தனிநாடு கேட்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு சரத்வீரசேகர போன்றவர்களே காரணம்; ஜனா எம்.பி தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணாவிடின் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு, என்ற நினைப்பு விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதனை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இலங்கையிலே தமிழ் மக்களின் ஆயுத போராட்ட அமைப்பு அழிந்தாலும் அவர்களின் தனிநாடு கனவு அழியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 2009லே எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன் தனிநாடு தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னும் வீரியம் அடையக் கூடிய விதத்திலே மக்களின் மனநிலை இருக்கின்றது.

2009லே சர்வதேசத்தின் உதவியுடன் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக பிளஸ் பிளஸ் அமுல்ப்படுத்தி தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று சர்வதேசத்திற்குக் கூறியது. இறுதியில் வடக்கு கிழக்கு தமிழர்களை மிகவும் கஸ்டத்திற்கும், மனவேதனைக்கும் உட்படுத்தும் செயற்பாடுகளையே செய்கின்றது.

வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் மாத்திரமல்லாமல் வடக்கு ,கிழக்கிலே சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கைக் கபளீகரம் செய்து தமிழர்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் நடவடிக்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு கோட்டபாயவுடன் இணைந்து இயங்கிய வியத்மக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நாட்டை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகளின் நிலைப்பாடு தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் உறுதியாக்குவதாகவே இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலே திருகோணமலையையும் அம்பாறையையும் தங்களது குடியேற்றத்தின் ஊடக தமிழர்களை முதன்மை இடத்தில் இருந்து திருகோணமலையில் இரண்டாம் இடத்திற்கும், அம்பாறையில் மூன்றாம் இடத்திற்கும் கொண்டு சென்றவர்கள் தற்போது மட்டக்களப்பில் தங்களது கைங்கரியத்தைச் செய்வதற்கு தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தவரைக் கொண்டு வந்து சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் அங்கு அவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாகாணசபை காலத்திலே நாங்கள் அதனைத் தடுத்திருந்தோம். அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தோம். ஆனால் தற்போதைய ஆளுநருக்கு முன்னர் இருந்த ஆளுநர் வியத்மக அமைப்பின் முக்கிய உறுப்பினர் அனுராதா ஜகம்பத் அவர்கள் இந்;த மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்பைத் தூண்டியிருந்தார். தற்போது அவர் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் பின்புலத்தில் இருந்து இந்த விடயத்iதை தூண்டிக் கொண்டிருக்கின்றார்.

நாட்டின் ஜனாதிபதி கடந்த சனி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு வந்திருந்த போது அம்பிட்டிய தேரர் தலைமையில் மட்டக்களப்பில் போராட்டம் நடத்தியதோடு மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பதாதைக்கு தும்புத்தடியால் அடித்த விடயத்தை உலகமே பார்த்தது. இதனை தமிழர் ஒருவரோ, அல்லது தமிழ் பேசும் ஒருவரோ அல்லது தமிழ் பேசும் மதகுரு ஒருவரோ செய்திருந்தால் அவரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்.

இந்த நாட்டை மக்கள் பிரதிநிதிகள் ஆள்கின்றார்களா? அல்லது புத்தபிக்குகள் ஆள்கின்றார்களா என்ற கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான புத்தபிக்குகள் தான் வியத்மக அமைப்புடன் இணைந்து வடக்கு கிழக்கை கபளீகரம் செய்திருக்கின்றார்கள். அந்த வகையிலே மயிலத்தமடு மாதவணையில் புதிதாக ஒரு விகாரையை அமைத்து அங்கு புதிது புதிதாக ஆட்களைக் கொண்டு வந்து அந்த பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக காலம் காலமாக தங்கள் கால்நடைகளை அந்த இடத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்ககான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், சிவில் செயற்பாட்டாளர்களையும் புத்த பிக்கு உள்ளிட்டவர்கள் சிறைப்பிடித்த கைங்கரியம் கூட அங்கு இடம்பெற்றது.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்யும் காலம் தொங்கி விட்டது. பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சற் தரைக்குக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒருபுறம் இந்த மாவட்டத்தின் வேளாண்மைச் செய்கையைத் தொடங்குவதற்கு விவசாயிகள் மாடுகளை அப்புறப்படுத்துமாறு தெரிவிக்கின்றார்கள். மறுபுறம் மாடுகளை தங்கள் மேய்ச்சற் தரைக்கு கொண்டு செல்ல விடாமல் அத்துமீறி ஊடுருவியிருக்கும் பெரும்பான்மையினர் தடுக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை இருக்க பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை ஆற்றிலா அல்லது கடலிலா மேய்ப்பது.

