குருந்தூர் மலை விவகாரம்: அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சனை, காணிப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.

இச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அத்துடன் இப்பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகிக்கும்” என ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தவர் குமாரசாமி அவர்கள் – அஞ்சலி உரையில் நிரோஷ்

தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் மதிக்கப்படுகின்றார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது மற்றும் போரம்மா உள்ளிட்ட பல தாயக எழுச்சிப் பாடல்களை இசைத்தவரும் ஓய்வுபெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபருமான செ.குமாரசாமி அவர்களுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை தலைமையில் உடுப்பிட்டியில் நடைபெற்றது.

இதில் அஞ்சலியுரை ஆற்றுகையிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கு எழுச்சிப் பாடல்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. ஒரு இனத்தின் அரசியல், விடுதலை, பொருளாதாரம், இனத்தின் அடையாளம், கலாசாரம், பண்பாடு என எதுவாக இருப்பினும் எதிர்காலத் தலைமுறைக்கு ஊடுகடத்துவதற்கு இசை முக்கிய மூலமாக அமைகின்றது.

இந் நிலையில் யதார்த்த பூர்வமாக தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் தேசிய பற்றுறுதியினை கட்டிக்காப்பதிலும் அமரர் குமாரசாமி அவர்களுடைய பங்களிப்பு அளவிடமுடியாதது. அவர் ஓர் அரச கல்விச் சேவையாளராக ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபராக பதவி வகித்ததுடன் மட்டும் பணியை மட்டுப்படுத்தி விடாது தயாக உணர்வாளனாகவும் எங்களது சமயத்தினையும் மொழியினையும் வளப்படுத்தும் நல்ல ஓர் கலைஞனாகவும் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.

இன்று அவர் மீளாத்துயில் கொள்கின்ற நிலையிலும் அவர் எமது மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் முன்னாள் கல்வி அதிகாரி நடராஜா அனந்தராஜ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர்கள், அரச அதிகாரிகள், முன்னாள் போராளிகள், இசைத்துறை கலைஞர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் எனப் பலரும் இறுதி அஞ்சலியுரையமை குறிப்பிடத்தக்கது

சீனாவினால் அதி நவீன தொடர்பாடல் வாகனங்கள் இலங்கை இராணுவத்துக்கு கையளிப்பு

2017 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த வாகனங்கள் அனைத்திலும் அதிநவீன ஈஎல்டி தொடர்பாடல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. குறுங் அலைவரிசை அமைப்பு, மற்றும் அவசர காலங்களில் நேரடி தகவல் தொடர்பாடலுக்கு உதவும் விமானிகள் அற்ற விமானங்கள் (ட்ரோன்கள்) என்பன பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும்.

மட்டக்களப்பு மயிலத்தமடுவுக்குச் சென்ற மத தலைவர்களை 6 மணிநேரம் தடுத்து வைத்திருந்த பின் விடுவித்த பௌத்த தேரர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது, காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு செவ்வாய்க்கிழமை (22) சென்ற சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து தடுத்து வைத்தனர்.

குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (22) காலை மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு வாகனங்களில் இரு அருட்தந்தையர்கள், ஒரு மெனளவி, இரு இந்து குருக்கள், 3 ஊடகவியலாள்கள் உட்பட 18 பேர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல் ஒரு மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு எல்லை பகுதியில் அமைந்துள்ள கம்பி பாலத்திற்கு அருகாமையில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த பல்சமய மத தலைவர்களின் வாகனங்களை கம்பி பாலத்தில் குறுக்கே தேரர் ஒருவருடனான நூற்றுக்கு மேற்பட்வர்கள் ஒன்றிணைந்து வீதி தடையை போட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை பிடுங்கி எடுத்து அவர்களை தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரை தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இச் சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்த பகுதிக்குச் சென்று பௌத்த தேரர் உடனான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் தேரர் அச்சுறுத்தி அழித்ததுடன் இந்த செய்தியை பிரசுரிக்கக் கூடாது என கடிதம் ஒன்றை வற்புறுத்தி பெற்றுள்ளனர்.

தொடர்ந்தும் பௌத்த தேரர் உடனான குழுவுடன் பொலிசார் பேச்சவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் 6 மணித்தியால தடுத்துவைப்பின் பின்னர் மாலை 6 மணிக்கு விடுக்கவிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர்; சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது பௌத்தர்களின் மனங்களை புன்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என்றும்
அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்துவந்த அரசியல்வாதிகளும், முல்லைத்தீவு நீதிபதியுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சும், நீதி சேவைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, அவரை அங்கிருந்து இடம்மாற்றி வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

புலிகளால் பெளத்த மதத்திற்கு எவ்வித இடையூறுகளும் இருந்ததில்லை – வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்

”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மத தலைவர்கள் ” குருந்தூர் மலை விடயமானது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது. இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது. சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா..?

