மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி; கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் – நிலாந்தன்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள்,தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு;மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்;மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை,ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஆனால் ஜனாதிபதி கூறுகிறார்,13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை.ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி,பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார்.கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில்,திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம்.அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்.அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது.அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா?அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு,சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்.பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து,தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை,வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு.அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி.ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது.அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில்,மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன.ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்;அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார்.எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர்,வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார்.13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்.அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன.13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார்.அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு.இதில் இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு.வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும்.ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார்.13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்,கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார்.மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

-நிலாந்தன்

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெறும் மிருக வதைக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெறும் மிருக வதை மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளின் தலைமையில் இந்த போராட்டத்திற்கு ஊடக அறிக்கை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

வெங்காய வெடி வைத்து அவற்றின் வாயில் கொடும் காயங்களை ஏற்படுத்தி அவை உணவு உண்ணக்கூட முடியாத, வார்ததையால் வடிக்க முடியாத கொடுமைகளை வாயில்லா ஜீவன்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதனை விட சுட்டும், வெட்டியும், மின்சாரம் பாய்ச்சியும் இந்த பசுக்களுக்கும் காளைகளிற்கும் ஏற்படுத்தப்பட்டு வரும் கொடுமைகள் பூரணமாக நிறுத்தப்பட வேண்டும்.

அரசினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் முறையாக அமுல் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு, பட்டி மேய்ச்சல் தரைகளிலிருந்து அனைத்து சட்டவிரோதிகளும் அகற்றப்பட வேண்டும்.

மேய்ச்சல் நிலத்தில் எந்தவொரு பிற நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

இவற்றை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பாக அரச இயந்திரத்திற்கு ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.

சொல்லொணாத் துயரை சந்திதுள்ள கிழக்கின் பண்ணையாளர்களையும் பசுக்களையும் பாதுகாக்க அனைவரும் அணி திரள்வோம்.

வடக்கு, கிழக்கில் மீள்குடியேறியோரின் காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – பிரதமர் தினேஷ்

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும். அது தொடர்பில் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போதும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் மக்களின் காணி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல வருடங்கள் எடுத்தன. அதனால் சில பிரதேசங்களில் தற்காலிகமாக குடியேறியவர்களை நிரந்தர குடியேற்றவாசிகளாக்குவதற்கு தேவையான பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்த ஒவ்வொரு தடவையும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டன. அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

1600 குடும்பங்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாமலிருந்தன.அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளின் காணிகள் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்ட பூர்வமற்ற ரீதியில் குடியிருப்போரை அங்கு நிரந்தர குடியிருப்பாளர்களாக்குவதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதால் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நடுத்தர மக்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அதன் முதல் உரிமையாளர்கள் உரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும் இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சில காணிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி யுள்ளன.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தற்போது வசிக்கும் காணிகளுக்கு சட்டபூர்வமான பதிவுகள் இல்லாத காரணத்தால் அந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

அவ்வாறான குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் காணி உரிமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் கொள்கை ரீதியாக அதனை மேற்கொள்ளவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டும் அபிவிருத்தி கூட்டங்களில் இதன் குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அவ்வாறான மக்கள் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அனைவருக்கும் நலன்புரி மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். விவசாயம், மீன் பிடி அல்லது வேறு தொழில்களில் ஈடுபடுவோர் அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் எந்த விவசாயக் காணிகளிலும் சட்டபூர்வமானாலும் சரி சட்டபூர்வமற்ற விதத்திலும் சரி குடியிருப்போரை துரத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தலை நடாத்திக் காட்டுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதிக்குச் சவால்

13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சாவால் விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்டமானது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு போதுமானது என்றும், புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு வருகை தரவேண்டுமென்றும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு விடயங்களை கூறுகின்றார். அவருடைய கூற்றுக்களும், செயற்பாடுகளும் அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் ஆரம்பத்தை வடக்கிலிருந்து தொடங்குகின்றார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானவை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து அடிப்படையற்றதாகும். நாட்டின் நீடித்த இனமுரண்பாடுகளை அடுத்தே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறான நிலையில், குறித்த திருத்தச்சட்டம் பொருளாதார அபிவிருத்திக்கானது என்று ஜனாதிபதி அர்த்தப்படுத்த முனைவது தவறானதாகும்.

