தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – அநுரகுமார

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓடி வந்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு விரைவாக வந்து பதிலளித்து விட்டு,மீண்டும் விரைவாக சபையை விட்டுச் செல்கிறார்.2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின்  வேட்பு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இம்மாதத்துக்குள் வெளியிட வேண்டும். தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் இந்த அதிகாரம் உரித்துடையாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரியுள்ளதை அறிய முடிகிறது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகாரம் உள்ளது,ஆகவே  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது பயனற்றது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தலை   எந்நேரமும் வெளியிட முடியும்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு,ஆனால் ஆணைக்குழு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றமை ஏதோவொரு சூழ்ச்சி இடம்பெறுவதை நன்கு அறிய முடிகிறது.ஆகவே ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விரைவாக வருகை தந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதையும் ஓடி வந்து குறிப்பிட வேண்டும்.

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் சமிஞ்சையை எதிர்பார்த்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.ஆகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா எவ்வாறு செயற்பட்டார்,யாருக்காக செயற்பட்டார்,எவரது அரசாங்கத்தில் எந்த பதவி வகித்தார் என்பதை நன்கு அறிவோம்.அவர் சுயாதீன நபர் அல்ல,அரசியல் ரீதியில் இவர் தொடர்புப்பட்டார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது அவசியமற்றது.அத்தடன் சட்டமாதிபரின் ஆலோசனையை நாட்டு மக்களுக்கு குறிப்பிடப் போவதில்லை எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே தேசிய தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க புதிய வனப்பாதுகாப்பு அலுவலகங்கள் மட்டக்களப்பில் அமைக்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளில் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் யானைகள் உயிர் இழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன இவற்றை தடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்கள் மிக மிக குறைவான அளவிலேயே உள்ளன. எனவே புதிய அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டுமெனவும், சட்டவிரோத மண் அகழ்வினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுற்றாடல் வன ஜீவராசிகள் வன வளங்கள் சுற்றுலாத்துறை காணி போன்ற முக்கியமான மூன்று அமைச்சுகளின் கீழ் உள்ள ஐந்து அமைச்சுக்கள் விடயதானம் சம்பந்தமான விவாதம் இன்று நடைபெறுகின்றது. இந்த நாட்டிற்கு வளத்தை ஏற்படுத்துவதும் இந்த நாட்டிலே கூடுதலான பிரச்சனைகளை கொண்டதுமான இந்த அமைச்சுகள் இன்று விவாதத்தில் இருக்கின்றது. உண்மையிலேயே இலங்கையில் 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் யானைக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட மோதல் உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலும் ஆறு மாவட்டங்கள் கூடுதலான பிரச்சினை உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களும் பொலநறுவை அனுராதபுரம் குருநாகல் போன்ற மாவட்டங்களுடன் சேர்த்து மேலதிகமாக புத்தளம் மஹியங்கணை பிரதேசங்களும் இன்று யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலே மோதல்கள் உருவாகும் ஒரு பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தை பற்றி பேசலாம் என்று நினைக்கின்றேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு யானையினால் தாக்கப்பட்டு 20 மனிதர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்,24 பேர் காயப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோன்று முதலையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்திருக்கின்றார், இன்னொருவர் காயமடைந்திருக்கின்றார். அதே நேரத்திலே 14 யானைகள் இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்திருப்பதுடன் 205 வீடுகள் யானைகளினால் சேதமாக்கப்பட்டிருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு 18 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள் யானையினால் தாக்கப்பட்டு, முதலையினால் தாக்கப்பட்டு மூன்று பேர் இறந்திருக்கின்றார்கள். 2017 இல் இருந்து 2022 காலப்பகுதியில் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யானையினால் தாக்கப்பட்டு 78 பேர் மரணம் அடைந்திருக்கின்றார்கள். அதேவேளையில் 95 மனிதர்கள் காயப்பட்டு இருக்கின்றார்கள். முதலையினால் 15 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள். வீடுகள் கூட 550 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் யானையினால் சேதம் ஆக்கப்பட்டிருக்கின்றது. அதே வேளையிலே இந்த ஐந்தாண்டு காலத்திலும் 90 யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இறந்திருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்களும் அலுவலர்களும் மிகக் குறைவாக இருக்கின்றமையே. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே ஒரு ரேஞ்ச் ஆபீஸ் (Range office) மாத்திரமே இருக்கின்றது அத்துடன் பீட் ஆபீஸ் (Beat office) என்று சொல்லப்படும் உப அலுவலகங்கள் இரண்டு மாத்திரமே இருக்கின்றது. ஏனைய மாவட்டங்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான அலுவலகங்களாகவும் குறைவான அலுவலர்களைக் கொண்ட ஒரு மாவட்டமாகவும் இருக்கின்றது. உதாரணத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் ஆறுக்கு மேற்பட்ட ரேஞ்ச் ஆபீஸ்கள் இருக்கின்றது. கிட்டத்தட்ட பீட் அலுவலகங்களுடன் சேர்த்து 10 அலுவலகங்கள் இருக்கின்றது. ஒரு அலுவலகத்திற்கு நிரந்தரமாக நான்கு பேர் தான் அங்கு கடமையில் ஈடுபட்டாலும் இந்தப் பெரிய மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று அலுவலகத்திலும் பன்னிரண்டு பேர் தான் யானையிலிருந்து மனிதர்களை காப்பாற்றுவதற்கோ மனிதர்களிடமிருந்து யானைகளை காப்பாற்றுவதற்கோ 12 அலுவலர்கள் தான் அங்கு இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டு 180 பேர் யானை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தாலும் 25 பேர் அந்த வேலைகளில் இருந்து விட்டு விலகி இருக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் அவர்களது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு போதாத காரணத்தினால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகளுக்கு சென்றிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே 210 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை வேலி போடப்பட்டிருக்கின்றது. கிரான், வாகரை பிரதேசத்திலே 104 கிலோ மீட்டர்களுக்குரிய யானை வேலிக்குரிய பொருட்கள் அங்கு வந்திருக்கின்றது. ஆனால் அங்கு யானை வேலிகள் அமைக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே தற்போது மட்டக்களப்பு நகரத்திலே ஒரு ரேஞ்ச் ஆபிஸும் வெல்லாவெளியிலும் கிரானிலும் அந்த பீட் ஒப்பீஸ்கள் இருக்கின்றது. எதிர்காலத்திலே மட்டக்களப்பிலே இரண்டு ரேஞ்ச் ஆபிஸ்களை நீங்கள் உருவாக்க வேண்டும். வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் கிரான் பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் மூன்று பீட் ஒப்பீஸ்களும் அத்தியாவசியமாக அவசரமாக தேவைப்படுகின்றது. புல்லுமலை, கரடியியனாறை மையப்படுத்தி ஒரு அலுவலகமும், வவுணதீவு, பஞ்சேனை, பட்டிப்பளை போன்றவற்றை மையப்படுத்தி அலுவலகமும் வாகரை பிரதேசத்தை உள்ளடக்கி ஒரு அலுவலகமும் அமைக்க வேண்டிய ஒரு தேவை அங்கு இருக்கின்றது.