இன்று அந்தப் பண்ணையாளர்கள் 29 நாளாக சுழற்சி முறையிலான அகிம்சைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கடந்த வாரம் இங்கு வந்து அவர்களின் ஒருசில பிரதிநிதிகளைச் சந்தித்து செவ்வாய்க் கிழமைக்குள் ஒரு தீர்வு தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாகின்றது எந்தவொரு தீர்வும் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதும், மக்களை ஏமாற்றியி அரசியல் நடத்துவதும் தான் இந்த ஜனாதிபதியின் செயற்பாடு என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்த தேய்ச்சற் தரை விடயம் தொடர்பாக நாங்கள் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம், ஒத்திவைப்புப் பிரேரணையைக் கூட கொண்டு வந்திருக்கின்றோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். ஒருவர் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்தவர், தமிழ் மக்களின் மத்தியில் இருந்து இருவர் அரச தரப்பிலே இராஜாங்க அமைச்சர்களாகவும், நாங்கள் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

என் சக பாராளுமன்ற உறுப்பினர் தம்பி சாணக்கியன் அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பலே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறியிருந்தார். அவர் என்னையும் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறை கூறியிருந்தார். என்னை அவர் குறிப்பிட்டு நான் எங்கிருக்கின்றேன் என்று தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஏனெனில் அவர் மாவட்டத்தில் இருப்பதில்லை. ஆனால், எமது மாவட்ட மக்களுக்குத் தெரியும் பாராளுமன்ற அமர்வுகள் அற்ற நாட்களில் எமது மாவட்ட மக்களின் தேவைகளை என்னால் முடிந்தளவில் நான் அவர்களைச் சந்தித்து பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றேன். அவரைப் போன்று தான் நினைத்த போது மாவட்டத்திற்கு வந்து ஒரு ஊடக சந்திப்பினையும், ஆர்ப்பாட்டத்தினையும் செய்துவிட்டு போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல.

கடந்த பாராளுமன்ற அமர்விலே மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற விடயத்தையும் குறிப்பட்டிருந்தார். உண்மை நான் கலந்து கொள்ளவில்லை தான். கடந்த பாராளுமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நான் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் போது தம்பி சாணக்கியன் என்னை வந்து சந்தித்து என் மணி விழா சம்மந்தமாகக் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் நான் வாகனத்தில் ஏறிச் செல்லும் போது சக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த போராட்ட விடயத்தைத் தெரிவித்தார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த என்னை சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடும் போது இந்த விடயம் சம்மந்தமாக ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. அன்றைய நாள் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் விநோ அவர்கள் பேச இருந்த நேரத்தை எடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் ஆட்கள் இன்மையால் இப்போராட்டம் கைவிடப்பட்டதாகவும் மறுநாள் நடைபெறும் விடயம் எனக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் இவர் கூறியதாகவும் நான் அறிந்தேன்.

