இரு பிள்ளைகளுக்கு ரூ.40 ஆயிரம் தேவை – ஹர்ஷ டி சில்வா

முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2020ஆம் ஆண்டு முதல் நாம் கூறியவற்றை இந்த அரசாங்கம் கேட்கவில்லை. அரசாங்கம் பயணிக்கும் பாதை சரியில்லை. இந்த முறையில் பயணித்தால் நாடு வீழும், பணவீக்கம் ஏற்படும், பொருள்களின் விலைகள் அதிகரிக்கும், வட்டி வீதங்கள் அதிகரிக்குமென எச்சரித்தோம். ஆனால், நாம் கூறிய எதனையும் கேட்கவில்லை. நாம் இவ்வாறு கூறும்போத சிரித்தார்கள். அரசாங்கம் திமிர் பிடித்திருந்ததால் சுயவிமர்சனத்தைக்கூட செய்யவில்லை. இறுதியில் நாம் எச்சரித்த அனைத்தும் நடந்தது.

நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டி யெழுப்ப முடியாது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் – என்றார்.

இனப்பிரச்சனை தொடர்பான பேச்சு: இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ கலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது என்றும் நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரந்தாலும் அப்போது அரசாங்கத்திற்குல் ஏற்பட்ட பிரச்சினையால் தட்டிக்கழிக்கபட்டது என்றார்.

தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ நா தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம், பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இருக்கலாம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் சந்தேகம் வெளியிட்டார்.

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்- ரெலோ சபா.குகதாஸ்

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாடுகள், எருமைகள் ,ஆடுகள் என ஆயிரத்துக்கு அதிகமான கால் நடைகள் இறந்துள்ளன.  இதனால் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல கோடி ரூபா பெறுமதியான தங்களது கால்நடைகளை இழந்துள்ளமையால் அவர்களது வாழ்வாதார மீட்சிக்கு அரசாங்கம் விரைவாக இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க செயலாளர்கள்  துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்தியஸ்தம் அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.

3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது.

அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது. ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்டன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும்.

இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் பாரதி விழா

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது.இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம் நெஞ்சில் ஆழப் பதிவது – சமூகப் பாடல்களாலா ? அல்லது பக்திப் பாடல்களாலா ? என்ற பொருளில் பட்டிமன்றம் இடம்பெற்றது.

 இதில் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் கம்பநேசன் இ. வாசுதேவா ,  ந. விஜயசுந்தரம், செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.நிகழ்வின் தொடக்கமாக நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா இயக்குநர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் அவர்களின் நெறியாள்கையில் பாரதி பாடல் நடனமும் இடம்பெற்றது.

யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியது. இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.

பொருளாதார நெருக்கடியால் 200 மில்லியன் பெறுமதியான நகைகள் அடகு வைப்பு

ணக்கெடுப்பொன்றின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

உரிமம் பெற்ற 13 வணிக வங்கிகள் மற்றும் 10 அடகு நிலையங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கத்தை அடகு வைத்தவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் அடகு நிலையங்களில் அதிக பணம் கிடைக்கப்பெறுவதால், அந்த சேவையை பெறுவதற்கு தற்போது நுகர்வோர் அடகு நிலையங்களை அதிகளவில் நாடுவதாகவும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்க்ததில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம்.

குறுகிய காலத்துக்குள் மக்கள் பலத்துடன் வளர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க இடமளிக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோட்டா கோஹோம், பசில் கோஹோம் என்கிற பெரிய புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி செய்தது. குறுகிய காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டுக் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றி கிடைத்தது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க கோழைகள் சதி செய்கிறார்கள். ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன். எங்களை அழிக்க நினைப்பவர்கள் மக்களோடு இணைந்து எங்களை அழித்து தோற்கடித்துக்காட்டுங்கள்.

அரசாங்கத்துக்குள்ள தீர்வு மின், நீர் கட்டணங்களை அதிகரிப்பதல்ல. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை.

அதற்காக அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாது. அவர்களின் தொழில் உரிமை காதுகாக்கப்படவேண்டும் . அரச, , தனியார் கூட்டுமுயற்சிகளின் ஊடாக நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமடையச் செய்யலாம் .