இன்னமும் குறைந்தபட்சம் வாகரை பிரதேசத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்கும் மேலாக வெல்லாவெளிப் பிரதேசம் வரை யானை வேலி இருக்க வேண்டிய இடங்களிலே பகலில் மாத்திரமே அந்த ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அங்கு வேலையில் ஈடுபடுகின்றார்கள். இரவு வேலைகளில் தான் யானைகள் யானை வேலியை உடைத்துக்கொண்டு விவசாயிகளின் வயல்வெளிகளிலும், கிராமப்புறங்களில் இருக்கும் பயன் தரும் மரங்களையும் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் நெல்களை சேதப்படுத்துகின்றது இந்த யானைகள். எனவே மாவட்டத்திற்கு நீங்கள் மேலதிகமாக மூன்று அலுவலகங்களை கொடுக்க வேண்டும்.

வெல்லாவெளிப் பிரதேசத்தை பொருத்தமட்டில் தளவாய் காடு ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட அந்த காட்டிலே பெரிய மரங்கள் எதுவுமே இல்லை. அந்த தளவாய் காட்டிற்குள் வெறும் சின்ன சின்ன பற்றைக் காடுகள் தான் இருக்கின்றது. யானைகள் கிட்டத்தட்ட 70,75 யானைகள் அந்த பிரதேசத்திலே பகலிலே ஒளித்து நின்று இரவிலே கிராமப்புறங்களில் உள்நுழைந்து கிராம வீடுகளை சேதப்படுத்துவது மாத்திரமல்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது உயிரை கையில் பிடித்தபடியே இரவிலே தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்தப் பிரதேசம் தற்போது வனவளத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. வன வளத்திற்குரிய பெரிய காடுகள் எதுவுமே அந்த பிரதேசத்தில் இல்லாத காரணத்தினால் அந்த பிரதேசம் துப்புரவு செய்யப்பட்டு எதிர்காலத்திலே மேய்சல் தரைக்கு பயன்படுத்தப்படுமாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் மாடுகள் ஆடுகள் கூட அங்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும் போது யானைகள் தங்க வேண்டிய ஒரு நிலை அங்கு ஏற்படாதது மாத்திரமில்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கூட கூட்டி கொள்வார்கள் என்பதற்காக வனவளத் திணைக்களம் எதிர்காலத்தில் நீங்கள் அந்த பிரதேசத்தை விடுவிக்க வேண்டும் என்று இத்தால் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