அன்று நான் கொழும்பில் தான் நின்றேன். நான் மட்டுமல்ல செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சாள்ஸ் உள்ளிட்ட பலரும் அங்குதான் இருந்தோம். இந்த மாவட்ட மக்கள் சம்மந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக எல்லோருக்கும் அறிவித்து செய்திருந்தால் அது பிரயோசனமாக இருந்திருக்கும். அதுமாத்திரமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையகப் பிரச்சனை சம்மந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவர்களுடன் கைகோர்த்திருந்தோம். அவர்களுக்கும் பண்ணையாளர்கள் தொடர்பான ஆர்ப்பாட்ட விடயத்தினைச் சொல்லியிருந்தால் அவர்களும் எம்முடன் இணைந்திருப்பார்கள். தனிப்பட்ட ரீதியிலே அரசியல் செல்வாக்கைப் பெற வேண்;டும், மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று செய்து விட்டு குறை கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இந்த மாவட்டத்தில் பல கட்சிகள் பல சுயேட்சைக் குழுக்களில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் வெறும் ஐந்து பேர்தான். நாங்கள் பாராளுமன்ற உறுப்பினாராக வந்ததன் பிற்பாடு இந்த மாவட்ட மக்களின் அனைவரின் பிரதிநிதியே தவிர தனக்கு வாக்களித்த மக்களுக்கான உறுப்பினர் அல்ல என்பதே எனது நிலைப்பாடு. இதனை ஏனையவர்களும் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும் என்றால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வந்து எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்கினால் தான் இந்த நாடு உருப்படும். அவ்வாறில்லாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரத் வீரசேகர கூறியது போன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இன்னமும் தனிநாடு, தமிழீழம் என்ற நினைப்பு விலகவில்லை, விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஸ்திரமான இலங்கையை கட்டியெழுப்ப நிலையான சமாதானம் உறுதி செய்யப்படல் வேண்டும் – பிரித்தானிய இந்து – பசுபிக் பிராந்திய விவகார அமைச்சர் மேரி ட்ரெவெல்யான்

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு, எதிர்கால ஒத்துழைப்புசார் திட்டங்கள், இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கேள்வி – இலங்கைக்கான உங்களது விஜயத்தின் மூலம் எதனை அடைவதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் – பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் இவ்வேளையில் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் முதன்முறையாக இலங்கைக்கு வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இதன்போது காலநிலை மாற்றம் தொடக்கம் கடற்பிராந்தியப் பாதுகாப்பு வரை பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் பெறும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம்.

குறிப்பாக கடற்பாதுகாப்பை முன்னிறுத்திய கூட்டு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு உள்ளடங்கலாக இந்து சமுத்திரப்பிராந்தியம் தொடர்பில் பிரித்தானியா கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புக்கு இலங்கை தலைமைதாங்கும் இவ்வேளையில், நாம் ஒன்றிணைந்து இருதரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய புதிய வாய்ப்புக்களை அடையாளங்காணவும், இருதரப்பு வர்த்தகத்தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். இதில் இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய பிரித்தானியாவின் உதவிகளும் அடங்கும்.

கேள்வி – இலங்கையுடனான ஒத்துழைப்பில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் என்ன?

பதில் – இருநாடுகளினதும் கூட்டிணைந்த ஒத்துழைப்பில் காலநிலைசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய செயற்பாடுகள் என்பன மிகப்பிரதானமானவையாகும். அதேவேளை மோதலின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகிய விவகாரங்களிலும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றோம்.

அதன்படி இருநாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு போன்ற பிராந்தியக் கட்டமைப்புக்களின் ஊடாக இலங்கையுடனும் ஏனைய முக்கிய நாடுகளுடனும் எமது தொடர்புகளை விரிவுபடுத்திவருகின்றோம்.

கேள்வி – இலங்கையில் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவினால் எவ்வழிகளில் உதவமுடியும்?

பதில் – கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, துடிப்பான பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கே நாம் உதவ விரும்புகின்றோம்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஊடாக 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் பிரித்தானியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அவ்வுதவிகள் மூலம் பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 70,000 மக்கள் பயனடைந்தனர். அதேபோன்று மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளை நாம் தொடர்ந்து வழங்குவோம்.

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும். அதன்மூலம் இலங்கையால் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கவும், பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளவும் முடியும்.

நீதிபதி சரவணராஜா விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்த்தக் கலந்துரையாடல் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது.

நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்த சிங்கள அரசாலும், அரச இயந்திரத்தாலும், அவமதிக்கப்படுகின்றது என்ற விடயத்தையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளி வந்ததுள்ளது.

