பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்தது இராணுவ புலனாய்வுப் பிரிவின் ‘திரிபோலி’ குழுவே

விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனே எமக்கு தகவல்களை வழங்குவார் எனவும் அதற்காகவே நாம் அவரைப் பயன்படுத்தியதாக இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்

அதேவேளை இராணுவப் புலனாய்வுப்  பிரிவில் உள்ள குழுதான், கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் சுட்டிக்காட்டினார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் ‘திரிப்போலி’ என்ற கொலைக் கும்பல். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் தெரிவித்தார்.

திம்புலாகல சிங்கள மக்களை வெளியேற்றின் தமிழ் – சிங்கள இனக்கலவரம் உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை

மட்டக்களப்பு – திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு திம்புலாகல பகுதியில் வாழும் சிங்களவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள்  சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இன பரம்பலை இல்லாதொழித்தார்கள்.

திம்புலாகல சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே திம்புலாகல சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள -தமிழ் இன முரண்பாடு தோற்றம் பெறும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

இலங்கை – ஐ.எம்.எப் முதல் மதிப்பாய்வில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டப்பட்டது

இலங்கை-ஐ.எம்.எப் முதல் மதிப்பாய்வில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டப்பட்டது

சர்வதேச நாணய நிதியமும், இலங்கையும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஆதரவு வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் மதிப்பாய்வுக்கு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன ஜனாதிபதி – இலங்கை ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  கடந்த 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப்  பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுக்கு பாலஸ்தீன- இஸ்ரேல் யுத்தத்தினை நிறுத்தக்கோரும் யோக்கியதையில்லை – ஜனா எம்.பி

சொந்த நாட்டு மக்களையே பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவும், கொத்துக் குண்டுகள் மூலமாகவும், வான்வழிக் குண்டுகளாலும் கொன்றொழித்த இலங்கை அரசுக்கு பாலஸ்த்தீன- இஸ்ரேல் யுத்தத்தினை நிறுத்தும் படி கோருவதற்கு எந்தவிதமான யோக்கியதையோ அருகதையே இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமுன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் (20) மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது.

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

 தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பை ஏற்று ஹர்த்தாலை அனுஷ்டித்த உறவுகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

அதுமாத்திரமல்லாமல் உண்மையிலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்து தனக்கு அச்சுறுத்தல் எனக் கூறி நாட்டை விட்டு வெளியேறிய நீதவானுக்காக மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கிலே நடைபெறும் அத்துமீறல்களுக்கும் பௌத்த மயமாக்கல்களுக்கும் மட்டக்களப்பில் நடைபெறும் மேய்ச்சல் தரைப்பிரச்சினை அனைத்தையும் உள்ளடக்கியே நாங்கள் இன்றைய தினம் தமிழ் பேசும் மக்களை ஹர்த்தாலை அனுஷ்டிக்கும்படி கேட்டிருந்தோம்.  அந்த வகையில் அனைத்து மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்தோடு இன்றைய தினம் மின்சாரக் கட்டணம் 18 வீதத்தினால் உயர்த்தப்படுகின்றது. அதாவது சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டாவது கட்ட நிதி உதவி கொடுப்பதற்காக இலங்கையின் திறைசேரியில் பணம் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கமைய அந்த பணத்தை வைத்துக் கொள்வதற்காக எங்களுடைய நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து அவர்களது மின்சாரக் கட்டணத்தினை 18 வீதத்தினால் உயர்த்தி அந்தப் பணத்தைச் சேகரித்து சர்வதேச நாணய நிதியத்திற்குக் காட்டுவதற்காக கடந்த கொரோனாக் காலமிருந்தே கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் வயிற்றிலடிக்கும்   ஒரு செயலாகவே நாங்கள் இதை பார்க்கின்றோம்.

