யாழ்தேவி புகையிரதம் 100 kmph வேகத்தில் பரீட்சார்த்த பயணம்

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு  100kmph  வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதைத்  தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி  80 kmph தொடக்கம் 100 kmph வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை பயணித்திருந்தது

குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி , வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.

இந்நிலையில் புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக   கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட கங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகளை இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் ரெலோ தலைவரால் வவுனியாவில் திறந்து வைப்பு

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில்  திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட  இச்சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகளால் அணுகக் கூடிய வகையில் அலுவலகங்களைத் திறக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று  திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் போராளி மறைந்த  சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான  அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிக்குமரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆய்வு ஐ.நா பிரதிநிதிகள் முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள்

கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறையின் அடிப்படையில் அதன் பிரதிநிதிகள் முன்பாக இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழிகள் அகழ்வு ஊடாக பல மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த காலத்தில் குற்றச்சாட்டப்பட்ட வகையிலே யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பல விடயங்களிற்கு சாட்சியமாக விளங்குகின்றது.

மனித உரிமை பேரவையில், மனித உரிமை உயர்தானிகராலும் இந்த யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களிற்கான சாட்சியங்களை பதிவு செய்கின்ற ஒரு பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த அகழ்வாராய்ச்சி என்பது மனித உரிமை உயர்தானிகர் அல்லது ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதிகள் முன்பாகவும் இந்த சாட்சியங்களிற்கான அலுவலகம் திறக்கப்பட்டு இதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய நிதி ஒதுக்கீட்டினையும் ஐ.நா செய்துள்ளது.

ஆகவே அவர்களையும் வைத்துக்கொண்டு இந்த அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் தோண்டியெடுக்கப்படும் மனித புதைகுழிகளின் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய முடியும்.

குறிப்பாக கொக்குத் தொடுவாய் என்பது தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த இடம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பது மட்டுமன்றி யுத்தத்திற்கு முன்னரே அங்குள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், கிராமங்கள் அழைக்கப்பட்டதும் என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த விடயங்களை சர்வதேச பிரதிநிதிகள் மாத்திரமன்றி குறிப்பாக ஐ.நாவினுடைய மனித உரிமை உயர்தானிகருடைய அல்லது மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அல்லது அலுவலர்கள் முன்னாலே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வருகை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

மேலும் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிபர் ரணில் அமைச்சர்களான, அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோருடன் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவமிக்க இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

OMP அலுவலக பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் போராடுவதற்கான உரிமை இருந்தாலும் பதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.

பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 150,000 தாண்டியது

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது.

கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மேலும் சுமார் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுனர் தயாரா?

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு  மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலிடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் அவர்கள் ஊடகங்களில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

ஆளுநரின் கோரிக்கைக்கு முன்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக முன்னாள் ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்சவும் தற்போதைய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புலம்பெயர் தமிழர்களிடம் இந்த கோரிக்கையை நேரடியாக முன் வைத்துள்ளனர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு நேரடியாக சென்றும் தமிழர் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்கள் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல கடிதத்தை ஊடகங்களுக்கும் உரிய தரப்புக்களுக்கும் வழங்கியுள்ளனர் அதற்கான ஆரோக்கியமான பதிலை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் வடக்கு ஆளுநரின் கோரிக்கை வந்துள்ளது உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கல்ல தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.

ஆளுநர் ஐனாதிபதியின் நேரடி முகவராக இருப்பதால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஐனாதிபதிக்கு முன் வைத்துள்ள கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடி நிறைவேற்ற தயாரா? அப்படி நிறைவேற்றிய பின்னர் இவ்வாறான கோரிக்கையை முன் வைத்தால் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு தூதுவர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 9 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென ‘எல்ல ஒடிஸி’ விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று, வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது.

சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கின்றது.

அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம், ஜூலை 01 முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு, இன்று (06) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் தூதுவர்களுக்குக் கிடைத்தது.

இந்த விசேட சுற்றுப் பயணத்துக்கு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.

இராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் சர்வதேச விசாரணை – சரத் வீரசேகர எச்சரிக்கை

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஊடாக எமது இராணுவத்தினருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டினால், அவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் நாம் அன்று எதிர்ப்பினை இங்கு வெளியிட்டோம்.

ஏனெனில், இதில் எவரேனும் ஒருவர் இராணுவத்தினருக்கு எதிராக பொய் சாட்சி கூறுவாராயின், குறித்த இராணுவ வீரரை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

ரோம் உடன்படிக்கையில் நாமும் கைச்சாத்திட்டுள்ளமையால், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்காலத்தில் இடம்பெறலாம்.

எனவே, இவை நடக்காமல் இருக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அத்தோடு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன.

இது முற்றாக சட்டவிரோதமான செயற்பாடாகும்” என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை – உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்திய சுற்றுலா சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடந்த சில மாதங்களில் வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே இயக்கப்பட்ட சென்னை – யாழ்ப்பாண விமான சேவை, வரும் ஜூலை 16 முதல் நாள்தோறும் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு என்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி அனைவரும் நன்கு அறிந்துள்ளதாகவும் இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இது வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல் எல்லைகளைத் தாண்டிய பொதுவான பாரம்பரியத்தை உருவாக்கும் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.