வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.
ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.
யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.
வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.
இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாரிய தவறிழைத்துள்ளார என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அடுத்த ஆண்டு (2024) தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவர் வாய் திறக்கவில்லை.
எனினும், 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலும் அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்று ஜனாதிபதியும் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
இதேவேளை, எந்தத் தேர்தல் நடந்தாலும் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருக்கும் என்று பிரதமர் தினேஷ் மேலும் கூறினார்.
“தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” என்பதை போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை வரவு செலவு திட்டத்தில் எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர் என தெரிவித்துள்ளார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மரம் ஓய்வெடுக்க விரும்பினாலும் காற்று ஓய்வெடுக்க விடுவதில்லை என்றார் தோழர் மாவோ. மௌனமாக இருக்கத்தான் நான் முயன்றாலும் காற்று மரத்தை அலைக்கழிப்பதைப்போல இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நானும் அலைக்கழிக்கப்படுகின்றேன். இந்தக் காற்றசைவில் நான் இசையாவிட்டால் எம் மக்கள் பிரதிநிதியாக இப் பாராளுமன்றத்தில் இருப்பதில் பயன் என்ன?
இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுவது வழமையான சம்பிரதாய பூர்வமான நிகழ்வேயொழிய, ஆக்க பூர்வமான நிகழ்வொன்றல்ல என்பதையே இந்த வரவுசெலவுத்திட்ட விவாத உரைகள் சுட்டி நிற்கிறது.
ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் என்பது வெறுமனே இலக்கங்களுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் மட்டுப்பட்டதல்ல. மாறாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான, நாட்டின் ஆக்கபூர்வமான, அறிவு பூர்வமான, விஞ்ஞான பூர்வமான, அடையக் கூடியதான ஏற்கத் தக்கதான, ஏற்புடைத்தான, முன்மொழிவுகளை எடுத்தியம்பவேண்டும். அது நம்பகத்தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வைப் பிரகடனப்படுத்துவதாகவோ, நிவாரணங்களை எடுத்துரைப்பதாகவோ இருக்கக் கூடாது. ஆனால், கடந்த பல தசாப்தங்களாக எம் ஆட்சியாளர்கள். வரவு செலவுத்திட்டத்திற்கு பிழையான வரைவிலக்கணத்தை மக்கள் நம்பும் படி வளர்த்துவிட்டார்கள். அத்தகைய பிழையான வரைவிலக்கணத்துக்குட்பட்ட வரவுசெலவுத்திட்டமே இந்த வரவுசெலவுத்திட்டம் என்பது என்கருத்தாகும்.
ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் அந்த நாட்டின் அடுத்த வருடத்துக்கான வருமான மூலங்கள் பெறும் வழிகள், பெறத்தக்க மூலகங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து, பெறத்தக்க தொகைகள் எவ்வளவு வரி வருமானங்களிலிருந்து பெறத்தக்க வருமானங்கள் எவ்வளவு, வெளிநாட்டு உதவிகள் ஊடாக பெறுபவைகள் எவ்வளவு, உள்நாட்டு வருமான மூலங்களிலிருந்து பெறப்படுபவைகள் எவ்வளவு என்று பிற வருமான மூலங்களிலிருந்து பெறுபவற்றை தெளிவாக எடுத்துரைப்பதோடு, நாட்டின் அடுத்த வருட செலவீனங்கள் தொடர்பாக மூலதனச் செலவு மீண்டெழும் செலவு இவையாவும் துறை ரீதியாக அலசி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து அதை வெளிக் கொணர வேண்டும். வருமானத்துக்கும் செலவீனத்துக்குமான துண்டுவிழும் தொகை எவ்வளவு. துண்டு விழும் தொகை எவ்வாறு சீர் செய்யப்படும் என்பதெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் எடுத்தியம்பப்பட வேண்டும்.