அந்த வகையில் அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டு மக்களை வஞ்சித்து கொண்டு வருகின்றது. அந்த வஞ்சிப்புக்கு எதிராக நாங்கள் எங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கியமாக இந்த பத்திரிகையாளர் மகாநாட்டை நான் கூட்டியதற்கான காரணம், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேடமாக ஒரு ஒத்திவைப்புப் பிரேரணை வந்திருக்கிறது.அதாவது, மத்திய கிழக்கு நாடுகளிலே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகளிடமும் போர் செய்து கொண்டிருக்கும் அந்த பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளிடம் அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வேண்டி இந்த ஒத்திவைப்பு பிரேரணையைக் கொண்டுவந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் கேட்பது என்னவென்றால் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு 2009ஆம் ஆண்டு எங்களது யுத்த முடிவுற்ற நேரம் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் நடைபெறாத விடயமா?

இன்று மத்திய கிழக்கு நாடுகளில் வருகிறது. 14 வருடங்களுக்கு முன்பு 7சதுர கிலோ மீட்டருக்குள்ளே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை திறந்த வெளி சிறைச்சாலையில் அடைத்து வைத்ததை போல், அவர்களை அந்த 7 சதுர கிலோமீட்டருக்குள் அவர்களை வைத்து பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவும், கொத்துக் குண்டுகள் மூலமாகவும் வான்வழி மூலமாகவும் அழித்து அதிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் மனித உயிர்களை பலி எடுத்த இந்த இலங்கை அரசாங்கம், அதுவும் சொந்த நாட்டிலே சொந்த மக்களை பலி எடுத்த இந்த இலங்கை அரசு எவ்வாறு போரா முடிவுக்குக் கொண்டுவரும்படி கோர முடியும்.

இஸ்ரேல்- பலஸ்த்தீனம் ஆகிய இரண்டு நாடுகள் போர் புரிகிறார்கள். மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உயிர்கள் பலி எடுக்கப்படக் கூடாது என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த போரை நிறுத்தும்படி கேட்பதற்கோ இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை.

எந்தவிதமான யோக்கியதையும் இல்லை. எந்த விதமான அருகதையும் இல்லை. அதாவது பாலஸ்தீனத்தில், இஸ்ரேலில் மனிதர்கள் கடத்தப்படுகின்றார்கள். அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். அது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கூறும் இலங்கை அரசாங்கம் தங்களது உறவினர்களால் தங்களது கண்முன்னே கையளிக்கப்பட்ட உறவுகள் கூட இன்று படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் இருக்கின்றன.

கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற சடலங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களதாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் இருக்கும்போது, இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான அருகதையுமில்லை. நாங்கள் மனித உயிர்ப்பலிக்கு எதிரானவர்கள். பாலஸ்தீனம் – இஸ்ரேலிடையே நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை. ஆனால் இலங்கை அரசுக்கு இதைக் கேட்பதற்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்பதைத்தான் நாங்கள் கூறுகின்றோம்.

அத்தோடு 2009இல் அத்தனை உயிர்களையும் பலி கொடுத்த இலங்கை அரசு இன்றுவரை இந்த இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காணாமல் தொடர்ச்சியாக  மனித உயிர்களை பலி கொடுத்ததற்கு மேலாக வடகிழக்கு பிரதேசங்களை பௌத்த மயமாக்கி இங்கு சிங்களவர்கள் தான் ஆதியிலிருந்து வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, அங்கே ஒரு சமாதானம் வேணும் என்று கேட்பதற்கு எந்தவிதமான அருகதையும் யோக்கியதையும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க காட்டர் சென்டர்  பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (18) கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது நடைபெறவிருக்கும் தேர்தல்களின் போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதே போன்று வாக்காளர்களை அறிவூட்டக்கூடிய நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில் கபே அமைப்பு சார்பாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் மன்னாஸ் மக்கீன் மற்றும் சட்டத்துறை பணிப்பாளர் ஹரேந்ர பானகல மற்றும் காட்டர் சென்றர் பிரதிநிதிகளான சஹிரா சகீட், தாரா செரீப்,மார்க் ஸ்டீவன்,தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான சீஎம்இ, பெப்ரல்ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெசனல், ஐரெக்ஸ் ஆகியவற்றை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