வனவளத் திணைக்களம் கொழும்பிலிருந்து ஜிபிஎஸ் ஊடாக காட்டை கணிப்பிட்டு கல்போடுகின்றீர்கள் நீண்ட காலமாக வயல் செய்த காணிகள்,நீண்ட காலமாக மேட்டு பயிர் செய்த காணிகள், அது மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு வாவியின் ஓரமாக உள்ள காணிகளுக்கு கூட வனவளத் திணைக்களம் கல் போடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் ஆற்றங்கரை ஒட்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களிலே இறால் வளர்ப்பு அங்கு நடைபெற்றது. தற்போது அந்த பிரதேச செயலகத்தினால் அந்த வாவியை ஒட்டிய கிட்டத்தட்ட 400 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசம் இறால் வளர்ப்புக்காக அடையாளப்படுத்தப்பட்டு அந்தப் பிரதேச மக்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு தயாராக இருக்கும் போது அந்த பிரதேசத்தைக் கூட நீங்கல் கல் போட்டு தடுக்கின்றீர்கள்.

எனவே மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த பொருளாதாரச் சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது அந்த மக்கள் பொருளாதார ரீதியாக பலப்படுத்த கொஞ்சமாவது நெகிழ்வு தன்மையுடன் வனவளத் திணைக்களத்தினர் தங்களது நடவடிக்கைகளை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் இங்கு இருக்கின்றார். எங்களுக்கு உறுதியளித்திருக்கின்றார் அங்கு மண் மாபியாக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக சட்டத்துக்கு முரணாக மண்ணேற்றுபவர்களை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார்.

ஆனால் அங்கு இராணுவம், போலீஸார் அவர்களது அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் ஏற்றுவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தாண்டியடி விசேட அதிரடிப் படையினர் மிகவும் நிதானமாக அவர்கள் செயல்படுகின்றார்கள். சட்ட விரோதமாக மண் ஏற்றுவதை தடுக்கின்றார்கள் இருந்தாலும் சில இடங்களிலே குறிப்பாக சொல்ல போனால் வாழைச்சேனை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டியடி வழி வாகனேரி சந்தியாறு போன்ற இடங்களிலே 8500 ஏக்கர் நெற் பயிர்க்காணிகளுக்கு அதனுடாக ஊடறுத்துச் செல்லும் ஆற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாத ஒரு நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அந்த ஆற்றிலே மண்ணெடுப்பதனால் வயல்வெளியில் இருந்து ஆறு மிகவும் பள்லத்தில் இருக்கின்றது. எனவே எருக்கலம் காட்டு பாலத்துக்கு பக்கத்திலே ஒரு விசேட அதிரடிப்படையின் கண்காணிப்பு சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்படின் அந்த பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அகற்றுவதை தடுக்கலாம். ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலே வயல் வெளியில் ஒரு அகழ் எந்திரம் (Excavator)அது வயல் திருத்துவதற்கும் இல்லை. பகலிலே சும்மாக தரித்து நிற்கின்றது. இரவிலே சட்டவிரோதமாக அந்த பிரதேசத்திலே அவ்வியந்திரத்தைப் பயன்படுத்தி மண் அகழவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதை அமைச்சர் அவர்கள் கவனத்தில் எடுத்து அந்த பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளால் பொது நிதி வீணடிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது தனிப்பட்ட பணியாளர்களுக்காக ஜனாதிபதியின் மொத்த செலவினத்தில் 43 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தமது தனிப்பட்ட பணியாளர்களுக்காக 57 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு மூலம் இந்த விபரங்கள், ஊடகம் ஒன்றினால் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் 2,578 பேர் கொண்ட தனிப்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தார்.

எனினும் 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேன 1347 பணியாளர்களுக்காக 850 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருந்தார்.