அதுபோல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும், தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி சட்டவிரோத மீன்வாடிகள் அமைப்பு! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக மீன்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அங்கு மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்று நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் முன்னாள் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலி பாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதி, இதனோடு இணைந்த பல ஏக்கர் காணிகள் சிறு தானிய பயிர்ச்செய்கைக்காக தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. தற்போது வன இலாகா கையகப்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்து வருகிறார்கள். அப் பகுதியில் இரண்டரை மாதத்திற்கு முன்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வாடி அமைத்து அங்கே தொழில் மேற்கொள்கிறார்கள் என கொக்குதொடுவாய் மீனவர் அமைப்பும் அங்கு தொழில் செய்யும் தமிழ் மீனவர்களும் கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொண்டதோடு எனக்கும் தெரியப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டபோது கிராம சேவையாளர் அந்த வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகச் கூறிச் சென்றார். ஆனால் சட்டத்தை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வாடி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் இதுவரை அகற்றப்படவில்லை.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் அதனை அகற்ற கோரி பதாகை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இருந்த வாடியை விட இன்னுமொரு வாடி முழுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு வாடிகள் அங்கே பகுதியளவில் போடப்பட்டுள்ளன. இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து பெரியதொரு குடியேற்ற திட்டத்தை முறியடிக்கும் விதமாக செயற்படவேண்டும். – என்றார்

நாகை- காங்கேசன் கப்பல் சேவை இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜ தந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைவது எனது பாக்கியம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் புதுடில்லியில் இருந்தபடி நேற்று காலை ஆரம்பித்து வைத்து உரையாற் றுகையிலேயே மேற்கண்டவாறு தெரி வித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.

நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாக குறிப்பிடப் பட்டுள்ளது. சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி பேசுகின்றன.

மகா கவிஞர் சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதியின் மிசை’ பாடலில், நமது இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியுள்ளார். இந்த படகு சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.

இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சமீபத்திய விஜயத்தின்போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள். இணைப்பு என்பது இரு நகரங்களை நெருக்கமாகக் கொண்டு வருவது மட்டுமல்ல.

இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2015 ஆம் ஆண்டில் நான் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதை நாங்கள் கண்டோம்.

பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம்.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019 இல் தொடங்கியது. இப்போது, நாக பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை மற்றொரு முக்கியமான படியாகும். – என்றார்.

40 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே கப்பல் சேவை ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காலை, 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த கப்பல் மதியம் 12.20 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மதியம் 1.20 மணியளவில் மீண்டும் நாக பட்டினத்திற்கு 31 பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலை இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 இலங்கை ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்த நிலையில் நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து கப்பல் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. அதனால் 40 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

ஹர்த்தால் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்னாயத்த கூட்டம்

ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது.

ஹர்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட தலைவர் நிரோஷ், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காஸாவின் தற்போதைய நிலை இலங்கையின் இறுதிப் போரின் ஆரம்பத் தருணங்களை நினைவுபடுத்துகின்றது

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன.அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதன் பிரதான விளைவு என்னவென்றால் தொடர்ச்சியான வான்வெளி ஆட்டிலறி தரைதாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்தன.விடுதலைப்புலிகளை பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆயுதங்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் நாட்களில் காசாவில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாது என நம்புகின்றேன் பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்யுமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச நாடுகளுக்கு கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், வெள்ளிக்கிழமை (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருந்ததுடன், நாட்டிலிருந்தும் வெளியேறியமை பல்வேறு சர்ச்சைகளையும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு கூட்டாகக் கடிதமொன்றை எழுதுவதற்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்திருந்தன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகளின் கூட்டுத்தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச சமூகத்துக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம் இன்றைய தினம் (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படுமென கட்சி பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும், தனக்கு அச்சுறுத்தல் இருந்ததை நீதிவான் வெளிப்படையாகவே கூறியிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ் நீதிபதிக்கு எதிரான இத்தகைய அழுத்தங்கள் அவர் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் எதிரானவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும், நாட்டின் நீதிக்கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுவதை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் இரவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன், ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கும் (Andrew Patrick) இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்