வரவு செலவுத்திட்டம் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் எவ்வாறு அடையப்பட வேண்டும். சிற்றினப் பொருளாதாரம் பேரினப் பொருளாதார கொள்கைகள் இக்காலத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும். அவற்றை அடைவதிலுள்ள சவால்கள் சிக்கல்கள், அதை எதிர்நோக்கி மீண்டெழும் திட்டங்கள் யாவும் உள்ளடக்கப்படவேண்டும். அது மட்டுமல்ல அவை நடைமுறைக்கு சாத்தியமானதாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
எமது நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச வருமான இலக்கு 4ஆயிரத்து 127 பில்லியன் ரூபா, உத்தேச செலவீனம் 6ஆயிரத்து தொள்ளாயிரத்து 78 பில்லியன் ரூபா, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 2ஆயிரத்து எண்ணுற்றி 51 பில்லியன் ரூபா. ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையில் இத்தகையதொரு பாரிய பற்றாக்குறை பொருளாதார அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தொகையாகவே நான் கருதுகின்றேன். இத்தகைய வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை வைத்துக் கொண்டு நிதியமைச்சர் முன்மொழிந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் இலக்குகளை அடைய முடியுமா என்பது தொடர்பாக, எனது கருத்து நமது நாட்டுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கொன்றே தேவையாகும். அலாவுதீனின் அற்புத விளக்கொன்று இல்லாவிட்டால் இந்த வரவு செலவுத்திட்ட இலக்குகளை எம்மால் அடையும் இயலுமை உள்ளதா என்பதை எனது பொருளியல் அறிவு என்னைக் கேள்விக்குட்படுத்துகிறது.
இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால் அதைக் காழ்ப்புணர்வு எனக் கூறி கடந்து விடலாம். ஜே.வி.பி. யினர் விமர்சித்தால் ‘ஏக்கத்தமாய் மூ’ எனக் கூறித் தப்பிக்கலாம். தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சித்தால் ‘அற கொட்டியாலா மேக்கத் தமாய் கியனவா’ எனக் கூறிக் கடந்துவிடலாம். ஆனால், வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முடிந்த கையோடு இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்க் கட்சியினர் விமர்சிக்க முன்னர் அதிகம் விமர்சித்த பிரமுகர்கள் ஆளும் பொது ஜன பெரமுன கட்சியினரே. பொது ஜன பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர் நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த வரவு செலவுத்திட்டமானது பொது ஜன பெரமுன கொள்கைக்கு ஏற்புடையதல்ல என்றார். இது தொடர்பாக நாம் ஆலோசிப்போம் என்றார். அப்படியானால் இந்த வரவு செலவுத்திட்டம் ஆளும் கட்சியினுடைய வரவு செலவுத்திட்டமா இல்லை, ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டமா?
ஆட்சியாளர்களுக்குள்ளேயே இத்தனை குழறுபடியெனில் எதிர்க்கட்சிகள் எப்படி ஆதரிக்கும் என நிதி அமைச்சரும் ஆளும் கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்?
எமது நிதி அமைச்சரே ஜனாதிபதியாகவும் உள்ளார். இந்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் குறுகிய காலத்தில் கூடிய தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அவரது அறிவு, ஞானம், புத்தி கூர்மை, தர்க்க வாதத்திறன், சர்வதேச அறிவு, சட்ட அறிவு பற்றி நான் நன்கு அறிந்தவன். அதை ஏற்றுக் கொள்பவன். ஆனால் அவர் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை மட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
எமது ஜனாதிபதி அவர்கள் இன்னும் பழைய புண்ணைப் பிச்சைக்காரன் தோண்டுவதைப்போல வங்குரோத்தான நாட்டை நான் பாரமெடுத்தேன். அழைப்பு விடுத்த எவரும் நாட்டைப் பாரமெடுக்க முன்வராத போது நான் நாட்டைப் பாரமெடுத்தேன். அன்று வரிசை யுகம் இருந்தது. மின்சாரமில்லை. இருண்ட யுகத்துக்குள் நாடு இருந்தது. போதிய மருந்தில்லை. சுகாதாரக் கட்டமைப்பு சீரழிந்திருந்தது என்று இது போல பண்டைக் கதைகள் பேசுவதில் இனிப் பயனில்லை. எவரும் இத்தகைய சவால் மிக்க நிலையில் நாட்டை ஏற்க முன்வராத போது இத்தகைய சவால்களைச் சமாளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்பின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப நீங்கள் ஜனாதிபதி ஆகியுள்ளீர்கள். எனவே இன்று உங்கள் முன்புள்ள முக்கிய கடமை பண்டைப் பழங்கதைகள் பேசுவதல்ல. உங்கள் முன்னுள்ள சவால்களை வெற்றி கொண்டு காட்டுவதேயாகும்.
