பொருளாதார பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயமல்ல – ஜனாதிபதி ரணில்

நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதார பிரச்சினை எனவும் அது நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளக்கூடிய  விடயமல்ல எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை முன்கொண்டு செல்லும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் நேற்று (22) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள், சட்டத்தரணிகளுடனான  சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெரிவித்த கருத்துகளை, ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வௌியிட்டுள்ளது.

இதேவேளை தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியின் இரான் , ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும் என  ஜனாதிபதி கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காவிட்டால், மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுவிப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக திறந்த நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து அவரது வழக்கு நடவடிக்கைளை முடிவுக்கு கொண்டு வர இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 5ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலை நடத்தக் கோரி சபைக்குள் ஆர்ப்பாட்டம்; ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்

சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் யாவும் நாளை (22) காலை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கள்ள அரசாங்கமே ! தேர்தலை நடத்து என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலை மார்ச் 9 நடத்த முடியாது! உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது

பல காரணங்களால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது

நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 41 கோடியே 6 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்கும் பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளார். இதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, தேர்தலுக்கு தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குமாறு பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப் பட்டபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் ஆதாரங்கள் – ஆவணங்களுடன் தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது

கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலை

கல்முனை மாநகர சபையின் விசேட கூட்டம் ஒன்று பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில், சபை சபாமண்டபத்தில் இடம் பெறவிருக்கும் இந்த விஷேட கூட்டத்தில், கல்முனை மாநகரில் இயங்கும் பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரும், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சருமான மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பெயரைச் சூட்ட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை விசேடமாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

அண்மையில் நடைபெற்ற மாநகர சபையின் 59 ஆவது மாதாந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இந்த பெயரிடல் விவகாரத்தை தமது உரையின் போது பிரஸ்தாபித்தார்.

எனினும் தமிழரசுக்கட்சி உறுப்பினரும் ரெலோ அமைப்பின் பிரதித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் உட்பட தமிழர் தரப்பு உறுப்பினர்கள் தற்போதய சூழ்நிலையில் இந்த விவகாரத்தைக்கைவிடுவதுடன், ஆறஅமர இரு தரப்பும் பேசி முடிவு செய்யலாமென ஆட்சேபித்ததையடுத்து, இந்த விடயத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது அமர்வு முடிவுறுத்தப்பட்டது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டுமென்ற கல்முனைவாழ் தமிழ் மக்களின் உயிர் மூச்சான முயற்சிகளுக்கு, பிரதேச முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் முட்டுக்கட்டையாக செயற்பட்டு வரும் விடயத்தால் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல் நீடித்துவரும் நிலையில், குறித்த பொது நூலக பெயரிடல் விவகாரம் மேலும் குழப்ப நிலையையும், தமிழ், முஸ்லிம் இன முறுகலையும் ஏற்படுத்திவிட வாய்ப்பாக அமைந்து விடலாமென அப்போது கூட்டத்தில் தமிழ் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

எனினும், விடாக்கண்டன் பாணியில் கல்முனை பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரை சூட்டியே ஆக வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் வரிந்து கட்டி நிற்பதாகவும், மர்ஹூம் மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூர் மாநகர சபையின் பிரதி மேயராக இருந்து வருவதும் விடாப்பிடி நிலைக்குக் காரணமெனவும் கூறப்படுகின்றது.

இதனிமித்தமே மாநகர சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்குள் பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரைச் சூட்டும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட வேண்டுமெனும் நோக்கில் நடைபெறவிருக்கும் சபையின் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனால் கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனை மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் (ராஜன்) தவிர ஏனைய சகல கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் 10 தமிழ் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாநகர சபையின் விசேட கூட்டத்தை இரத்துச் செய்யுமாறுகோரி கடிதம் ஒன்றை மாநகர மோயரிடம் நேரில் சமர்ப்பித்துள்ளதாகவும், இக்கடிதத்தின் பிரதிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பு உறுப்பினருமான ஹென்ரி மகேந்திரன் தெரிவித்தார்.

