பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யுனிசெவ் அமைப்பின் கௌரவ தூதுவராகவும் செயற்படும் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் நவீன் திசநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுவர்களிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த நிகழ்விலேயே சச்சின் கலந்துகொண்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க ஈரான் ஜனாதிபதி இணக்கம்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெளிவிகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடத்தை தெரிவித்துள்ளார்

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே சீராக வளர்ந்து வரும் உறவுகளைப் பாராட்டியுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானிய நிறுவனங்கள் இலங்கையில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மருத்துவத் துறைகளில் இஸ்லாமிய குடியரசுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வெளிவிகார அமைச்சர் அலிசப்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் பயிற்சி விமானம் விபத்து: இரு விமானப்படையினர் பலி

திருகோணமலை சீனன்குடா விமானப்படைதளத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்து இன்று (07) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பயிற்சியின் போது ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் இருவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வறட்சியினால் யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிப்பு

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21714 குடும்பங்களைச் சேர்ந்த 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கூடுதலாக சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலாளர்  பிரிவுகளில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது.

அந்த வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 15965 குடும்பங்களைச் சேர்ந்த 49160 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3135 குடும்பங்களைச் சேர்ந்த 11160 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1028 குடும்பங்களைச் சேர்ந்த 3146 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 956 குடும்பங்களைச் சேர்ந்த 3067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குடிநீர் விநியோகத்திற்காக தற்போது 6053 குடும்பங்களைச் சேர்ந்த 19704 பேருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாமையால் இலங்கையின் ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு விழுந்த பாரிய அடி என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒன்றையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களின் கட்டுப்பாடின்றி, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், ஆளுநர்கள், செயலாளர்கள், ஆணையாளர்கள் நடத்தும் இந்த ஆட்சி சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என இந்திய உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வு கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது எனவும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் என அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிஸார் அரசியல் மயமாகியுள்ள நிலையில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அச்சமான சூழ்நிலை உருவாகும்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது நாட்டுக்கு அச்சமான நிலைமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி பாராளுமன்றின் ஊடாகவே இறுதி தீர்மனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் எமக்கு தமிழ் மக்களுடன் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் பொலிஸார் அரசியல் மயமாகியுள்ளதாக பொதுமக்கள் பாரிய குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

அவ்வாறானதொரு நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது பொருத்தமற்றதாகும். ஏனென்றால் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள்.

அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள். பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும்.

தற்போது தேசிய ரீதியில் ஒரு பொலிஸ் கட்டமைப்பே காணப்படுகின்றது. இதன்போதே பொலிஸ் கட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் ஒன்பது மாகாணங்களும் பொலிஸ் அதிகாரத்தை கையாளும்போது நாட்டின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ஏற்படுகின்றது.

ஆகவே, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதானது அச்சமான நிலையை ஏற்படுத்துகின்றது. எனவே, மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதித்தே இறுதி தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாகும் என்றார்.

கந்தரோடையில் கி.பி1ஆம் நூற்றாண்டு கால லட்சுமி நாணயங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தமிழ் பௌத்த எச்சங்களின் மீது, தற்போது அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த விகாரைப் பகுதிக்கு அண்மையாக முன்னெடுக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வின் போது லட்சுமி நாணயங்கள் 5 மீட்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ரோமன் நாணயங்களும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஆராய்ச்சி இணைப்பாளர், இலங்கையின் புதிய கூட்டத்திட்ட இணைப்பாளர் கலாநிதி அரெய்ன் டி சாக்சே, கலாநிதி நிமால் பெரேரா, இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த அகழ்வுப் பணியை ஒரு மாதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலே கி.பி 1ஆம் நூற்றாண்டுக்கும் 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படும் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஐந்தும், ரோம நாணயங்கள் சிலவும் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கில் தமிழ் பௌத்தம் நிலவிய காலப்பகுதியில் கந்தரோடையிலும் விகாரை அமைக்கப்பட்டு, தமிழர்கள் வழிபட்டிருந்தனர். இருந்தாலும், தற்போது பிக்குகளின் செல்வாக்கின் கீழான தொல்லியல் திணைக்களம், கந்தரோடையில் விகாரையே இருந்தது என கூறிவந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்து இந்து தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1917 ஆம் ஆண்டு கந்தரோடையில் கள ஆய்வு மேற்கொண்ட போல் பிரிஸ் இவ்வகை நாணயங்களை கண்டுபிடித்து அதில் உள்ள பெண் உருவம் தாமரை மலரில் நிற்பது போல் பொறிக்கப்பட்டுள்ளதை ஆதாரமாக காட்டி அதற்கு லட்சுமி நாணயம் என முதல் முதலாக பெயரிட்டு இருந்தார். அவரால் இடப்பட்ட பெயரே இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாண கோட்டையின் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும், பறாளாய் வர்த்தமானியை மீளப்பெறவும் கோரி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்ப முடிவு

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும் படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.

13வது திருத்தம் தொடர்பில் ரெலோ, புளொட் என்பன தனித்தனியாக யோசனைகளை சமர்ப்பிக்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 கட்சிகளுடனும் கலந்துரையாடி, கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை 10 மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியுள்ளதால், அது தொடர்பில் மட்டும் குறிப்பிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களுடனும் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜனாதிபதி ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு சம்பவங்களை பட்டியலிட்டும், பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட- தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் மீள இந்தியாவிடம் கையளிப்பு

வடக்கில் உள்ள அனலைதீவு, நைனாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை அரசினால் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை அழுத்தங்கள் மூலம் இந்தியா கைப்பற்றியுள்ளது.

12 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த திட்டங்கள் 2021 ஆம் ஆண்டு சீனாவின் செனோசர் எச்வின் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புக்களை இலங்கை அரசுக்கு தெரிவித்ததால் அன்றைய இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா அந்த திட்டத்தை இடை நிறுத்தியிருந்தார்.

சீனா தனது திட்டத்தை மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக சீனாவின் திட்டத்தை நிறுத்திய இலங்கை தற்போது அதனை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

இதனிடையே, மன்னார், பூநகரி மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் போன்ற பிரதேசங்களிலும் எரிசக்தி திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.