவியலாளர் இன்று இங்கு இருப்பவர்கள் உதவி செய்ய வருவதை குற்றம் சாட்டுகின்றார். அன்று அவர் உண்மையில் போராளுக்கு உதவி செய்ய சென்றாரா அல்லது தன்னுடைய நலன்களுக்காக சென்றாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம் எனத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் -நிமல் சிரிபால டீ சில்வாவுக்கு ரெலோ பதில்

பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் ரணில் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும் என்று அண்மையில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு. சுரேந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் என அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படாமல் இருப்பதற்கு பிரதான காரணம் சிங்கள கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே. இதை தமிழ் மக்களுக்கு பாடம் எடுக்க முற்படும் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் பாராளுமன்றங்களில் முன்வைக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்தவர்கள் யார் என்ற வரலாற்றை இந்த நாடே அறியும். பல தசாப்தங்களாக ஆளும் கட்சிகள் ஒரு தீர்வை கொண்டு வருகின்ற பொழுது சிங்கள எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.

எதிர்க் கட்சிகள் தமிழர்களுக்கான தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற பொழுது ஆளும் கட்சிக்குள் இரண்டாகப் பிரிந்து நின்று அதை எதிர்ப்பார்கள். தமிழ் மக்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள் இலங்கை அரசியலில் பிரதானியாக, தலைவராக, அமைச்சராக பதவியில் இருந்த பொழுது நடைபெற்ற விடயங்களே அதற்கு சான்றாக அமையும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசு காலத்தில் தமிழ் மக்களால் ஏகோபித்துத் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஜனாதிபதி இறுதி வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே தவிர்த்து வந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய தலைவராக அமைச்சராகப் பதவியில் இருந்தவரே நிமல் சிரிபால டி சில்வா.

அதேபோன்று நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடங்கியதாக ஒரு புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படுவதாக இருந்தது. அந்த நேரத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையை சிதைத்து அரசியல் யாப்பு நிறைவேறாமல் குழப்பம் விளைவித்தது சிங்கள கட்சிகளே, தமிழர்கள் அல்ல என்பதையும் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். அப்போதும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்தரப்பில் மூத்த அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய அதிகாரங்களை முற்று முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு கூட சிங்களத் கட்சிகள் ஒற்றுமையாக முன் வருவார்களா? அதில் கூட தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிரிந்து நின்று குரல் கொடுப்பவர்கள் சிங்கள கட்சிகளே.

இன்னும் வரலாற்றில் சிறது தூரம் பின் சென்றால் 1987ல் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அப்பொழுது ஆளும்கட்சியில் இருக்கும் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியோடு சேர்ந்து நின்று எதிர்த்தார்கள். அது தமிழர்களுக்கான தீர்வு அல்ல. ஆனால் குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் தான் சிங்களக் கட்சிகள் குறியாக இருந்தன.

ஆக குறைந்தது உங்களோடு இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளையாவது நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா என்றால் அதுவும் இல்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமக்ஷ்டி முறையில் அமைய வேண்டும் என்பதில் தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான அழைப்பு எந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டாலும் சமக்ஷ்டி முறையிலான தீர்வையே தமிழ் மக்களின் அனைத்து தரப்பினரும் அரசியல் தீர்வாக முன்வைத்திருப்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிறைவேற்றுவதற்கு சிங்கள கட்சிகளை ஓர் அணியில் வருவதே பிரதானம். ஆகவே அவர்களை ஒரணியில் வருமாறு கோரிக்கை முன்வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது:செல்வம் எம்.பி

கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும். தனக்கு பிரச்சினை வரக்கூடாது என்ற ரீதியிலே அவர்கள் உயிரோடு இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்று போராடி கொண்டிருக்கின்ற தாய்மார்களுக்கு இது பதிலாக அமையாது.

இந்த விடயத்திலே நீதியமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூற வேண்டும். அவர்கள் விடயத்தில், உயிருடன் இராணுவத்திடம் ஒப்படைத்த பின்பு நடந்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் விஜயதாச ராஜபக்ச கூறுகின்ற போது தான் எங்களுடைய தரப்பிலே அதனை எப்படி நோக்கலாம் என்பதனை கூற முடியும். ஆகவே உண்மைத்தன்மையை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியே கொண்டு வர வேண்டும். அவர்கள் உயிரோடு இல்லை என்ற சாட்டுப்போக்கை கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாருடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம். ஆகவே அவர்கள் உயிரோடு இல்லை என்றால் என்ன நடந்தது? படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? அல்லது அனைவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை இந்த அரசாங்கம் வெளிப்படையாக கூற வேண்டும்.

மறைத்து கதை சொல்வது என்பது நிறுத்தபட வேண்டும். வருடக்கணக்கிலே தாய்மார்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கான நியாயம் கிடைக்காதவரை இதற்கான போராட்டம் தொடரும். உயிருடன் ஒப்படைத்தவர்களை உயிரோடு இல்லை என கூறுகின்றீர்களெனில், அவர்கள் யாரால் கொல்லப்பட்டுள்ளார்கள், புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூற வேண்டும். அது தான் நேர்மையான அரசியல் வாதி. அரசாங்கம் மக்கள் சார்ந்த விடயத்தில் அக்கறையோடு இருக்கிறது என்பதனை இந்த விடயங்களில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கலாம்.

பாதுகாப்பு செயலாளாராக இருந்த கோட்டாபய ராஜபக்ச அவர்களுடைய காலத்திலே கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்டவர்கள் பின்னர் அவர் ஜனாதிபதியாக வந்தும் அதற்கான பதில் கூறவில்லை. தற்போது அமைச்சர் இந்த கருத்தை கூறுகின்ற சூழலிலே கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் அல்லது இராணுவம் அவர்களை படுகொலை செய்தது என்பதனை இந்த அரசாங்கம் ஒத்துக்கொள்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை தர வேண்டும் என்பது தான் நேர்மையான விடயமாக இருக்கும். ஆகவே நீதியமைச்சர் வெளிப்படை தன்மையோடு பேச வேண்டும். சாட்டுப்போக்கான பதில்களை கூறி தாய்மார்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.”என தெரிவித்துள்ளார்.