உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் அதற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகங்களைக் கட்டுபடுத்தும் சட்டத்துக்கு ஆதரவு வழங்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும். ஊடக சுதந்திரத்தைப் புதிய சட்டம் மூலம் அரசு தட்டிப் பறிக்க முடியாது.

ஊடகங்களின் விமர்சனங்களுக்கு இந்த அரசு ஏன் அஞ்சுகின்றது? எமது நல்லாட்சி அரசையும் சில ஊடகங்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்தன. அதை நாம் எதிர்கொண்டோம்.

விமர்சனங்களை எதிர்கொள்ள – அவற்றுக்குத் தகுந்த பதில் வழங்க அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். – என்றார்.

நிதி விடுவிப்பினை உறுதிப்படுத்தினால் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆலயம் என்ற போர்வையில் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடும் மத போதகர்: தவிசாளர் நிரோஸ் குற்றச்சாட்டு

ஆலயம் என்ற போர்வையில் மதபோதகர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்  யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அரசிற்கு சொந்தமான நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு எமது சமூகம் செய்தி பிரிவிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று தாம் முன்னெடுத்துள்ள போராட்டமானது மதங்களுக்கு எதிரானது அல்ல எனவும் மாறாக மதங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான நடத்தைகள் மற்றும் சட்டவிரோதமான மதமாற்றங்களுக்கு எதிரான போராட்டம் என்றும் தியாகராஜா நிரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த கட்டிடத்தினை உரிய திணைக்களம் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தியாகராஜா நிரோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கம்

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது படி என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இன நல்லிணக்க செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கவலை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் சில பாராட்டத்தக்க விதிகள் இருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக கோரும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தில் சில மாற்றங்களை வரவேற்றாலும், அந்த அமைப்பு இரண்டு குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.

முதலாவதாக, முன்மொழியப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீறுவதாக கூறியுள்ளது.

இரண்டாவதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசியப் பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதிற் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் வினைத்திறன் முழுமையாக அதனை அமுல்படுத்துவதை பொறுத்தே அமையும் எனவும் இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கு மேலதிக மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு – IMF மீண்டும் உறுதி

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் ஸ்பிரிங் மாநாட்டிற்கு இணையாக இலங்கை தூதுக்குழுவுடன் நேற்று(11) நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் IMF முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது அவசியமானது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை முகாமைத்துவ பணிப்பாளரிடம் இதன்போது மீள உறுதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை பூர்த்தி செய்ய இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது இலங்கையின் தூதுக்குழு மீள உறுதி செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் மாயம்

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கியின் அதிகாரிகளால் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளையும் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்

சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் குறித்த ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, ரயில் மார்க்கங்களை பராமரிப்பதற்கு அவசியமான ஆணிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிப்பாகங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் தண்டவாளங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், ரயில் மார்க்கங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

ரயில் மார்க்கங்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக பல இடங்களில் ரயில்களின் பயண வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அதிகளவான பாதிப்பிற்கு கரையோர மார்க்கம் முகங்கொடுத்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையிலான ரயில்களின் பயண வேகத்தை மணிக்கு 30 கிலோமீட்டர் வரை குறைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.