அவ்வாறு இருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள் எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது சிங்கள பெளத்த என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர். இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப்பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன்,கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.

அந்தவகையில் மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளதோடு எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழாவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடியேற்ற திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எங்கள் எல்லை கிராமங்களை காப்பவர்கள் மலையக மக்களே! – ரெலோ தலைவர் செல்வம் எம். பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள், இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மலையகம் என்பதை நாம் பிரித்து பார்க்க முடியாது காரணம் என்னவென்றால் எங்களுடைய இனத்தின் போராட்டத்திலே பல இயக்கங்கள் உருவாகினாலும் அந்த விடுதலை வேட்கையோடு எங்களுடைய மலையக இளைஞர்கள் அதிலே இணைந்து கொண்டார்கள்.

தங்களுடைய இருப்பிடம் வேறாக இருந்தாலும் உணர்வென்ற அடிப்படையிலே எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்திலே இணைந்து கொண்டதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அது மட்டுமல்ல வன்னியிலே சிங்கள எல்லை கிராமங்களை தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், என்றால் இந்த மலையக தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து எங்களுடைய வன்னி மாவட்டத்திலே வடக்கிலே குடியிருக்கும் மலையக உறவுகளின் தியாகம் தான் அந்தந்த குடியேற்றங்களை பாதுகாத்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலை வேட்கை என்பது எப்படி உருவானது என பாருங்கள், இளைஞர்கள் ஆயுத போராட்டத்திற்கு சென்றார்கள். ஆனால் மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள். இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பத்திலே உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையகம் என்பது மலை சார்ந்த இடம் அந்த மக்கள் ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்கின்ற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் அவர்களுடைய செயற்பாடு, அனைத்து விடயங்கள் அனைத்தும் எம்மோடு ஒன்றிணைத்து போகின்ற சூழல் மலையகத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் எமது இனம் ஒன்று என காட்டுகின்ற அந்த நிலையிலையே அந்த மக்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இம்மலையக மக்கள் எங்கள் நாட்டிலே வாழ அவர்களுக்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அவர்களிடம் இன்று நிலம் இல்லை ஆனால் வேறு யாரிடையோ நிலத்தை காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லை அதனை பெற்றுக்கொடுக்க அரசியற் தலைமைகள் முனைந்தாலும் கூட இந்த அரசாங்கம் இடம்கொடுப்பதில்லை.

கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் வருமானத்தினை உயர்த்துகின்ற பொறுப்பு இம்மக்களுக்கு இல்லை என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டும்.

மலையக புத்தக ஆசிரியர் கூறினார், எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதனால் அது தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வரலாற்று புத்தகத்தில் வரலாறாக வரவேண்டும் என்பதை அழகாக சொன்னார் அதனை நான் வரவேற்கின்றேன்.

எங்கள் மலையக மக்களின் தியாகம் அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியான நிலை இருந்தாலும் கூட இன்றைக்கும் அந்த மண்ணினுடைய விடுதலை என்பது நாங்கள் எல்லோரும் இணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக்கான பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது தான் இந்த வரலாற்றை பார்க்கும் செய்யும் கடமையாக இருக்கும் என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற அத்தனை தமிழ்பேசும் மக்களுக்கு கடமை உரித்து இருக்கின்றது.

மலையகத்தில் வாழும் எம் உறவுகளை தூக்கிவிடுவதும் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றாக இணைந்து வெல்ல வைப்பதும் எமது கடமை என தெரிவித்தார்.

இந்தியா – இலங்கை இடையே படகு சேவைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைவில் அனுமதிக்கும் – தமிழக அமைச்சர் எ.வ வேலு

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா – இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள்மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையைவலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், மானியமாக தமிழக கடல் சார் வாரியத்துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சர், மத்திய அரசுக்குநன்றி.

இந்தியாவை சர்வதேச அளவில்இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவுஅமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத் தும்.

இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது.ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியா – இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமைவளத் துறைமுகத்தை உருவாக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளை இத்துறைமுகம்கையாளும் என எதிர்பார்க்கப்படு கிறது. இவ்வாறு அவர் பேசினார்.