சீனாவின் துறைமுக நகரத்தை ஊக்குவித்தமைக்காக கடும் விமர்சனங்களை எதிர் கொள்ளும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர்

இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்கள் இந்தோ பசுபிக்கில் சீனா ஆழமாக காலடி பதிப்பதற்கு உதவலாம் என்ற  கரிசனைகளிற்கு மத்தியில் இலங்கையில் சீனா நிதியுதவி உடனான துறைமுக நகரத்தை ஊக்குவித்தமைக்காக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகநகரத்திற்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் அந்த திட்டம் குறித்து உரையாற்றுவதற்காக செப்டம்பர் மாதம் டேவிட் கமரூன் மத்தியகிழக்கிற்கு சென்றார் என பொலிட்டிக்கோ தெரிவித்துள்ளது.

சீனாவின் சர்வதேச உட்கட்டமைப்பு திட்டமாக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய பகுதி இந்த கொழும்பு துறைமுக நகரம்.சிங்கப்பூருக்கு போட்டியாக இது உருவாக்கப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது.

கொழும்புதுறைமுக நகரத்தின் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே டேவிட்கமரூன் இணைத்துக்கொள்ளப்பட்டார் என இலங்கையின் முதலீட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் டிலும் அமுனுகம பொலிட்டிக்கோவிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிட்டிக்கோ மேலும் தெரிவித்துள்ளதாவது

டேவிட் கமரூன் இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றியிருந்தார் அபுதாபியில் அவர் கலந்துகொண்ட நிகழ்வில் 100 பேர் கலந்துகொண்டிருந்தனர் துபாயில் அவரின் நிகழ்வில் 300 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இது முற்றுமுழுதாக சீனாவின் திட்டமில்லை – இது இலங்கையின் திட்டம் என்பதை டேவிட்கமரூன் வலியுறுத்த முனைந்தார் என தெரிவித்துள்ள திலிம் அமுனுகம  சீனாவும் அவர் அதனையே வலியுறுத்தவேண்டும் என விரும்பியிருக்கலாம் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் கமரூனை உள்வாங்குவது குறித்து சீன நிறுவனமே தீர்மானித்தது இலங்கை அரசாங்கம் இல்லை எனவும் இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமருக்கு சீனாவுடன் நேரடிதொடர்பில்லை கொழும்புதுறைமுகநகரத்திற்கு நிதி வழங்கும் நிறுவனத்துடனும் தொடர்பில்லை என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டேவிட் கமரூனை அமெரிக்காவை தளமாக கொண்ட வோசிங்டன் பேச்சாளர்கள் பணியகம் என்ற அமைப்பே ஏற்பாடு செய்தது அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்கேபிஎம்ஜி நிறுவனமும் இந்த நிகழ்வுடன் தொடர்புபட்டிருந்தது,இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின்னரே டேவிட்கமரூனும் இந்த விடயத்தில் ஈடுபாட்டை காட்டினார் என டேவிட் கமரூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பில் கமரூன் சீன அரசாங்கத்துடனேயோ அல்லது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்துடனேயோ தொடர்புபட்டிருக்கவில்லை இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகரத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது என தெரிவித்துள்ள அவரது பேச்சாளர் உரைக்காக டேவிட் கமரூனிற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டங்கன் ஸ்மித் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

புதியபட்டுபாதை திட்டம் நாடுகளை சீனாவின் கைதிகளாக்குகின்றது எங்கள் அனைவருக்கும் சீனா ஆபத்தான நாடு என்பதால் டேவிட் கமரூன் இதனை தெரிவு செய்திருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தவறான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி ரணில் – சபாகுகதாஸ் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் விவகாரங்களில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார் என தமிழ் ஈழ  விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் உடனடியாக மேய்ச்சல் நில அபகரிப்பில்  மேலதிக செயற்பாடுகளை நிறுத்துமாறு ஓடர் போட்டார். ஆனால் மறுநாள் அரச படைகளினதும் பொலிசாரின் பாதுகாப்புடனும் மேற்கொள்ளப்படும் புத்தர் சிலை விவகாரம்  மற்றும் அத்துமீறிய  மேய்ச்சல் நில அபகரிப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தாது  கண்டும் காணாதவர் போல ஐனாதிபதி செயற்படுகிறார்.

