IMF உதவி இலங்கைக்கான நிரந்தர ‘பிணையெடுப்பு’ அல்ல – பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘அட்வகாட்டா’ அமைப்பு

இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.

எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.

ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.

இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று ‘அட்வகாட்டா இன்ஸ்டியூட்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பு

வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளியலாளர் ஸேர்கி லேனோ

இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.

பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்

இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது.

கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.

இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 – 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற ‘நாணயச்சபை’ முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் கழற்றி வீசப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்! அதிர்ச்சியில் மக்கள்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்தனர்.

இதன் பின்னர் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்தவருடம் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டதுடன், குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராமமக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு அழித்தெறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டிருந்தது. அத்துடன் பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியையும் கவலைகளையும், ஏற்ப்படுத்தியுள்ளது

வரிச்சீர்திருத்தங்களில் தலையிடப் போவதில்லை – சர்வதேச நாணய நிதியம்

அரசாங்க வருமானம் பாதிக்கப்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம், இந்நாட்டின் தொழில் நிபுணர்களுக்கு உறுதியளித்துள்ளது.

வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதி தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

வரி சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்டு செல்லும் நிலை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிரகாரம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் பிரதம செயற்பாட்டாளர் டி.எம். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கு தேவையான சூழலை தயாரிக்க வேண்டும் என ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்களை ஆராய்வதற்காக பிரதமர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் விவகாரங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிட்டடத்தக்கது.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்பட்டமை இன,மதவாத்தின் உச்சக்கட்டம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்படுதல் என்பது இலங்கை அரசாங்கத்தின் இனவாதத்தினதும், மதவாதத்தினதும் உச்ச கட்டமாகவே தென்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது இல்லத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக குறிப்பிடுகையில்,

கச்சதீவானது இலங்கைக்கு திருமதி.இந்திராகாந்தி அவர்களால் கையளிக்கப்பட்ட பொழுது இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தல்,வலை காய விடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டதுடன் அங்கிருக்கும் அந்தோனியார் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்துவது போன்ற ஏற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த ஆலயத்தின் திருவிழாவினை யாழ்ப்பாணம், பங்கு தந்தையர்கள் தலைமை தாங்கி நடத்துவதுடன் இலங்கையின் வடமாகாணம் மற்றும் திலகத்திலிருந்தும் மக்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த முறை இடம்பெற்ற திருவிழாவில் என்றும் இல்லாதவாறு பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கடற்படையின் உதவியுடன் அங்கு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது அல்லது கட்டப்பட்டுக்கொண்டு வருவதுடன் வெடியரசன் கோட்டையும் பௌத்தர்களுடையது என கூறி கடற்படையினரால் அவற்றை பிரதிபலிக்கும் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக சிங்களவர்கள் வாழாத அல்லது செல்லாத கச்சத்தீவில் பௌத்த விகாரை கட்டப்படுவதானது வடக்கு கிழக்கில் மிக விரைவாக பௌத்தத்தினை பரப்புவதற்கான ஏற்பாடாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்திய ஸ்வேரும் பார்வைர்வையாளராக இருக்குமாயின் எதிர்காலத்தின் கச்சத்தீவின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதில் உத்தரவாதம் இல்லை எனவும் ஐயம் வெளியிட்டுள்ளார்.

95 சதவிகிதமாக தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைத்து போன்ற விடயங்களை கட்டுப்படுத்த இந்தியா முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அனைத்து விடயங்களிலும் பாராமுகமாக இருக்கின்றதா என்ற கேள்வி இலங்கை தமிழர்களிடம் உள்ளதாகவும் அவ்வாறு இந்தியா அமைதி காத்தால் தமிழ் மக்களிடமிருக்கும் நம்பிக்கையும் பறிபோகும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சருக்கெதிராக நீதிமன்ற செல்லத் தயாராகும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நிதி விடுவிக்கப்படவில்லை என்பதுடன், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியை விடுவிக்காதிருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதன் ஊடாவே அமையும்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் ஊடாக வடக்கில் காணிப்பிரச்சனை, இராணுவ மாயக்கல் பிரச்சனை, மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் ஏனைய பிரச்சனைகள் தீர்ப்பதற்காக முதற்படியாக அமையுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பான பொதுக்கருத்தரங்கு இன்று யாழில் இடம்பெற்றபோது வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்கு மனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான எமது நிலைப்பாடு.தற்போது அரசாங்கம் புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.

அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர் என தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் இந்திய முதலீடுகள் குறித்து அவதானம்

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா – இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள், எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை சார்ந்த பரந்தளாவான முன்முயற்சிகளிலும் ஏனைய திட்டங்களிலும் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையிலான சிரேஸ்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதிநிதிகள் குழுவிற்கும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போதே மேற்கூறப்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது உயிர்ம எரிபொருள், புதுப்பிக்கத்தக்க சக்தி, பசுமை ஹைட்ரோஜன் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பினை விஸ்தரிப்பதற்கான சாத்தியங்களுக்கு அப்பால் தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் இயற்கை எரிவாயு மற்றும் சக்தி மையத்தினை அபிவிருத்தி செய்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , இந்திய பெற்றோலிய கூட்டுத்தானம் , இந்திய பொறியியலாளர்கள் நிறுவனம் , ஹிந்துஸ்தான் பெற்றோலிய கூட்டுத்தாபனம் , பெற்றோனெட் எல்.என்.ஜி. லிமிடட் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

சாலியபீரிசிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சாலியபீரிஸ் தனது கட்சிக்காரர் ஒருவர் தொடர்பில் தனது தொழில்சார் கடமையை செய்த விதம் குறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆர்ப்பாட்;டம் சாலியபீரிசிற்கு அவரது கட்சிக்காரருக்காக ஆஜராவதற்கான உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என நாங்கள் கருதுகின்றோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி என்ற அடிப்படையில் அவரின் கடமைகளிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது