இலங்கை – இந்திய மத்தியஸ்தம் கோரி இந்திய துணை தூதுவரிடம் மகஜர்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது அரசுடனான பேச்சுவார்த்தையின் போது சமஸ்டி அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புகள் ஒருமித்து வலியுறுத்த வேண்டுமென கோரி யாழ்ப்பாணம் நாவற்குழியில் கடந்த வியாழக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்போது தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வெளியிடும் போது- தமிழ் மக்கள் தேசிய இன பிரச்சனைக்கு தீர்வான சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதால் அத்தகைய ஒற்றுமைக்கு உதவ வேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியதாக கூறினர். மேலும் அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மண்டாஸ் புயல் தாக்கம் வட, கிழக்குக்கு பாதிப்பு

ஒருவர் உயிரிழப்பு-  2,143 பேர் பாதிப்பு – 275 மாடுகள் பலி – 510 வீடுகள் சேதம்

மண்டாஸ் புயல் நேரடியாக தாக்காத போதிலும் தொடர்ச்சியான மழை, கடும் குளிர், வேகமான காற்றால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. கிழக்கு மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்தார். 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேரும், 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேருமாக 729 குடும்பங்களை சேர்ந்த 2143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வடக்கு கிழக்கில் 275இற்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. வங்கக்கடலில் மையம் கொண்ட தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாற்றம் கொண்டது.

இது வடக்கு – வடமேற்காக நகர்ந்தது. தமிழகக் கரையை புயலாக இது நள்ளிரவை தாண்டி கடந்தது. இந்த புயலின் நகர்வின் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு வடக்கு – கிழக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவானது. அத்துடன், மிகக் குளிரான காலநிலையும் நீடிக்கிறது. மேலும், வேகமான காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல மரங்கள் வீடுகளின்மீது வீழ்ந்ததில் அவை சேதமடைந்தன.

வடக்கில் 1,659 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் 112 குடும்பங்களை சேர்ந்த 407 பேரும் முல்லைத்தீவில் 141 குடும்பங்களை சேர்ந்த 454 பேரும், வவுனியாவில் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும், கிளிநொச்சியில் 172 குடும்பங்களை சேர்ந்த 585 பேரும், மன்னாரில் 50 குடும்பங்களை சேர்ந்த 184 பேருமாக 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேசமயம், யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு முழுமையாகவும் – 76 வீடுகளும், முல்லைத்தீவில் 141 வீடுகளும், வவுனியாவில் 7 வீடுகளும், கிளிநொச்சியில் 34 வீடுகளும், மன்னாரில் முழுமையாக ஒரு வீடும் பகுதியளவில் 11 வீடுகளுமாக வடக்கு மாகாணத்தில் 2 வீடுகள் முமுமையாகவும் 269 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கிழக்கில் ஒருவர் பலி!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான மழை மற்றும் கடும் குளிரான காலநிலையால் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வெல்லாவெளியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 குடும்பங்களை சேர்ந்த 173 பேரும், திருகோணமலையில் 71 குடும்பங்களை சேர்ந்த 251 பேரும், அம்பாறையில் 130 குடும்பங்களை சேர்ந்த 459 பேருமாக கிழக்கு மாகா ணத்தில் 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 44 வீடுகளும், திருகோணமலையில் 68 வீடுகளும், அம்பாறையில் 129 வீடுகளுமாக கிழக்கு மாகாணத்தில் 241 வீடுகள் சேதமடைந்துள்ளன.

275 மாடுகள் பலி!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரு கோணமலை மாவட்டங்களில் 275இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் 165 மாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 மாடுகளும், திருகோணமலையில் 50 மாடுகளும் உயிரிழந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட – கிழக்கு மாகாண வீட்டுத் திட்டங்களை இடையில் நிறுத்தாமல் முடித்துத் தாருங்கள் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.புதிய வீடமைப்பு திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்படமாட்டாது என வீடமைப்புத்துறை அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மை என்று கருதி செய்த விடயங்களில் வீட்டுத்திட்டம் உரிய இலக்கை அடையவில்லை. வீட்டுத்திட்டம் சிறந்ததாக அமைந்திருந்தால் இன்று ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் நன்மை அடைந்திருப்பார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் ஏழ்மையில் வாழந்த மக்கள் இன்று மென்மேலும் பாதிக்கப்பட்டு, வங்கி கடனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வீட்டுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியுதவி இதுவரை முழுமையாக மக்களுக்கு கிடைக்காததால் மக்கள் அரைகுறை குடியுறுப்புக்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை பிறிதொரு அரசியல் கொள்கை கொண்ட கட்சி ஆட்சிக்கு வரும் போது அந்த அபிவிருத்தி திட்டத்தை கண்டு கொள்வதில்லை.

வீட்டுத்திட்ட கடனால் பெரும்பாலானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். பலர் சொல்லனா பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் எடுத்த செயற்திட்ட அபிவிருத்தி பணிகளை தொடர கூடாது என்ற நிலைப்பாடு அரசுகளுக்கு இருக்க கூடாது. வீட்டுத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன தீர்வு, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக உள்ளார் என்றார்

மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) நடைபெற்றது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் ஆறு தொடக்கம் மட்டக்களப்பு வரையான அரச மற்றும் தனியார் துறையினருக்கு சொந்தமான கரையோர காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவது இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே கருணாகரன் உட்பட பிரதேச செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி கிழக்கு, மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட வேண்டும் – வே.இராதாகிருஷ்ணன்

நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பிரச்சினை இருக்கும் போது வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பது, வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது. மலையக மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி அழைத்து கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் எதிர்பார்த்த வரவு- செலவுத் திட்டம் அமையவில்லை. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் நிலையில் நிவாரணங்கள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இன்றைய பொருளாதார நிலையில் மத்திய பொருளாதார நிலையில் இருப்பவர் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளார். கீழ் மட்டத்தில் இருப்பவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

அத்துடன் கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தேயிலைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. இன்று தேயிலை விலை அதிகரித்துள்ளது. உரம் இல்லாததால், உற்பத்தி குறைந்திருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் தேயிலை மூலம் 1.3 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் மலைய மக்கள் தொடர்பில் நன்கு அறிந்த ஜனாதிபதி, வரவு- செலவுத் திட்டத்தில் தோட்ட மக்களின் நலன் தொடர்பில் எந்த பிரேரணையைும் முன்வைக்கவில்லை. அது குறித்து எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், மலையக மக்கள் இந்திய வம்சாவளியாக தோட்டங்களுக்கு வந்து அடுத்த வருடம் 200 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை அந்த மக்களின் பிரச்சினை எதற்கும் முழுமையான தீரவு கிடைக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. லயனட அறைகளும் தொடர் மலசலகூடங்களுமே இருந்து வருகின்றன. பாடசாலை, வைத்தியசாலை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. இ்ப்படியான மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எந்த பிரேரணையையும் முன்வைக்கவி்லலை.

அத்துடன் வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். வடக்கில் மாத்திரம் அல்ல, கிழக்கிலும் பிரச்சினை இருக்கின்றது. அதனால் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசவேண்டும். ஆனால் ஜனாதிபதி வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்திருப்பது வடக்கு கிழக்கை பிரிப்பதற்கா அல்லது வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் மலையக மக்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தரையாட மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடவேண்டும என்றார்.