மேலும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சிக்குள் பிளவுபடாத இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர நடவடிக்கை எடுப்போம். அதேபோல் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பில் அடைப்படை உரிமைக்குள் சேர்ப்போம். மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்காக மக்களோடு ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை.

மேலும் எமது அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியப் புதியச் சட்டம் கொண்டுவருவோம். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொடவை தாராளவாதிகள் மறந்துவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.

நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை மீள நாட்டுக்குக் கொண்டுவருவேன். அத்துடன் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டத்தால் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பக்கமாக ஐக்கிய மக்கள் சக்தி நிற்பது மாத்திரமன்றி, போராட்டக்காரர்களால் முன்னெடுத்தப் புரட்சியை கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்

எனவே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியுமான நாட்டுக்கு உள்ள ஒரே தீர்வு, ஒரே மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இலங்கைக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் உள்ளது – ரணில்

ஜப்பானுக்கு அடுத்ததாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க திட்டமிடப்பட்ட எமது நாடு இன்று ஆப்கானிஸ்தானை விட ஒரு படி மேலுள்ளது.

எமக்கு அடுத்த படியாக ஆப்கானிஸ்தான் மாத்திரமேயுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரிக்குமாறு நான் ஆலோசனை வழங்கியிருக்கின்றேன். நாம் இந்நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்தவொரு எதிர்காலத்தை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் என்ன செய்யவுள்ளோம் என்பதை தெரிவிப்பதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றமடைய வேண்டும். ஜப்பானுக்கு அடுத்ததாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க திட்டமிடப்பட்ட எமது நாடு இன்று ஆப்கானிஸ்தானிக்கு மாத்திரம் ஒரு படி மேலுள்ளது. வாக்களித்த பெரும்பாலான இளைஞர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். எவ்வாறிருப்பினும் இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் கருதுருகின்றேன்.

அடுத்த வரும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான அலுவலகம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களை தடுப்பதற்காக கருத்துள்ள நிலைப்பாடுகளை வெளிப்படையாக பேசுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது என்றார்.

மத்திய வங்கி சுயாதீனத்தன்மையை இழந்து அரசியல் மயமாக்கப்பட்டமையே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் – சாலிய பீரிஸ்

நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணம் மத்திய வங்கி அதன் சுயாதீனத் தன்மையை இழந்தமையும் , அரசியல் மயப்படுத்தப்பட்டமையுமே ஆகும்.

எனவே மத்திய வங்கி மாத்திரமின்றி நீதித்துறை உட்பட ஏனைய அனைத்தும் சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். அதற்கு மக்கள் தமது இறையான்மையைப் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (10) இலங்கை மன்றக்கல்லூரியில் சிவில் சமூக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஆணைக்குழுக்களை பலப்படுத்த வேண்டும். அவற்றில் முதன்மையானது நீதி மன்றமாகும். அதே போன்று மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல் , அரச சேவைகள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை வலுப்படுத்த வேண்டும். வலுப்படுத்துவதோடு மாத்திரமின்றி அவற்றை சுயாதீனப்படுத்த வேண்டும்.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய இந்த ஆணைக்குழுக்களை புதிதாக நியமிக்கவுள்ளனர். இவற்றுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் அரசியலமைப்பு பேரவையானது , பொறுத்தமான நபர்களைக் கொண்டுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையாகக் காணப்படுவதோடு மாத்திரமின்றி , மக்களுக்கு பொறுப்பு கூறும் நிறுவனங்களாகவும் இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணம் மத்திய வங்கி அதன் சுயாதீனத்தன்மையை இழந்தமையாகும்.

மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமையானது நாடு இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொள்வதில் தாக்கம் செலுத்தியுள்ளது. எனவே இவ்வாறான நிறுவனங்களை பலப்படுத்துவதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

இவற்றுக்காக குரல் கொடுக்கும் போது எமக்கு பல்வேறு தடைகள் அல்லது இடையூறுகள் ஏற்படக் கூடும். எவ்வாறிருப்பினும் எதிர்கால சந்ததியினருக்காக நாம் இவற்றை கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

வாக்குரிமையானது இறையான்மை பலமாகும். மக்களிடமே அந்த இறையான்மை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையே இறையான்மை குறித்து சிந்திக்கின்றனர். இது தவறாகும். இறையான்மை குறித்து அன்றாடம் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.