அரசமைப்பு சபை பொலிஸ்மா அதிபரை நீக்கம் செய்த செய்தியை அறிந்ததும்  சீனாவில் இருந்தவாறு ஒரு மணித்தியாலத்தில் தொலைபேசியில் கதைத்து அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை மீறி மீள நியமிக்க ஓடர் போட முடியுமாயின், தமிழ் மக்கள் விவகாரத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை சிங்கள மக்கள்  ஏவி அபகரிக்கும் செயற்பாட்டை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இதில் வெளிப்படையாக தெரிகிறது ஐனாதிபதியின் இரட்டை வேடம்.

தனது அதிகார கதிரையை பாதுகாக்க தனக்கு சாதகமான பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் முடிந்து நீடிக்கப்பட்டு மேலதிக காலமும் முடிவடைந்த  நிலையில் தங்களுக்கு பொருத்தமானவரை நியமிக்கும் வரையும் இருப்பவரை தக்க வைக்க வெளிநாட்டில் இருந்து உடன் நடவடிக்கை எடுக்கும் ஐனாதிபதி, சட்டவிரோதமாக தமிழர் தாயகத்தில் நடைபெறும் செயற்பாடுகளை ஏன் தனது அரச இயந்திரத்திற்கு கீழ் உள்ள கட்டமைப்புக்களை  நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தவில்லை ஆகவே இத்தகைய நடவடிக்கைகள் ஐனாதிபதி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

புத்தர் சிலையை பார்க்க வேண்டுமென பொலிஸாருடன் முரண்டு பிடித்த புத்த பிக்கு

புத்தர் சிலையை பார்க்க வேண்டும் என தெரிவித்து அம்பிட்டிய சுமணரட்ன தேரர் பொலிஸாருடன் முரண்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மட்டக்களப்பில் அம்பிட்டிய ரத்ன தேரரின் அடாவடி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய அம்பிட்டிய ரத்ன தேரர் மீண்டும் பொலீசாருடன் முரண்பட்டுள்ளார். இதன்போது முரண்பட்ட அவர் “பன்சாலைக்கு செல்வதற்கு தான் உங்களிடம் கேட்டேன் . என்னை பன்சாலைக்கு போகவிடாமல் பொலிசார் தடுத்தனர்.

நான் காவி உடை அணிந்திருக்கின்றேன். அப்போ ஏன் என்னை பன்சாலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டீர்கள். அங்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய இராணுவத்தினர், திருட்டுத்தனமாக நேற்று இரவு புத்தர் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.

சிங்கள பன்சாலையை மூடி சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். உலகத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றோம் .

காக்கி சீருடை அணிந்த பொலிஸார் கிழக்கு மாகாணத்தில் எங்களை எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ஐ.நா பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை; நிபுணர்கள் கவலை

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் நாங்கள் முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் மிகவும் கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதாக காணப்படவில்லை எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டம் சர்வதேச தராதரத்தை பூர்த்தி செய்வதாக காணப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது அடிப்படை மனித உரிமைகளிற்கான பாதுகாப்பற்றது மற்றும் சுயாதீன மேற்பார்வையற்றது என பலவருடங்களாக ஐநா நிபுணர்களும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்து வந்துள்ளன என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் உத்தேச சட்டமூலம் இந்த குறைபாடுகளிற்கு தீர்வை காணமுயலவில்லை என்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.