இன்று நம் நாட்டின் யதார்த்த நிலை ஆளும் கட்சியினரே ஆட்சி மீது அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, தமிழத் தேசியக் கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, அரச உத்தியோகத்தர்கள், தொழில்சார் நிபுணர்கள் ஆட்சி மீது அதிருப்தி, புத்திஜீவிகள் ஆட்சி மீத அதிருப்தி, பொது மக்கள் ஆட்சி மீது அதிருப்தி, எங்கெங்கு நோக்கினும் அரச கட்டமைப்பில் ஊழல் இதனால் அனைவரும் அதிருப்தி. இப்படி நாட்டில் எட்டுத் திசையும் ஆட்சி மீது அதிருப்தி எனில் எம் நாடு எப்படி வளம் பெறும்.
இப்படியொரு நாட்டில் ஆட்சி மீது சகல பிரிவினரும் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்று உரையாற்றும் போது அன்று நான் பாடசாலையில் ஐரோப்பிய வரலாறு கற்ற அனுபவம் ஒன்று ஞாபகம் வருகிறது. அதுவும் உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட முக்கிய ஆண்டான 1789ஆம் ஆண்டு எனக்கு ஞாபகம் வருகிறது. அதுதான் மாபெரும் பிரஞ்சியப் புரட்சி. அன்றைய பிரஞ்சியப் புரட்சியை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் பிரான்சில் அத்தகைய புரட்சி ஏற்படுவதற்குக் காரணம் அந்த நாட்டின் அனைத்துப் பிரிவினரும் அதிருப்தியில் இருந்தார்கள். அதுதான் புரட்சிக்கான கருவினை விதைத்தது. குறிப்பாக பிரபுக்கள், மேன் மக்கள், மத்திய தர வர்க்கத்தினர், உழைப்பாளர்கள், புத்திஜீவிகள் என்று இவர்கள் மத்தியில் தோன்றிய அதிருப்தியே பிரஞ்சியப் புரட்சிக்கு வழி கோலியது. பிரான்சில் ஏற்றத்தாழ்வு மறைந்து சமத்துவம், சகோதரத்துவம் மிளிர வழி சமைத்தது.
அந்தப் பிரஞ்சுப் புரட்சியின் குழந்தையே மாவீரன் நெப்போலியன். பிரான்ஸ்சின் “அரகலய“விலிருந்து நெப்போலியன் தோன்றியதைப் போல நமது நாட்டின் சகல பிரிவினரதும் அதிருப்தி ஏற்படுத்திய அரகலயவின் குழந்தையாக நீங்கள் ஜனாதிபதியாகியுள்ளீர்கள். இன்னுமொரு புதிய அரகலயவில் நீங்கள் புதையக் கூடாது என்பது என் அவா. உங்கள் புத்தி ஜீவித் தனத்தை சொற்பொழிவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தாது உங்கள் அறிவு ஞானத்தை, வாத விவாதத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாது நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணியுங்கள். நாட்டில் எங்கும் எதிலும் புரையோடிப் போயுள்ள ஊழல்களைக் களைய உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள். நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கு உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
நமது நிதியமைச்சர் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பிக்கும் போது கௌதம புத்தரின் ‘சம்ஜீவி கதா,” அதாவது கௌதம புத்தர் அவர்களின் சமநிலை வாழ்க்கைச் சூத்திரத்தை எடுத்துரைத்தார். இடையிடையே மக்களின் வாழ்வு இன்பம், துன்பம், இயலுமை, இயலாமை, வறுமை, செல்வம், தொடர்பான பல கௌதம புத்தரின் சூத்திரங்களையும் எடுத்துரைத்தார்.
பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் நிகழ்த்தப்பட்ட வரவு செலவுத்திட்ட உரையின் பெரும்பாலான இடங்களில் கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்கள், எடுகோளாக மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டது. அச் சூத்திரங்களின் கருவும் உருவும் கௌதம புத்தரின் ஜீவ அணுவும் இந்து மதத்திலிருந்தே உருவானது. இந்து மதத்தின் கருத்தியலிலிருந்து பெறப்பட்டது வரவு செலவுத்திட்டத்துக்காக கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்களை நாடும் நம் ஜனாதிபதி அவர் மூப்பு, பிணி, சாக்காடு கண்டு மக்களின் துன்ப நிவர்த்திக்காக குரல் கொடுத்து, மானிடத்தைப் பேணி, உலக வாழ் உயிர்கள் மீது அவர் கொண்ட கருணையினை தன் பாராளுமன்ற உரையில் என்றாவது வெளிப்படுத்தியிருந்தால் அவர் மீது இன்னும் என் மதிப்பு அதிகரித்திருக்கும்.
இந்த வரவு செலவுத்திட்டம் கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் தொடர்ச்சி. கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பு என்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் எடுத்துரைத்துள்ளனர். இது தொடர்பாக எமது நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் உரையாற்றும் போது ஆங்கில இலக்கிய வித்தகர் சேக்ஷ்பியர் நூலின் மறுபதிப்பு சிங்கள இலக்கிய வித்தகர் மாட்டின் விக்கிரம சிங்கவின் நூலின் மறுபதிப்பு, எவ்வளவு முக்கியம், எவ்வளவு சிறப்பு அது போலத்தான் இந்த வரவு செலவுத்திட்டமும் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பென்றால் அத்தகைய நூலாசிரியர்களின் நூல்களின் மறுபதிப்புக்குள்ள பெருமை போல இந்த வரவு செலவுத்திட்ட மறுபதிப்புக்கும் பெருமைதானே என்றுரைத்தார்.
நீதியமைச்சர் அவர்களே வில்லியம் சேக்ஷ்பியர் உலகளாவிய மதிப்புறு படைப்பாளி மார்டின் விக்கிரமசிங்க நம் நாட்டின் மதிப்புறு படைப்பாளி அவர்களது படைப்பொன்றும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்பானதல்ல.
அவற்றின் மறுபதிப்பு மாண்புறுவது, சிறப்புறுவது. ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பென்பது அந்நாட்டின் நிதி முகாமைத்துவத்தின் நிருவாக கட்டமைப்பின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் ஆட்சியாளர்களின் சீரழிவைக் குறித்து நிற்பது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைவை தேக்கத்துக்குட்படுத்துவது. நீங்கள் கடந்த கால வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பாக இந்த வருட வரவு செலவுத்திட்டத்தினை நோக்குவதன் மூலம் இதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலமான எனது ஒட்டு மொத்த சுருக்கமான கணிப்பு எங்கள் தமிழ் மொழியில் கூறுவார்கள் “தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” அது போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர்.
எனக்கு பழைய சிங்கள யாதகக் கதையொன்று இந்த வரவு செலவுத் திட்ட உரையை முடித்து வைக்கும் போது ஞாபகம் வருகிறது.
“ஒரு கொடுங்கோல் மன்னன் ஒரு நாட்டை ஆட்சி புரிந்தானாம். இன்றைய நமது நாட்டு ஆட்சியாளர்கள் போல அவன் சொல்வதே வேதவாக்காகும். ஒரு நாள் அவனுக்கோர் விசித்திரமான ஆசை வந்ததாம் உலகில் எவரும் அணியாத ஆடையொன்றை தான் அணிந்து அரச அவையையும் நாட்டு மக்களையும் மகிழ்விக்க வேண்டுமென்று, இதை மன்னன் அரசவையில் அறிவிக்க அரசவையும் உடனே முரசறைந்து இதுவரை எந்த அரசர்களும் அணியாத ஆடையை நம் மன்னர் அணிய வேண்டும். இதனை ஆடை தயாரிப்பவர்கள் தயாரிக்க வேண்டுமென்று அறிவித்தார்களாம்.