அதேநேரம், மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்த நிலையில் இன்னமும் தேர்தல் நடத்தப்படாது தாமதிக்கப்படுகின்றது. முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் இயங்க வேண்டும். அப்போதுதான் மாகாண சபைகள் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

அதேநேரம், கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பல்வேறு வழிகளில் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆகவே அந்த அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மாகாண சபைகளின் நிருவாகத்தினால் முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுகின்றார். புலம்பெயர் தமிழர்கள் தமது மாகாணங்களில் முதலீடுகளைச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை முதலில் உருவாக்கி அந்த அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாது, புலம்பெயர் தமிழர்கள் தென்னிலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு முன்வரமாட்டார்கள். ஏனென்றால் 1983ஆம் ஆண்டு தமிழர்களையும் அதற்குப் பின்னர் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அந்தந்த இனங்களில் பிரபல்யமான வர்த்தகர்களின் நிலைமைகள் எவ்வாறு மோசமடைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுவது இங்கே முக்கியமானதாகின்றது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படாத வரையில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தென்னிலங்கையில் இல்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பொறுப்புக்கூறப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

இவ்வாறான நிலையில், புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு வருகை தருவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும், மாகாண சபைகளின் ஊடான அபிவிருத்தியையும் விரும்புபவராக இருந்தால் ஆகக்குறைந்தது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்காகவாவது தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

திருமலையில் ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை பார்வையிட்டார் இந்திய நிதி அமைச்சர்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை வியாழக்கிழமை (2) பார்வையிட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் காஸ் ஒயில் குதங்களான 1, 2,  (Gasoil tank no 11,12) ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

இந்திய நிதிஅமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் விஜயம் செய்துள்ளார்.

திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதாராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ரத்நாயக்க, ஆளுநர் செயலாளர் மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக  செயலாளர்  அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் மதன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதாராமன் நாளை திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.

இனவாதத்தை பரப்பும் அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; கிழக்கு ஆளுநர் உறுதி

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்தார்.

அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்படும் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்,

கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு – திவுலபத்தனபகுதியில் யுத்தத்திற்கு முன்பாக வசித்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அங்கு படிப்படியாக குடியமர ஆரம்பித்துள்ளனர்.

அம்மக்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் என இரு குழுக்களாக இருப்பதால் அப்பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

மயிலத்தமடு பகுதியில் மீளக் குடியமரும்போது, பொலன்னறுவை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலரை மேலதிகமாக அழைத்து வந்துள்ளமையினால், அவர்களின் விவசாயச் செயற்பாடுகளைப் பாதுகாக்கும் வகையில், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருப்போருக்கு தற்காலிக ஊக்குவிப்பு தொகையொன்றை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை பகுதிகளிலிருந்து வந்தவர்களை அம்மாவட்டங்களிலேயே விரைவில் குடிமயர்த்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.

அதேபோல், மயிலத்தமடு – திவுலபத்தன பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் வசித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் மீள் குடியமர்த்தப்பட வேண்டியது கட்டாயமானது என ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கும் நிலையில், மகாவலி அமைச்சு அப்பணியை சட்டரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அதேநேரம் அனுமதியின்றி அரச காணிகளில் வசிப்பவர்களின் காணிகளைக் கையகப்படுத்தி, அவர்களை அக்காணிகளில் சட்டரீதியாக குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், அரச காணிகளில் அனுமதியின்றி வசிப்பவர்கள் விண்ணப்பங்களைச் சமர்பித்து தமது இருப்பை சட்டரீதியாக்கிக்கொள்ள முடியும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் மகாவலி வேலைத்திட்டத்திற்காக கிழக்கின் கோரளைப்பற்று பகுதியிலிருந்து தமிழர்களும், நாவலடி பகுதியிலிருந்து முஸ்லிம்களும் அகற்றப்பட்டிருந்த நிலையில் இந்த பணிகள் இன, மத அடிப்படையில் அல்லாது சட்டரீதியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கிராம சேவகர்களிடத்திலிருக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டே காணிகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக சிங்கள மக்களின் குடியிருப்புகள் மற்றும் அங்கிருந்து அகற்றப்படுகின்றது என்ற வகையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகளும் பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளன.

அதனால் மேற்படி முன்னெடுப்புகளின் போது சகல இனத்தவர்களுக்கும் இலங்கையர் என்ற வகையிலேயே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, அதுகுறித்து அநாவசியமாக கருத்துக்களை வெளிப்படுத்த மூன்றாம் தரப்பினர் முற்படக் கூடாது. என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.

மயிலத்தமடு மேய்சற்தரையை விவசாயத்திற்கு வழங்க கோரி சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பாரம்பரிய மேய்ச்சற் தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு ‘ரணிலுக்காக நாம் 2024’ என்ற பாரிய கட்டவுட் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கட்டவுட் முன்னால் தும்புத்தடியோடு நின்றவாறும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் தொண்டமான் எமக்கு வேண்டாம்,இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பாளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது.

பிள்ளையான் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய மைத்திரி மற்றும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.

எனினும் அதனை பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.