வழமைக்கு மாறாக இந்த விசேட கூட்டம் நடத்தப்பட்டு உரிய தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் தமிழர் தரப்பினர் நீதிகோரி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கல்முனை மாநகரிலுள்ள முப்பதுக்கும் மேற்ப்பட்ட இந்து கிறிஸ்துவ ஆலங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்பாக இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது அமைதிக்குப் பங்கமாகவும், கல்முனை மாநகரில் தமிழ், முஸ்லிம் இனமுறுகலுக்கு வழிவகுப்பதாகவும் அமையவுள்ள குறித்த பெயர் மாற்றத் தீர்மானத்தை அமுல் நடத்தாது தடுக்குமாறும், மூவின மக்கள் வாழும் கல்முனையிலமைந்துள்ள பொது நூலகம் அதேபொதுவான பெயரிலேயே இயங்க ஆவன செய்யுமாறும் குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கல்முனை மாநகரை களேபர பூமியாக மாற்றாது சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டுமென்பதே இன்றைய நிலையில் பலரதும் அவாவாகும்.

பொதுமக்களின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளில் நிறைவேற்று அதிகாரம் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு

மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையகம் திறைசேரி நிறைவேற்று அதிகாரம்  அரச அச்சகர்  மற்றும் இலங்கை பொலிஸின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை கண்மூடித்தனமாக மீறியதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவரினதும் நடவடிக்கைகளை ஆராய்ந்ததில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை குழப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை புலனாகியுள்ளது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு ராஜபக்‌ஷ குடும்பமே காரணம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால் மன வேதனைக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் தற்போது சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதை பொருளாதார பாதிப்பு என்ற வரையறைக்குள் மாத்திரம் வைத்து மதிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பினால் சமூக கலாசாரம்,நல்லிணக்கம்,தேசிய பாதுகாப்பு,கருணை,பிறருக்கு உதவி செய்தல் என அனைத்து நல்ல விடயங்களும் சீரழிந்து விட்டது.பொருளாதார பாதிப்பினால் நாடு சீரழிந்து விட்டது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போராடினேன்.ஒரு யுத்தத்தை புரிந்துகொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது,டொலரும் இருந்தது,

ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும் ,அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ராஜபக்ஷ குடும்பமும்,அவர்களை சார்ந்தோரும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்தார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தவில்லை,அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் நலனை  கருத்திற் கொண்டு மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுவே நாட்டுக்கு செய்யும் அளப்பரிய சேவையாக காணப்படும் என்றார்.

சில கடுமையான தீர்மானங்களை எடுக்க சர்வதேச நாணய நிதியமே காரணம் – ருவன்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வங்குராேத்து நிலைமையை அறிந்துகொண்டு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு கூட பணம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த இவ்வாறான கடுமையான தீர்மானங்கள் சரியே என மக்கள் இந்த வருட இறுதியில் புரிந்துகொள்வார்கள் என்றும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அரசியலமைப்பின் ஊடாக விதிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய ஒரு வருடகாலத்துக்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்தி உறுப்பினர்களை தெரிவுசெய்துகொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தபோதும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை அரசாங்கத்தினால் வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தலை உரிய திகதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய திகதிக்கு நடத்த முடியாமல்போகும் சாத்தியம் இருப்பதால், மாநகர சபைகளின் நிர்வாகத்தை மாநகர ஆணையாளர்களுக்கு கீழ் கொண்டுவரவும் நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகத்தை மாநகர செயலாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு கீழ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நீதிமன்றத்துக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் பாதிப்பு – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரி நிதி வழங்குவதை தாமதப்படுத்துவதால் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளோம்.

தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை புதன்கிழமை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக உயர்நீதிமன்றத்துக்கு வாக்குறுதி வழங்கினோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தேர்தல் பணிகளை தொடருமாறு உயர்நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 10 பில்லியன் ரூபாவை திறைசேரியிடமிருந்து முழுமையாக கோரவில்லை. ஆரம்பகட்ட பணிகளை கூட முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை கட்டம் கட்டமாக விடுவிப்பதை திறைசேரி தாமதப்படுத்துகிறது.

நிதி நெருக்கடியால் தபால் மூல வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை அரச அச்சக திணைக்களம் கடந்த திங்கட்கிழமை இடைநிறுத்தியது. நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரியிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவது கடினமானது என திறைசேரி அறிவித்துள்ளது.

நிதி நெருக்கடியினால் எதிர்வரும் 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தபால்மூல வாக்கெடுப்பு மறுஅறிவித்தல் விடுக்கும் வரை பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது நிச்சயமற்றதாக உள்ளது. ஆகவே உயர்நீதிமன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை எம்மால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரி நிதி விடுவிப்பை தாமதப்படுத்துவதால் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் உள்ளமைக்கு வருத்தமடைகிறோம் எனவும், தேர்தல் தொடர்பில் தற்போதைய நிலைவரத்தை உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.