சிங்களவர் வந்தேறு குடிகள் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும் – சபா குகதாஸ் தெரிவிப்பு!

ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்டு உருட்டுகளை முன் வைக்கும் சிங்கள இனவாதிகள் உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஐயனுடைய வருகை தொடர்பாக விஐயன் வரும் போது இயக்கர் நாகர் எனும் பூர்வீக குடிகள் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் மகாவம்சம் கூறும் குவேனி கல்வெட்டுகளில் கவினி என்ற பெயரில் அழைக்கப்பட்ட பேரழகு வாய்ந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்து ஈழத்தில் குடியேறியதாக கூறுகின்றது எனவே இந்த உண்மையை மறைத்து தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என அழைத்து சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த சிங்கள இனவாதிகள் எண்ணியுள்ளனர்.

2009 முன் பெட்டிப் பாம்பாக இருந்த இனவாதிகள் சிலர் பூனையில்லா வீட்டில் சுண்டெலிக்கு கொண்டாட்டம் என்பது போல் கூத்தடிக்கின்றனர் விஐயன் வருகைக்கு முன் தமிழர்கள் தான் பூர்வீக குடிகள் என்பதற்கு பலாங்கொடை , இரணைமடு , பொம்பரிப்பு , செங்கடகல ,பொலநறுவை,அனுராதபுரம், ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழர்கள் தொடர்பான போதிய சான்றுகளை தமிழர்களை பூர்வீக குடிகள் என உறுதி செய்கின்றன.

மேலும், விஐயன் வருவதற்கு முன்னர் சைவமதமும் தமிழ் மன்னர்களும் தான் இருந்தனர் என்பதை மகாவம்சமே மிகப் பெரிய ஆதாரம் ஆனால் 1948 ஆண்டின் பின்னர் சிங்கள பேரினவாதம் தமிழர்களின் தொன்மைகளை மாற்றி பௌத்த சிங்கள மயப்படுத்தும் மோசமான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது அதன் தொடர்ச்சியே தமிழர்களை வந்தேறு குடிகள் என கூறும் பித்தலாட்டம்.

இந்தியாவுக்கு பாலம் கட்டுவதெனில் சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கர்தினால்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமானால் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை பெற வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால், வரலாற்று காலம் தொடக்கம் நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை அந்நியர்களுக்கு காட்டிக்கொடுத்து வருகின்றனர் என்பதை வலியுறுத்தினர்.

மேலும் கருத்து தெரிவித்த கர்தினால்,

“”நாங்கள் எங்கள் நாட்டின் துண்டுகளை வெவ்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறோம்.

ஒரு சக்திக்கு அடிபணிந்து பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து இந்த நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆட்கள் இந்தியாவிற்கு பாலம் கட்டுகிறார்கள். இப்போது இந்தியாவில் இருந்து நமக்கு என்ன பிரச்சனைகள்? ஒருமுறை பருப்பு கொண்டு வந்தது நினைவிருக்கிறதா.

இலங்கைக்கு இராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களின் கருத்தின் அடிப்படையில் சில விஷயங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது.

அவர்களை எங்கள் தோளில் ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னொரு பாலம் கட்டினால் நன்றாக இருக்கும். இந்த முட்டாள்தனமான கதைகளை யார் சொல்வது?

நமது நாடு எப்போதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது. நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமையாக இருந்ததில்லை. வேறொரு நாட்டிலிருந்து பிரிந்து செல்லவில்லை. அன்று முதல் இலங்கை தனி நாடாக இருந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தங்களை இந்நாட்டு மன்னர்கள் கையாண்டார்கள், ஆனால் நாம் யாரையும் அடிமைப்படுத்தவில்லை.

நம் நாட்டை அந்நிய தேசம் கைப்பற்றியிருந்தால், அன்பு சகோதர சகோதரிகளே, நமது தலைவர்களின் துரோகத்தாலேயே அது நடந்நதது. நாளையும் இதே நிலை ஏற்படலாம். இந்த பாலம் கட்டும் யோசனைக்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். பொதுமக்கள் கருத்து இல்லாமல் இவற்றைச் செய்வது தவறு.

இன்று நம் நாட்டை நினைத்து வருந்துகிறோம். விடுதலைக்குப் பின், நாம் இப்போது சுதந்திரத்தை இழக்க வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்குவோம். துண்டு துண்டாக உடைப்போம். அப்போது நமக்கு எதுவும் மிச்சம் இருக்காது. இது ஒரு நோய்.” என்றார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா?