அந்த வகையில், இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட பணியாளர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களிற்கு 44,000 மாணவர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

2021 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 83,616 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 71,497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 91,115 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 43,927 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களில் உயிரியல் விஞ்ஞான பீடத்திற்கு 9,749 மாணவர்களும் , பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு 8,020 மாணவர்களும் , வணிக பீடத்திற்கு 7,701 மாணவர்களும் , கலை பீடத்திற்கு 11,314 மாணவர்களும் , பொறியியல் தொழிநுட்ப பீடத்திற்கு 2,236 மாணவர்களும், உயிர் அமைப்புக்கள் தொழிநுட்ப பீடத்திற்கு 1,543 மாணவர்களும் , ஏனைய பீடங்களுக்கு 665 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

மேலும் இம்முறை நான்கு புதிய பீடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தளா 50 மாணவர்கள் என 200 மாணவர்களை உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதி பொருhளாதார பீடம் மற்றும் புத்தாக்க இசை தொழிநுட்பம் மற்றும் தயாரிப்பு ஆகியவை புதிய பீடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் பயன்பாட்டு மொழியில் பீடமும் , வவுனியா பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் காப்புறுதி பீடமும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதே வேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கனணி அறிவியல் , மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் அமைப்புக்கள் ஆகிய பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏனைய சில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

தற்போதைய நிலை தொடரின் வட கிழக்கு மக்கள் அடையாளத்தை இழக்க வேண்டி ஏற்படும் – சம்பந்தன்

வடக்குகிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார்

புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அரசியல்தீர்வு தொடர்பில் இலங்கை அரசாஙகம் தீர்வுகளை முன்வைக்கவில்லை,ஒரு பக்கத்தில் வடக்கிலும் கிழக்கிலும்மீள்குடியேற்றம் காரணமாக சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது அதேவேளை வன்முறைகள் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் நாட்டிலிருந்து தப்பி வெளியேறுகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும்.

சர்வதேச சமூகம் இந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது. உலகிற்கு இது பிழையான முன்னுதாரணமாக மாறும்.

பிராந்தியத்திலும் நாட்டிலும் சமாதானத்தை சர்வதேச சமூகம் விரும்பினால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம்!

சமஷ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் இலங்கையின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலைவர் சமந்தகுமார் கோல் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாக ஐனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் ஈழத் தமிழர்களின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதை நல்லெண்ண ஆரம்பமாக நாம் வரவேற்கின்றோம்

பாரத தேசத்தின் நல்லெண்ண வெளிப்பாட்டை வரவேற்பதுடன் தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட நீண்ட கால அபிலாசையான சமஸ்டி அரசியல் தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்து இந்திய மத்திய அரசு பங்களிக்க வேண்டும் இதுவே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு அத்துடன் இந்தியாவின் மத்தியஸ்த்துடன் கொண்டு வரப்படும் சமஸ்டித் தீர்வே நிரந்தரத் தீர்வாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நீண்ட காலமாக தாயக புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கோரி வருகின்றனர் அத்துடன் 1949 இல் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் ஐனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணை சமஸ்டிக் கோரிக்கையாகவே இருக்கின்றது ஆகவே தமிழர்களின் ஐனநாயக அபிலாசையை பெற்றுக் கொடுக்க பாரத தேசம் பற்றுதியுடன் பணியற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது – சபாநாயகர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும் அவர்கள் வீண் பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அவமரியாதையாக உள்ளது என தெரிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் மேலும் தெரிவித்த அவர், ”சிலர் எழுந்து நின்று பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. அணியை நிர்வகிப்பது எனது பொறுப்பு அல்ல, அது உங்களுடையது” என தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு 648,148 டொலர்கள் ஜப்பான் நிதியுதவி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் சுரங்க ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan ஆகியோருக்கு இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் சுரங்க ஆலோசனைக் குழுவால் அமுல்படுத்தப்பட்ட 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டம் இதுவென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளது.

குறித்த அகழ்வாராய்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களாக மாற்றுவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முந்தைய 13 திட்டங்கள் 15 ஆயிரத்து 831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றியுள்ளன என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (டிச 1) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பின் பெயரைத்தெரிவு செய்தல், உள்வாங்கப்படும் அங்கத்தவர்கள், பணிகள்,நோக்கம் ,எதிர்பார்ப்புக்கள், செயன்முறைகள்,அமைப்பின் நிர்வாகத் அங்கத்தவர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், Fairmed நிறுவன உத்தியோகத்தர், மாவட்ட செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3வது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த எட்டு வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதுடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. ஆனால் இன்றையதினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.

நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடாத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.