எவருக்குமே இதைத் தயாரிக்க முடியவில்லை. ஆனால், அந் நாட்டிலிருந்த என் போன்ற எதிர்க்கட்சி புத்தி ஜீவி ஆடை தயாரிப்பாளன் அன்று, இல்லாத ஆடையொன்றை எடுத்துச் செல்வது போல் பாவனை செய்து அரண்மனை சென்று அந்த ஆடையை அணிவிப்பது போல் அபிநயம் செய்து, மன்னரே இந்த ஆடை உங்களுக்கு எவ்வளவு அலங்காரமாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு மன்னனும் இவ்வாறான ஆடை அணிந்ததில்லை என்று கூற அரசனும் அக மகிழ்வு கொண்டு, தன் அமைச்சர் குழாமிடம் எப்படி இந்த ஆடையென்று கேட்டானாம். அதற்கோ அமைச்சர்கள் ஐயோ அபாரம், அற்புதம் இத்தகைய ஆடையொன்றை நாம் கண்டதில்லை என்று புகழ்ந்தார்களாம். அந்தப் புகழ்ச்சியில் மகிழ்ந்த மன்னன் மக்களுக்கு தன் ஆடையின் மதிப்பைக் காட்ட நகர் வலம் வந்தானாம். மன்னனைப் பற்றியறிந்த மக்களோ அணியாத நிர்வாண ஆடையினை புகழ்ந்து மகிழ்ந்தார்களாம். அப்போது ஓடிவந்த சிறுவன் ஒருவன் ஐயோ! அரசே அம்மணமாக வருகின்றீர்களே! உங்களுக்கு ஆடையில்லையா? என்று தன்னுடையைக் கொடுத்தானாம். அப்போதுதான் மன்னன் தன் அம்மணம் உணர்ந்தானாம். இதுதான் இந்த வரவு செலவுத்திட்டம் மீதான என்பார்வை.
சுற்றியிருப்பவர்கள் அறிவுரை சொல்பவர்கள் பதவி அனுபவிப்போர், பதவிக்காய் காத்திருப்போர், உங்கள் அம்மணத்தைக் காண்பிக்க மாட்டார்கள். நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இளைஞர் கழக அங்கத்தவராக இருந்து உங்களுடன் பழகியவன், அறிந்தவன் என்ற வகையில் அந்த அரசனின் அம்மணத்தைச் சுட்டிக்காட்டிய சிறுவனாக உங்கள் வரவு செலவுத்திட்டத்தின் அம்மணத்தை விமர்சிக்கின்றேன். இது விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. நம் நாடு தொடர்பானது.
இப்போது எனக்கு பிரபலமான சினிமாப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது. காதலியை நோக்கி காதலன் பாடுகின்றான். உன்னைவிட்டால் யாருமில்லை என் கண்மணியே என் கையணைக்க என்று.
எம் நாட்டை நினைத்து இன்றைய நிலையில் நான் பாடுகின்றேன் உங்களை நோக்கி, உம்மைவிட்டால் யாருமில்லை எம் நாட்டை இன்று மீட்பதற்கென்று. மீட்பீர்களா? மீட்பீர்கள் என்ற நம்பிக்கையில் என்னுரையை முடிக்கின்றேன் என்றார்.
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .
பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.
இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (22) முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் RM Parks Inc நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது
“RM Parks Inc. மற்றும் Shell இணைந்து 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயல்படுத்தவுள்ள நிலையில் EV சார்ஜிங் வசதிகளுடன் கூடிய மினி-சூப்பர் மார்கெட்டுகளின் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
காலநிலைக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான நீர் வழங்கல் கட்டமைப்பு முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் நீர் செயல்பாடுகளின் கட்டுப்பாடு, நிலைத்தன்மை, செயல்திறன், தாங்கும் திறன் மற்றும் கொள்ளளவு தொடர்பாக கொள்கைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் பிரதமர் அலுவலகம், நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட உள்ளது.
இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார்.
மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்ஸு பதவியேற்பு நிகழ்விற்காக மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை இதன்போது வலியறுத்தியதாக சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் அண்மையில் 550 மில்லியன் முதலீடு செய்தது.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய சமந்தா பவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதில் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
அகழ்வுப்பணி தொடர்பாக இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அகழ்வு பணி நாளை 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும். இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.