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.

2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில் வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இனவாதத்தினால் தமிழரை ஒரு போதும் அழிக்க முடியாது – மனோ

“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.”

இவ்வாறு கனடா – டொரென்டோவில் நடைபெற்ற தமிழர் தெருத் திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால், இனவாதம் இருக்கின்றது.

இனவாதத்தை அழித்து, வீழ்த்தி நியாயமான தீர்வைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தமிழக தாயகம், இலங்கை தாயகம் ஆகியவற்றுக்கு வெளியே இங்கே கனடாவில் வாழ்கின்ற தமிழர்கள்தான் அதிக துடிப்புடன் இருக்கின்றீர்கள். இந்நோக்குக்காக நீங்கள் அதிக பங்களிக்க வேண்டும்.” – என்றார்.

மன்னார் மடு ஆலயம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் – அமெரிக்க தூதுவர்

மன்னார் ஆயர் மற்றும் பிடெலிஸ் பெர்னாண்டோ ஆகியோர் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மதத் தலைவர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,வரலாற்று சிறப்புமிக்க மடு மாதா ஆலயத்திற்கு சென்றேன். இந்த புனித இடத்திற்கு என்னை வரவேற்றதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு இடையூறுகள் ஏற்படின் அதன் விளைவுகள் மிக மோசமாக அமையும் – சித்தார்த்தன் எம்.பி

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடையங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்திய குழு கூட்டம் இன்று(26.08.2023)இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘‘ஒரு ஆபத்தான நிலைக்கு இலங்கை சென்று கொண்டிருக்கின்றது போல் தெரிகிறது ஏனென்றால்,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அதே போன்று இலங்கை சீனாவுடன் வைத்திருக்கின்ற உறவு நிலமைகளை மோசமாக்கி கொண்டு வருகிறது என்று நினைக்கின்றேன்.

இலங்கையைப் பொருத்தமட்டில் மிக கவனமாக கையாள வேண்டும்.சீனாவின் உடைய ஆதிக்கம் இங்கு கூடிக் கொண்டு வருமாக இருந்தால் முக்கியமாக இராணுவ ரீதியான ஆதிக்கங்கள் கூடிக் கொண்டு வருமாக இருந்தால் அது இலங்கையில் இருக்கின்ற மக்களை பெரிய அளவில் பாதிக்கும்.

எங்களைப் பொருத்தமட்டில் நாங்கள் இந்தியாவின் தென் கரையிலே வசிக்கின்றோம்.இங்கு சீனா தனது பிரசங்கத்தை கூட்டுகின்ற முயற்சி எடுக்கிறது, அதாவது எங்களுடைய வடபுலத்திலே இதன் மூலம் அவர்கள் இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு அச்சத்தை கொடுத்து விடுவார்கள் என்கின்ற எண்ணப்பாடு இந்தியாவுக்கு வருமாக இருந்தால் அது எங்களைத்தான் கூடுதலாக பாதிக்கும்.

ஆகவே நாங்கள் இதில் மிகக் கவனமாக எங்களால் இயன்ற அளவுக்கு, இந்த ஆய்வுக்கு கப்பல் வருவது என்பது இந்தியாவைப் பொருத்தவரையில் அவர்களுடைய பாதுகாப்புக்கு அச்சம் வரக்கூடியதாக பார்க்கின்றார்கள் ஆகவே அதனை தவிர்ப்பதற்கான முழுமையான முயற்சியை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும்.

இலங்கை இந்திய உறவு ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கின்றது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கின்ற தூரம் 24, 25 கடல் மயில் தூரத்துக்குள் தான் வருகிறது, ஆகவே இது மிக கவனமாக கையாள வேண்டிய விடயம் அவ்வாறு கையாளுவதன் மூலம் தான் இலங்கை பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.‘‘ என தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அருகில் கம்மன்பில தலைமையில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான அடிப்படைவாத குழுவொன்று இன்று (26) கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அமையாக போராட்டத்தில் ஈடுபட்டது.

கொள்ளுப்பிட்டி, ராணி வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை நோக்கி, இன்று மதியம் 2.30 மணியளவில் உதய கம்மன்பில தலைமையில் வந்த சுமார் 150 பேர் வரையிலான அடிப்படைவாதிகளை பொலிசார் வழிமறித்தனர்.

அவர்களை கஜேந்திரகுமாரின் வீட்டை நெருங்க பொலிசாரும், அதிரடிப்படையினரும் அனுமதிக்கவில்லை.

