ஜனவரியில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம்

ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஊழலுக்கு எதிரான சட்டவரைபை நாம் தற்போது தயார் செய்துள்ளோம்.

ஜனவரி மாதமளவில் நாம் இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக, புதிதாக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவொன்றை இதன் ஊடாக ஸ்தாபிக்கவுள்ளோம்.

அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற் சென்று செயற்படும் அதிகாரத்தை குறித்த சட்டத்தின் ஊடாக இந்த ஆணைக்குழுவுக்கு நாம் வழங்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக, 1975 கொண்டுவரப்பட்ட மிகவும் பழைய சட்டத்திருத்தமே தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.

இதனை இல்லாது செய்து, சொத்து விபரங்களை ஒன்-லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு இணங்க சரத்தை உள்ளடக்கவுள்ளோம்.

மேலும் ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாணசபை முதல்வர்கள் மற்றும் உறுப்பினர்களின் சொத்துவிபரங்கள் பழைய சட்டத்திற்கு இணங்க வெளியிடப்படுவதில்லை.

ஆனால், புதிய சட்டத்தில் இவர்களின் சொத்துவிபரங்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரையான அனைவருக்கும் இது பொதுவான சட்டமாக அமையும்.

இது இலங்கைக்கு முக்கியமானதொரு புரட்சிமிகு சட்டத்திருத்தமாகும்.

அத்தோடு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் இல்லாது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கான விசேட சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்கான வரைபை ஜனவரி 31 இற்கு முதல் பெற்றுக் கொள்ள நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம். பி கோரிக்கை

ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படுவதை தடுக்க ஜனாதிபதி முன்வர வேண்டுமென குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக என்பதால், நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது என அவர் கூறினார்.

தமிழ்ப் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாதவர்களால் நாடு ஒருபோதும் சுபீட்சமடையாது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

அரசியலமைப்புச் சபையிலேயே தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாத தரப்பினரால், நாடு ஒருபோதும் சுபீட்சத்தை காணாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்துக்கு ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் வேந்தராக பரிந்துரை

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஜெனரல் எச்.எஸ்.எச்.கோட்டேகொடவின் பெயர் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்களுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போது கையிருப்பில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் சந்தை, மருத்துவ கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் கூட 75-மிகி அஸ்பிரின் மாத்திரைக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கண்டறிய புதிய உபகரணம் இறக்குமதி

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

யூரியாக் கப்பல் நாட்டை வந்தடைந்தது

யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் 28 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் நிலை தற்போது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதை வாழ்க்கை செலவுக்கு அமைய தேர்தல் ஒன்றை நடத்த குறைந்தது 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவாகும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, இருப்பினும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போட சூழ்ச்சிகள் செய்யும் அரசாங்கம் – உதய கம்மன்பில

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்த்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இருமுனை போட்டி நிலவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்களுடன் விசேட கலந்துரையாடல்

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேட கலந்துரையாடலொன்றுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அடிப்படை செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் அதிகாரிகள் என்ற வகையில் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.