பொலிசாரின் நீர்த்தாரை பிரயோக வாகனமும் அங்கு தரித்து நின்றது.

கஜேந்திரகுமாரின் வீட்டை நெருங்க பொலிசார் அனுமதிக்காத நிலையில், அதற்கு பக்கத்து வீட்டின் முன்பாக நின்று கம்மன்பில கூட்டம் சத்தமிட்டபடி நின்றது. சிறிது நேரம் கூச்சலிட்டபடி நின்ற கும்பலை பொலிசார் அப்புறப்படுத்தினர்.

இடைக்கால ஏற்பாடாக 13ஐ செயல்படுத்த கோரும் உங்கள் நகர்வே சரியானது – தமிழ் கட்சிகளை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்

“நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அரசமைப்பு இப்போதைக்கு வரும் சாத்தியமில்லாத நிலையில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் உங்களது நகர்வு சரியானது” – இவ்வாறு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் தன்னை சந்தித்த தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்.

கொக்குவிலில் விருந்தினர் விடுதியில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க தூதுவர் வடக்கை மையப்படுத்திய அரசியல் விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் என்றும், ஜனாதிபதி தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அவர் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தார் எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் கேட்டறிந்தார். குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

வடக்கில் பௌத்தர்கள் இருக்கிறார்களா என்று சந்திப்பில் அமெரிக்க தூதர் கேட்டார்.

அப்படி யாரும் இல்லையென்பதையும் தற்போது இராணுவத்திடம் சம்பளம் பெறும் ஒருவர், நிவாரணம் வழங்குவதாக ஏழை மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கூத்தாடினாலும் அதை சமூகம் கண்டுகொள்ளவில்லை என்றும் இதன்போது தமிழ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரங்களின் தற்போதைய நிலை பற்றியும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சந்திப்பில், மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் இளைஞர்கள் பெருந்தொகையாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றியும் கேட்டறிந்தார். இதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் பற்றியும் விரிவாக கேட்டறிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது

தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தவர் குமாரசாமி அவர்கள் – அஞ்சலி உரையில் நிரோஷ்

தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் மதிக்கப்படுகின்றார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது மற்றும் போரம்மா உள்ளிட்ட பல தாயக எழுச்சிப் பாடல்களை இசைத்தவரும் ஓய்வுபெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபருமான செ.குமாரசாமி அவர்களுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை தலைமையில் உடுப்பிட்டியில் நடைபெற்றது.

இதில் அஞ்சலியுரை ஆற்றுகையிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கு எழுச்சிப் பாடல்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. ஒரு இனத்தின் அரசியல், விடுதலை, பொருளாதாரம், இனத்தின் அடையாளம், கலாசாரம், பண்பாடு என எதுவாக இருப்பினும் எதிர்காலத் தலைமுறைக்கு ஊடுகடத்துவதற்கு இசை முக்கிய மூலமாக அமைகின்றது.

இந் நிலையில் யதார்த்த பூர்வமாக தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் தேசிய பற்றுறுதியினை கட்டிக்காப்பதிலும் அமரர் குமாரசாமி அவர்களுடைய பங்களிப்பு அளவிடமுடியாதது. அவர் ஓர் அரச கல்விச் சேவையாளராக ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபராக பதவி வகித்ததுடன் மட்டும் பணியை மட்டுப்படுத்தி விடாது தயாக உணர்வாளனாகவும் எங்களது சமயத்தினையும் மொழியினையும் வளப்படுத்தும் நல்ல ஓர் கலைஞனாகவும் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.

இன்று அவர் மீளாத்துயில் கொள்கின்ற நிலையிலும் அவர் எமது மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் முன்னாள் கல்வி அதிகாரி நடராஜா அனந்தராஜ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர்கள், அரச அதிகாரிகள், முன்னாள் போராளிகள், இசைத்துறை கலைஞர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் எனப் பலரும் இறுதி அஞ்சலியுரையமை குறிப்பிடத்தக்கது

சீனாவினால் அதி நவீன தொடர்பாடல் வாகனங்கள் இலங்கை இராணுவத்துக்கு கையளிப்பு

2017 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த வாகனங்கள் அனைத்திலும் அதிநவீன ஈஎல்டி தொடர்பாடல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. குறுங் அலைவரிசை அமைப்பு, மற்றும் அவசர காலங்களில் நேரடி தகவல் தொடர்பாடலுக்கு உதவும் விமானிகள் அற்ற விமானங்கள் (ட்ரோன்கள்) என்பன பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும்.